“இனி எதிர்காலத்தில்,

ஒவ்வொருவரின் சட்டைப் பையிலும்

ஒரு தந்திக் கருவி இருக்கும்.”

1930 களில், இத்தகைய புரட்சிக் கருத்தை வெளிப்படுத்தியவர் யார் தெரியுமா?

ஏதோ ஒரு ஐரோப்பிய நாட்டு அறிஞர் என்று கருதி விடாதீர்கள்.

இது நமது தமிழ் மண்ணின் சிந்தனைதான்; தந்தை பெரியார் எனும் தத்துவமேதை, தொலைநோக்குப் பார்வையோடு, இயல்பாக வெளிப்படுத்திய கருத்து இது.

ஏறத்தாழ, எண்பது ஆண்டுகளுக்கு முன்பு, யாரும் சிந்திக்க முடியாத கோணத்தில் சிந்தித்து, அவர் குறிப்பிட்ட அந்தத் தந்திக் கருவிதான், இன்று உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டு இருக்கின்ற அலைபேசி.

அவர் எந்த ஆங்கில நூலையும் படித்து விட்டு இந்தக் கருத்தைச் சொல்லவில்லை. தமக்குச் சரி என்று பட்டதையெல்லாம் பேசினார். அவரது உரைகளைப் படித்துப் பார்த்தால், அதை உணரலாம். 

இன்று, இந்திய மக்கள் தொகையை விட இரண்டு மடங்கு அலைபேசிகள், இந்தியாவில் புழக்கத்தில் இருக்கின்றனவாம். இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், முதல் பத்து ஆண்டுகளில், அலைபேசிகள் ஏற்படுத்தி இருக்கின்ற மாற்றங்கள், இனி இந்த நூற்றாண்டு எத்தகைய புரட்சிகளைக் காண இருக்கின்றது என்பதற்குக் கட்டியம் கூறுகின்றது.

mobile_phones_380‘செல்போன், மொபைல் என்ற ஆங்கிலச் சொற்களுக்கு, ‘செல்,பேசி, செல்பேசி, செல்லிடபேசி அலைபேசி’ என, தமிழில் பல சொற்களைச் சொல்லுகிறார்கள். வான் அலைகளின் வழியாகப் பேசுவதால், ‘அலைபேசி’ என்பதுதான் ஓரளவு பொருத்தமாகத் தெரிகின்றது. மேலும் ஆய்வு செய்ய வேண்டும். இந்தக் கட்டுரையில், ‘அலைபேசி’ என்றே குறிப்பிட்டு உள்ளேன்.

அலைபேசிகளை முறையாகப் பயன்படுத்தினால், அது நம்மை முன்னேற்றும்;  வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்; தவறாகப் பயன்படுத்தினால், சிறைக்கூடத்துக்கு உள்ளே கொண்டு போய்ப் பூட்டி விடும். அன்றாடம் நாளிதழ்களில் நாம் படிக்கின்ற செய்திகள் அதை உணர்த்துகின்றன.

அலைபேசிகளால் கிடைக்கின்ற நன்மைகள் அதிகம். தீமை என்று சொன்னால், உயிரை இழக்க நேரிடும். அவ்வளவுதான்.

நம் கண்முன்னேயே சிட்டுக்குருவிகள் காணாமல் மறைந்து போனதற்கு, அலைபேசி கோபுரங்களின் மின்காந்த அலைவீச்சுதான் காரணம் என்று ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன. நமது உடல்நலத்துக்கும், மனநலத்துக்கும் அலைபேசிகள் ஏற்படுத்துகின்ற கேடுகள் கொஞ்சநஞ்சம் அல்ல.

எனவே, அலைபேசிகளை முறையாகப் பயன்படுத்துவதற்கு உதவியாக, சில கருத்துகளை, உங்கள் கவனத்துக்கு முன்வைக்கின்றேன்.

1. அலைபேசிகளை எப்போதும் கைகளிலேயே வைத்துக் கொண்டு இருக்காதீர்கள். அவை, வானொலி மற்றும் மின்காந்த அலைகளை, உங்களை நோக்கி ஈர்க்கின்றன. அதனால், கை விரல் கைநரம்புகள் கடுமையாகப் பாதிக்கப்படும். சில ஆண்டுகளில் கை நடுக்கம் ஏற்பட்டு விடும். எதையும் உறுதியாகப் பற்றிப் பிடிக்க முடியாமற் போய்விடும். அலைபேசியை  இயக்கும்போதும், அணைத்து வைக்கும்போதும், அதற்கான பொத்தானை அழுத்தியபின்பு, உடனே கீழே வைத்து விடுங்கள். அந்த வேளையில்தான், கதிர் வீச்சு கூடுதலாக இருக்கும். இணைப்பு கிடைத்தபிறகு, கையில் எடுத்துப் பேசுங்கள்.

