அனைத்து இந்திய அளவில், இதர மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழக மகளிர் பல்வேறு துறைகளிலும் வெகுவாக முன்னேறி வருகின்றனர்.ஆட்சி, அதிகாரங்களிலும் அவர்களுடைய பங்கு வலுப்பெற்று வருகின்றது.

சங்க காலத்திலேயே தமிழகப் பெண்டிர், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கி உள்ளனர்.

1. அஞ்சியத்தை மகள் நாகையார்

2. காக்கைபாடினி நச்செள்ளையார்

3. ஒளவையார்

4. காவற் பெண்டு

5. காமக்கணிப் பசலையார்

6. குமிழி ஞாழலார் நப்பசலையார்

7. குறமகள் இளவெயினி

8. குறமகள் குறியெயினி

9. நக்கண்ணையார்

10. பாரி மகளிர்

11. பாவைக் கொட்டிலார்

12. பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு

13. பெருங்கோழிநாய்கன் மகள் நக்கண்ணையார்

14. பேய்மகள் இளவெயினி

15. மதுரைக் காமக்கணி நப்பசலையார்

16. மாறோக்கத்து நப்பசலையார்

உள்ளிட்ட பல பெண்பாற் புலவர்கள் இயற்றிய பாடல்கள், சங்க இலக்கியத் தொகுப்புகளில் இடம் பெற்று உள்ளன.

ஒளவையார், பாரி உள்ளிட்ட குறுநில மன்னர்களுக்கு அறிவுரை பகரும் இடத்தில் இருந்தார். பிற்காலச் சோழப் பேரரசன் இராஜராஜ சோழனின் தமக்கையார் குந்தவை நாச்சியார், ஆட்சி நடத்துவதில் அரிய ஆலோசனைகள் வழங்கி வந்தார்.

16 ஆம் நூற்றாண்டில் இராணி மங்கம்மாள் மதுரையிலும், 17 ஆம் நூற்றாண்டில் வீரத்தாய் வேலு நாச்சியார் சிவகங்கையிலும் பெண் அரசிகளாக இருந்து ஆண்டு உள்ளனர். சமஸ்தானங்கள் எனப்படும் சில சிற்றரசுகளையும் பெண்கள் ஆட்சி புரிந்து உள்ளனர்.

இருபதாம் நூற்றாண்டில், வி.என். ஜானகி, 23 நாள்கள் தமிழக முதல் அமைச்சராகப் பொறுப்பு வகித்து உள்ளார். ஜெயலலிதா, மூன்று முறை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து உள்ளார். தற்போதும், முதல் அமைச்சராகப் பொறுப்பு வகித்து வருகின்றார்.

இருபதாம் நூற்றாண்டில், தமிழக அரசியலில் தமிழக அரசியலில் தடம் பதித்த பெண்களைப் பற்றிய சிறு குறிப்புகளைக் காண்போம்.

அன்னிபெசன்ட் அம்மையார்

சொற்பொழிவாளராகவும்,எழுத்தாளராகவும் இங்கிலாந்து நாட்டு அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்த அன்னிபெசன்ட் அம்மையார்,‘தியோசஃபிகல்சொசைட்டி’யின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு, 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவுக்கு வந்தார். ‘பிரம்ம ஞான சபை’ என்று அழைக்கப்பட்ட தியோசஃபிகல் சொசைட்டியின் உலகத் தலைமையகம்,சென்னை அடையாறுதான்.1902ஆம் ஆண்டு,அச்சங்கத்தின் தலைவராக அன்னிபெசன்ட் தேர்ந்து எடுக்கப்பட்டார்.

‘நியூ இந்தியா’ என்ற ஆங்கில ஏட்டின் ஆசிரியரான அம்மையார், இந்தியர்களின் முன்னேற்றத்துக்காக,ஏராளமான கட்டுரைகளை எழுதியும் பேசியும் வந்தார்.‘ஆட்சி அதிகாரங்களில் இந்தியர்களுக்குப் பங்கு அளிக்க வேண்டும்;‘பிரித்தானியப் பேரரசுக்கு உட்பட்ட இந்தியர்களின் தன்னாட்சி’ என்ற கொள்கையை வலியுறுத்தி, ஹோம்ரூல்  என்ற ‘உள்ளக ஆட்சி’ இயக்கத்தை, 1916 ஆம் ஆண்டு தோற்றுவித்தார்.

