இம்பீரியல் நிதி ஆதாரங்களை மாகாண வாரியாகப் பரவலாக்குவது குறித்த ஓர் ஆய்வு 

நியூயார்க், கொலம்பியாப் பல்கலைக்கழகப் பொருளாதாரப் பேராசிரியர் எட்வின் ஆர்..செலிக்மான் அளித்த முன்னுரையுடன்  

(1925, கிரேட் பிரிட்டன், வெஸ்ட்மினிஸ்டர், பி.எஸ்.கிங் & ஸன்ஸ் லிட்., பிரசுரித்த பதிப்பின் மறுபிரசுரம்)

**

சமர்ப்பணம்

பரோடா மஹாராஜா

மேன்மை தாங்கிய ஶ்ரீ சாயாஜிராவ் கெயிக்வாட் அவர்களுக்கு என் கல்விக்காக அளித்த பேருதவிகளுக்கு நன்றியின் காணிக்கையாக இந்நூலைச் சமர்ப்பணம் செய்கின்றேன்.

***

முன்னுரை         

ambedkar and his wife savitha   இந்திய நிதி அல்லது பொருளியல் சம்பந்தமான ஓர் ஆய்வை வழங்குவதற்காக மன்னிப்புக் கோர வேண்டிய மரபான அவமானத்திலிருந்து மாணவர்கள் வெகுகாலத்திற்குக் காக்கப்படுவார்கள். ஆனால், மறுபுறத்தில் தங்களது சம்பந்தப்பட்ட ஆய்வுகளின் குறைப்பாடுகளுக்காக, அதேபோன்று வெகுகாலம் வரை அவர்கள் மன்னிப்புக் கோரவேண்டிய அவசியமும் ஏற்படும். ஒரு விஷயம் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டியதாக இருக்கும்போதுகூட, ஒரு சிறந்த பகுப்பாய்வுக்கு ஒரு வரலாற்றுப் பின்னணி தேவைப்படுகிறது. துரதிருஷ்டவசமாக இந்திய நிதித்துறை சம்பந்தமாக எந்தவித ஆரம்பப் பணிகளும் செய்யப்படவில்லை. அதன் காரணமாக அத்துறையில் முன்னோடியாக இருக்க விழைபவர் எதிர்கொள்ளும் சிரமங்களைச் சொல்லி மாளாது. சில விஷயங்களின் முன் வரலாறு முழுவதுமாக விளக்கிச் சொல்லப்படாத காரணத்தினால் அவ்வப்போது சிரமங்கள் ஏற்படுவதுண்டு. ஏதோ தவறு நடந்துவிட்டதோ என்ற அச்சம் அடிக்கடி ஏற்படுகிறது. அதிலிருந்து அந்த மாணவரைக் காப்பாற்ற யாருமில்லாதபோது எரிச்சலூட்டும் துன்ப உணர்வில் அவர் உழலுவதைத் தவிர வேறு வழியில்லை. தான் ஆய்வு செய்யும் விஷயம் சம்பந்தப்பட்ட தகவலைக் கண்டெடுக்கும்போது ஒரு முன்னோடி மாணவர், அவ்வப்போது ஆனந்தப் பரவசமடைவது உண்டு. ஆனாலும், அது நெடிய அலுப்பூட்டும் தேடலுக்குப் பின்னர்தான், அதுவும் உமியிலிருந்து தானியத்தைக் கண்டெடுப்பது போலத்தான் கிடைக்கிறது மறுபடியும் கிடைக்கக்கூடிய அத்தகவல் ஆதாரங்கள் சில சமயங்களில் தவறான வழிகாட்டிகளாக இருக்கின்றன. அவற்றை ஆய்வுசெய்வது, கணிசமான காலமும் ஆற்றலும் விரயமாவதில்தான் முடிகிறது.

            இப்போதைய கடமையைப் பீடித்துள்ள சிரமங்கள் இவைதான். எந்த மாணவரையும் அவரது பணிக்குத் தயாரிக்கும் நூல்கள் எதுவும் இல்லை. அல்லது அவரது உழைப்பை எளிதாக்கும் அறிஞர்கள் எவரும் இல்லை. அல்லது அவரைச் சரியான பாதையில் வழி நடத்திச் செல்லவும் யாரும் கிடையாது. இத்தகைய சிரமங்கள் ஒரு புறமிருக்க, அதிக விவரங்களின்றி இந்த ஆய்வை முழுமையானதாக்கும் ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது, இப்பணியை மிகவும் கடினமாக்கியுள்ளது. ஆனால் இதில் சம்பந்தப்பட்டுள்ள உழைப்பைப் பற்றி நான் பேச விரும்பவில்லை அல்லது இத்தனி நூலைத் தயாரிப்பதில் உதவியாக இருந்த நூல்கள், ஆவணங்கள் ஆகியவற்றின் நீண்ட பட்டியலை வெளியிட்டு வாசகரை அதிர்ச்சியூட்டவும் விரும்பவில்லை. நான் சொல்ல விரும்புவதெல்லாம் அதன் குறைபாடுகளைப் பற்றித்தான். உண்மையில் குறைபாடுகள் ஏராளமானவையாக இருப்பதைக் கற்றறிந்த மதிப்புரையாளர் கண்டறியலாம்.