அலுவலகத்திலும், வீட்டிலும் இருக்கும்போது, கூடியவரையிலும், கைக்கு எட்டுகின்ற தொலைவில், இரண்டு அடிகள் தள்ளியே  வைத்து இருங்கள். பேசும்போது மட்டும் உங்கள் கைகளில் இருந்தால் போதும்.

2. ஒரு எண்ணைச் சுழற்றிவிட்டு, எதிர்முனைக்கு சத்தம் போகிறதா? என்று கேட்டுக் கொண்டே இருப்பது தவறு. ஏனெனில், அடுத்த தொலைபேசிக்கு அழைப்பு செல்லும்போதுதான், கதிர்வீச்சு, மற்றும் மின்காந்த அதிர்வுகள் கூடுதலாக இருக்கும். அது உங்கள் காதுகளையும், மூளையையும் கடுமையாகப் பாதிக்கும். எனவே, எண்களைச் சுழற்றியபின், அலைபேசியை உங்கள் கண்ணுக்கு முன்னே கொண்டு வந்து, இணைப்பு கிடைக்கிறதா என்பதைத் திரையில் பார்த்துவிட்டு, அதன்பிறகு உரையாடலைத் தொடங்குங்கள்.

3. இணையத்தைப் பயன்படுத்துபவர்களுக்குத் தெரிந்து இருக்கும். இந்தச் செய்தியைப் படித்து இருப்பார்கள்; படத்தைப் பார்த்து இருப்பார்கள். ஒரு சோதனை: இரண்டு அலைபேசிகளை மின்னூட்டம் செய்யும்போதும், பேசும்போதும், அவற்றுக்கு இடையில் ஒரு முட்டையை வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மணி நேரத்தில், அந்த முட்டை வெந்து விடும்; நீங்கள் எடுத்துச் சாப்பிடலாம். அந்த அளவுக்கு அதில் அதிர்வும், வெப்பமும் உண்டாகிறது.

4. எனவே, சுருக்கமாக உரையாடுங்கள். ‘என்ன? ஏது?’ என்று கேட்டு, இரண்டு நிமிடங்களுக்குள் உரையாடலை முடித்துக் கொள்ளுங்கள்.  ஆகக்கூடுதலாக, ஒரு அழைப்பில், ஐந்து நிமிடங்களுக்கு மேல் பேசாதீர்கள். அதிலும் கூடுதலாக, கட்டாயத் தேவை என்றால், தொடர்ச்சியாக 17 நிமிடங்களுக்கு மேல் பேசாதீர்கள்.  மேலும் தேவை என்றால், 15 நிமிடங்கள் இடைவெளி விட்டுப் பேசுங்கள். பேசும்போது, அலைபேசி உங்கள் காதுகளிலேயே ஒட்டிக் கொண்டு இருக்க வேண்டியது இல்லை. அதில் உள்ள ஒலிபெருக்கியை இயக்கி, சற்றுத் தள்ளி வைத்துக் கொண்டே கேளுங்கள்; பதில் சொல்லுங்கள்.

5. வீண் பேச்சு,வினையாகி விடும். உங்கள் நேரத்தைச் சேமியுங்கள்.

6. உங்கள் நண்பர், வேறு ஒரு நண்பருடைய அலைபேசி, தொலைபேசி எண்களைக் கேட்டால், ஆங்கிலத்தில் சொல்லாதீர்கள். அது உடனே புரியாது. தமிழில் சொல்லிப் பாருங்கள். எதிர்முனையில் கேட்பவர்களுக்குச் சட்டெனப் புரிந்து விடும்.  எண்களைச் சொல்லும்போது, “நீங்கள் சொல்வது கேட்கவில்லை; சத்தமாக இருக்கிறது , ஒரே இரைச்சலாக இருக்கின்றது; திரும்பச் சொல்லுங்கள்” என்றெல்லாம் மாறிமாறிக் கேட்பார்கள். எரிச்சலாக இருக்கும். எனவே,  எண்களைச் சொல்லிக் கொண்டே இருப்பதைவிட, தொலைபேசி எண்கள் மற்றும் மின் அஞ்சல் முகவரிகளை, குறுஞ்செய்திகளாகவே எழுதி, சரிபார்த்து அனுப்பி விடுங்கள். பிரச்சினை வராது.  நான் யாருக்கும் தொலைபேசி எண்களைச் சொல்லுவது இல்லை. எல்லாமே குறுஞ்செய்திதான்.

