ஒரு மொழி அடிப்படையில் ஒரு நாடு அமைவது இயல்புநிலை. அந்நாட்டுக்குள் வேற்றுமொழி புகுந்து மேலாண்மை செய்யுமானால் அது இயல்பு திரிந்த நிலை. அவ்வேற்று மொழியின் மேலாண்மையிலிருந்து அந்நாடு விடுதலை பெறுமாயின் மீண்டும் இயல்புநிலை அடைகிறது. இயல்புநிலையில் மலர்ச்சி உண்டு. இயல்பு திரிந்த நிலையில் மலர்ச்சி இல்லை.


தூய்மை இயல்புநிலை. அழுக்குப் படிந்து தூய்மை கெடுதல் இயல்புதிரிந்த நிலை. அழுக்கு நீங்கி மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புதல் முறையானது. மலர்ச்சி வேண்டு மென்றால் இயல்பு நிலைக்குத் திரும்பவேண்டும். இயல்பு திரிந்த நிலையிலேயே இருந்துகொண்டு மலர்ச்சி அடைய நினைத்தல் அறியாமை. ஒரு செடியின் வேர் மண்ணில் ஊன்றியிருந்தால்தான் அது வளரும்; மலரும். அதைப் பிடுங்கித் தலைகீழாக நட்டுவைத்தால் அது எப்படி வளரும்?


இயல்பு நிலையில் பெறுங் கல்வி ஆக்க வழிக் கல்வி, அது உள்ளத்தை விடுதலையாக்கும். இயல்பு திரிந்த நிலையில் பெறுங் கல்வி மேலோட்டமான கல்வி; உள்ளத்தை அடிமை யாக்கும்.


அரசியல் விடுதலை மக்களின் இயல்புநிலை. பிற நாட்டானின் ஆட்சிக்குட்பட்டிருத்தல் இயல்பு திரிந்த நிலை. பிற நாட்டானின் ஆட்சியில் நமக்குச் சில நன்மைகள் கிடைத் திருக்கலாம். விடுதலை அடைந்தபின் அவ்விடுதலையை மேம்படுத்த அந்நன்மைகளை நாம் பயன்படுத்தலாம். அதனால் பிழையில்லை. ஆனால், அடிமை நிலையில் நாம் பெற்ற நன்மைகளை விடுதலைக்கு உரியனவாக மாற்றாமல், பழைய அடிமை மனத்தோடேயே பயன்படுத்துவோமானால் எந்த மலர்ச்சியும் ஏற்படாது.


ஆங்கில மொழி அடிமைக்காலத்தில் நமக்குக் கிடைத்த ஒரு நன்மை என்று கூறலாம். விடுதலை அடைந்த பின், அதனை ஓர் அழகிய இலக்கிய, அறிவியல் மொழியாக நாம் கற்றால் அது நம் அறிவைச் செழுமைப்படுத்தும். ஆனால் தாய்மொழி உரிமையை மறுத்து அதனைப் பயிற்றுமொழி யாகக் கொள்வோமானால் அது அடிமைத்தனத்தின், அடிமைக் காலத்தின் நீட்சியே ஆகும். அதனால் தீமையே அன்றி நன்மை விளையாது; விளையாது.


அடிமை நிலையில் ஆங்கிலம் முதன்மையாக இருந் திருக்கலாம். விடுதலை நிலையில் நம் தாய்மொழியே நமக்கு முதன்மை. விடுதலை பெற்றபிறகு நம் தாய்மொழியின் இடத்தில் வேறு எந்த மொழியையும் இருத்திவைத்தல் கூடாது; கூடாது.


தமிழரின் வாழ்க்கை இயல்பு வாழ்க்கையாக இருந்திருந்தால் ஆங்கிலம் என்பதையே நாம் அறிந்திருக்க மாட்டோம். அதனால் நம் மொழியைக் கற்று அதன் வாயிலாகவே முழுமையான மலர்ச்சி அடைந்திருப்போம். விடுதலையோடு வாழும் ஓரினத்தின் முழுமையான, அரசியல், பொருளியல், பண்பாட்டுக் கல்வி மலர்ச்சியில் கடுகளவும் பிற மொழிக்கு இடம் இல்லை. அது ஆங்கிலமோ, வட மொழியோ, வேறெந்த மொழியோ - நம் வளர்ச்சி முழுமையும் நம்மைப் பொறுத்திருக்க - அந்த வேற்று மொழிக்கு அங்கென்ன வேலை?