 ஆனாலும் அவை இத்தனிநூல் பெற்றிருப்பதாகக் கண்டறியப்படும் மதிப்பைப் பாதிக்குமளவுக்கு மோசமானவையல்ல என்பது எனது கருத்தாகும். எனது வருத்தமெல்லாம், ஒரு சில குறைபாடுகளைப் பற்றித்தான். இந்தியாவில் உள்ளாட்சி நிதித்துறை பரவலாக்கப்பட்ட ஒரு தேதியை நான் குறிப்பிட்டிருக்கிறேன். ஆனால், அந்த தேதி முற்பட்டதாக இருக்காது என்றும், நான் குறிப்பிட்டுள்ள தேதியை விட முந்திய தேதியாக அது இருக்கக்கூடும் என்றும் நான் கருதுகிறேன். இறுதியில் இந்த விஷயத்தைப் புரிய வைத்துவிட்டேன் என நினைக்கிறேன். ஆனால் அது வைக்கோல் போரிலிருந்து ஊசியைத் தேடுவதற்கு ஒப்பான கடமையாக இருந்திருக்கும். அந்தப் பயனின் மதிப்பு, அதைப் பெறுவதற்காகச் செலவிடப்பட்ட உழைப்பிற்கு ஈடாக இருக்குமா என்பது ஐயத்திற்குரியதாகும். மேலும், என்னுடைய தேதியைப்பற்றி நான் நம்பிக்கையுடன் இல்லாவிட்டாலும் கூடப், பிற்கால ஆராய்ச்சியாளர்கள் என்னுடைய கூற்றை உறுதிப்படுத்தக்கூடும் என்பது எனது கருத்து. நான் எடுத்துக்கொள்ளாத மற்றொரு விஷயம், ஆனால் எடுத்துக்கொள்ள மிகவும் விரும்பியிருக்கக்கூடிய விஷயம், மாநில மற்றும் உள்ளாட்சி நிதிகளுக்கிடையிலான உறவு சம்பந்தப்பட்டதாகும். இதை நான் செய்யத் திட்டமிட்டிருந்தேன். ஆனால், அதைத் தொடருவதை விட்டு விட்டேன்.

ஏனெனில், நான் ஆய்வுக்குத் தேர்வு செய்துள்ள பிரதான விஷயமான ஏகாதிபத்திய நிதியமைப்பை, மாநில அளவில் பரவலாக்குதல் என்பது அந்தத் தலைப்புக்குச் சம்பந்தமில்லாத உண்மைகளையும் வாதங்களையும் கொண்டு நிரப்பப்பட்டிருந்தது. இக்குறைப்பாடுகள் பிரிட்டிஷ் இந்தியாவில் உள்ளாட்சி நிதியமைப்பு குறித்த ஓர் அனுபந்தத் தனி நூலினால் அகற்றப்படும். அது தயாரிக்கப்பட்டு வருகிறது விரைவிலேயே அது பிரசுரிக்கப்படும் என்று கருதுகிறேன். இத்தனிநூலின் ஒரு குறையாக ஆங்காங்கே திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டக்கூடும். அவற்றைத் தவிர்த்திருக்கலாம் என்று கூறுவது கூட நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், பொருளாதாரத்தை விளக்கும் வார்த்தைகள் தெளிவற்றவையாக இருக்கும்பட்சத்தில் ஒரே விஷயம் திரும்பத் திரும்பக் கூறப்படுவது தவிர்க்க முடியாதது என்பதை நியாயப்படுத்த வேண்டும். ஏனெனில் விளக்கமளிப்பதன் நலன்கள் எப்போதும் அவற்றில் உள்ள மனச்சோர்வை மிஞ்சுவதாக இருக்க வேண்டும்.

            மதிப்பிடற்கரிய பல யோசனைகள் வழங்கியதற்காகவும், இத்தலைப்பு சம்பந்தமான பல முக்கிய ஆவணங்களைக் கொடுத்துதவியதற்காகவும் இந்தியா அலுவலத்தில் நிதித்துறைச் செயலாளராக இருந்த திரு.ராபின்சன் அவர்களுக்கு நன்றி கூறாமல் இந்த முன்னுரையை என்னால் முடிக்கமுடியாது. கையெழுத்துப் பிரதியின் ஒரு சிறிய பகுதியின் நகலை வாசித்துப் பார்த்த லண்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கேனனுக்கும் கூட நான் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். கொலம்பியாப் பல்கலைக்கழகத்தில் எனது ஆசிரியராக இருந்த பேராசிரியர் செலிக்மானுக்கு நான் பட்டிருக்கும் கடன் அளப்பரியது. ஏனெனில், அவரிடம் இருந்துதான் பொதுநிதி இயல் கோட்பாடுகளின் முதலாவது பாடங்களை நான் கற்றேன். அச்சுப் பிழை திருத்தும் மிகக் கடுமையான பணியில் எனக்கு ஒத்துழைப்பளித்த எனது நண்பர் திரு.சி.எஸ்.தியோலுக்கும் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