1917 ஆம் ஆண்டு,இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார்.இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்,சென்னை மாகாண அரசியலில் மட்டும் அன்றி,ஒட்டுமொத்த இந்திய அரசியலிலும் மதிக்கத்தக்க ஒரு தலைவராக, செல்வாக்கோடு திகழ்ந்தார்.1933ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.அவரது நினைவாக, அடையாறை ஒட்டி உருவான புதிய விரிவாக்கப் பகுதிக்கு, ‘பெசன்ட் நகர்’ எனப் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

முத்துலெட்சுமி ரெட்டி

Muthulakshmi_Reddi_250புதுக்கோட்டை சமஸ்தானத்தில் பிறந்த முத்துலெட்சுமி,வீட்டில் இருந்தபடி தந்தையிடமே கல்வி கற்று, மெட்ரிகுலேசன் தேர்வைத் தனித்தேர்வராக எழுதி வெற்றி பெற்றார். அப்போது, அது பெரிய செய்தியாகப் பேசப்பட்டது.புகுமுக வகுப்புக்காகக் கல்லூரியில் சேர விழைந்தார்.பலத்த எதிர்ப்புகளுக்கு இடையிலும்,அவரது தந்தை நாராயணசாமி ஐயர்,முத்துலெட்சுமியை கல்லூரியில் சேர்க்கத் தீர்மானித்தார்.முத்துலெட்சுமியின் தாய், இசை வேளாளர் வகுப்பைச் சேர்ந்தவர்.முத்துலெட்சுமியின் பெற்றோர்,கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள்.ஆண்கள் மட்டுமே படித்து வந்த புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் சேருவதற்காக முத்துலெட்சுமி விண்ணப்பித்தபோது,கல்லூரி முதல்வர் அதை விரும்பவில்லை.

‘ஒரு பெண்ணைக் கல்லூரியில் சேர்த்தால்,ஆண் மாணவர்களின் கவனம் சிதறும்’என்று அவர் கருதினார்.ஆனால்,இவரது விண்ணப்பத்தைக் கேள்வியுற்ற புதுக்கோட்டை மன்னர், முத்துலெட்சுமியைக் கல்லூரியில் சேர்த்துக் கொள்ளச் செய்தார்.அவர் கல்லூரிக்கு வருகையிலும், திரும்பிச் செல்கையிலும், ஆண் மாணவர்களின் கண்களில் பட்டு விடாதபடி ஏற்பாடு செய்துஇருந்தார்கள்.வகுப்புஅறையில்,முத்துலெட்சுமிக்கும்ஆண் மாணவர்களுக்கும், இடையே திரை கட்டப்பட்டு இருந்தது.

அங்கே புகுமுக வகுப்பை முடித்தபிறகு,1907ஆம் ஆண்டு,சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து,1912ஆம் ஆண்டு மருத்துவர் பட்டம் பெற்றார்.இந்தியாவில் மருத்துவக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்ற முதலாவது பெண் மருத்துவர் என்ற சிறப்பும் அவருக்குக் கிடைத்தது. சென்னை அரசினர் மகளிர்,குழந்தைகள் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியில் சேர்ந்தார். இங்கிலாந்து நாட்டுக்குச் சென்று மேல்படிப்பையும் முடித்தார்.

சென்னை மாகாணத்தில் நடைபெற்ற முதலாவது தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நீதிக்கட்சி, பெண்களுக்கும் வாக்கு உரிமை அளிக்க வேண்டும் என, 1921 ஆம் ஆண்டு, சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது. ஆயினும், 1927 ஆம் ஆண்டுதான், அந்தத் தீர்மானத்துக்கு ஒப்புதல் கிடைத்தது.

1927 ஆம் ஆண்டு, சென்னை மாகாண சட்ட மேலவை உறுப்பினராக முத்துலெட்சுமி நியமிக்கப்பட்டார்.இந்தியாவிலேயே சட்டமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்ட முதலாவது பெண் மற்றும், உலகச் சட்டமன்றங்களின் வரலாற்றிலேயே துணைத்தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்ட முதலாவது பெண் ஆகிய பெருமைகளைப் பெற்றார்.

குழந்தைத் திருமணங்களுக்குத் தடை, பெண்களின் திருமண வயதை உயர்த்துதல் உள்ளிட்ட மகளிர் நலன் சார்ந்த பல சட்டங்களை நிறைவேற்றுவதில் பெரும்பங்கு வகித்தார்.

