நமது பெரியாரும் பூஜிக்கத்தகுந்தவருமான காலஞ்சென்ற ஸர்.பி. தியாகராய செட்டியாரவர்களின் பேரால் கட்டப்பட்ட இந்தக் கட்டிடத்தை ஸர்.பி.தியாகராய செட்டியாரவர்களின் திருநாள் சமயத்திலேயே திறந்து வைக்கும் பெருமை எனக்கு அளித்ததற்கு நான் பெருமையடைவதோடு, என் மனப்பூர்வமான நன்றியறிதலையும் செலுத்துகிறேன். பெரியோர்களுடைய திருநாளைக் கொண்டாடுவது நமக்குப் பூர்வீகமான வழக்கம். ஆனால், அப்பெரியார்களைப் பின்பற்றுவதில் நாம் கிரமமாய் நடந்து கொள்வதில்லை.

ஸ்ரீமான். தியாகராய செட்டியாருக்கு, அவருடைய தேச சேவைக்காக இந் நாட்டு மக்கள் எல்லோரும் கடமைப்பட்டிருந்த போதிலும், சிறப்பாக பிராமணரல்லாதார் என்போர் மிகவும் கடமைப்பட்டவர்கள் என்று சொல்லுவேன். தென்னாட்டில், பிராமணரல்லாதாரின் முன்னேற்றத்துக்குழைத்து, பிராமணரல்லாதாரின் சுயமரியாதையை உணரும்படி செய்தவர், நமது தியாகராயரே யாவார். அவர் கொஞ்சமும் சுயநலமில்லாமலும் அடிக்கடி மாறுபட்ட அபிப்ராயமில்லாமலும், விடா முயற்சியோடு உழைத்து வந்தவர். அப்பேர்ப்பட்டவர் பேரால் இது போன்ற விஷயங்கள் மாத்திரமல்லாமல், இன்னுமநேக காரியங்கள் செய்யக் கடமைப்பட்டிருக்கிறோம். அவருடைய பெருமை அவர் இருந்தபோது விளங்கியதைவிட அவர் இறந்தபிறகுதான் அதிகமாக விளங்கிக்கொண்டு வருகிறது.

இங்குள்ள ஒவ்வொருவரும், நமது தியாகராயரைப் பின்பற்றி உழைக்கவேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன். அது தான் நாம் அவருக்குச் செய்யும் மேலான ஞாபகக்குறிப்பு என்று சொன்ன தோடு, இவ்வித ஆஸ்பத்திரிகள் நமது நாட்டில் பெருகுவதானது, நாட்டில் வியாதிகள் அதிகமாய்ப் பெருகி வருவதையும், நாட்டு பழைய வைத்திய முறைகள் அழிக்கப்பட்டுப் போவதையும், காட்டுவதற்கு நிதர்சனமாக விளங்கினாலும், நமது ஸ்ரீமான். வெரிவாட செட்டியார் தர்ம சிந்தையோடும், உதாரண குணத்தோடும் செய்திருக்கும் இக்கைங்கிரியத்தை நாம் பாராட்டாமலிருக்க முடியாது. கடவுள் அவருக்கு நீண்ட ஆயுளையும், நிறைந்த செல்வத்தையும் கொடுத்து மென்மேலும் பல தர்ம கைங்கரியத்தைச் செய்ய கடவுள் அருள் புரிவாராக.

குறிப்பு: 16.12.1925 இல் கோயமுத்தூர் தியாகராய செட்டியார் மருத்துவமனைக் கட்டடத் திறப்புவிழா சொற்பொழிவு.

(குடி அரசு - சொற்பொழிவு - 27.12.1925)

Pin It