ஆங்கிலேயன் இங்கு வந்து  ஆட்சிபுரிந்ததன் விளைவே ஆங்கில வழிக் கல்வி. விடுதலை பெற்ற பிறகும்  இதை  நாம் தொடர்ந்து மேற்கொண்டு வருவது அடிமைத்தனம் மட்டுமன்று;  மிகமிக அருவருக்கத்தக்கதும் ஆகும். உண்மையான, சரியான கல்விபெற்று நாம் மலர்ச்சி அடையாமல் தடுத்ததும் தடுத்து வருவதும் ஆங்கிலவழிக் கல்வியே. எந்தக் கொம்பனும் இன்று இங்கு நடக்கும் ஆங்கிலவழிக் கல்விக்குச் சப்பைக் கட்டுக் கட்ட முடியாது. ஆங்கிலவழிக் கல்வி நமக்கு இழைத்து வரும் தீமை நாம் பண்டைக் காலத்தில் பெற்றிருந்த நம் சொந்த மான, ஆக்கத் தன்மைவாய்ந்த கல்வியை நாம் பெற்றுக் கொள் ளாமல் தடுப்பது என்பதை நாம் அறியாதிருக்கின்றோமே.


பயிற்றுமொழியாகக் கொள்ளாமல் பார்த்தோம் என்றால் ஆங்கிலம் நாம் பெற்ற அடிமைக்கால நன்மைகளுள் ஒன்று. எந்தக் குறை நிரப்புதலும் செய்யாமல் கூடுதல் பயனாக அது இருந்து வருகின்றது. அதுவும், மாறிவரும் உலகச் சூழலில் என்றுதான் கூறவேண்டும்.


மாறிவரும் உலகச் சூழல் நமக்கு நன்மை தர வேண்டுமே தவிரத் தீமை தரக்கூடாது. கூடவே கூடாது. நாம் நூற்றுக்கு நூறு நாமாகவே இருந்தால் மாறிவரும் உலகச் சூழலால் நமக்கு எந்தத் தீங்கையும் விளைவிக்க முடியாது.


ஆனால் நாம் தொடர்ந்து எல்லா நிலைகளிலும் நம் சொந்தத் தன்மையை இழந்து அடிமைகளாகவே இருந்து வருவதால் மாறிவரும் உலகச் சூழல் நம்மை மேலும் மேலும் அடிமைத்தனத்தில் அமிழ்த்துமே தவிர நமக்கு எந்த மலர்ச்சி யையும் தரப்போவதில்லை.


நம் விடுதலையை நம்மிடமிருந்து பறித்துக்கொண்டு எவனாவது நமக்கு மூக்குப்பிடிக்க மூன்று வேளைச் சோறு போடுவானானால் அவன் பின்னால் போய்விடலாமா? அது வாழ்க்கையாகுமா?


புற அடிமைத்தனம் மட்டுமே கொண்டவன், தன் உள்ளத்தை அழித்துக்கொள்ளாதிருப்பானானால் அவ் வடிமைத் தனத்திலிருந்து மீள வாய்ப்புண்டு. உள்ளமே அடிமையாகி எல்லாவற்றிலும் தன்னை இழந்து அயன்மைப் பட்டுப் போனவன் தான் அடிமை என்பதை உணர்வதே இல்லை.


தொழுநோய்க்கு உட்பட்டவன் உடலால் சுரணையற் றிருப்பது போல அவன் உள்ளத்தால் உணர்வால் சுரணை யற்றுப் போகின்றான்.


தமிழராகிய நாம் இன்று அயன்மை என்னும் தொழுநோய்க்கு உட்பட்டு, மொழி, இன உணர்வு அல்லது சுரணை முற்றும் அற்றுப்போனோம். மூளையே அடிமை யாகிப் போனவனிடம் தன்மான உணர்வை எப்படி எதிர்பார்க்க முடியும்?


இன்று தமிழகத்திலும் புதுவையிலும் ஆங்கிலவழிக் கல்வியை வற்புறுத்துபவர்கள் யார் யார்?

*           ஆங்கில வழிக்கல்வியை வாணிகமாக நடத்திக் கொள்ளை ஊதியம் பெற்றுக் கொழுப்பவர்கள்.

*           தமிழ் மக்களிடையே கொஞ்ச நஞ்சம் ஒட்டிக் கொண்டிருக்கும் தமிழுணர்வை இல்லாமற் செய்து, தாங்கள் அதனால் பயனடைய நினைக்கும் தமிழ்ப் பகைவர்கள்.