‘தேவர் அடியாள்’ என்ற பெயரில், திருக்கோவில்களில் பெண்கள் பொதுமகளிராக ஆக்கப்பட்டு வந்த கொடுமையை ஒழிப்பதற்காக,இழிவைத் துடைப்பதற்காக,தேவதாசி ஒழிப்புச் சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்தார்.

அப்போது உரை ஆற்றிய சத்தியமூர்த்தி,‘ஆகம விதிகளை மாற்றக்கூடாது’என்று கூறி அதை எதிர்த்தபோது,‘அப்படியானால்,இதுவரையிலும்எங்கள் குடும்பத்துப் பெண்கள் தேவதாசிகளாக இருந்தது போதும்;இனி உயர்சாதிப் பெண்களை உங்கள் குடும்பத்துப் பெண்களைத் தேவதாசிகளாக ஆக்குங்கள்’என்று முத்துலெட்சுமி பதிலடி கொடுத்தபோது,சட்டமன்றமே அதிர்ந்தது.தேவதாசி நடைமுறை ஒழிந்தது.4

1930 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டிலும், 1932 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற்ற உலக பெண்கள் மாநாட்டிலும் பங்கு ஏற்றார். 1930 ஆம் ஆண்டு, மகாத்மா காந்தி உப்புக் காய்ச்சும் அறப்போரை அறிவித்தபோது, சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பில் இருந்து முத்துலெட்சுமி ரெட்டி விலகினார். விடுதலைப் போரில் பங்கு ஏற்றுச் சிறை சென்றார்.

ஆதரவு அற்ற மகளிருக்காக, 1930 ஆம் ஆண்டு சென்னை அடையாறில் ‘அவ்வை இல்லம்’ என்ற மகளிர் விடுதியை நிறுவினார்.இந்த விடுதி,தற்போதும் சிறப்பாக இயங்கி வருகின்றது.சென்னையில் புற்றுநோய் மருத்துவமனையைத் தொடங்கினார்.அனைத்து இந்திய அளவில்,அரசியலில் மகளிரின் பங்கு ஏற்புக்கு அடித்தளம் அமைத்தவர் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி. இவர், நடிகர் ஜெமினிகணேசனின் அத்தை ஆவார்.

திராவிடர் இயக்கத்தில் பெண்கள்

நாகம்மை, கண்ணம்மை, மணியம்மை

Kannammaiyar_158‘கள்ளுக்கடை மறியலை நிறுத்துகின்ற முடிவு என் கையில் இல்லை; ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்கள் கையில் இருக்கின்றது’என்றார் மகாத்மாகாந்தி. அந்த இருவர்: நாகம்மையார், பெரியாரின் மனைவி; கண்ணம்மையார்,பெரியாரின்தங்கை.பெண்கள் பொது இடங்களுக்கு வருவது இழிவாகக் கருதப்பட்ட அந்தக் காலத்தில்,நாகம்மையார், மேடைகளில் ஏறி, பெரியாரின் கருத்துகளுக்கு ஆதரவாகப் பேசினார்.கலப்பு மணம்,விதவை மணம் குறித்துப் பேசி ஊக்கம் அளித்தார். சுயமரியாதை இயக்க இதழ்,வெளி அச்சகங்களில் அச்சாகி வந்த நிலை மாறி,9.1.1927முதல்,நாகம்மையாரை அச்சக உரிமையாளராகக் கொண்டு,

‘உண்மை விளக்கம்’என்ற சொந்த அச்சகத்தின் மூலம் வெளிவரத் தொடங்கியது. பெரியார் ஐரோப்பியச் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோதும்,குடியரசு இதழைத் தொடர்ந்து வெளிக்கொண்டு வந்தார். பெரியாரின் கீழைநாட்டுச் சுற்றுப்பயணங்களில் பங்கு ஏற்றார்.

இன்றைய ஆட்சி ஒழிய வேண்டும். ஏன்? என்ற தலைப்பில் பெரியார் எழுதிய கட்டுரைக்காக, பெரியாரும், பதிப்பாளர் கண்ணம்மையாரும் கைது செய்யப்பட்டனர்.

பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இயக்கத்தில் இணைந்த மணி அம்மையார், 1944 ஆம் ஆண்டு,சேலம் மாநாட்டில் ஆற்றிய உரை குறிப்பிடத்தக்கது.சிறந்த கட்டுரையாளராகவும் திகழ்ந்தார். 1944 ஆம் ஆண்டில், குடியரசு இதழில், கந்தபுராணம், இராமாயணம் குறித்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதினார். பெரியாரின் உற்ற துணையான உதவியாளராகத் தொண்டு ஆற்றி வந்த மணி அம்மையாரை, 1949 ஆம் ஆண்டு, பெரியார் வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் கொண்டார். அதன்பிறகு, மணி அம்மையார், பெரியாரின் சுற்றுப்பயணங்கள் அனைத்திலும் பங்கு ஏற்றார்.

