படித்தவர்கள், படிக்காதவர்கள், ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் – எல்லோருக்கும் இருக்கும் தயக்கம் இது தான் – நாம் எப்படி மற்றவர்களிடம் இங்கிலீஷ் பேசுவது? இந்தத் தயக்கத்திற்குப் பல காரணங்கள் இருக்கும். ஒருவர் ‘நான் டிகிரி படிக்கவில்லை’ என்பார்; இன்னொருவர் ‘நான் இங்கிலிஷ் மீடியத்தில் படிக்கவில்லை’என்பார். வேறொருவர் ‘நான் கிராமத்தில் வளர்ந்து விட்டேன்’ என்பார். ஒருவர் ‘நான் பெண்ணாகப் பிறந்ததால் வெளியே பேசிப் பழக்கம் இல்லை’ என்பார். இந்தக் காரணங்களை எல்லாம் ஒழித்துக் கட்டி நம்மால் இங்கிலீஷ் பேசவே முடியாதா? வெளிநாட்டு நிறுவனங்கள் நடத்தும் நேர்காணல்களிலும் மத்திய அரசு நேர்காணல்களிலும் இங்கிலீஷில் பேசி அசத்த முடியாதா? கட்டாயம் முடியும்.

English 600

மேலே நாம் சொன்ன காரணங்களான ‘பட்டப்படிப்பு இல்லை’, ‘தமிழ் மீடியம்’, ‘கிராமவாசி’, ‘பெண்’ என அத்தனையையும் முறியடித்து மிக எளிதாக நம்மால் இங்கிலீஷ் பேச முடியும். அதற்கு என்னென்ன செய்ய வேண்டும்? கொஞ்சம் பார்க்கலாம்.

குழந்தைகளிடம் இருந்து கற்றுக் கொள்வோம்!

இங்கிலீஷ் என்பது தமிழைப் போல ஒரு மொழி மட்டும் தான்! வேறு எந்தச் சிறப்பும் அந்த மொழிக்கு இல்லை. பிறந்த உடன் எந்தக் குழந்தையும் பேசிவிடுவதில்லை. முதலில் ஒரு சில சின்னச் சின்ன வார்த்தைகள் பேச ஆரம்பிக்கும். பின்னர், தப்புத்தப்பாகவோ தவறான உச்சரிப்போடோ பெரிய வார்த்தைகள் பேச ஆரம்பிக்கும். பிறகு, மெல்ல வாக்கியங்கள் அமைத்துப் பேசும். அந்த வாக்கியங்களில், சரியான இலக்கணம் எல்லாம் இருக்காது. ‘நான் நாளைக்குப் போனேன்’ என்று காலத்தைத் தப்பாகப் பேசும். ‘எங்க அப்பா வருவாங்க’ என்பது ‘நாங்க அப்பா வருவாங்க’ என்று இலக்கணத் தவறுடன் இருக்கும். இப்படித் தான் எல்லாக் குழந்தைகளும் பேச ஆரம்பிக்கின்றன. நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள் – குழந்தைக்குத் தான் பேசுவது ‘தமிழ்’ என்றோ ‘இங்கிலீஷ்’ என்றோ தெரியாது. தன்னைச் சுற்றியிருப்பவர்கள் என்ன பேசுகிறார்களோ அதை அப்படியே உள்வாங்கிக் குழந்தை பேசும். அவ்வளவு தான்! இப்படித் தான் மதுரையில் வளரும் குழந்தைக்கு இயல்பாக மதுரைப் பேச்சு வருவதும், திருநெல்வேலியில் வளரும் குழந்தைக்கு நெல்லைப் பேச்சு வருவதும்! எனவே, ஒரு குழந்தை எப்படித் தமிழ் கற்றுக் கொள்கிறதோ அதே போல நாமும் இங்கிலீஷ் கற்றுக் கொள்வோம்.

குழந்தை தன்னைச் சுற்றியுள்ள சூழலிடம் இருந்து மொழியைப் படித்துக் கொள்கிறது. நாம் இங்கிலீஷ் போன்ற ஒரு மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? சரியாக நினைக்கிறீர்கள் - நாம் எந்த மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டுமோ அந்தச் சூழலை நம்மைச் சுற்றி உருவாக்க வேண்டும். இங்கிலீஷ் பேசும் சூழலை எப்படி உருவாக்குவது? சுற்றியிருப்பவர்களிடம் இனி மேல் என்னிடம் இங்கிலீஷில் பேசுங்கள் என்றா சொல்ல முடியும் – என்கிறீர்களா? ஏற்கெனவே கேலி பேசுவார்கள் – இப்படியெல்லாம் சொன்னால் கேலிக்கும் கிண்டலுக்கும் அளவே இருக்காது – என்கிறீர்களா? சரி தான் – உங்களுடைய கவலை! ஆனாலும் நிறைய வழிகள் இருக்கின்றன.