- அம்பேத்கர்       

***

அணிந்துரை

            தமது அற்புதமான ஆய்வுக்கட்டுரையில் திரு.அம்பேத்கர் விவாதப் பொருளாக எடுத்துக் கொண்டுள்ள பிரச்சினை உலகின் எல்லாப் பகுதிகளிலும் பெரும் ஆர்வத்தைத் தூண்டிவிட்டுள்ளது. ஆரம்பம் முதல், மைய மற்றும் உள்ளாட்சி அரசாங்கங்கள் திணிக்கும் நிதிச்சுமைகளை நாம் கண்டுவருகிறோம். ஓர் அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்ட உடனேயே ஒரு புறத்தில் யுத்தங்களை நடத்துவதற்கும் மறுபுறத்தில் உள்ளாட்சிப் பாதுகாப்புக்கும் வசதிகளுக்கும் வகை செய்வதற்கும் அரசு மற்றும் உள்ளாட்சி நிர்வாகிகளுக்குச் செலவினங்களுக்குப் பணம் தேவைப்பட்டது. பிற்காலத்தில்தான் உள்ளாட்சி மற்றும் மத்திய அரசியல் அமைப்புகளுக்கிடையில் இடைச்செருகலாகத் திரு.அம்பேத்கர் கூறுவது போல் பிரதேச அரசாங்கம் உருவாக்கப்பட்டது. பல்வேறு வகையான செலவினங்களுக்குப் பிரயோகிக்கப்பட்ட பெயர்கள், அதிகாரிகள் கூறுவதிலிருந்து முற்றிலும் மாறுபடுகின்றன. இந்தியாவில் நாம் உள்ளாட்சி, பிரதேச மற்றும் ஏகாதிபத்தியச் செலவினங்கள் என்று கூறுகிறோம். ஜெர்மனியில் உள்ளாட்சி, அரசு மற்றும் ஏகாதிபத்தியச் செலவினங்கள் என்று கூறுகிறார்கள். அமெரிக்காவிலும் ஸ்விட்சர்லாந்திலும் உள்ளாட்சி அரசு மற்றும் (பெடரல்) மத்திய அரசுச் செலவினங்கள் என்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் உள்ளாட்சி, அரசு மற்றும் காமன்வெல்த் செலவினம் என்று அழைக்கிறார்கள். தென் ஆப்ரிக்காவிலும் கனடாவிலும் உள்ளாட்சி, பிரதேச, பெடரல் செலவினங்கள் என்கிறார்கள். பிரான்சில் உள்ளாட்சி, துறைசார்ந்த மற்றும் பொதுச் செலவினங்கள் என்று கூறுகின்றனர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தில் உள்ளதைப் போல இன்னும் சில நாடுகளில் ஒட்டுமொத்தமாக சாம்ராஜ்யமே ஏற்றுக்கொள்ளும் ஒரு சர்வாம்ச செலவினங்கள் வகை உருவாக்கப்பட்டு வருகிறது.

            அரசாங்கத்தினுடைய செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக, இச்செலவினங்களின் பல்வேறு வகைகளின் தன்மைகளும் முக்கியத்துவமும், அவற்றுற்கிடையிலான உறவுகளும் தொடர்ச்சியான மாற்றங்களுக்குள்ளாகி வருகின்றன. பெருமளவிற்கு இது பொதுவான பொருளாதாரச் சூழ்நிலைகளினால் ஏற்பட்ட மாற்றமாகும். இது, அரசியல் கட்டமைப்பு அல்லது நிர்வாக நடவடிக்கையைப் படிப்படியாக மாற்றியமைப்பதில் முடிந்தது. சில நாடுகளில் அமெரிக்கா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் உள்ளதைப்போல பெடரல் அரசாங்கத்தை முன்னர் அரசுரிமை பெற்றிருந்த நாடுகள் தான் உருவாக்கின. இன்னும் சில நாடுகளில் இடைப்பட்ட (மாகாண அல்லது மாநில) அரசாங்கம் உள்ளாட்சி அல்லது மத்திய அரசாங்கங்களுடன் ஒப்பிடும் பொழுது முக்கியத்துவம் இழந்து நிற்கிறது. வேறு நாடுகளில் இதற்கு நேர் மாறாக இருக்கிறது.

            வரிவிதிப்பின் நெருக்குதல் அதிகரித்ததுடன் நவீன ஜனநாயகங்களின் கீழ் அதிகரிக்கப்பட்ட அரசாங்க நடவடிக்கைகளின் வளர்ச்சியும் சேர்ந்து, அரசாங்கத்தின் இந்தப் பல்வேறு வடிவங்களிடையே பளுவை நேர்மையாகப் பங்கிடும் பிரச்சினை ஏறக்குறைய கடுமையாகியுள்ளது. திரு அம்பேத்கர் கூறுவது போன்ற ஒதுக்கீடுகள், ஒதுக்கீடு செய்யப்பட்ட வருவாய், பங்கு வருவாய் போன்றவை எல்லா நாடுகளிலும் பின்பற்றப்படும் வழிமுறைகளைப் போன்றவைதான். மூன்று அடிப்படைத் திட்டங்களில் ஒன்று பின்பற்றப்பட வேண்டும். மத்திய அல்லது மாநில அரசாங்கம் சம்பந்தப்பட்ட பயத்தின் அளவுக்கேற்ப, ஒன்று மற்றொன்றைக் கட்டுப்படுத்தவேண்டும். முன்பு அமெரிக்காவிலும் ஜெர்மனியிலும் ஒட்டுமொத்தமாக அல்லது பெருமளவில் மாநிலங்கள்தான் மத்திய அரசாங்கத்தை ஆதரித்து வந்தன. நவீன காலத்தில் கனடாவிலும் ஆஸ்திரேலியாவிலும் இதற்கு நேர்மாறாக இருந்தது உண்மை. அல்லது இரண்டாவதாகத் தெளிவான வருவாய்களைத் தனித்தனி அரசாங்கங்களுக்கு ஒதுக்கலாம். அண்மைக்காலம் வரை அமெரிக்கா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள அரசாங்கங்கள் முக்கியமாக மறைமுக வரிகள் மூலமாகத்தான் நடத்தப்பட்டன. மாநில அரசாங்கங்கள் நேரடி வரிகளினால் நடத்தப்பட்டன. அல்லது மூன்றாவதாக, வருவாய்களை ஒரு அரசாங்கம் வசூலித்து அதன் ஒரு பகுதியை மற்றொரு அரசாங்கத்திற்கு ஒதுக்கலாம். ஒரு மாநில அரசு வரிகளைத் தன் பெடரல் அரசாங்கத்துடன் பகிர்ந்துகொள்ளும் பல உதாரணங்களும் உள்ளன. அமெரிக்காவில் தற்போது மாநில மற்றும் பெடரல் அரசாங்கத்திற்கிடையில் வழி வழி வந்த வரியை முறையாகச் செலவிடுவது ஒரு பெரும் பிரச்சினையாகியுள்ளது. ஜெர்மனியில் மாநில மற்றும் பெடரல் அரசாங்கத்தின் நிதி உறவுகள், அரசியல் விவாதத்தின் முன்னணியில் உள்ளன.