19.1.58 இல் விடுதலையில் எழுதிய ஒரு கட்டுரைக்காக ஒரு மாதம் சிறைவாசம் அடைந்தார்.பல்வேறு அறப்போராட்டங்களில் பங்கு பல மாதங்கள் சிறைவாசம் அனுபவித்து உள்ளார்.பெரியார் மறைவுக்குப் பின்னர்,திராவிடர் கழகத்தின் தலைவராகப் பொறுப்பு ஏற்றார்.

நெருக்கடி நிலை காலத்தில்,திராவிடர் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டு, ஓராண்டுச் சிறைவாசம் அனுபவித்தபோது,மணியம்மையார் நெஞ்சுரத்தோடு சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு,கழகத்தைக் கட்டிக் காத்தார். 1978 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

திராவிடர் இயக்க மாநாடுகளில் கலந்து கொண்ட தோழர்கள்,தங்கள் மனைவி, குழந்தைகளோடு பங்கு ஏற்றனர்;குடும்பத்தோடு சிறை புகுந்தனர்.அந்த வகையில் நூற்றுக்கணக்கான பெண்கள் சிறைவாசம் அனுபவித்து உள்ளனர்.

குஞ்சிதம் குருசாமி, ஏ.பி.ஜெ.மனோரஞ்சிதம், ‘முத்தமிழ்த்தொண்டர்’ தாமரைக்கண்ணி அம்மையார்,லீலாவதி இராமசுப்பிரமணியம், மீனாம்பாள் சிவராஜ், உண்ணாமுலையம்மாள், பட்டம்மாள்,ஏமலதா தேவி,சரசுவதி அம்மையார்,குமுதவல்லி,மூவலூர் மூதாட்டி இராமாமிர்தம்அம்மையார்,சத்தியவாணிமுத்து,மருத்துவர்தருமாம்பாள், மலர்முகத்தம்மையார், அலர்மேலுஅப்பாதுரை,சிவசங்கரிஅம்மையார்,பரிபூரணத்தம்மையார்,இலக்குமி அம்மையார், நீலாம்பிகை அம்மையார்,ஆகியோர்,இந்தி எதிர்ப்புப் போராட்டம் உள்ளிட்ட திராவிட இயக்கப் போராட்டங்கள் அனைத்திலும் கலந்து கொண்டு பலமுறை சிறைவாசம் ஏற்று உள்ளனர்.

விடுதலைப் போரில் பெண்கள்

கே.பி. சுந்தராம்பாள், எம்.எஸ். சுப்புலெட்சுமி ஆகியோர் இந்திய தேசிய காங்கிரஸ் இயக்க மேடைகளில், தேசபக்திப் பாடல்களைப் பாடி வந்தனர். தில்லையாடி வள்ளியம்மை, தென் ஆப்பிரிக்காவில் காந்தி அடிகளோடு சிறைவாசம் ஏற்று,உடல்நலக்குறைவால் சிறைக்கு உள்ளேயே இறந்தார்.நூற்றுக்கணக்கான பெண்கள் விடுதலைப் போரில் பங்கு ஏற்றனர். கருவுற்ற சிலரும், கைக்குழந்தைகளோடு பலரும் சிறையில் இருந்து உள்ளனர். சரசுவதி பாண்டுரங்கம் அம்மையார்,சட்ட மறுப்பு இயக்கம்,தனிநபர் அறப்போர்,வெள்ளையனே வெளியேறு போன்ற போராட்டங்களில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டு, ஒட்டுமொத்தமாக இரண்டு ஆண்டுகள் நான்கு மாதங்கள் சிறையில் இருந்து உள்ளார்.

ருக்மணி இலட்சுமிபதி

Rukmani_Lakshmipathi_250சென்னையைச் சேர்ந்த ருக்மணி, மகளிர் கிறித்துவக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். 1923 ஆம் ஆண்டு காங்கிரசில் சேர்ந்தார். 1926 ஆம் ஆண்டு,பாரிசில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் பங்கு ஏற்றார்.1930 உப்புக்  காய்ச்சும் அறப்போரில் ஈடுபட்டுக்கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறைத்தண்டனை அடைந்தார்.அந்த அறப்போரில் கைது செய்யப்பட்ட முதலாவது பெண்,ருக்மணியே ஆவார்.1934 ஆம் ஆண்டு, சென்னை மாகாணச் சட்டமேலவைக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார்.