நெருங்கிய நண்பர்களின் உதவி

உங்களைப் போன்றே ‘இங்கிலீஷ் பேச வேண்டும்’ என்று நினைக்கும் நெருங்கிய நண்பர்களை அடையாளம் கண்டுபிடியுங்கள். அவர்களிடம் உங்களுடைய கருத்தை மனம் விட்டுப் பேசுங்கள். இனி ஒருநாளைக்குப் பத்து நிமிடமாவது நாம் இங்கிலிஷில் பேசுவோம் என்று சொல்லிப் பாருங்கள். ஒத்த சிந்தனையுடைய நெருங்கிய நண்பர்கள் கட்டாயம் முன் வருவார்கள். அவர்களிடம் இங்கிலீஷ் பேசும் போது உங்களுக்கும் கூச்சம் இருக்காது. நீங்கள் பயன்படுத்தும் தவறான வார்த்தையையோ வாக்கியத்தையோ உச்சரிப்பையோ அவர்கள் திருத்தும் போது உங்களுக்கும் வலிக்காது.

கண்ணாடி முன்னாடி

இப்படி நெருங்கிய நண்பர்கள் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் சரி – உங்களை விட யாரும் உங்களைப் பேச வைத்து விட முடியாது. என்ன சொல்கிறீர்கள்? ஒன்றுமே புரியவில்லையே! என்கிறீர்களா? தினமும் தன் முகத்தைக் கண்ணாடியில் பார்க்காத மனிதர்களே இருக்க மாட்டார்கள். காலையில் ஓர் ஐந்து நிமிடங்கள், மாலையில் ஓர் ஐந்து நிமிடங்கள் கண்ணாடி முன்னால் நின்று மனம் விட்டு இங்கிலீசில் பேசிப் பாருங்கள். வார்த்தை தெரியவில்லை, இலக்கணம் தெரியவில்லை என்ற கவலை எல்லாம் இங்கு வேண்டாம் – நீங்கள் எவ்வளவு தப்புத்தப்பாகப் பேசினாலும் பரவாயில்லை. கண்ணாடியைப் பார்த்து இங்கிலீஷில் தொடர்ச்சியாகப் பேச வேண்டும் அவ்வளவு தான்! இப்படிப் பேசுவதன் மூலம் உங்கள் கூச்சம் போவதுடன் தொடர்ச்சியாகப் பேசும் பழக்கமும் கைக் கூடும்.

வானொலிச் செய்திகள் கேளுங்கள்

சிலர் இங்கிலீஷ் பேச வேண்டும், உச்சரிப்புக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தினமும் டி.வி. யில் இங்கிலீஷ் செய்திகள் கேட்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அது நல்ல பழக்கம் தான்! டி.வி.யில் செய்திகள் கேட்கும் போது, சில சமயங்களில் செய்தியைக் கவனிக்காமல் வீடியோவை வைத்தே நம்மால் புரிந்து கொள்ள முடியும். எனவே அதைவிடச் சிறந்த வழி – வானொலியில் ஆங்கிலச் செய்திகள் கேட்பது! அரசு வானொலியில் ஏறத்தாழ மணிக்கொரு முறை இரண்டு நிமிட ஆங்கிலச் செய்திகள் வருகின்றன. உங்களிடம் இருக்கும் அலைபேசிகள் மூலம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவற்றைக் கேட்கலாம் – இரண்டு நிமிடங்கள் தான் என்பதால் இதற்கென்று தனியாக நேரம் ஒதுக்க வேண்டிய தேவையும் இருக்காது - உங்களுடைய மற்ற வேலைகளும் பாதிக்கப்படாது. இப்படிக் கேட்பதன் மூலம் ஒவ்வொரு வார்த்தையும் எப்படி உச்சரிக்க வேண்டும், ஒரு வாக்கியத்தைப் பேசும் போது எங்கே நிறுத்த வேண்டும், எப்படி வாக்கியத்தை முடிக்க வேண்டும் என்பன போன்றவற்றைக் கற்றுக் கொள்ள முடியும்.