            இந்த விவாதத்திற்குத் திரு. அம்பேத்கரின் பங்களிப்பினுடைய மதிப்பு, உண்மைகளைப் புறவயமாக வரிசைப்படுத்திக் கூறியிருப்பதிலும் தமது சொந்த நாட்டில் நிகழ்ந்துள்ள ஆர்வமூட்டும் வளர்ச்சி போக்குகளை நடுநிலையாக ஆய்வு செய்திருப்பதிலும் அடங்கியுள்ளது. இதர நாடுகளுக்கும் இப்படிப்பினைகள் பொருந்தும். எனக்குத் தெரிந்தவரை, அடிப்படைக் கோட்பாடுகளைப்பற்றி இவ்வளவு விரிவான ஆய்வு வேறு எங்கும் நடைபெற்றதில்லை.

            பாதிச் சித்திரம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை. ஏனெனில், இத்துறையில் உள்ளாட்சி அதிகாரிகள் நுழைந்ததனாலும், மாநில (மாகாண) மற்றும் பொது (பெடரல்) தேவைகளுடன் ஒப்பிடும்பொழுது அவர்களுடைய நிதித் தேவைகளுக்கான கோரிக்கைகளினாலும் நிலைமை எங்கும் சிக்கலடைந்திருந்தது. உதாரணமாக, அமெரிக்காவில் இப்போது பரவலாக விவாதிக்கப்படும் பிரச்சினை பள்ளிகளுக்கு நிதியுதவியளிப்பது பற்றியதாகும். இது நிதிசார்ந்த இடையுறவு சம்பந்தமான கேள்விகளுக்கு அளிக்கப்படவிருக்கும் சரியான பதிலையே அதன் தீர்வு பெருமளவுக்குச் சார்ந்துள்ளது. இப்பிரச்சினைக்காகத் திரு.அம்பேத்கர் பின்னர் ஓர் ஆய்வில் தன்னையே அர்ப்பணித்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளார். ஆரம்பப் பிரச்சினையை இங்கு அவர் வெற்றிகரமாகக் கையாளுவதைப் போலவே அந்த நிலைமையை விளக்குவதிலும் அவர் வெற்றி காண்பாரேயானால், நாமனைவரும் அவருக்கு இன்னமும் அதிகமாகக் கடமைப்பட்டவர்களாவோம்.

- எட்வின் ஆர்.ஏ.செலிக்மான், கொலம்பியாப் பல்கலைக் கழகம், நியூயார்க், அக்டோபர், 1924.

       ***

முன்னுரை

பொருளின் விளக்கமும் சுருக்கமும்

            இந்திய நிதி விபரங்களை அறிந்து கொள்வதற்கு ஒரு மாணவருக்கு இரண்டு முக்கிய தகவல் மூலகங்கள் வழிகாட்டியாக இருக்கின்றன. ஒன்று ஆண்டு பட்ஜெட் விபரம். மற்றது ஆண்டு நிதி மற்றும் வருவாய் கணக்கு விபரங்கள். இவை இரண்டும் தனித்தனியாக வெளியிடப்பட்டாலும் நிதி பற்றிய விபரங்களை அறிந்து கொள்வதற்குப் பெரும் துணையாக அவை இருக்கின்றன. ஏனென்றால் இது ஒரு விரிவான விளக்கமான ஆண்டு நிதி நடவடிக்கைகளைப் பற்றியதாகும். மேலும், இதில் அடங்கிய விபரங்கள் நிதி மற்றும் வருவாய் கணக்குகளில் குறிக்கப்பட்டுள்ளன.