1937ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.பேரவையின் துணைத்தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார். 1946-47 இல், பிரகாசம் அமைச்சரவையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.சென்னை மாகாண அரசில் அமைச்சரான முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.

1951 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.அதுவரையிலும் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். சென்னை எழும்பூரில்,அரசு கண் மருத்துவமனை அமைந்து உள்ள சாலைக்கு,‘ருக்மணி இலட்சுமிபதி சாலை’ (பழைய மார்ஷல் சாலை) எனப் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

கிளப்வாலா ஜாதவ்

நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் ஆர்.டி.பட்டேல் என்ற பார்சி வகுப்பினரின் மகளாகப் பிறந்த மேரி , 1926 ஆம் ஆண்டு, நோகிபுரோசி கிளப்வாலா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவரது மறைவுக்குப் பின்னர், 1935 ஆம் ஆண்டு, மேஜர் ஜாதவ் என்பவரை மறுமணம் செய்து கொண்டார். சென்னையில் பல தொண்டு நிறுவனங்களின் தலைவராக இருந்து, ஏராளன சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வந்த மேரி கிளப்வாலா ஜாதவ், 1949 ஆம் ஆண்டு, சட்ட மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1948 இல், சென்னை மாநகரத்தின் ‘ஷெரீப்’ ஆக நியமிக்கப்பட்ட முதலாவது பெண்; 1955 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது பெற்ற முதலாவது பெண் என்ற பெருமைகளைப் பெற்றார். பின்னர் பத்மபூஷண் விருதும் பெற்றார்.

அம்மு சுவாமிநாதன்

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள அணக்கராவில் நாயர் வகுப்பில் பிறந்த அம்மு, 13 வயதிலேயே சென்னையைச் சேர்ந்த பாரிஸ்டர் சுவாமிநாதனுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டார்.கணவரது ஆதரவில்,இந்திய விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார்.சென்னை மாகாண காங்கிரசின் முன்னணித் தலைவர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார். இந்திய அரசியல் சட்ட வரைவு மன்ற உறுப்பினராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார்.

1952 ஆம் ஆண்டு தேர்தலில்,திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டார். பல்வேறு சமூக நல இயக்கங்களிலும், அறப்பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். பாரத சாரணர் இயக்கத்தின் தலைவராக, ஐந்து ஆண்டுகள் (1960-65) பொறுப்பு வகித்தார்.

அம்மு சுவாமிநாதனின் மகள் கேப்டன் லெட்சுமி,நேதாஜி அமைத்த இந்திய தேசிய இராணுவத்தில் ஜான்சிராணி மகளிர் படைப்பிரிவின் தலைவராகத் திகழ்ந்தார்.இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில், அப்துல் கலாமை எதிர்த்துப் போட்டியிட்டார். பிரபல நடன மங்கை மல்லிகா சாராபாய்,பொது உடைமை இயக்கத் தலைவர்களுள் ஒருவரான சுபாஷினி அலி ஆகியோர், அம்மு சுவாமிநாதனின் பேரப் பிள்ளைகள் ஆவர்.

மரகதம் சந்திரசேகர்

களத்தூர் முனுசாமிப் பிள்ளையின் மகளான மரகதம் சந்திரசேகர்,இளங்கலை அறிவியல் பட்டம் பெற்ற பிறகு, லண்டனுக்குச் சென்று, மனை இயலில் பட்டயச் சான்றிதழ் பெற்றார். நிறுவன மேலாண்மைக் கல்வி பயின்றார்.இந்தியாவுக்குத் திரும்பி வந்தபிறகு,இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்து, விடுதலைப் போராட்டங்களில் பங்கு ஏற்றார்.

1951 முதலாவது நாடாளுமன்றத் தேர்தலிலேயே,திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டார்.தொடர்ந்து அதே தொகுதிலேயே,57,62தேர்தல்களிலும் தேர்ந்து எடுக்கப்பட்டார்.

