இலண்டனிலிருந்து ஈழத்தமிழர்களால் விரட்டியடிக்கப்பட்ட ராஜபக்சே, அவமானப்பட்டு இரவோடு இரவாகத் தப்பித்தோம், பிழைத்தோம் என்று இலங்கைக்கு ஓடிப்போயிருக்கிறார்.

2010 டிசம்பர் 2ஆம் நாள், இலண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பேச்சுரிமை குறித்துப்பேச அழைக்கப்பட்டிருந்தார் மகிந்த ராஜபக்சே.

இலங்கையில் எழுத்துரிமை, பேச்சுரிமையின் குரல்வளைகளை நெறித்துப்போட்ட இந்த மனிதரைப் பேச்சுரிமை குறித்துப் பேச எப்படி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அழைத்தது என்பது மிக வியப்பாக இருக்கிறது.

rajapakse_231எப்படி இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத்தான் ராஜபக்சே இலண்டன் சென்றிருந்தார்.

செய்தியறிந்த ஈழத்தமிழர்கள் ஆயிரமாயிரமாக, ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் குவிந்தார்கள். ராஜபக்சே தங்கியிருந்த விடுதியை முற்றுகையிட்டனர். ஈழத்தமிழர்களின் கோபக்கனலாலும், ஆர்ப்பாட்ட அதிர்வாலும் அதிர்ந்து போனது ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் மட்டுமன்று, பிரிட்டன் அரசும்தான்.

ராஜபக்சே இலண்டன் செல்வதற்குச் சிலவாரங்கள் முன்பு, அந்நாட்டின் நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சிகளின் கேள்விக்குப் பதில் அளித்த அந்நாட்டின் பிரதமர், ராஜபக்சே போர்க்குற்றவாளி என்பதற்கான ஆதாரங்களைச் சேகரித்துக்கொண்டிருக்கிறோம். சேகரித்து முடிந்தவுடன் அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இப்பொழுது ஈழத்தமிழர்கள் ஒன்றுகூடி நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது, ‘போர்க்குற்றவாளி ராஜபக்சேவைக் கைது செய் ’ என்று பலமாக முழக்கமிட்டிருக்கிறார்கள்.

ஈழத்தமிழர்களின் ஆர்ப்பாட்ட நெருக்கடியும், பிரிட்டன் பிரதமரின் அறிவிப்பும் ராஜபக்சேவைப் பதற வைத்திருக்கிறது. அதனால்தான் அந்த மனிதன் இரவோடு இரவாக ரகசியமாக இலண்டனைவிட்டு வெளியேறிவிட்டார்.

ஆனாலும் ஈழத்தமிழர்கள் விடவில்லை . கடந்த டிசம்பர் 10 ஆம் நாள் வெள்ளிக்கிழமை நண்பகலில், உலகத் தமிழர் பேரவையின் தலைவர் எஸ்.ஜே.இம்மானுவேல் அடிகளார், இலண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் டிரையான் அம்மையார் மூலம் போர்க் குற்றவாளி ராஜபக்சே மீது பிடிவாரண்ட் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார்.

ஈழத்தில் போர்விதிகளுக்கு மாறாக, குவியல் குவியலாகத் தமிழர்களைக் கொன்று குவித்துப் புதைத்த ராஜபக்சே ஒரு போர்க் குற்றவாளி என்பதை இந்தியா ‡ சீனா இருநாடுகளைத் தவிர உலகமே ஒப்புக் கொண்டிருக்கிறது.

இலண்டனில் ஈழத்தமிழர்களின் போராட்டத்தாலும், அந்நாடு கைது செய்து விடுமோ என்னும் அச்சத்தாலும் ஓடி ஒளிந்த போர்க்குற்றவாளிக்கு இந்தியா சிவப்புக் கம்பளம் விரிக்கிறது.

ஈழத்தமிழர்களின் குருதியின் நிறமா இந்தச் சிவப்புக் கம்பளம்? அதில்தானே அப்போர்க்குற்றவாளியின் செருப்புக் கால்கள் நடந்தன.

திருப்பதிக்கு வந்த ராஜபக்சேவுக்குத் ‘ தேவஸ்தான பூரணகும்ப ’ மரியாதை.

தேடப்படும் கொலைக்குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவுக்கு ‘ராஜமரியாதை’.

இந்திய அரசு சொல்கிறது, ஈழத்தில் முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் சொந்த வாழ்விடங்களுக்குப் போய்க்கொண்டு இருக்கிறார்கள், இலங்கை அரசு நிவாரணப்பணிகளைச் செய்து கொண்டு இருக்கிறது என்று.

இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கே சொல்கிறார், இலங்கை அரசு முகாமில் உள்ள தமிழ் மக்களுக்குச் சரியான நிவாரணம் செய்யவில்லை என்று.

அண்மையில் இலங்கைக் கடற்படையின் வைர விழாவை ஒட்டி, அந்நாட்டுக் கப்பல் படையுடன் இந்தியப் போர்க் கப்பல்கள் இரண்டு அணிவகுத்துச் சென்றுள்ளன.

இந்நாட்டுத் தமிழர்களின் இரத்த உறவான ஈழத்தமிழர்களைக் கொடூரமாகக் கொன்று குவித்த, மகிந்தனுக்கு சிவப்புக் கம்பளம் இங்கே!  அவன் போர்க் குற்றவாளி என்று ஆதாரங்களைத் திரட்டிக் கொண்டிருக்கும் இலண்டன் அங்கே!

ஒப்பிட்டுப் பார்த்தால் வெட்கப்பட வேண்டியவர்கள் நாமாகத்தான் இருக்கிறோம்.

இருந்தாலும் தமிழர்களின் உணர்வு பட்டுப்போய்விடவில்லை.

கோவை பீளமேடு கொடிசியா வளாகத்தில் ஜவுளித் தொழில்நுட்பக் கண்காட்சி நிகழ்ச்சியில், இலங்கை அமைச்சர் அப்துல் ரசீத்துக்குப் பதிலாக, அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் காசிம் பைசல் கலந்து கொள்ள வந்தபோது, பெரியார் திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்கள் ஒன்றுகூடி முற்றுகையிட்டுக் காசிமை விரட்டியடித்திருக்கிறார்கள்.

ராஜபக்சேவுக்கு லண்டனில் ஏற்பட்ட நிலை, கோவையில் அவரின் சீடர் காசிம் பைசலுக்கு ஏற்பட்டு இருக்கிறது.

உலக நாடுகளும், ஈழத்தமிழர்களும், போர்க்குற்றவாளிகளான ராஜபக்சே சகோதரர்களை உலக நீதிமன்றக் கூண்டில் ஏற்றாமல் விடமாட்டார்கள் என்பதற்கு இவை எல்லாம் முன்னோட்டமாக அமைகின்றன.

எப்படி இருப்பினும், பெரும் பாதிப்புக்கு ஆளான ஈழத்தமிழர்களின் நெஞ்சுரமும், போர்க்குணமும், நீதிக்காகப் போராடும் அவர்களின் தொடர் முயற்சியும் ஒரு நாள் வெற்றி பெற்றே தீரும்.

வெங்கொடுமைச் சாக்காட்டில் எங்கள் தோள்கள் விளையாடும் என்பதை மெய்ப்பித்துக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களைப் பாராட்டுவோம்.

Pin It