வீட்டில் தினமும் குவியும் பால் கவர்களை எவ்வாறு பயனுள்ள விதத்தில் மறுபயன்பாட்டிற்குக் கொண்டு வரலாம் என்ற எண்ணத்திலேயே கேரளா, பத்தணம்திட்டா, அடூர் என்ற இடத்தில் வாழும் லீலாம்மா ஒரு பர்ஸை முதல்முதலாக உருவாக்கினார். பிறகு திரும்பிப் பார்க்கக்கூட அவருக்கு நேரம் இல்லை. குவாலிட்டி பை முதல் துணிக்கூடை வரை ஏராளமான பொருட்களின் ஆனந்த ஊர்வலம் இன்னமும் அவர் வீட்டில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

மின்னுவதெல்லாம் பொன்னல்ல

மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பது பழமொழி. என்றாலும் லீலாம்மாவின் கண்ணில் படுவதெல்லாம் பொன்னாகவில்லை என்றாலும், பணமாகவோ, மனிதர்களுக்கு உபயோகமான பொருட்களாகவோ மாறுகின்றன என்பது நிச்சயம். கேரள அரசின் நிறுவனமான மில்மா பால் கவர்களில் அழகைக் கண்டு பயனுடையதாக்குவதில் முன் மாதிரியாக இந்த 67 வயது பெண்மணி திகழ்கிறார்.

பால் கவர் அலமாரி

லீலாம்மா உருவாக்கிய பால் கவர் பொருட்களில் மிக சமீபத்தில் உருவாகி பிரபலமடைந்தது அலமாரியே. கஷ்டப்பட்டு இந்த அலமாரியை ஏன் செய்தீர்கள் என்று கேட்டால், மிக எளிமையான பதில் அவரிடமிருந்து வருகிறது. ஒரு அலமாரியைச் செய்வதற்கு ஆகும் கூலிச்செலவைக் கணக்கிட்டால் பாழான பால் கவர்களைக் கொண்டு ஒரு அலமாரியைச் செய்வது கடினமானதாக இருந்தாலும் பரவாயில்லை என்கிறார் அவர்.

4000 பாக்கெட் மில்மா பால் கவர்கள் அலமாரி செய்வதற்காகத் தேவைப்பட்டன. அலமாரியின் கூட்டை செய்ய கம்பிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பால் கவர்களைப் பயன்படுத்தி வெளிப்புறச் சட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. என்றாலும் இதனால் அலமாரியில் எந்த இடத்திலும் விரிசல் ஏற்படாமல் இருக்க திரைச்சீலைத் துணியில் பால் கவர்களைப் பொடிந்து சேர்த்து வைத்து அதன் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்குள் பலர் அலமாரி தேவை என்று லீலாம்மாவை அணுகினர். நீண்டநேரம் செலவிட்டு அதை உருவாக்கியிருப்பதால் அதை விற்க தான் தயாராக இல்லை என்று அவர் கூறிவிட்டார்.leelama with her productsஉள்ளதில் இருந்து உருவாக்கப்பட்ட அலமாரி

இதற்காக பயன்படுத்தப்பட்ட கம்பிகளில் பெரும்பாலானவையும் வீட்டில் இருந்தே சேகரிக்கப்பட்டவை. அலமாரியை சுலபமாக இடம் விட்டு இடம் நகர்த்தத் தேவையான நான்கு சக்கரங்களை மட்டுமே தான் வெளியில் இருந்து வாங்கியதாக லீலாம்மா கூறுகிறார். இதுவே இந்த அலமாரிக்காக ஆன மொத்த செலவு என்கிறார். மில்மா கவரின் நீல நிறம் பளிச்சென்று பிரகாசிக்கும் இந்த அலமாரி இப்போது சமூக ஊடகங்களில் புகழ் பெற்றுள்ளது.

ஆலிலையில் இருந்து ஒரு அழகிய மரம்

இளம் வயதில் தெருவில் கண்ட ஆலிலையின் அழகு வடிவத்தில் ஏற்பட்ட வியப்பே, பிறகு இவர் மனதில் படர்ந்து பந்தலிட்ட ஆர்வத்திற்கும், அயராத உழைப்பிற்கும் மூல காரணம். ஆலிலை உலர்ந்து வாடி காய்ந்தபின் உருவாகும் அதன் தோற்றம் இவரை பெரும் வியப்பிற்கு உள்ளாக்கியது. அப்புறம் வேறு எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. நாற்பது ஆலிலைகளை சுற்றுப்புறத்தில் இருந்து சேகரித்தார். கடைசியில் பவுண்ட்டைன் பேனாவின் மையைப் பயன்படுத்தி வண்ணம் கொடுத்து அதை ஒரு அழகு மரமாக மாற்றினார்.

இலை மரத்தில் இருந்து தொடங்கிய பயணம்

இவ்வாறு புதியதொன்றை உருவாக்கியபோது தனக்குள் அது பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது என்கிறார் அவர். பிறகு வந்த நாட்களில் அடங்காத ஆர்வத்தின் ஆக்கிரமிப்பில் அவர் திக்குமுக்காடினார். பயனற்றது என்று எல்லோரும் நினைத்து வீசியெறியும் பாழ்பொருட்களில் இருந்து பயனுள்ள பொருட்கள் பிறவி எடுக்க ஆரம்பித்தன.