            இந்த மூல ஆதாரங்கள் உதவியாக இருந்தாலும் கூட அவற்றில் குழப்பங்கள் இல்லாமல் இல்லை. அண்மையில் வெளியிடப்பட்ட நிதி மற்றும் வருவாய்க் கணக்குகளைப் பார்க்கின்ற போது நிதிக் கணக்கு விபரங்கள் நான்கு வெவ்வேறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். அவையாவன. 1.இம்பீரியல் 2.மாகாணம் 3.இணைக்கப்பட்ட உள்ளூர் 4.இணைக்கப்படாத உள்ளூர். ஆனாலும் இவை ஒரே சீராக இருப்பதாகச் சொல்ல முடியாது. உதாரணமாக, 1870 ஆம் ஆண்டுக்கு முன்பாக ஒரே கணக்கு விபரத் தொடர்ச்சிகள் “மாகாணக் கணக்கு” விபரங்களில் காணப்படவில்லை. மேலும் 1863 ஆம் ஆண்டுக்கு முன் ‘உள்ளூர்’ என்ற தலைப்பில் எந்தக் கணக்கு விபரங்களும் காணப்படவில்லை. அதே மாதிரி, 1870 ஆம் ஆண்டுக்கு முன் உள்ள நிதி விபரங்கள் இம்பீரியல் மற்றும் உள்ளூர் என்ற வகையில் பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் 1905 ஆம் ஆண்டுக்குப் பின்வரும் கணக்கு விபரத் தொடர்ச்சிகள் இம்பீரியல் மற்றும் உள்ளூர் என்ற வகையில் பிரிக்கப்படவில்லை. மாறாக 1.இம்பீரியல் 2.மாகாணம், என்ற அடிப்படையில் குறிக்கப்பட்டுள்ளது. மேலும் 1921ஆம் ஆண்டுக்குபின் வருகின்ற நிதி விபரங்கள் இம்பீரியல் நடவடிக்கைகளை மட்டுமே விளக்குகிறது. இவ்வகையான நிதிக் கணக்கு விபரங்கள் [“உள்ளூர் சேராதவைஎன்ற கணக்கு விபரங்கள் நிதி மற்றும் வருவாய் கணக்கு விபரங்களில் காணப்படாதது ஆச்சரியமாக இருக்கிறது, சேர்க்கப்படாத காரணத்தை மிக நுட்பமான காரணங்கள் இருப்பதாகமதராஸ் மேனுவல்” (பகுதி 1, பாகம் V பக்கங்கள் 467-9) சுட்டிக்காட்டுகிறது.சேர்க்கப்படாத நிதிகள் மத்திய அரசாங்கத்தின் சாதாரணமான நிதிவசூலிக்கும் ஏஜென்சி மூலம் வசூலிக்கப்படவில்லை என்பதால் அதில் தலையிடவில்லை. இன்னொரு நுட்பமான காரணமும் உள்ளது. அதாவதுசிவில் கணக்கு மரபு” (பக்கம் 137), மூன்றாவது பதிப்பில் ஒரு தீர்ப்பைச் சுட்டிக்காட்டி கூறப்படுகிறது. அதன்படி அரசாங்கக் கருவூலத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்ற தேவை இல்லை. ஆகவே அவை நிதிவிவரங்களில் சேர்க்கப்படாதது என்று அழைக்கப்படுகிறது. ஆனால் ஏழாவது மற்றும் அண்மையில் வெளியிடப்பட்ட பதிப்பில் (பக்கம் 122) அந்தத் தீர்ப்பிற்கு இவ்வாறு அர்த்தம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு பொதுநிதியும் அரசாங்கக் கருவூலத்தில் சேர்க்கவேண்டிய அவசியம் உள்ளது. இதற்கு மேலாக ஒப்புக்கொள்ளக்கூடிய விளக்கம்அறநெறி மற்றும் பருப்பொருள் வளர்ச்சி’ (moral and material progress report) பற்றிய 1882-83 ஆண்டுகளுக்கான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதன்படி இந்த வகையான நிதி, பொதுநிதியில் சேர்க்க வேண்டுமென்பதில்லை. ஏனென்றால் இவை பெரும்பாலும் தனி அறக்கட்டளை மற்றும் நன்கொடைகளில் அடங்கி உள்ளது ] முதலில் படிப்பவருக்கு அதிகக் குழப்பத்தை ஏற்படும். இதனால், அவருக்கு இயற்கையாக மனதில் எழும்புகிற கேள்வி என்னவென்றால் இந்த வேறுபட்ட பகுதிகளின் வகைப்பாடு எவ்வாறு பரிணாம வளர்ச்சிபெற்றது. மற்றும் இவைகளில் ஒன்று, மற்றவைகளோடு எவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளது என்பதாகும்.

            இந்த ஆய்வில், அவற்றில் ஒன்றான “மாகாண” என்பதன் தோற்றத்தையும் வளர்ச்சியையும் விளக்குவதற்கான ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விவாதத்தைத் தொடருவதில் எந்த சிரமமும் இருக்கக்கூடாது என்பதற்காக, இந்த விவாதப் பொருளை விளக்குவதைக் கோடிட்டுக்காட்டவும், பிரிக்கப்பட்டுள்ள பாகங்களுக்கிடையிலான தொடர்புகளைச் சுட்டிக்காட்டவும் இந்த ஆய்வுக்கு ஒரு முன்னுரை உசிதமானது என்று கருதப்பட்டது. இந்த விஷயத்தை முழுமையாகப் புரிந்து கொள்வதை ஏதுவாக்குவதற்காக, இந்த ஆய்வு நான்கு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் மாநில நிதியின் தோற்றம், வளர்ச்சி, அமைப்பு ஆகியவற்றை விளக்குகிறது. இறுதி வடிவம் 1979 ஆம் ஆண்டின் அரசியல் சட்ட மாற்றங்களினால் வடிக்கப்பட்டது. பாகம் ஒன்றில் சிக்கல் நிறைந்த இதுவரை கடக்கப்படாத, ஆயினும் தேவையான பாதை, மாநில நிதியின் தோற்றுவாயைப் பற்றிய ஒரு முழுமையான கருத்தை வழங்குவதற்காகக் கடக்கப்பட்டுள்ளது. இப்போதைய மாணவர்கள் கடந்த காலத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறும் முதுமொழிக்கு உரிய மதிப்பளிக்கும் அதே சமயம், தற்காலத்தில் கடந்த காலத்தைத் தவிர வேறு எதையும் இங்கு ஆராயவில்லை இயல்1, பாகம்1 இல் மாகாண நிதித்துறை தொடங்கப்படுவதற்கு முன்னர் நடப்பில் இருந்த நிதி அமைப்பைப் பற்றிய சித்திரத்தை வழங்கவும், அதன் அமைப்பில் ஒரு மாற்றம் தேவைப்படுவதற்கான காரணங்களை விளக்கவும் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இயல் இரண்டில், மறுசீரமைப்புக் காலத்தின்போது பிரேரணை செய்யப்பட்ட மாற்று நிதியமைப்பு விளக்கப்பட்டிருப்பதுடன், அது ஏன் பொதுவாக ஏற்கப்படாமல் தோல்வியடைந்தது என்பதும் விளக்கப்பட்டுள்ளது. இப்போதுள்ள அமைப்புக்கும் அதன் மாற்று அமைப்புக்கும் இடையில் ஒரு சமரசமாக அமைந்த திட்டத்தைப் பற்றிய விவாதத்திற்கும் அதை வரவேற்கும் கட்டாயத்தை ஏற்படுத்திய சூழ்நிலைகளுக்கும் இயல் மூன்று அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