7. அலைபேசியில் ஏதேனும் பிரச்சினை என்றால், அதுவரை நீங்கள் சேமித்து வைத்து இருந்த நூற்றுக்கணக்கான எண்களையும் இழக்க நேரிடும். எனவே, உங்களுடைய தொடர்பு எண்களை, ஒரு குறிப்பு ஏட்டில் தனியாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள். சிறிய குறிப்பு ஏடுகளில் அல்ல; அதுவும் தொலைந்து விடக்கூடும்; எனவே பெரிய டைரியில் பதிவு செய்து, அதை வீட்டில் ஒரு இடத்தில் வைத்து விடுங்கள். அதில் தொடர்ந்து புதிய எண்களையும் பதிவு செய்து கொண்டே வாருங்கள். வெளியே எடுத்துக் கொண்டு போக வேண்டுமானால், அதற்கெனத் தனியாக இன்னொரு கையேட்டை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

8. ‘வண்டி ஓட்டும்போது, அலைபேசி அழைப்புக்குப் பதில் சொல்ல முனையாதீர்கள். அழைப்பது எமனாகவும் இருக்கலாம்.’ சென்னை மாநகரின் பொது இடங்களில் ஆங்காங்கே காணப்படுகின்ற போக்குவரத்து காவல்துறையினரின் விளம்பர வரிகள் இவை. ஆம்; ஒரு மாதத்துக்கு முன்பு, தமிழக அமைச்சர் ஒருவரின் மகன், சென்னை உயர்நீதிமன்றத்துக்கு அருகில், அலைபேசியில் பேசிக்கொண்டே, 500 சிசி ரேஸ் பைக் ஓட்டிக்கொண்டு வேகமாக வந்தபோது, வேகத்தடையில் மோதி விழுந்தார்; மண்டை உடைந்து, உயிர் இழந்தார். அமைச்சரின் வேதனையில் நாமும் பங்கு கொள்கிறோம். ஒரு எடுத்துக்காட்டுக்காகத்தான், இதைக் குறிப்பிட்டேன்.

இதுமட்டும் அல்ல; கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், சென்னை மாநகரில், அலைபேசியில் பேசிக்கொண்டே, பாட்டு கேட்டுக் கொண்டே தண்டவாளத்தைக் கடந்தவர்கள், சாலையைக் கடந்தவர்கள் என 750 பேர்களுக்கும் மேற்பட்டவர்கள், மின்தொடர்வண்டியிலும், பேருந்துகளிலும் அடிபட்டு, உடல் சிதறி உருத்தெரியாமல் போய்விட்டார்கள் என, காவல்துறை அறிக்கை எச்சரிக்கின்றது. அதுமட்டும் அல்ல, நிறைய இளைஞர்கள், வண்டி ஓட்டிக் கொண்டே பேசிச் சென்றதால், விபத்தில் சிக்கி எலும்பு முறிவு சிகிச்சை பெற்றுக் கொண்டு இருக்கின்றார்கள். காரணம், பின்னால் வந்த வண்டிகள் எழுப்புகின்ற ஒலியைக் கேட்க முடியாமல் போய்விட்டது. மருத்துவமனைக்குச் சென்று பாருங்கள். இலட்சக்கணக்கில் செலவு; உடல் நலத்துக்கும் பெருங்கேடு. இவர்களுக்கு உயிரைவிட, பாட்டுதான் பெரிதாகத் தெரிகிறது. அந்த அளவுக்கு உழைத்துக் களைத்து விட்டார்கள்.

அலைபேசிகளில் நீண்ட நேரம் பாடல்களையும், வானொலி நிகழ்ச்சிகளையும் கேட்பவர்கள், தாமாக சிந்திக்கும் திறனை இழந்து விடுகின்றார்கள்.

“தஞ்சை மாவட்டத்தில் அலைபேசியில் பேசிக்கொண்டே பள்ளி வேனை ஓட்டியவர், குளத்துக்குள் வண்டியை விட்டார். ஒன்பது குழந்தைகள் சாவு; சில குழந்தைகளைக் காப்பாற்றிய ஆசிரியையும் தண்ணீருக்குள் மூழ்கிச் சாவு;

அரசுப் பேருந்து ஓட்டுநர், சென்னை அண்ணா சாலை, அண்ணா மேம்பாலத்தில், அலைபேசியில் பேசிக்கொண்டே வண்டியை ஓட்டியதால், சுற்றுச்சுவரை உடைத்துக்கொண்டு பேருந்து கீழே விழுந்தது.”

