கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

பெரியார் ஐரோப்பியாவில் உள்ள பல நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் செய்த போது ரஷ்யாவுக்கு செல்கிறார். அவ்வரலாற்று நிகழ்வினை மே நினைவு தினமான இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். 

14.02.1932-இல் ரஷ்ய துறைமுகம் வந்திறங்கியதும், சோவியத் அரசாங்கம் தனது விருந்தினராகப் பெரியாரைக் கருதுகின்றது என்று அவருக்கு அறிவிக்கப்பட்டது. 

‘நவாமாஸ்கோ’ (New Moscow) என்ற ஒட்டலில் தங்கினார். ‘ஜீனாபிலிகினா’ (Zina Pilikina) என்ற புத்தி கூர்மையும், பரிவும் உள்ள ஒரு பெண் மொழிபெய்ப்பாளரை பெரியார் குழுவினர்க்கு அளித்து, பல்வேறு இடங்களைப் பார்க்க உதவினர். அவர்கள் உதவியுடன் ‘மத எதிர்ப்பு மியூசியம் (Anti- Religious kpropaganda) கண்டார். பார்வையாளர் புத்தகத்தில் தனது கருத்துரையை எழுதினார். பின்னர், மத எதிர்ப்புப் பிரச்சார அலுவலகம் சென்று தம்மை ஓர் உறுப்பினாராகப் பதிவு செய்து கொண்டார். அங்கிருந்த பார்வையாளர் புத்தகத்தில் தனது கருத்துரையை எழுதினார். 18.02.1932 ஒய்வு நாளாக இருந்த போதிலும், அதிகாரிகள் பெரியார் அவர்களுக்காக வருகை தந்த ‘ஹலாட்டா’ என்ற மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் ‘லெனின்’ மியூசியம் கண்டுகளித்ததுடன் பார்வையாளர் புத்தகத்திலும் குறிப்பெழுதினார். 20.02.1932-இல் ‘ஜெனரல் கிச்சன்’ என்னும் பொது உண்டிச் சாலையைப் பார்வையிட்டார். 

இங்கு, பார்வையாளர் புத்தகத்தில் குறிப்பெழுதியதுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

சில நாட்களில், சோவியத் யூனியனின் ஜனாதிபதி ‘காலினின்’ (Mikhail invanovich kalinin, the President of USSR) அவர்களால் வரவேற்கப்பட்டு, அவருடன் பலமணி நேரம் உரையாடினார். காலினின் அவர்கள் காட்டிய பரிவு, எளிமை, தான் கூறியதை தனிக் கவனத்துடன் கேட்ட தன்மை ஆகியவை பெரியாரை மிகவும் கவர்ந்தன. சோவியத் யூனியனின் மிக உயர்ந்த பதவியை வகிக்கும் ஜனாதிபதி காலினின் ஒரு சாதாரண விவசாயினுடைய மகன் என்று அறிந்து வியந்தார். 

சோவியத் ய{னியனை நன்கு சுற்றிக்காண விரும்பிய அவருக்கு, தகுந்த ஏற்பாடுகள் செய்து தரப்பட்டன. அவர், மாஸ்கோ, Baku, Tblici, Sochi, Dnieprostory, Zaporozhye, Rostov, the Trans-cau casian Republics, Abkhazhia மற்றும் பல முக்கிய இடங்களைச் சுற்றிப் பார்த்தார். ஒவ்வொரு இடமாகச் சுற்றிச் சுழன்றார். ஒவ்வொரு நாளும் சில மணி நேரம் உறங்கினார். 

தொழிற்சாலைகள், கூட்டுப் பண்ணைகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், அறிவியல் வல்லுனர்கள், தத்துவவாதிகள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிவியல் அறிஞர்கள் என்று பலதரப்பட்டவர்களையும் கண்டு உரையாடினார். 

மாஸ்கோ செஞ்சதுக்கத்தில் (Red Square) மே தின விழாவில், ஆயிரக்கணக்கானவர்கள் கொடிபிடித்து அணிவகுத்துச் செல்லும் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டுகளித்தார். பின்னர் மே தின பொதுக்கூட்டத்தில் பேசுமாறு அழைக்கப்பட்டார். 

அக்கூட்டத்தில் அவர்...

’இந்தியாவின் கீழ்நிலையையும், வறுமையுடனும், உரிமையற்றும் வாழும் இந்திய மக்களின் நிலையையும்’ எடுத்து விளம்பினார். பல ஆயிரக்கணக்கான மக்கள் அவர் சொற்பொழிவைக் கூர்ந்து கேட்டனர். அவர்களின் சிலரின் கண்களில் கண்ணீரைக் கண்டார். ரஷ்யாவில் 14-வயதுச் சிறுவன் ஒருவன் பெரியாரைப் பார்த்து “உங்கள் நாட்டில் ‘மகராஜ்’ (பார்ப்பனர்) பறையர் (சூத்திரர்) இருக்கிறார்களாமே! அவர்கள் எப்படி இருக்க முடியும்?” என்று கேட்டுத் திகைக்க வைத்தான். 