கிராம்மர் தெரியாதே என்ன செய்வது?

தொடர்ச்சியாகப் பேசுவது, கூச்சமில்லாமல் பேசுவது எல்லாம் சரிதான்! ஆனால் எனக்கு ஆங்கில இலக்கணம் சுத்தமாகத் தெரியாதே! என்ன செய்வது? அடிப்படையே தெரியாமல் நான் எப்படிப் பேசுவது? இது தான் பலருக்கும் இருக்கும் கேள்வி! ஒரு மொழி பேசுவதற்கு அந்த மொழியின் இலக்கணம் தெரிந்திருக்க வேண்டும் தான்! அதற்காக இலக்கணம் அனைத்தையும் முழுமையாகப் படித்த பிறகு தான் நான் அந்த மொழியைப் பேச வேண்டும் என்று நினைப்பது சரியில்லை. நன்றாக யோசித்துப் பாருங்கள் – தமிழில் தொல்காப்பியம், நன்னூல் ஆகிய இலக்கண நூல்களை எல்லாம் படித்து விட்டுத் தான் நீங்கள் தமிழ் பேசத் தொடங்கினீர்களா? இல்லையே! குழந்தைப் பருவத்தில் தப்புத்தப்பாகப் பேசத் தொடங்கினோம்; பிறர் எப்படிப் பேசுகிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனித்தோம்; அப்படிக் கவனித்து நம்முடைய பேச்சைத் திருத்திக் கொண்டோம். அப்படித் தானே! இதே முறை தான் இங்கிலிசிற்கும்! முதலில் பேசத் தொடங்குவோம்; பிறகு மெல்ல மெல்லத் திருத்திக் கொள்ளலாம்.

அப்படித் திருத்துவதற்குத் தான் வானொலிச் செய்திகள் கேட்பது போன்ற முறைகளைக் கையாள வேண்டும்.

அடிப்படை இலக்கணம் போதும்!

இங்கிலீஷ் பேச வேண்டும் என்று நாம் நினைப்பது வேலை பார்க்கும் இடத்தில் தமிழ் தெரியாத ஒருவரிடம் பேசுவதற்கோ, நேர்காணல்களில் ஆங்கிலம் பேசுவதற்கோ அல்லது வெளி மாநிலங்களில் இங்கிலீஷ் பேசுவதற்கோ தான்! இதற்கு இங்கிலீஷின் மொத்த இலக்கணத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்னும் அவசியமில்லை. நிகழ் காலம், இறந்த காலம், எதிர் காலம் ஆகியவற்றில் எப்படி வாக்கியங்களை அமைக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டாலே 90 சதவீதம் பேசி விடலாம். பாட்டி வடை சுட்ட கதையில் இருந்து எந்தக் கதையையும் சொல்லிப் பாருங்கள். ‘பாட்டி வடை சுட்டார், காக்கா வந்தது, வடை கேட்டது, நரி வந்தது, பாடச் சொன்னது’ என்று பெரும்பாலான வாக்கியங்கள் இறந்த காலத்தில் தான் இருக்கும். ‘உங்களுடைய வாழ்க்கைக் குறிக்கோள் என்ன’, ‘இன்னும் ஐந்து ஆண்டுகளில் நீங்கள் என்னவாகவிரும்புகிறீர்கள்’ என்னும் கேள்விகளுக்கான பதில்களை யோசித்துப் பாருங்கள் – எல்லா பதில்களுமே எதிர்காலத்தில் இருக்கும். எனவே, இறந்த காலம், எதிர்காலம், நிகழ் காலம் ஆகியவற்றில் வாக்கியங்களையும் கேள்விகளையும் எப்படி அமைப்பது என்று கற்றுக் கொண்டாலே போதும்! பேசத் தொடங்கிவிடலாம்! அப்படியானால் டைரக்ட், இன்டைரக்ட், சிம்பிள், காம்பெளண்டு, காம்ப்ளெக்ஸ், ஆக்டிவ் வாய்ஸ், பேசிவ் வாய்ஸ் ஆகியவற்றை எல்லாம் படிக்க வேண்டாமா? அவை எல்லாம் தொடக்க நிலையில் ஆங்கிலம் பேசக் கட்டாயத் தேவை அல்ல. பேசத் தொடங்கி, கூச்சம் போன பிறகு தேவைப்படும் போது படித்துக் கொள்ளலாம்.