*           உள்ளம் அடிமைத்தனத்திலேயே ஊறிப்போனதால் சொந்தச் சுரணை கெட்டுப்போய் வெறும் விலங்கு வாழ்க்கை வாழும், தமிழ் எனும் உள்ளீடற்ற - தக்கைத் தமிழர்கள்.

*           ஆங்கிலவழிக் கல்வி வாணிகர்களிடமிருந்து கொள்ளைத் தரகு பெற்றுக்கொண்டும், தங்கள் பதவி நிலைப்பதற்காகச் செல்வாக்குமிக்க மேல்தட்டுத் தமிழ்ப் பகைப் பார்ப்பனக் கும்பலைப் பகைத்துக் கொள்ளக்கூடாது என்ற நிலைப்பாட்டை மேற்கொண்டும் எல்லாவற்றிலும் மக்கள் நலத்தைப் புறக்கணித்துத் தங்கள் சொந்த ஊதியங்களைப் பெருக்கிக் கொள்வதே குறியாக இருக்கும் ஆளும் கூட்டத்தினர்.


மேற்கூறிய எவருமே உண்மை அறிவு நிலையில் மதிக்கத்தக்க கருத்துடையவர்கள் அல்லர்.


உண்மை அறிவாளியாக இருப்பவர்கள் ஒருநாளும் தாய்மொழிக் கல்வியை எதிர்த்து ஆங்கில வழிக் கல்விக்குத் துணைபோகார்.


ஆங்கில வழிக் கல்வியால் தமிழர்க்கு நன்மை கிடைக்கும் என்பவர்கள் எந்தத் துறையில் எவ்வளவு படித்திருந்தாலும் சரி, எந்த அறிவியல் கொம்பர்களாக இருந் தாலும் சரி, எவ்வளவு உலகளாவிய புகழ் பெற்றிருந்தாலும் சரி, இச் செய்தியைப் பொறுத்து அவர்கள் தெளிவற்றவர் களே. அல்லது ஏமாற்றுக்காரர்களே.


ஆங்கிலவழிக் கல்வி அடிமைக் கல்வி, அது உனக்குப் பருப்பு நெய் வடை பாயசத்தோடு மூன்று வேளைச் சோறு போடலாம். ஆனால் உன்னைச் சங்கிலியில் கட்டி வைத்திருக்குமே!


காலத்தோடு ஒட்டிச் செல்ல ஆங்கிலவழிக் கல்வி வேண்டும் என்பவர்களும், காலத்தோடு ஒட்டிச் செல்ல நாம் நம் விடுதலையைத் துறந்து அடிமையாகிவிட வேண்டும் என்பவர்களும் ஒன்றே. தமிழருக்கு ஆங்கில வழிக் கல்வியால் உலகளாவிய வேலை வாய்ப்பு என்பவன் கூலிக்காரத் தனத்தால் அவ்வாறு சொல்கிறான். வெளிநாடுகளில் நிறைய சம்பளம் வாங்கும் நாகரிகக் கூலித் தனத்தையே அவன் மனத்தில் கொண்டுள்ளான். ஒரு காலத்தில் இவன் கைவண்டி தள்ளும் கூலியாயிருந்தான். இன்று கணிப்பொறி தள்ளும் கூலியாக இருக்கின்றான். முன்பு மண்சட்டியில் பிச்சை எடுத்தான். இப்போது தங்கத் திருவோட்டில் பிச்சை எடுக்கிறான்; அவ்வளவுதான்.


இந்தக் கொள்ளையில், தங்கள் பிள்ளைகள் எந்தப் பயிற்றுமொழியில் படிக்கவேண்டும் என்பதைப் பெற்றோர் விருப்பத்துக்கே விட்டுவிடவேண்டுமாம்.


வழக்கு மன்றம் இப்படித் தீர்ப்பளித்திருக்கின்றது.


சரியான கல்வி எது, அது எவ்வளவு இன்றியமையாதது என்பது பற்றி நடுவர்கட்கே அக்கறை இல்லை, அல்லது அவர்கள் மேல்தட்டுக்காரரோடு கூட்டுச் சேர்ந்துகொண் டிருக்கிறார்கள் என்றுதான் கூறவேண்டும். எந்த ஓட்டை வழியாகவாவது ஆங்கிலப் பயிற்றுமொழியைப் புகுத்திவிட வேண்டும் என்பது அவர்களின் உள்நோக்கம். அதற்குப் பெற்றோர்களைத் துணைக்கழைத்துக் கொள்கின்றனர்!


