எல்லா உயிரினங்களையும் - பறவைகள் மிருகங்களையும் - நேசியுங்கள். ஏனென்றால் மனிதனும் ஒருவகை விலங்குதான் என்கிற கருத்தைப் பரப்புவதற்காக இலண்டன் உயிரியல் பூங்காவில் ஒரு வித்தியாசமான காட்சி நிகழ்த்தப்பட்டது.

மொழிகள் இல்லாத, உடைகள் இல்லாத ஆதி மனிதர்களின் வேடத்தில் சில ஆண்களும் பெண்களும் மனிதனின் மூதாதையரான குரங்கு களின் நடவடிக்கைகளோடு குகைகளில் வாழ்ந்து காட்டினார்கள். ஆதிவாசிக் கோலத்தில் இந்த ஆண்களையும் பெண்களையும் காண உயிரியல் பூங்காவில் பார்வையாளர் கூட்டம் அலைமோதியது.

இந்தக் `கூடத்தைக்’ காணக் கவர்ச்சிப் பிரியர்களே அதிகமாக வந்தார்கள் என்றாலும், புதிய சிந்தனைகளும் மலரத்தான் செய்தன. போர் வெறியர்களான புஷ்ஷும் பிளேரும் பதவியில் நீடித்தால், நாகரிக உலகம் அழிந்து எஞ்சிய மக்கள் குகைகளில் இப்படித்தான் திரிவார்கள் என்று பார்வையாளர்களில் பலர் விமர்சனம் செய்தார்கள். அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் மனிதர்களாய் வாழ்வதைவிட, காடுமேடுகளில் மிருகங்களாய் வாழ்வதே மேலானது என்று அரசாங்கமே பிரச்சாரம் செய்கிறதா?’’ - இளைஞர்கள் சிலர் கிண்டலடித்தார்கள்.

``சதாம் உசேனைச் சிறைக்கு அனுப்பினார்கள். இங்கிலாந்து மக்களைக் குகைக்கு அனுப்பி விட்டார்கள்.’’ இப்படியும் சில இடித்துரைகள். தொடர் குண்டு வெடிப்புகளால் பீதியுற்றிருந்த இலண்டன் மக்கள் இந்த அரசியல் நையாண்டியை வெகுவாக இரசித்தார்கள்.

``மனித இனம் குகைக்குத் திரும்புவதா? போர் வெறியர்களைச் சிறைக்கு அனுப்புவதா? முடிவு செய்யுங்கள்’’ என்று சூடாகக் கூறியவர்களும் உண்டு.

``ஐன்ஸ்டீன் சொன்னது நினைவுக்கு வருகிறது’’ என்றார் ஒரு பெண்மணி.

``ஐன்ஸ்டீன் என்ன சொன்னார்?’’

இரண்டாம் உலகப் போர் முடிந்தபோது ``இன்னொரு உலகப்போர் நடந்தால் அது எப்படி இருக்கும்?’’ என்று ஐன்ஸ்டீனிடம் கேட்கப்பட்டது. அவர் சொன்னார்:

``மூன்றாம் உலகப் போரின் முடிவு எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின் போர் என்றால் கற்களால் அடித்துக் கொண்டு மனிதர்கள் குகைகளில்தான் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்!’’

பிரிட்டிஷ் அரசுக்கும் ஈராக் யுத்தத்துக்கும் எதிரான கருத்துக்கள் பரவ ஆரம்பித்ததால் `ஆதிமனிதக் காட்சியை’ நாலே நாளில் முடித்துக் கொண்டார்கள். 

Pin It