பட்டப் படிப்பு இல்லையே என்ன செய்வது?

பட்டப்படிப்பு இல்லை, அதனால் இங்கிலீஷ் வரவில்லை என்று சொல்வது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள நாம் கண்டுபிடித்திருக்கும் ஒரு காரணம், அவ்வளவு தான்! நன்றாக யோசித்துப் பாருங்கள் – எட்டாம் வகுப்புப் படித்தவர்கள், பத்தாம் வகுப்புப் படித்தவர்கள் எல்லாம் மும்பை போன்ற வெளிமாநில நகரங்களுக்கும் சவுதி அரேபியா போன்ற வெளிநாடுகளுக்கும் போகிறார்கள். அங்கு போய் ஆறே மாதத்தில் மராத்தி, இந்தி, அரபு மொழிகளைத் திறம்படப் பேசுகிறார்கள்.மராத்தி, இந்தி, அரபு ஆகிய மொழிகளையெல்லாம் போல, ஆங்கிலமும் ஒரு மொழி அவ்வளவு தான்! போதுமான படிப்பில்லாமல், வெளி மாநிலத்தில், வெளிநாட்டில் நிர்ப்பந்தத்தில் இருக்கும் போதே ஒருவரால் மொழி கற்றுக் கொள்ள முடியும் என்றால், அதுவும் இந்தி, அரபு, மராத்தி மொழிகளையாவது தொடக்கத்தில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். தமிழ்நாட்டில் கற்றுக் கொள்ளத் தேவையான எல்லா வசதிகளுடன் இருக்கும் நம்மால் ஒரு மொழியை, அதுவும் இங்கிலீஷ் போன்ற ஏற்கெனவே பல வார்த்தைகள் தெரிந்த ஒரு மொழியை நம்மால் கற்றுக் கொள்ள முடியாதா? போதுமான ஆர்வமும் பயிற்சியும் இருந்தால் உறுதியாக முடியும்.

நான் தமிழ் மீடியத்தில் படித்தேன் என்ன செய்வது?

உலகில் உள்ள எல்லா நாடுகளிலுமே (இந்தியாவைப் போலச் சில விதிவிலக்குகளைத் தவிர) தாய்மொழியில் தான் பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள். தாய் மொழி வழியில் படித்தால் இன்னொரு மொழியைப் பேச முடியாது என்றால், உலக மக்கள் யாருமே இன்னொரு மொழியைக் கற்றுக் கொண்டு பேச முடியாது. ‘தமிழ் மீடியத்தில் படித்ததால் இங்கிலீஷ் பேச முடியவில்லை’ என்பதும் இருக்கும் மூட நம்பிக்கைகளில் ஒன்று தான்! ‘தமிழ் மீடியத்தில் படித்ததால் சின்ன வயதில் ஆங்கிலம் பேசுவதற்குரிய சூழல் உங்களுக்கு அமையாமல் போய் இருக்கலாம் – அதற்காக இப்போதும் அதையே காரணமாகச் சொல்வேன் என்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் இன்னொரு வகை அவ்வளவு தான்! திடீரென ஒருவர் நம் முன் வந்து, ஜப்பான் மொழியிலோ ஜெர்மன் மொழியிலோ பேசுகிறார் என்று வைத்துக் கொள்வோம். தமிழ்நாட்டில், இந்தியாவில் பிறந்து வளர்ந்த நமக்கு அந்த இரண்டு மொழிகளுமே தெரிய வாய்ப்பில்லை. ‘திருதிரு’வென விழிப்போம். அதே நேரம், ஒருவர் நம் முன் வந்து நின்று ‘ஹாய்! ஹெள ஆர் யூ?’ என்று கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம். நமக்கு அவர் பேசுவது புரிந்து விடும். நமக்குப் புரிகிறது என்றால் என்ன அர்த்தம்? அவர் பேசும் மொழி நமக்குத் தெரியும் என்று தானே அர்த்தம்!

ஜெர்மன், ஜப்பான் எனப் புரியாத ஒரு மொழியைப் புதிதாகக் கற்றுக் கொள்வது எளிதான விசயமா? ஏற்கெனவே புரிந்த ஒரு மொழியைப் பயிற்சி செய்வது எளிதான விசயமா? இரண்டாவது தானே! எனவே இங்கிலீஷைப் பயிற்சி செய்யத் தொடங்குங்கள். தொடர்ச்சியான பயிற்சி மட்டுமே ஒரு மொழியைக் கைக்குக் கொண்டு வரும்.