            பகுதி ஒன்றில் அதன் தோற்றுவாயை விளக்கியபின், பகுதி இரண்டில் மாகாண நிதியமைப்பின் வளர்ச்சியே விவாதப் பொருளாக்கப்பட்டுள்ளது. பகுதி ஒன்றில் பின்பற்றப்பட்ட ஏற்பாடு எந்த அளவுக்கு உதவிகரமாக இருக்கும் என்பது, அதனுடன் ஒப்பிடுவதற்கு எதுவும் இல்லாத நிலையில் வாசகருடைய முடிவுக்கே விட்டுவிட வேண்டும். ஆயினும், பகுதி இரண்டைப் பொறுத்தவரை மறைந்த நீதிபதி ரானடே 1887 இல் மாகாண நிதியமைப்பு குறித்துப் பிரசுரித்த துண்டுதுண்டாகக் கோடிட்டுக்காட்டிய ஒரே விஷயத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டதிலிருந்து இந்த ஏற்பாடு மாறுபட்டது என்பதையும் இங்குக் குறிப்பிட்டாக வேண்டும். மாகாண நிதியமைப்பின் சிறப்பம்சங்களில், ஒவ்வொரு ஐந்தாவது ஆண்டிலும் மாகாண பட்ஜெட்டுகளில் சேர்க்கப்பட்ட வருவாய்களும் செலவினங்களும் மாற்றியமைக்கப்பட்டன என்பதை இரண்டாம் பாகத்தைப் படிப்பதலிருந்து தெரிந்து கொள்ளமுடியும். இரண்டாம் பாகத்தில் காணப்படும் விஷயங்களை மட்டும், அதுவும் 1882 ஆம் ஆண்டு வரையில் மட்டுமே தமது துண்டுப்பிரசுரத்தில் ஆய்வுசெய்துள்ள நீதிபதி ரானடே, ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாகாண நிதியமைப்பின் வளர்ச்சியில் உள்ள வெவ்வேறு கட்டங்களைக் குறிப்பதற்கு ஒரு நெறிமுறையாக இச்சிறப்பம்சத்தை எடுத்துக்கொண்டுள்ளார்.

அதன் விளைவாக அவருக்கு ஒவ்வொரு ஐந்தாண்டுக் காலமும் ஒரு கட்டமாக ஆகிறது, அவருடைய கரங்களில் மாகாண நிதியமைப்பின் வரலாறு அதை எத்தனை ஐந்தாண்டுகளாகப் பிரிக்கலாமோ அத்தனைக் கட்டங்களாக அமைகிறது. ஒவ்வொரு திருத்தமும் மாகாண நிதியமைப்பின் அடிப்படைகளை மாற்றியிருக்குமேயானால், அத்தகைய ஒரு ஏற்பாடு தர்க்கரீதியானதாக இருந்திருக்கும் என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும். ஆனால், உண்மையில் மாகாண நிதியமைப்பு ஒவ்வொரு முறை திருத்தியமைக்கப்பட்டபோதும், அது தனது குணத்தை மாற்றிக் கொள்ளவில்லை. இந்த மாற்றங்கள் சிரைக்கப்பட்ட ஆடுகளின்மீது வேகமாகக் காற்றடிப்பது போல இருந்தன. அடிப்படை ஆதாரங்களில் மாற்றங்களுக்கு ஏற்ப மாகாண நிதியமைப்பினுடைய வளர்ச்சியின் வரலாறு கட்டங்களாகப் பிரிக்கப்படவேண்டுமானால், முற்றிலும் மாறுபட்ட தன்மையுடைய சிறப்பம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும்.