இந்தச் செய்திகளை தொலைக்காட்சியில் பார்த்து வேதனைப்பட்டோம். இறந்த குழந்தைகளுக்காக இரங்கல் தெரிவித்தோம்; கண்ணீர் சிந்தினோம் கவலைப்பட்டோம். காயப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினோம்.  இதுபோல, உங்கள் ஊரில் அலைபேசிகளால் பல விபத்துகள் ஏற்பட்டு  இருப்பதையும், உங்களுக்கு வேண்டிய நண்பர்கள், உறவினர்கள் இறந்து போயிருப்பதையும் நீங்கள் அறிவீர்கள். அந்த வலியையும் உணர்வீர்கள்.

இவையெல்லாம், சில செய்தித்துளிகள்தாம். தமிழகத்தில் அலைபேசிகளால் இறந்தவர்கள் எத்தனை பேர்? எப்படி? என்று யாரேனும் ஒருவர், பல்கலைக்கழக முனைவர் பட்டத்துக்காக ஆய்வுகளை மேற்கொண்டு, அதை நூலாகத் தொகுத்து வெளியிட்டால், அது இந்த சமுதாயத்துக்குச் செய்யும் பேருதவி ஆகும். 

9.வண்டி ஓட்டும்போது, நமக்கு வருகின்ற அழைப்பைத் தவிர்ப்பது மட்டும் போதாது. நீங்கள் ஒருவரை அழைக்கும்போது, அவர் உங்களோடு பேசத் தொடங்கும்போது, காற்று மோதுவதால் ஏற்படுகின்ற இரைச்சல் சத்தம் கேட்டால், ‘வண்டி ஓட்டிக் கொண்டு இருக்கின்றீர்களா?’ என்று கேளுங்கள்.‘பரவாயில்லை, சொல்லுங்கள்’ என்று அவர் சொன்னால், ‘நான் பிறகு பேசுகிறேன்’ என்று சொல்லிவிட்டு, உடனே தொடர்பைத் துண்டித்து விடுங்கள். நீங்கள் அவருக்கு எமனாக மாறி விடாதீர்கள்.

நீங்கள் வண்டி ஓட்டத் தொடங்குவதற்கு முன்பு, அலைபேசியை பெட்டிக்குள் போட்டுப் பூட்டி விடுங்கள். இல்லையேல், கண்டிப்பாக எடுத்துப் பேசத் தூண்டும். கவனம் சிதறாமல், சாலையைக் கவனித்து ஓட்டுங்கள். உயிருக்கு உத்தரவாதம் கிடைக்கும்.

சென்னையில், போக்குவரத்துக் காவலர்கள், வண்டிகளை நிறுத்தி, ‘குடித்து இருக்கின்றார்களா? ஓட்டுநர் உரிமம் வைத்து இருக்கின்றார்களா?’ என்று மட்டும்தான் சரி பார்க்கின்றார்களே தவிர, இரண்டு காதுகளிலும் ஒலிபெருக்கிகளைப் பொருத்திக் கொண்டு, அலைபேகளில் இருந்து பாடல்களைக் கேட்டுக் கொண்டே செல்பவர்களைக் கண்டு கொள்வதே இல்லை; எச்சரிப்பதும் இல்லை; தண்டம் விதித்ததும் இல்லை. அது ஏன் என்றும் புரியவில்லை. விழுந்து சாகட்டும் என்று நினைக்கின்றார்களா?

11. அலைபேசிகளை மின்னூட்டம் செய்யும்போது பேசக் கூடாது. எச்சரிக்கை. உங்கள் காதுச் சவ்வு, மிகமிக மிகமிக மென்மையானது. கிழிந்து விட்டால், கடைசி வரை கேட்க முடியாது. பாதுகாத்துக் கொள்வது உங்கள் பொறுப்பு.

12. கால்சட்டையின் முன்புறம் உள்ள பையில் அலைபேசிகளை வைப்பதால், ஆண்களுக்கு விந்தணுப் பைகளைப் பாதிக்கும்.

13. உங்கள் உடல் வளர்ந்த, முதிர்ந்த உடம்பு. ஓரளவுக்குத் தாக்குப் பிடிக்கும். ஆனால், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் உடல் பட்டுப் போன்றது. அதைப் பாதுகாக்க வேண்டும். அலைபேசிகளின் மின்காந்த, வானொலி, மற்றும் நுண்ணலை கதிர்வீச்சுகள் குழந்தைகளைக் கடுமையாகப் பாதிக்கும். அதிலும் குறிப்பாக, மூளையையும், காது சவ்வுகளையும் கடுமையாகப் பாதிக்கும். மூளை வளர்ச்சியைத் தடுத்து விடும். நினைவு ஆற்றல் குறைந்து விடும். எனவே, குழந்தைகள் கையில் அலைபேசிகளைக் கொடுக்காதீர்கள். அதில் பல மணி நேரம் விளையாட விடுவது பெருங்கேடு. அதேபோல கர்ப்பிணிப் பெண்களும் செல்போன் பயன்படுத்துவதைக் குறைக்க வேண்டும்.