இலக்கணத்தை மனப்பாடம் பண்ணுங்கள்

கண்ணாடி முன் நின்று பேசுவது, நண்பர்களுடன் பேசுவது ஆகியவற்றுடன், ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு ஆங்கிலப் புத்தகங்கள், ஒர்க் புக்குகள் எனப்படும் பயிற்சிப் புத்தகங்கள் ஆகியவற்றை வாங்குங்கள். அவற்றில் சொல்லப்பட்டிருக்கும் வாக்கிய அமைப்புகளுக்கான இலக்கணத்தை மனப்பாடம் பண்ணுங்கள். மனப்பாடமா? என யோசிக்காதீர்கள். தமிழ் தெரியாத ஒருவர், உங்களிடம் தமிழ் கற்றுக் கொள்ள வந்தால் என்ன செய்வீர்கள்? ‘நான்’ என்று வாக்கியம் தொடங்கினால், ‘கிறேன்’ என்று முடிய வேண்டும்,(எ.கா. நான் விளையாடுகிறேன்) ‘நாங்கள்’ என்று தொடங்கினால் ‘கிறோம்’ (எ.கா. நாங்கள் விளையாடுகிறோம்) என்று வாக்கியம் அமைய வேண்டும் என்று அடிப்படை விதிகளை மனப்பாடம் செய்யச் சொல்வோம் இல்லையா? இதே போல, இங்கிலீஷில் இருக்கும் அடிப்படை விதிகளை மனனம் செய்யுங்கள். இந்த இலக்கண விதிகளைத் தனியே படிக்க முடியவில்லை எனில் தனிப்பயிற்சி போவதில் தவறேதும் இல்லை.

தவறாகப் பேசினால் சிரிக்காதீர்கள்

வெளிநாட்டுக்காரர் ஒருவர் தமிழ்நாட்டிற்கு வந்து தமிழ் பேசினால் எப்படிப் பேசுவார்? நம்மைப் போல சரளமாக அவரால் பேச முடியுமா? பெரும்பாலும் முடியாது. அப்படிப்பட்ட சூழலில் அவர் தவறாகத் தமிழ் பேசினாலும் தட்டிக் கொடுத்து மெல்லத் திருத்திக் கொண்டு வர வேண்டும் அல்லவா? அந்த வெளிநாட்டுக் காரருக்குத் தமிழ் எப்படியோ, அப்படித் தான் நமக்கு ஆங்கிலம்! எடுத்த எடுப்பிலேயே தப்பில்லாமல் ஆங்கிலம் பேசவும் இலக்கணச் சுத்தியோடு ஆங்கிலம் பேசவும் எந்த ஆங்கிலேயரிடமும் நாம் ஆங்கிலம் படிக்கவில்லை; ஆங்கிலம் பேசும் நாடுகளிலும் வசிக்கவில்லை. எனவே, நாம் பேசும் ஆங்கிலத்தில் நிறைய தவறுகள் வரலாம் – நம்மைப் போலவே, நம்முடைய நண்பர்கள் பேசும் ஆங்கிலத்திலும் தவறுகள் இருக்கலாம். பலர் முன்னால் அவர் பேசும் போது சிரித்து அவமானப்படுத்தி விடாதீர்கள். அவர் பேசுவது ஓர் அந்நிய மொழி, அதில் தவறு வருவது இயல்பு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். முடிந்தால், அவருடைய தவறுகளைத் தனியே எடுத்துச் சொல்லித் திருத்தப் பாருங்கள்.

ஆங்கிலப் படங்கள் பார்க்கலாமா?

தாராளமாகப் பார்க்கலாம், ஆனால் சில விதிகளுடன்! ஆங்கிலப் படங்களைப் பார்ப்பதற்கு முன் அவை நல்ல படங்களா? என்று ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக் கொள்ளுங்கள். நம்மூரில் வெளி வரும் ஆங்கிலப் படங்கள் பெரும்பாலும் வணிக ரீதியான படங்களே! அவற்றின் மூலம் ஆங்கிலம் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு குறைவு என்பதுடன் தொடர்ச்சியாக வணிக ரீதியான ஆங்கிலப் படங்கள் பார்ப்பது என்பது, உங்கள் சிந்தனையோட்டத்தை மாற்றலாம். மொழி கற்றுக் கொள்கிறேன் பேர்வழி என்று சிந்தனையைச் சிதறடித்துவிடக் கூடாதல்லவா? எனவே, தரமான ஆங்கிலப் படங்களைப் பாருங்கள்; குழந்தைகள் பார்க்கும் கார்ட்டூன் படங்களைப் பாருங்கள்.