பொதுநிதியமைப்புத் தத்துவத்தை எழுதுபவர்கள், அது முக்கியமாக வரிவிதிப்பதில் சமத்துவத்தன்மை, செலவினங்களில் சிக்கனம் ஆகியவற்றைக் குறிக்கும் விஷயம் என்று இதைக் கருதுவதுபோல் தெரிகிறது. ஆனால், ஒரு நிதியமைச்சருக்கு நிதி என்பது முக்கியமாக நடைமுறையில் பட்ஜெட்டில் சமநிலையை ஏற்படுத்துவது எவ்வாறு என்ற பிரச்சினையைத் தீர்ப்பதாகவே இருக்கும். மாகாண பட்ஜெட்டுகளில் சமநிலையை ஏற்படுத்துவது எவ்வாறு என்ற பிரச்சினையைத் தீர்ப்பதாகவே இருக்கும். மாகாண பட்ஜெட்டுகளில் சமநிலையை எட்டும் பிரச்சினையைச் சமாளிக்கும் வழிமுறைகளையும் அவ்வப்போது அதில் அறிமுகப்படுத்தும் மாற்றங்களையும் கண்டறியும் நோக்கத்துடன், பிரிட்டிஷ் இந்தியாவில் மாகாண நிதியமைப்பின் வரலாற்றை நாம் ஆராய்ந்தோமானால், மாகாண நிதியமைப்பு மூன்று தெளிவான வெவ்வேறு சட்டங்கள் மூலமாகப் பரிணாம வளர்ச்சியடைந்துள்ளதையும் ஒவ்வொன்றும் அதனுடைய சொந்த அளிப்புமுறையான ஒதுக்கீடுகள், ஒதுக்கீடு செய்யப்பட்ட வருவாய்கள், பகிர்ந்துகொள்ளப்பட்ட வருவாய்கள் என்ற முறையில் வளர்ச்சியடைந்துள்ளதையும் நாம் காணமுடியும். அதன் விளைவாக, நீதிபதி ரானடேயின் இயந்திர கதியிலான திட்டத்தைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, இந்திய அரசாங்கம் பின்பற்றும் அரசாங்கங்களுக்கு அளிப்புமுறைக்கு ஏற்ப மாகாண நிதியமைப்பின் வளர்ச்சியை வெவ்வேறு கட்டங்களாகப் பிரிப்பது கூடுதல் தர்க்கரீதியானதாகவும் பயன்படுவதாகவும் இருக்கும் என்று கருதப்படுகிறது. அதன்விளைவாக, மாகாண நிதியமைப்பின் வளர்ச்சி சம்பந்தமான விஷயங்கள் அடங்கியுள்ள இரண்டாம் பகுதி, மூன்று இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 1.ஒதுக்கீட்டின் மூலம் பட்ஜெட் 2.ஒதுக்கீடு செய்யப்பட்ட வருவாய்களின் மூலம் பட்ஜெட் 3.பகிர்ந்து கொள்ளப்பட்ட வருவாய்களின் மூலம் பட்ஜெட் ஆகியவையே ஆகும்.

            மாகாண நிதியமைப்பின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்த இந்த விவாதம், அதனுடைய அமைப்பு முறையை ஆய்வு செய்வதன் மூலம் அதன் அமைப்பிலிருந்து சுதந்திரமாகச் செயல்படவில்லை என்ற மூன்றாம் பாகத்திலும் தொடரப்படுகிறது. மாகாண நிதியமைப்பு அதன் அமைப்பிலிருந்து சுதந்திரமாகச் செயல்படவில்லை என்ற உண்மையை வெளிக் கொணருவதற்காக, மாகாண அரசாங்கங்களின் நிதி அதிகாரங்கள் மீது இருந்த, இதுவரை அசட்டை செய்யப்பட்ட வரையறுக்கும் விதிகளை ஆய்வு செய்வதற்காக மூன்றாம் பாகத்திலுள்ள இயல் ஏழு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மாகாண நிதியமைப்பின் உண்மையான நிலைமையைப் பற்றிய ஆய்வு எட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், இத்தன்மைகள் பற்றிய மேற்கொள் ஒன்றினால் இந்த முடிவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் மாகாண நிதியமைப்பு என்ற பெயர் ஒருபுறமிருக்க. அங்கு மாகாண வருவாய்களோ அல்லது மாகாண சேவைகளோ ஏகாதிபத்திய வருவாய்கள் மற்றும் ஏகாதிபத்திய சேவைகள் போன்று தனியாக இருக்கவில்லை. ஆகவே, அது அமைப்பில் சமஷ்டித் தன்மையுடன் இருப்பதற்குப் பதிலாக அது ஏகாதிபத்திய அமைப்பாகவே இருந்தது. பழைய சட்டத்தின் கீழ் இந்திய அரசாங்கத்தின் அரசியல் சட்ட ரீதியான பொறுப்புகளுக்கு பாதகம் விளைவிக்காமல் மாகாண நிதியமைப்பின் வாய்ப்புகளை விரிவுபடுத்துவது எந்த அளவுக்குச் சாத்தியம் என்பதை இயல் ஒன்பது விவாதிக்கிறது.

            1919 ஆம் ஆண்டில் சீர்திருத்தச்சட்டத்தின் மூலம் மாகாண நிதியமைப்பின் நுட்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மாற்றங்களைப் பற்றிப் பகுதி நான்கு விவாதிக்கிறது. இப்பாகத்தின் இயல் 10, இந்த மாற்றங்களுக்கு இட்டுச் சென்ற காரணங்களை ஆய்வு செய்வதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இயல் பதினொன்றில், புதிய சட்டத்தினால் செயல்படுத்தப்பட்ட மாற்றங்களின் முழுவிளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இயல் பன்னிரண்டு புதிய முறைமையைப் பற்றிய விமர்சனத்தை வழங்குகிறது.