1970 முதல், 1984 வரையிலும், மாநிலங்கள் அவை உறுப்பினராகப் பொறுப்பு வகித்தார். 1951 முதல் 1957 வரையிலும், மக்கள் நல்வாழ்வுத்துறையின் இணை அமைச்சர்; 62 முதல் 64 வரையிலும் உள்துறை இணை அமைச்சர்; 67-67 சமூகநலத்துறை இணை அமைச்சர் ஆகிய பொறுப்புகளை வகித்தார். 1972 ஆம் ஆண்டு, காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர்களுள் ஒருவராக நியமிக்கப்பட்டார். 84 ஆம் வயதில், 2001 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

ஜோதி வெங்கடாசலம்

ஜோதி வெங்கடாசலம், 1953 ஆம் ஆண்டு, இராஜாஜி அமைச்சரவையில், மகளிர் நலம், மதுவிலக்குத் துறை அமைச்சராக ஏழு மாதங்களும்,பின்னர் 1962இல் காமராஜ் அமைச்சரவையிலும்,63 முதல் பக்தவத்சலம் அமைச்சரவையிலும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார். பின்னர், 77 முதல் 82 வரையிலும் கேரள மாநில ஆளுநராக ஐந்து ஆண்டுகள் பொறுப்பு வகித்து உள்ளார்.

1957 சட்டமன்றத் தேர்தலில், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட லூர்தம்மாள் சைமன்,காமராசர் அமைச்சரவையில் உள்ளாட்சி மற்றும் மீன்வளத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.

ராஜாத்தி குஞ்சிதபாதம் (திருநெல்வேலி),சாவித்திரி சண்முகம்,ஹேமலதா தேவி, டி.என்.அனந்தநாயகி (எழும்பூர்), கமலா அம்புஜம்மாள், லட்சுமிகாந்தம், குழந்தையம்மாள், ஏ.எஸ்.பொன்னம்மாள் (நிலக்கோட்டை),டி.யசோதா (திருபெரும்புதூர்)ரமணி நல்லதம்பி (இராதாபுரம்), ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சட்டமன்றத்தில் இடம் பெற்று, குறிப்பிடத்தக்க பணி ஆற்றி உள்ளனர்.

பார்வதி கிருஷ்ணன்

தமிழகத்தின் முதலாவது முதல் அமைச்சர் டாக்டர் பி.சுப்பராயன் அவர்களின் மகள் பார்வதி கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார். 1957, 1977 பொதுத் தேர்தல்களிலும், 1974 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலிலும், கோவை நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து மூன்று முறை இந்திய நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார்.

1952 இடைத்தேர்தல், 1962, 1980,1984 பொதுத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 1954 ஆம் ஆண்டு, இந்திய நாடாளுமன்ற மாநிலங்கள் அவைக்குத் தெரிவு பெற்று, 57 வரையிலும் மூன்று ஆண்டுகள் பொறுப்பு வகித்து உள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியில், மதுரை கே.பி. ஜானகி அம்மாள், பாப்பா உமாநாத்,மீனா கிருஷ்ணசாமி,மைதிலி சிவராமன்,உ.வாசுகி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். திண்டுக்கல் பாலபாரதி மூன்று முறை சட்டமன்றத்துக்குத் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார்.

சத்தியவாணி முத்து

திராவிட இயக்கத்தின் அனைத்துப் போராட்டக் களங்களிலும் முன்னணியில் நின்ற சத்தியவாணி முத்து, பலமுறை சிறைவாசம் அனுபவித்து உள்ளார். சென்னை பெரம்பூர் தொகுதியில் இருந்து மூன்று முறை (1952,67,71)தமிழகச் சட்டமன்றத்துக்குத் தேர்ந்து எடுக்கப்பட்டார்.1967இல் அண்ணா அமைச்சரவையிலும்,1969இல் கருணாநிதி அமைச்சரவையிலும் இடம் பெற்று,ஆதி திராவிடர் நலன்-செய்தித்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.1971இல் மீண்டும் கருணாநிதி அமைச்சரவையில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராகப் பொறுப்பு ஏற்றார்.

1974 ஆம் ஆண்டு, அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகி, ‘தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம்’(தா.மு.க.)என்ற கட்சியைத் தொடங்கி சில காலம் இயங்கியபின்னர்,அண்ணா தி.மு.க.வில் சேர்ந்தார். மாநிலங்கள் அவை உறுப்பினராகத் (1978-84) தேர்வு பெற்றார். 1980 ஆம் ஆண்டு,பிரதமர் சரண்சிங் அமைச்சரவையில் இடம் பெற்று,நான்கு மாதங்கள் பொறுப்பு வகித்தார். ‘ஆகாஷ்வாணி’ என்று அழைக்கப்பட்டதை நிறுத்தி, ‘அகில இந்திய வானொலி’ என அறிவிக்கும்படிச் செய்தார்.