ஆங்கிலச் செய்தித்தாள்கள் படிக்கலாமா?

ஒரு செய்தித் தாள் என்பது செய்திக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இருக்க வேண்டும்; மொழிக்கு இல்லை. எப்படித் தொடர்ச்சியாக வணிக ரீதியான ஆங்கிலப் படங்கள் பார்ப்பது மூலம் உங்கள் சிந்தனை மாற வாய்ப்பு இருக்கிறதோ, அதே போல ஆங்கிலம் பேச வேண்டும் என்னும் நோக்கத்திற்காக, ஒரே செய்தித்தாளைப் படிப்பதும் உங்கள் எண்ண ஓட்டத்தை மாற்றலாம். எனவே, அதில் எச்சரிக்கையாக இருங்கள். மேற்கொண்டு, ஆங்கிலத்தில் செய்தித்தாள் படிப்பது என்பது நேரடியாக ஆங்கிலம் பேச உதவாது. செய்தித்தாள்கள் படிப்பதன் மூலம் நிறைய ஆங்கில வார்த்தைகளை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும், அவ்வளவு தான்! வேண்டுமானால், நீங்கள் பேசும் போது அவ்வார்த்தைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தத் தெளிவுடன் ஆங்கிலச் செய்தித்தாள்களைப் படியுங்கள். சிலர் ஆங்கிலச் செய்தித்தாள் படித்தாலே இங்கிலீஷ் பேச முடியும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நம்பிக்கை முழுமை இல்லை. ஆங்கிலச் செய்தித்தாள்களுடன் காமிக்ஸ் புத்தகங்களைப் படிக்கலாம், குழந்தைகளுக்கான கதைப் புத்தகங்களைப் படிக்கலாம். இந்தப் புத்தகங்கள் மூலம் அன்றாடம் பயன்படுத்தும் வாக்கியங்களை நாம் கற்றுக் கொள்ள முடியும். தொழில்நுட்பம் முன்னேறிய இக்காலத்தில் இங்கிலீஷ் வார்த்தைகளைத் தெரிந்து கொள்ள நிறைய செயலிகள் கிடைக்கின்றன; அவற்றை உங்கள் பேசிகளில் நிறுவியும் நிறைய வார்த்தைகள் தெரிந்து கொள்ளலாம்.

ஆங்கிலேயர் போல் இங்கிலீஷ் பேச முடியாதா?

இங்கிலீஷ் பேசத் தெரிந்தவர்கள், பேசத் தெரியாதவர்கள் பலருக்கும் இருக்கும் தாழ்வு மனப்பான்மை நோய்களில் இது ஒரு பெரிய நோய்! என்ன மன நோய் என்று சொல்கிறீர்கள்? ஒரு மொழியை அந்த நாட்டுக்காரர் எப்படிப் பேசுகிறாரோ அது போலவே பேச நினைப்பது எப்படி மன நோயாகும்? என்று கேட்கிறீர்களா?

ஒருவர் கன்னியாகுமரியில் வளர்ந்தவராக இருந்தால், அவருடைய பேச்சு வழக்கு நாஞ்சில் தமிழாக இருக்கும். அவரே, கோயம்புத்தூர்காரராக இருந்தால் ‘ஏனுங்க, தானுங்க’ என்று கொங்குத் தமிழ் பேசுவார். நெல்லையில் இருந்தால், ‘ஏலே, வாலே’ என்று நெல்லைத் தமிழ் பேசுவார். இதே போலத் தானே ஆங்கிலமும்! நீங்கள் அமெரிக்காவில் வளர்ந்தால், அமெரிக்கர் போல ஆங்கிலம் பேசலாம்! வளர்ந்த இடம் ஆஸ்திரேலியா என்றால் ஆஸ்திரேலியர் போலப் பேசலாம். இந்தியாவிலேயே இருந்து கொண்டு ‘பேசினால் ஆங்கிலேயர் போலப் பேச வேண்டும்’ என்று சொல்லிக் கொண்டிருந்தால் சரியாகுமா? அப்படிப் பேசுவதோ பேச நினைப்பதோ பெரிய தவறில்லை என்றாலும் அது நடைமுறைக்கு உதவாத ஒன்று! ஆங்கிலேயர் போலப் பேசினால் தான் ஆங்கிலம் பேசியதாக அர்த்தம் என்று நினைப்பதை ஒருவகைத் தாழ்வு மனப்பான்மை என்று நினைக்க வாய்ப்பு உண்டு. தவறில்லாமல் பேச வேண்டும் என்று நினையுங்கள், அது போதும்!