14. உறங்கச் செல்வதற்கு முன்பு நீண்ட நேரம் பேசினால், நீங்கள் முழுமையாக உறங்க முடியாது. அந்தப் பேச்சு தொடர்பாகவே உங்கள் மூளை சிந்தித்துக் கொண்டே இருக்கும். எனவே, இரவு ஒன்பது மணிக்கு மேல் பேசாதீர்கள். கண்டிப்பாக மூளைக்கு 6 மணி நேரம் முழுமையான ஓய்வு தேவை. எப்போது போன் வரும் என்று எதிர்பார்த்து, தலைக்கு அருகிலேயே வைத்துக் கொண்டு இருப்பது மிகமிகத் தவறு.

15. இருதய அறுவை மருத்துவம் செய்து, இதயத்துடிப்புக் கருவி பொருத்தி இருப்பவர்கள் அலைபேசியில் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதயத் துடிப்புக் கருவியின் இயக்கத்துக்கு, அலைபேசி இடையூறு செய்யும்.

16. அலைபேசி கோபுரங்கள் உள்ள இடங்களில், 400 மீட்டர் சுற்றளவுக்குள் இருக்கின்ற உள்ள வீடுகளில் வசிப்பவர்களுக்கு, கேன்சர் நோய் வருவதற்கான வாய்ப்புகள் மூன்று மடங்கு அதிகம். அவர்களுக்கு மன அழுத்தம், உணவு செரிமானக் கோளாறுகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. ஐரோப்பிய நாடுகளில் அலைபேசிகளால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றங்களில் விரிவாக விவாதிக்கப்பட்டு உள்ளன. அதுகுறித்த விரிவான அறிக்கைகள், இணையதளத்தில் காணக் கிடைக்கின்றன. படித்துப் பாருங்கள்.

17. அமெரிக்காவில், ஒரே ஆண்டில், கார் ஓட்டும்போதே அலைபேசியில் பேசி, விபத்தில் சிக்கிச் செத்தவர்களின் எண்ணிக்கை 17,000.

18. லண்டன் நகரில், பொது இடங்களில் ஐந்து இலட்சம் கண்காணிப்புப் படக்கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. அங்கே நீங்கள் ஒரு மணி நேரம் சாலையில் இறங்கி நடந்தால், ஏழு இடங்களில் உங்கள் உருவம் பதிவாகி விடும். அதுபோல, பெட்ரோல் நிலையம் ஒன்றில் ஒருவர் அலைபேசி அழைப்புக்குப் பதில் சொல்ல இயக்கியபோது, அங்கே தீப்பிழம்பு உருவாகி அவர் உடல் கருகிச் சாகின்ற படக் காட்சிகள், இணையத்தில் உள்ளன. மற்றொருவர், துணியைத் தேய்த்துக் கொண்டு இருக்கும்போது மணி அடிக்க, ஏதோ ஒரு சிந்தனையில், எடை குறைந்த இஸ்திரிப் பெட்டியை எடுத்துக் காதில் வைத்துக் கொள்வதையும் பார்க்கலாம்.

19. உங்கள் கைகளில் உள்ள அலைபேசியை, ஆபத்தான இடங்களில் இயக்கும்போது, அது ஒரு தானியங்கியாகச் செயல்பட்டு, குண்டுகளை வெடிக்க வைத்து விடும்.

20. பெருமழை பெய்யும்போதும், பலத்த இடிச் சத்தம் கேட்கும்போதும், மின்னல் வெட்டும்போதும் பேசக்கூடாது. அந்த வேளைகளில், அலைபேசி ஒரு இடிதாங்கி போலச் செயல்பட்டு, இடி,மின்னலை உங்களை நோக்கி ஈர்த்துவிடும்.

அலைபேசிகளைத் தொலைத்தவர்கள்

அலைபேசிகள் அறிமுகம் ஆகி, பத்து ஆண்டுகள் கூட ஆகவில்லை. ஆனால், பத்துக்கும் மேற்பட்ட அலைபேசிகளைத் தொலைத்தவர்களை நான் அறிவேன்.

“அழகாக இருக்கிறதே, நண்பர் வைத்து இருக்கின்றாரே” என்பதற்காக, அதேபோன்ற, விலை உயர்ந்த அலைபேசியை வாங்காதீர்கள். என்னுடைய நண்பர் ஒருவர்,  தம்முடைய ஒரே மகனுக்காக, சென்னையில் இருந்து, 20,000 ரூபாய் விலையில் ஒரு போன் வாங்கிக் கொண்டு போனார். ஒரு வாரம்தான் ஆனது. கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கின்ற மகன், வீட்டுக்கு வருவதற்கு முன்பு தொலைந்து போய்விட்டது. ஒருமுறைகூடப் பேசவில்லை.