            மாகாண நிதியமைப்பைச் சுட்டிக் காட்டுவதற்கு “நிதியமைப்பை பரவலாக்குதல்” என்ற சொற்றொடரைப் பயன்படுத்துவதில் இந்திய நிதித்துறையின் மாணவர்கள் சாதாரணமாகவே திருப்தியடைந்து கொள்கிறார்கள் என்ற உண்மை காரணமாக, இந்த ஆய்வின் மிகச் சிக்கலான தலைப்பு என்று அழைக்கப்படுவதை நியாயப்படுத்துவதற்காக இந்த விளக்கம் தரப்படுகிறது. பல்வேறு திசைகளில் இந்த அமைப்பு கிளைவிட்டுப் பரவியிருப்பதுடன் போதுமான அளவுக்குப் பரிச்சயம் கொண்டுள்ள இந்திய நிதித்துறையின் எந்த மாணவரும், நிதியமைப்பைப் பரவலாக்குதல் என்ற சொற்றொடர், மாகாண நிதியமைப்பை விளக்கும் அளவிற்கு அர்த்தத்தை வழங்கவில்லை என்பதைக் காணத் தவறமாட்டார். இந்திய அமைப்பில் மாகாண பரவலாக்குதல் என்பது மட்டுமே இருந்திருக்குமானால் ஒரு புதிய தலைப்புக்காக நாம் அலைய வேண்டியிருந்திருக்காது. உண்மையில், பரவலாக்குதலின் ஆரம்ப நிலைகள் ஒரே மாதிரியானவை அல்ல. அதன் மூலம் உருவான அமைப்புகள் தன்மையில் முற்றிலும் வேறுபட்டவை. உதாரணமாக மத்திய பரவலாக்கும் மையமும், 1885 இல் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட மத்திய பரவலாக்கும் கொள்கையினால் உருவான அமைப்புகளும், 1870 இல் தொடங்கிவைக்கப்பட்ட மத்தியப் பரவலாக்குதல் கொள்கையிலிருந்து உருவான அமைப்புகள் மற்றும் மையத்திலிருந்து வேறுபட்டவையாகும். திரும்பவும் 1892 முதல் மத்தியப் பரவலாக்குதலைப் படிப்படியாகச் செயல்படுத்தும், 1885 அல்லது 1870 ஆம் ஆண்டுகளின் மத்திய பரவலாக்கப்பட்டதனால் பாதிக்கப்பட்டதிலிருந்து மாறுபட்டதாகும். தெளிவாகச் சொல்ல வேண்டுமெனில், 1855 ஆம் ஆண்டின் மத்தியக் கட்டுப்பாட்டைப் பரவலாக்கியது என்பது இந்திய நிதியமைப்பையே பரவலாக்குதல் என்பதாகும். அதன் பயனாக:

  1. i) ஏகாதிபத்திய நிதியமைப்பிலிருந்து உள்ளாட்சி நிதியமைப்பைப் பிரித்தல் நிகழ்ந்தது. 1870 ஆம் ஆண்டின் மத்தியப் பரவலாக்குதல்தான் ஏகாதிபத்திய நிதியமைப்பை மத்திய பரவலாக்குதலாக மாற்றியது.

(அதனால் விளைந்த பயன்தான்:)

  1. ii) ஏகாதிபத்திய நிதி அமைப்பிலிருந்து மாகாண நிதியமைப்பு பிரிக்கப்பட்டது. 1882 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கிய மத்திய பரவலாக்குதல்தான் மாகாண நிதியமைப்பின் மத்திய பரவலாக்குதல் ஆகும்.

            அதன் பயன்:

            iii) மாகாண நிதியமைப்பிலிருந்து உள்ளாட்சி நிதியமைப்பைப் பிரித்தல்.

            ஆகவே, “நிதியமைப்பைப் பரவலாக்குதல்” என்பது மாகாண நிதியமைப்பைக் குறிப்பதற்குப் பதிலாக மேலே விவரிக்கப்பட்ட இந்த பலவகைப்பட்ட பரவலாக்கும் நிகழ்வுப்போக்குகளைக் குறிக்கும் ஒரு பொதுவான பெயராகும். பரவலாக்குதல் என்ற ஒரே வரியை ஆய்வுசெய்வதற்கு ஒரு தலைப்பாக இதைப் பயன்படுத்துவது குழப்பத்தையே ஏற்படுத்தும். இச் சொற்றொடரை, மேலே தனித்தனியாகக் குறிப்பிட்ட பரவலாக்குதலின் மூன்று வழிமுறைகளுக்கும் பொதுவாகப் பயன்படுத்தலாம். ஆகவே, ஆய்வு செய்யப்படுவதைப் பொருள்படுத்துவதைத் தவிர பரவலாக்கப்படும் ஒரு வழி முறையை இந்த ஆய்வு குறிப்பதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காக, அதை “பிரிட்டிஷ் இந்தியாவின் மாகாண நிதி அமைப்பின் பரிணாம வளர்ச்சி” என்றும் “ஏகாதிபத்திய நிதி அமைப்பை மாகாணவாரியாகப் பரவலாக்குதல் சம்பந்தமான ஓர் ஆய்வு” என்ற உபதலைப்பிடுவதும் பொருத்தமானது என்று கருதப்பட்டது. இதில் ‘மாகாணவாரியாக’ , ‘ஏகாதிபத்திய’ என்ற சொற்கள் அவற்றிற்கே உரிய முக்கியத்துவத்துடன் வாசிக்கப்பட வேண்டும். அடிக்கடி சொல்லலங்காரம் எவ்வளவு கவனக்குறைவாகச் செய்யப்படுகிறது என்பதற்கு மேலே குறிப்பிடப்பட்ட நீதிபதி ரானடேயின் துண்டுப் பிரசுரம் “மாகாண நிதியைப் பரவலாக்குதல்” என்று தலைப்பிடப்பட்டிருப்பதை உதாரணமாகக் கூறலாம். அது மாகாண நிதியமைப்பின் வளர்ச்சியைப்பற்றிக் கூறுவதாக இருந்தபோதிலும், அதை மாணவர்கள் கவனிக்காமல் விட்டுவிடக்கூடும். ஏனெனில், அதனுடைய தலைப்பு உள்ளாட்சி நிதியமைப்பின் வளர்ச்சியைக் குறிக்கும் விஷயமாக இருக்கவேண்டும் என்று பொருள்படுகிறது. பரவலாக்கப்படுவதில் பலவிதங்கள் உள்ளன என்பதை நீதிபதி ரானடே உணர்ந்திருப்பாரேயானால், தமது துண்டுப்பிரசுரத்தின் தலைப்புக்கும் உள்ளடக்கதிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஒருவேளை அவர் உணர்ந்திருக்கக்கூடும்.

- அம்பேத்கர்

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 11)

Pin It