வெறும் மொழி மட்டும் உதவாது

இங்கிலீஷ் பேசுவது என்பதைத் தாண்டி உங்களுக்கு எந்தத் துறையில் ஆர்வம் இருக்கிறதோ அந்தத் துறையில் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். ஆங்கிலம் போன்ற ஒரு பன்னாட்டு மொழியைக் கற்பது என்பது ஊடகமாகப் பயன்படுத்த மட்டும் தான்! வெறுமனே இங்கிலீஷ் நன்றாகப் பேசுகிறார் என்பதற்காக யாரையும் வேலைக்கு எடுப்பதில்லை. திறமை இருக்க வேண்டும்; அந்தத் திறமையை நேர்காணல் போன்ற இடங்களில் வெளிப்படுத்த மொழி தடையாக இருக்கக் கூடாது அவ்வளவு தான்! இங்கிலீஷ் பேசத் தெரிந்தால் மட்டும் போதும் என்றால், எல்லோருமே தான் பி.ஏ., ஆங்கில இலக்கியம் படித்து விடலாமே! மார்க்கெட்டிங் போன்ற எல்லாத் துறைகளிலுமே திறமை தான் முதன்மை! அதை வெளிப்படுத்தும் ஒரு கருவி – மொழி, அவ்வளவு தான்! இதையும் நினைவில் கொள்ளுங்கள்.

பயிற்சியும் முயற்சியும் பலன் தரும்

‘நான் ஆங்கிலம் பேச வேண்டும் என்று தான் நினைக்கிறேன்; அதற்காக ஆங்கில இலக்கணம் எல்லாம் படித்து விட்டேன்; ஆனாலும் என்ன பேசுவது என்று தெரியவில்லையே!’ என்று அங்கலாய்க்கிறீர்களா? கவலையை விடுங்கள். அன்றாடம் உங்கள் வாழ்க்கையில் நடப்பதை மனத்திற்குள் இங்கிலீஷில் சொல்லிப் பாருங்கள் – நான் காலையில் எழுந்தேன்; பல் விலக்கினேன்; குளித்தேன்; துணிமணிகளை எடுத்தேன்; தேய்த்தேன் என்று தொடர்ச்சியாகச் சொல்லிப் பாருங்கள். நிறைய வார்த்தைகளைத் தேட ஆரம்பிப்பீர்கள். தொலைக்காட்சியில் கேட்கும் செய்திகளை ஆங்கிலத்தில் சொல்ல முடிகிறதா? என்று உங்களுக்குள் முயன்று பாருங்கள். செய்தித்தாள்களில் வரும் சின்னச் சின்ன செய்திகளை மொழிபெயர்க்க முடிகிறதா என்று சொல்லிப் பாருங்கள். நீங்கள் கண்ட கனவை இங்கிலீஷில் சொல்ல முடிகிறதா என்று பாருங்கள். ரொம்ப முக்கியமானது – இவை எல்லாவற்றையும் தினமும் செய்து பாருங்கள். ஒரு மொழி என்பது நீச்சலைப் போன்றது! பயிற்சியில் வர வேண்டிய ஒன்றே தவிர, படித்து வர வேண்டிய ஒன்று இல்லை. எவ்வளவு புத்தகங்கள் இருந்தாலும் எத்தனைப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டாலும் நீங்கள் குதித்தால் தான் நீச்சல் வரும்! மொழியாகிய கடலும் அப்படித்தான்! குதியுங்கள்! கட்டாயம் ஒரு நாள் முத்தெடுப்பீர்கள்!

(கட்டுரை புதிய வாழ்வியல் மலர் மே 1-15, 2016இல் வெளியானது) 

- முத்துக்குட்டி

Pin It