செய்யும் எல்லாவற்றையும் தன் கையாலேயே செய்ய வேண்டும் என்ற உறுதி இவரின் மனதில் ஏற்பட்டது. அது இன்றும் தொடர்கிறது. வயது 67 என்றாலும் ஆர்வம் இன்னமும் சிறிதளவுகூட குறையவில்லை. உருவாகும் கலைப்பொருட்கள் முதல் பல பொருட்கள் வரை பெரும்பாலானவையும் அவருடைய மூளையில் உதிப்பவையே. ஸ்மார்ட் போன் இருந்தாலும் காணொலி வலைதளத்தில் (youtube) இவர் எதையும் தேடிக் கண்டுபிடித்து அதைப் பார்த்து காப்பியடித்து செய்வதில்லை. கடையில் விற்கப்படும் கலைப்பொருட்கள் எவையும் தன்னைக் கவர்வதில்லை என்றும் கூறுகிறார். அழகான நிறங்களில் இருக்கும் கவர்களைக் கண்டால் உடனே அதை எடுத்துப் பதப்படுத்தி வண்ணவண்ணப் பூக்கள் செய்வார். மற்றவர்களின் உதவியைத் தேடுவதுண்டா என்று கேட்டால் அதில் ஒரு த்ரில் இல்லையென்று உடனே பதில் வரும்.

வீட்டிற்கு வெளியிலும்

வீட்டுடன் மட்டும் இவருடைய செயல்கள் ஒதுங்குவதில்லை. வீட்டிற்கு வெளியில் பிளாஸ்டிக் பாட்டில்களால் உருவாக்கப்பட்ட தொட்டிச்செடிகளின் தட்டுகள் அழகாக காட்சி தருகின்றன. பிளாஸ்டிக் கவர் போல உள்ள பொருட்களை சிமெண்ட்டுடன் சேர்த்துப் பயன்படுத்தி பல அழகு வடிவங்கள் உருவாக்கப்படுகின்றன. வீட்டிற்குள் மண்டிப் போகாமல் இருக்க எல்லோரும் பிளாஸ்டிக் கழிவுகளை எரித்து சூழலை சீரழிக்கும் இந்த காலத்தில் இவர் தேர்ந்தெடுத்த பாதை முற்றிலும் மாறுபட்டது.

இவர் வீட்டிற்குள் ஒருபோதும் பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதில்லை. பிளாஸ்டிக் கவர்கள் ஒருபோதும் மண்ணில் மக்குவதில்லை. அவை ஆண்டுக்கணக்கில் மண்ணிலேயே தங்கியிருக்கும். குவியும் பிளாஸ்டிக் கவர்கள் பூமிக்கு பாரமாகாமல் எத்தனையோ நல்ல வழிகளில் பல செயல்களுக்குப் பயன்படுத்தலாம் என்று இவர் கூறுகிறார்.

செய்தித்தாளைப் பயன்படுத்தி உருவாக்கிய படகு, துணியால் செய்யப்பட்ட நாய்க்குட்டி என்று இவ்வாறு ஏராளமான பொருட்கள் இவருடைய கை வண்ணத்தில் உருவாகியுள்ளன.

இரண்டு ஆண்டுகளாக தான் உருவாக்கிய பர்சுகள், பைகளையே இவர் வெளியில் செல்லும்போது எடுத்துச் சென்று பயன்படுத்துகிறார்.

தையல் டீச்சரம்மா

இவருடைய கைத்திறமை இவருக்கு அருகில் இருக்கும் ஒரு உயர்நிலைப் பள்ளியில் தையல் டீச்சர் வேலையைத் தேடிக்கொடுத்தது. கோவிட் பெரும் தொற்று வந்ததால் வேலைக்குப் போவதை இவர் நிறுத்தி விட்டார். கணவரும், இரண்டு குழந்தைகளும் உடைய குடும்பம் இவருக்கு முழு ஆதரவு தருகிறது.

இவர் போல வாழ வேண்டும்

நம் சொந்தக் குழந்தைகளும் இந்த பூமியில்தான் வாழ வேண்டும் என்ற அடிப்படை அறிவும் இல்லாமல் இன்றைய நம் சொகுசான வாழ்க்கைக்காக சூழலைச் சீரழித்து நாம் செய்யும் செயல்கள் அனைத்துமே நம் தலையில் நாமே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வதற்கு ஒப்பானது. ஆடம்பரமும் சுயநலமும் தலைவிரித்தாட பகுத்தறிவு அற்ற இன்றைய மனித வாழ்க்கை அர்த்தமற்ற சூன்யமே. இதில் மகத்துவம் என்று எதுவுமில்லை. வாழ்ந்தால் லீலாம்மா என்ற இந்த மகத்தான பெண்மணி போல வாழ வேண்டும். அது போல நாளை நம் வாழ்வும் அமையுமா?

மேற்கோள்: https://www.mathrubhumi.com/environment/features/leelama-makes-use-of-milma-cover-for-making-variety-of-other-products-1.7381200

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It