பார்ப்பனரின் தன்மைபற்றி அவனுக்குப் பெரியார் விளக்கினார்.

ஸ்டாலின் முன்னிலையில் நடந்த மே தின விழாவிலும் கலந்து கொண்டார். ‘இந்தியாவிலிருந்து வந்த நாத்திகத் தலைவர்’ என அவையோருக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். ஸ்டாலின் அளித்த மரியாதையை ஏற்றார். 

29.05.1932-இல் ஸ்டாலினைக் காண பெரியார் ஒப்புதல் பெற்றிருந்தார். மூன்று மாதங்கள் சோவியத் யூனியனில் தங்கியது ‘ஒரு முழு வாழ்வாகவே’ அவருக்குத் தோன்றியது. அங்கிருந்து பிரிந்தவர மனதில்லை. சோவியத் யூனியன் குடிமகனாக வேண்டி அரசாங்கத்திடம் விண்ணப்பித்துக் கொண்டார். அதில் அவர் வெற்றி பெறவில்லை.

இதற்கிடையில் திரு. எஸ். ராமனாதனின் நடவடிக்கை சோவியத் அரசின் கண்காணிப்புக்கு உட்பட நேர்ந்ததால், 19.05.1932-இல் சோவியத் யூனியனை விட்டு வெளியேறினார்.

பின்னர், 1932-அக்டோபர் முதல் வாரம் இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, போர்ச்சுக்கல், இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்தார். இங்கிலாந்தில், பல தொழிலாளர் தலைவர்களைச் சந்தித்தார். கம்யூனிஸ்டு தலைவர் தோழர் சக்லத்வாலாவைக் கண்டு உரையாடினார். அவரிடம் பெற்ற சோவியத் யூனியன் அய்ந்தாண்டுத் திட்டத்தை தமிழில் மொழி பெயர்ந்து வெளியிட்டார். பிரிட்டிஷ் தொழிற்கட்சி தலைவர் லான்ஸ்பரியைச் சந்தித்தார். 

20.06.1932-அன்று இங்கிலாந்து மேக்ஸ்பரோ லேக்பாக்கில், வேலையில்லா தொழிலாளர் ஊர்வலக் கொண்டாட்ட தினத்தில் 50,000-தொழிலாளர் இடையே லான்பரி முன்னிலையில் சொற்பொழிவு ஆற்றினார். பிரிட்டீஷ் தொழிற்கட்சி அரசாங்கம், இந்தியாவில் கடைபிடிக்கும் தொழிலாளர் விரோப் போக்கையும், முதலாளித்துவத்துக்கு ஆதரவு நல்கும் நிலைமையும், அக்கூட்டத்தில் கண்டித்தார். 

ஜெர்மனியில், பெரியார் பலநாள் தங்கியிருந்து பல சமதர்ம சங்கங்களுக்குச் சென்றார். அரசாங்கத்துடன் கலந்து பழகினார். அப்போது ஹிட்லர் ஆட்சிக்கு வராத நேரம். பல நிர்வாண சங்கங்களுக்கும் சென்று அவர்களுடன் கலந்து பழகினார். ஸ்பெயின் நாட்டுத் தலைநகரம் மாட்ரிட்டில் பல தினங்கள் தங்கி, பல சமதர்மத் தலைவர்களுடன் உரையாடியதுடன், அந்நாட்டின் பொது இயக்கங்களை அறிந்து கொண்டார். பாரசிலோனாவில் உள்ள கொலம்பஸ் உருவச்சிலையைக் கண்டுகளித்தார். 

சுற்றுப்பயணத்தில் உடன் வந்த தோழர் எஸ்.ராமனாதன், மேலும் பல நாடுகளைச் சுற்றிப் பார்க்க விரும்பாததால், ‘மார்சேல்ஸ்’ பட்டணத்தில் தங்கிவிட்டார்.

பெரியார், 17.10.1932-இல் ‘ஹரூனா மாரு’ என்ற ஜப்பானியக் கப்பலில் கொழும்பு துறைமுகம் வந்தடைந்தார். இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த நாகம்மையார், மாயாவரம் சி.நடராஜன், அ.ராகவன் ஆகியோர் கொழும்பு வியாபாரி ஹமீது மற்றும் பல சங்கங்களைச் சேர்ந்தவர்கள் ஸ்டீம் போட்டில் கப்பலுக்குச் சென்று வரவேற்று அழைத்து வந்தனர். 

இலங்கை சட்டசபை நடவடிக்கைகளை 18.10.1932-இல் கண்டார். 19.10.1932-இல் சட்டசபை மண்டபத்தில் நடைபெற்ற விருந்தில் கலந்து கொண்டு நண்பர்களுடன் புத்தமத விஷயம், சிங்கள சமூக விஷயம் ஆகியவற்றைப் பற்றி உரையாடினார். 20.10.1932-இல், பர்ஷியன் ஓட்டலில் நடந்த வரவேற்பு விருந்தில், இலங்கை தொழில் இலாகா மந்திரி திரு. பெரி.சுந்தரம், பெரியாரைப் பாராட்டி உரை பகன்றார். 