சுப்புலெட்சுமி ஜெகதீசன்

1977-80 எம்.ஜி.ஆர். அமைச்சரவையில், பி.டி.சரசுவதி (திருமங்கலம்), சுப்புலெட்சுமி ஜெகதீசன் (மொடக்குறிச்சி) ஆகியோர் அமைச்சர்களாக இடம் பெற்றனர். பின்னர், சுப்புலெட்சுமி ஜெகதீசன் தி.மு.க.வில் சேர்ந்தார். 1989 இல், கருணாநிதி அமைச்சரவையில் சமூகநலத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.

2004 நாடாளுமன்றத் தேர்தலில், திருச்செங்கோடு தொகுதியில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டார்.மன்மோகன்சிங் அமைச்சரவையில் சமூகநலத்துறை அமைச்சராக ஐந்து ஆண்டுகள் பொறுப்பு வகித்தார்.தி.மு.க.வைச் சேர்ந்த ராதிகா செல்வி,மன்மோகன்சிங் முதலாவது அமைச்சரவையில்,உள்துறை இணை அமைச்சராகப் பொறுப்பு வகித்து உள்ளார்.

1980-84 எம்.ஜி.ஆர். அமைச்சரவையில், விஜயலெட்சுமி பழனிச்சாமி, கோமதி சீனிவாசன் ஆகியோர் அமைச்சர்களாகப் பொறுப்பு வகித்தனர்.

ஜெயந்தி நடராஜன்

தமிழக முன்னாள் முதல்வர் பக்தவத்சலத்தின் பேத்தி ஜெயந்தி நடராசன், 1986 ஆம் ஆண்டு முதன்முறையாக,தமிழகத்தில் இருந்து இந்திய நாடாளுமன்ற மாநிலங்கள் அவை உறுப்பினராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார்.1997ஆம் ஆண்டு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் இரண்டாவது முறையாகத் தேர்ந்து எடுக்கப்பட்டு, தேவே கவுடா அமைச்சரவையில், நிலக்கரி,விமானப் போக்குவரத்து,நாடாளுமன்ற விவகாரத்துறைகளில்இணை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.தற்போது மூன்றாவது முறையாகத் தேர்ந்து எடுக்கப்பட்டு,மன்மோகன் சிங் அமைச்சரவையில்,சுற்றுச்சூழல் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வருகின்றார்.

1991-96 ஜெயலலிதா அமைச்சரவையில், புலவர் இந்திரகுமாரி மட்டுமே இடம் பெற்றார்.

1996 இல் அமைந்த கருணாநிதி அமைச்சரவையில், சற்குணபாண்டியன், ஜெனிபர் சந்திரன் ஆகியோர் அமைச்சர்களாகப் பொறுப்பு வகித்தனர்.

2001-06 ஜெயலலிதா அமைச்சரவையில் பா. வளர்மதி இடம் பெற்றார்.

2006 இல், கருணாநிதி தலைமையில் அமைந்த தி.மு.க. அரசில், ஆலங்குளம் பூங்கோதை ஆலடி அருணா (தகவல் தொழில்நுட்பம்), தூத்துக்குடி கீதா ஜீவன்(சமூக நலம்), சமயநல்லூர் தமிழரசி (ஆதி திராவிடர் நலம்) ஆகியோர் அமைச்சர்களாகப் பொறுப்பு வகித்தனர்.

2011 இல் அமைந்த ஜெயலலிதா அமைச்சரவையில், கோகுல இந்திரா (சென்னை அண்ணா நகர்), செல்வி இராமஜெயம் (புவனகிரி) ஆகியோர் அமைச்சர்களாகப் பொறுப்பு ஏற்றனர். பின்னர் இருவருமே அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டனர்.தற்போது,பா.வளர்மதி மட்டுமே தமிழக அமைச்சரவையில் உள்ள ஒரே பெண்; சமூகநலத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வருகின்றார்.

தமிழக அமைச்சரவைகளில் பெண்கள் இடம் பெற்று இருந்தாலும்,இதுவரையிலும் அவர்களுக்கு முதன்மையான துறைப் பொறுப்புகள் வழங்கப்படவில்லை.சமூக நலம், மகளிர் நலம்,ஆதி திராவிடர் நலம் போன்ற துறைகள் மட்டுமே அவர்களுக்கு வழங்கப்படுகின்றன.அமைச்சர்கள் வரிசையிலும் அவர்கள் கடைசியாகத்தான் இடம் பெறுகின்றனர்.மூன்று முறை முதல்வராகப் பொறுப்பு வகித்தபோதிலும் ஜெயலலிதா அமைச்சரவையிலும் இதுதான் நிலைமை.