வழக்கு மன்றத் தீர்ப்பே வந்துவிட்டது. பயிற்றுமொழி பெற்றோர் விருப்பத்தைப் பொறுத்தது என்று கீழ்த்தட்டு மக்களை மேலே வரவிடாமல் தடுக்கும் மேல்தட்டுக்காரரின் சூழ்ச்சி மிகத் தந்திரமாகத் தமிழ்வழிக் கல்விக்கு எதிராக இத்தகைய தீர்ப்பைக் கொண்டுவந்து நிறுத்திவிடுகின்றது.


அரசு மக்கள் நல அரசாக இருந்தால் இதற்கெல்லாம் இடம் இல்லாமல் தமிழ்தான் பயிற்றுமொழி என்று சட்டம் இயற்றியிருக்கும். ஆனால் அரசு அப்படி இல்லை. வேலியே பயிரை மேய்வதுபோல் அரசே தமிழ்வழிக் கல்விக்கு எதிராக இருக்கின்றதே. இதுதான் பெரிய முட்டுக்கட்டை.


ஆனால் பயிற்றுமொழி பெற்றோர் விருப்பத்தைப் பொறுத்தது என்பதில் ஏதாவது பொருள் இருக்கின்றதா? இருக்க முடியாது.


உண்மையான - இயல்பான - கல்வி தாய்மொழி வழிக் கல்வியே. கல்வி என்றால் அது தாய்மொழி வாயிலாகத்தான் இருக்கவேண்டும். தாய்மொழி அல்லாத வேறு எந்த மொழிக்கும் பயிற்றுமொழியாக வரும் உரிமை கிடையாது. அரசின் தவறான  மொழிக் கொள்கையும், தன்னல ஆங்கிலக் கல்விவாணரின் வன்முறையும் தாம் ஆங்கிலப் பயிற்று மொழியைத் தூக்கிநிறுத்துகின்றன.


பயிற்றுமொழி, படிக்க வருபவரின் விருப்பத்தைப் பொறுத்ததன்று; அது கல்விக் கொள்கை சார்ந்தது. மக்களின் அடிப்படை உரிமையாகிய கல்வி உரிமை சார்ந்தது. மக்கள் மொழியல்லாத வேறொரு மொழி பயிற்றுமொழியாக இருப்பது பிழையானது. தாய்மொழியில் கல்வி பெறும் இயற்கை உரிமையை மக்களிடமிருந்து பறித்துக்கொள் கின்றது. ஆங்கிலம் ஒரு தடையாக அவர் முன் போடப்பட்டு அவர்களின் முன்னேறும் உரிமை மறுக்கப்படுகின்றது.


பயிற்றுமொழி எது என்று தீர்மானிக்கும் உரிமை வழக்கு மன்றங்கட்கும் இல்லை. அரசுக்கும் இல்லை. போலிக் கல்வியாளர்க்கும் இல்லை. அது இயற்கைக்கே உண்டு. எது தாய்மொழியோ அதுவே பயிற்றுமொழி. இதுவே இயல்புநிலையா யிருக்கும்பொழுது பயிற்றுமொழி எது என்ற பேச்சுக்கே இடமில்லை.


திருடன் தன் வன்முறையால் பொருளைத் திருடி வைத்துக் கொள்கின்றான் என்றால், திருடனை உதைத்து அவன் கையிலிருக்கும் பொருளை எடுத்துக் கொள்ள வேண்டும். இதுதான் இயற்கை உரிமை. இதை விட்டுவிட்டுப் பொருள் யார் கையில் இருக்கவேண்டும்? உடைமைக்காரன் கையிலா, திருடன் கையிலா என்று தீர்மானிப்பது - தீர்மானிக்க வேண்டும் என்பது என்ன மடத்தனம்!


ஒரு பெண் கயவன் ஒருவனால் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்படுவாளாயின், அவனைப் பிடித்து உதைத்துச் சிறையில் தள்ளவேண்டுமே தவிர, அவனுக்கே அந்தப் பெண்ணை மணம் செய்துவைக்கலாமா? ஆங்கிலவழிக் கல்வி வாணர்கள் தங்கள் வன்முறையால் தாய்மொழி உரிமையைப் பறித்துக் கொள்கின்றார்கள் என்றால் அவர்களை அடித்துத் துரத்திவிட்டுக் கல்வியைத் தாய்மொழியின் கையில் கொடுக்கவேண்டும். இதுவே முறை. இதுவே இயற்கை ஒழுங்கு. தீயவர்கள் கை ஓங்கியிருப்பதால் நன்மையாகிய இது நடக்கவில்லை. நடக்கச் செய்தல் வேண்டும். ஒன்று திரண்ட வலிமை ஓங்கினாலன்றி இது முடியாது.