21.10.1932-இல் சிங்கள வாலிபர்களுடன் அளவளாவி, அவர்களை இல்லம் சென்று, உரையாடி சந்தேகம் தெரிவித்தார். அன்று மாலை ஒரு சினிமா காட்சி கண்டார். முடிவில் வரவேற்புப் பத்திரம் வாசித்தளிக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்துப் பெரியார் பேசினார். 

22.10.1932-முற்பகல், முகமதிய பேராசிரியர்களுடன், சுயமரியாதை இயக்கம் பற்றி கலந்துரையாடினார். அன்று இரவு திருநெல்வேலி ஜில்லா ஆதி திராவிடச் சங்கம் திரு. எஸ்.முத்தையா தலைமையில் அளித்த வரவேற்பை ஏற்று உரை நிகழ்த்தினார். 

23.10.1932-இல், திரு. சி.கே. குஞ்சிராமன் தலைமையில் எல்பின்ஸ்டன் பிக்சர் பாலசில் நடைபெற்ற வரவேற்பில் பெரியாருக்கு தமிழ், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்புக்குப் பதில் அளித்து 2000-பேர் கொண்ட கூட்டத்தில் நீண்ட நேரம் பெரியார் சொற்பொழிவு நிகழ்த்தினார். 

அன்று மாலையே, கொழும்பு கடற்கரைக்குப் பக்கமுள்ள கால்போஸ் மைதானத்தில், டாக்டர் முத்தையா தலைமையில் 10,000-பேர் கலந்த கொண்ட கூட்டத்தில் 2-மணி நேரத்தக்கும் மேலாக கருத்துரை ஆற்றினார்.

24.10.1932-இல் கொழும்பில் தங்கியிருந்தார். 25.10.1932- முதல் 27.10.1932- வரை கண்டியில் தங்கி, மாத்தளை, உக்களை முதலிய இடங்களுக்குச் சென்று தொழிலாளர், கூலிகள் நிலையை விசாரித்து, அறிந்து கொண்டார். 28.10.1932-இல் கண்டியில், அட்வகேட் என்.குமாரசாமி தலைமையில் நடைபெற்ற வரவேற்பில் கலந்து கொண்டார். 

29.10.1932-இல் ஹட்டன், இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத் தலைவர் திரு.நடேசஅய்யர் அழைப்புக்கு இணங்கி சென்று, வரவேற்பில் கலந்து கொண்டு, 3000-பேர்களை கலந்து கொண்ட கூட்டத்தில் சொற்பொழிவு ஆற்றினார். 30.10.1932-இல் கொடிகாமம், 3.11.1932-இல் கொழும்பு சேர்ந்து, ‘மீரான் மேன்ஷனில்’ 06.11.1932-வரை இருந்து விட்டு, கொழும்புவை விட்டுப் புறப்பட்டு 08.11.1932-இல் தூத்துக்குடி வந்து சேர்ந்தார்.

அன்று மாலை தூத்துக்குடியில் நடைபெற்ற மாபெரும் வரவேற்புப் பொதுக்கூட்டத்தில் சொற்பொழிவு ஆற்றினார். 09.11.1932-இல் தூத்துக்குடியிலிருந்து ரயிலில் புற்ப்பட்டு, அன்று மாலை, மதுரை அடைந்து, அங்கு நடைபெற்ற பெரும் வரவேற்புக் கூட்டத்தில் முழக்கமிட்டார். 

10.11.1932-காலை மதுரையிலிருந்து ரயிலில் புறப்பட்டு திருச்சி வந்து, நண்பர்களுடன் அளவளாவி, அன்று இரவு 11-மணிக்கு ரயிலில் புறப்பட்டு 11.11.1932-விடியற்காலை 4-மணிக்கு ஈரோடு சேர்ந்தார். 

தனது பயணத்தில் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தவரை வேட்டி சட்டையுடன் இருந்தார். கம்பளியால் ஆன மழுக்கால்சட்டை, முழுநீள ஒவர்கோட், பெரிய தலைப்பாகை ஆகியவற்றுடன் இருந்தார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் முடிந்தவுடன் தனத முதல் அறிக்கையில் ‘தோழர்’ என விளியுங்கள் என்று தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். சமர்மப் பிரச்சாரத்தை தீவிரமாகச் செய்தார். பெரியார் தனது அய்ரோப்பிய சுற்றுப்பயணத்தைத் துவங்குமுன்பே, 04.10.1931- இல் ‘மார்க்ஸ்’ ஏங்கல்ஸ் அறிக்கையையும், 11.12.1931-இல் 04.10.1931-இல் ’லெனினும் மதமும்´ எனும் நூலையும் வெளியிட்டார். 

- தமிழச்சி