நிறையப் பேர் கீழே தவற விட்டு உடைத்து இருப்பார்கள்;குனிந்து பார்க்கும்போது தண்ணீருக்குள் விழுந்து இருக்கும். மழையில் நனைந்து, ஒரு சொட்டுத் தண்ணீர் உள்ளே இறங்கினாலும் அவ்வளவுதான். வீணாகிப் போகும். கவனம் இல்லாவிட்டால், கவலைதான்.

வீண் பெருமைக்காக, விலை உயர்ந்த அலைபேசியை வாங்காதீர்கள். உங்கள் தேவைக்கு ஏற்ப, குறைந்த விலையில் வாங்கிப் பேசுங்கள். தொலைந்து போனாலும் பரவாயில்லை என்ற மனநிலைக்கு முதலிலேயே உங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

தவறான அழைப்புகள்

தவறான அழைப்புகளைத் தவிர்த்து விடுங்கள். அது நமக்கான அழைப்பு இல்லை என்று தெரிந்தால், மேற்கொண்டு பேச்சை வளர்க்காமல், உடனே துண்டித்து விடுங்கள். முகம் அறியாத, எதிர்பாலினருடன் தேவை இல்லாமல் பேசுவதும் தீமையே.

நன்மைகள்

கொலைகாரர்கள், குற்றவாளிகள், கள்ளத் தொடர்புகள் வைத்துக் கொண்டு இருப்பவர்கள், அலைபேசிகளால் எளிதாக மாட்டிக் கொள்கின்றார்கள். இன்றைக்கு எந்த ஒரு குற்ற இயல் வழக்கு என்றாலும், ஒருவருடைய அலைபேசி உரையாடல்களை, ஓராண்டு ஆய்வு செய்தாலே போதும்; ஆவணங்கள் எளிதாகக் கிடைத்துவிடும். அப்படித்தான் காவல்துறை செயல்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டு நாளிதழ் செய்திகளைப் படித்துப் பாருங்கள். தமிழகத்தில் நடைபெற்ற கொலை வழக்குகளில் கைதான குற்றவாளிகள் அனைவருமே, அலைபேசியால்தான் மாட்டிக் கொண்டார்கள் என்பது புரியும். ஒருவர், தான் திருடிய அலைபேசியை, ஓராண்டு கழித்துப் பயன்படுத்தும்போது மாட்டிக் கொண்டார்.

கடந்த மாதம் சென்னையில் தன் மனைவியைக் கொலை செய்த கல்லூரிப் பேராசிரியர், அதற்கு முதல்நாள், கள்ளக்காதலியோடு, ஒரே நாளில் அலைபேசியில் ஆறு மணி நேரம் பேசி இருக்கின்றார். அப்படி என்னதான் பேசினார்களோ தெரியவில்லை. ஆனால், அந்த உரையாடலுக்குப் பிறகுதான், அவர் கொலை செய்து இருக்கின்றார். அந்த உரையாடல்தான், அவரைக் குற்றவாளியாக ஆக்கி இருக்கின்றது. இப்போது இருவரும் சிறையில் இருக்கின்றார்கள்.

எண்பதுகளில்...

1984 ஆம் ஆண்டு, என்னுடைய அம்மா வழிப் பாட்டி, உடல்நலக் குறைவுற்று, சென்னையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ள செய்தி, சங்கரன்கோவிலுக்கு, தந்தி வழியாகக் கிடைத்தது. என்ன நிலைமை என்று அறிய, தொலைபேசியில் அவசர இணைப்புக்காகப் பதிவு செய்தோம். ஒன்றரை நாள் கழித்துத்தான் இணைப்பு கிடைத்தது. சென்னைக்குப் புறப்பட்டு வந்த இரண்டு நாளில் பாட்டி இறந்து போனார்.

1960 களில் தொடங்கி, 1990 வரையிலும், வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் சென்றவர்கள், அங்கே விபத்தில் சிக்கி இறந்துவிட்டால், அவர்களுடைய உடலை, உடனே பெற்றுவிட முடியாது.

90 களில், அப்படி இறந்த பலரது உடல்களைக் கொண்டு வர மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளை நான் அறிவேன். அப்போதெல்லாம், ஓராண்டுக்கும் மேல் ஆனது. ஏன், ஒன்றேமுக்கால் ஆண்டு கழித்து ஒருவருடைய உடல் வந்தது. ஆனால், கடந்த சில மாதங்களில் இறந்த இருவரது உடல்களை, பத்துப் பதினைந்து நாள்களுக்குள் கொண்டு வந்து சேர்க்க முடிந்தது. காரணம், அலைiபேசிகள்தாம். உடனுக்குடன் தொடர்புகொண்டு, தேவையான ஆவணங்களைத் தாக்கல் செய்ய முடிந்தது.