தமிழகச் சட்டமன்றத்தில் இடம் பெற்ற அளவுக்கு, இந்திய நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் சார்பில் ஒரு சில பெண் உறுப்பினர்களே தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர்.கருணாநிதியின் மகள் கனிமொழி,ஒரு முறை மாநிலங்கள் அவை உறுப்பினராகப் பொறுப்பு வகித்தார். தற்போது, தி.மு.க.வைச் சேர்ந்த ஹெலன் டேவிட்சன், கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பு வகித்து வருகின்றார்.வசந்தி ஸ்டேன்லி,மாநிலங்கள் அவை உறுப்பினராக உள்ளார்.

தமிழகச் சட்டமன்றத்தில் இடம் பெற்ற பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை:

1937 - 9; 1946 - 9; 1952 - 2; 1957 - 14; 1962 - 13; 1967 - 6; 1971 - 6; 1977 - 3; 1980 - 7; 1984 - 8; 1989 - 9; 1991 - 31; 1996 - 12; 2001 - ; 2006 - 22; 2011 - 17.

புதுவை அரசியலில் பெண்கள்

புதுவையின் விடுதலைப் போராட்டக் களத்தில், ருக்குமணி, சௌந்தரவல்லி, முனியம்மாள், பாக்கியம், அந்தோணியம்மாள், ராஜாபாய், தனபாக்கியம், லட்சுமி, ஜூலியத், வீரம்மாள், சம்பூரணம், மனோரஞ்சிதம், சௌந்தரவல்லி (காரைக்கால்), மாஹே பகுதியில் இருந்து கார்த்தியாயினி, கோட்டக்கரத்தி நானி, சுனந்தா, அடியேறி ஜானகி, குஞ்னி கொரும்பி, முச்சிக்கல் தேவகி ஆகியோர் வீராங்கனைகளாகத் திகழ்ந்தனர்.

புதுவை சட்டப்பேரவையில், இதுவரையிலும், பத்து பெண்கள் மட்டுமே சட்டமன்ற உறுப்பினர்களாக இடம் பெற்று உள்ளனர்.

புதுவை விடுதலைக்குப் பிறகு அமைந்த, 30 உறுப்பினர்களைக் கொண்ட புதுவை சட்டப்பேரவைக்கு, , 1963 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது தேர்தலில் போட்டியிட்ட,  மக்கள் முன்னணியின் தலைவர் வ. சுப்பையா அவர்களுடைய துணைவியார்  சரஸ்வதி, சுதந்திரப் போராட்ட வீரர் காமிச்செட்டியின் மகள் சாவித்திரி (ஏனாம்) ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

பிரெஞ்சு இந்தியாவில் பெரும் செல்வந்தராகத் திகழ்ந்த செல்வராஜூலு செட்டியார் மகள் பத்மினி, 1964 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் குரூசுகுப்பம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதே தேர்தலில், ஏம்பலம் (தனி) தொகுதியில் அங்கம்மாள் என்பவரும் வெற்றி பெற்றார். 1969 தேர்தலில், ஏம்பலம் (தனி) தொகுதியில் வீரம்மாள் தேர்ந்து எடுக்கப்பட்டார்.

புதுவை அரசில் அமைச்சராகப் பொறுப்பு வகித்த முதல் பெண்மனி ரேணுகா அப்பாதுரை. 1980 தேர்தலில், ரெட்டியார்பாளையம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று, அமைச்சர் ஆனார்.

1985 ஆம் ஆண்டுத் தேர்தலில், தி.மு.க. வேட்பாளர் கோமளா, திருபுவனை (தனி) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த செல்வி சி. சுந்தரம், 1985 ஆம் ஆண்டு, புதுவை சட்டமன்ற உறுப்பினராக அரசால் நியமிக்கப்பட்டார்.

1991 ஆம் ஆண்டுத் தேர்தலில், ஏம்பலம் (தனி) தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடட பக்கிரி அம்மாள் வெற்றி பெற்றார்.

1996 தேர்தலில், திருபுவனை (தனி) தொகுதியில், அண்ணா தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட்ட அரசி, வெற்றி பெற்றார்.

Pin It