எண்பதுகளில், பூடான் நாட்டில் நான் இரண்டு ஆண்டுகள் பணி ஆற்றியபோது, அந்த நாட்டில் தொலைபேசிகளே கிடையாது. நான் பணிபுரிந்த டாடா சுரங்க அலுவலகத்திலும், அங்கே இருந்த வீடுகளுக்கும் என 25 உள் இணைப்புகள் மட்டுமே இருந்தன. அவ்வளவுதான். எனவே, இரண்டு ஆண்டுகளாக நான் பெற்றோரோடு, உறவினர்களோடு பேசியதே இல்லை. 

1986 ஆம் ஆண்டு, என் தந்தையார் தேர்தலில் வெற்றி பெற்று, சங்கரன்கோவில் நகர்மன்றத் தலைவராக ஆன செய்தியை, 40 நாள்கள் கழித்து வந்த கடிதத்தின் வழியாகத்தான் அறிந்து கொண்டேன். நான் ஊருக்குத் திரும்பி வந்தபிறகுதான், என் சகோதரிக்கு ஒரு குழந்தை பிறந்து ஓராண்டு ஆகி இருப்பதை அறிந்தேன்.  முன்பு அமெரிக்காவுக்குச் சென்றவர்கள், போனால் போனதுதான். அவர்களைப் பார்க்கவே முடியாது. ஐந்து, பத்து ஆண்டுகள் கழித்து ஊருக்கு வந்தாலும்,  ஒருவருக்கும் தெரியாமல் வந்து போய் விடுவார்கள்.

ஆனால் இன்றைக்கு, அமெரிக்காவில் மட்டும் அல்ல, உலகின் எந்த மூலையில் இருப்பவரையும் அலைபேசித் திரையில் பார்த்துக்கொண்டே உரையாட முடிகின்றது.  அயல்நாடுகளில் நடைபெறுகின்ற தமிழ் அமைப்புகளின் கூட்டங்களில், அலைபேசி வழியாக தலைவர் வைகோ அவர்களுடைய உரைகள், ஒலிபரப்பாகின்றன. உங்கள் கையில் இருக்கின்ற அலைபேசியை வைத்துக் கொண்டு, உலகின் எந்த மூலையில் இருப்பவரோடும், அடுத்த நொடியிலேயே தொடர்பு கொண்டு கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள முடிகின்றது.

“25 ஆண்டுகளுக்கு பிறகு கல்லூரி நண்பர்கள் ஒன்றுகூடல்” என்ற மகிழ்ச்சியான செய்தியைப் பார்க்கின்றோம். அவர்களை ஒன்றாக இணைத்தது அலைiபேசிககள்தாம். எனவே, தொலைந்து போன நட்பையும் மீட்டுக் கொள்ள அலைபேசிகள் உதவுகின்றன.

இப்படி, அலைபேசிகளின் நன்மை, தீமைகள் என எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம்.

சுருக்கமாகச் சொல்வது என்றால், அலைபேசிகளை முறையாகப் பயன்படுத்தினால் நன்மை; தவறாகப் பயன்படுத்தினால் தீமை.

இந்த முகவரிகள், அலைபேசி மற்றும் தொலைபேசி எண்கள் கையேடு, உங்கள் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்!

- அருணகிரி

Comments

38 comments

38
krishnamoorthy
அருமை .வேண்டியதை வேண்டும்பொது தருவதை விட சிறப்பு ஒன்றுமில்லை .
maa.ulaganathan
அலைப்பேசி குறித்து நீங்கள் செய்திருக்கும் ஆய்வு ,அறிவுரைகள்
இன்னொருவரின் ஆய்வுக்கு நிச்சயமாக பயன்படும்.பயனுள்ள
,உயிர் காக்கும் ,ஊனமில்லா யோசனைகள். அது இல்லாம ,ஊருக்கும் போக
முடியல.உறவையும் வளக்க முடியலியே!என்ன செய்ய?
தமிழ்ச்சுடர்,திருநீலக்குடி
Ramkumar
எளிமையாக வாழப் பழகினால் மட்டுமே அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றங்களை பக்குவத்தோடு பயன்படுத்த இயலும். பகுத்தறிவின்றி வெறும் பகட்டுக்காக வாழ விரும்பினால் எல்லாமே விபரீதம்தான்.
இளம்பிறை
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதைப் போல் தான் எதுவுமே நம் வாழ்வில். அலைப்பேசி இது நம் உயிருக்குக் கேட்டினைத் தரும் உலைவைக்கும் கருவியே ஆகும். அறிவியல் வேண்டும். ஆனால் அழிவை நோக்கி நாம் பயணிக்காமல் இருக்கும் வரையில் மட்டுமே. புரிந்துக் கொண்டால் அறிவியல் போற்றத்தக்கதேயாம். அல்லதெனில் நமக்கு நாமே திட்டத்தில் மரணத்தை நோயுடன் விலைக்கு வாங்கும் திட்டமே இது.
சா.வால்டேர் வில்லியம்ஸ்
அண்ணன் அருணகிரி அவர்கள் எழுதிய உலகம் சுற்றும் வாலிபன், வாங்க பறக்கலாம், கொடி வழி என்று ஏராளமான நூல்களை படித்து மகிழ்ந்திருக்கிறேன். அலைபேசிகளின் தீமைகள் பற்றி செவி வழியாக நிறைய தகவல்கள் உள்வாங்கியிருக்கிறேன். கட்டுரை வடிவில் இப்போதுதான் முதன்முறையாக படிக்கிறேன். அருமை. நன்றிகள் !! தொடர்ந்து அரசியல், இலக்கியம், உலக அனுபவங்கள் என்று பல்வேறு சிந்தனைகளோடு நிறைய கட்டுரைகள் படைக்க அண்ணன் அருணகிரி அவர்களை கேட்டுக்கொள்கிறேன். கீற்று இணையத்தாருக்கு நன்றிகள் !
alex
Sir,

Your article was really superb and thought provoking. Keep it up.
jesmine
sir enaku ph very imporant so give me the information please. sir radisafe use pannnenal nenga sonna problam allam varuma ella varathathungala sir. ella sir msg na en frd ku athigam pannuren so msg kuda anuppakudathangala sir. 8746
Guest
நல்லக் கட்டுரை. பயனுள்ளது. அமுதன்
arunagiri
தினத்தந்தி (21.7.2013) செய்தி:

எச்சரிக்கை:
சென்னை எழும்பூர் மின் தொடர்வண்டி நிலையத்தில் ஒரு இளைஞர் பெண்களை அலைபேசியில் கமுக்கமாக படம் எடுத்துக் கொண்டு இருந்தார். அதைக் கவனித்த ஒரு இளம் வழக்குரைஞர் காவலர்களிடம் தெரிவித்தார். காவலர்கள் சென்று பார்த்தனர். சிறிது நேரம் கண்காணித்தனர். இளைஞர் சிக்கிக் கொண்டார். அவரது அலைபேசியில் ஏராளமான பெண்களின் ஆபாசப் படங்கள் இருந்தன. ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே தாதபள்ளியைச் சேர்ந்த ஈரமாசு வேங்கட குருவையா இப்போது புழல் சிறையில் உள்ளார்.
arunagiri
சார்ஜரில் தொங்கிய ஒயர்

நான் ஒரு நண்பரைச சந்திக்கச் சென்று இருந்தேன். அங்கே நான் கண்ட காட்சி என்னை அதிரச் செய்தது. வேலைக்குச் செல்லும் பரபரப்பில் சார்ஜரில் இருந்த அலைபேசியை எடுத்துவிட்டு சார்ஜரை ப்ளக்கிலே விட்டு வைத்து இருந்தார்கள். அதிலிருந்து தொங்கிக் கொண்டு இருந்த ஒயரை குழந்தை வாயில் வைத்துக் கடித்தும் கையில் அடித்தும் விளையாடிக் கொண்டு இருந்தது. சார்ஜரில் மின்சாரம் வரத்து என்றாலும், மின் இணைப்பில் ஏதேனும் கோளாறு நேர்ந்து மின்சாரம் பாய்ந்தால் குழந்தையின் கதி என்ன ஆகும்? என்பதை பெரியவர்கள் யோசிக்க வேண்டும்
பே . ராமலட்சுமி, ராஜபாளையம்
arunagiri
அலைபேசி சிம் அட்டைகளில் உள்ள தகவல்களையும் திருட முடியும் என்பதை பெர்லினில் உள்ள கார்டன் நோவேல் என்பவர் கண்டுபிடித்து இருக்கின்றார்.

உங்கள் சிம் அட்டைக்கு ஒரு அடையாள எண், ரகசியக் குறியீடு உண்டு. அதை, ஒரு வித்தியாசமான் குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதற்குப் பிறகு, உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் அலைபேசியில் இருந்து பலருக்குப் பேச முடியும். உங்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டு முடியும். உங்கள் அலைபேசியில் உள்ள குரல் பதிவுகளைக் கேட்க முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி பொருட்கள் வாங்கவும் முடியும் என்பதை அவர் செய்து காட்டி இருக்கின்றார். இவர் ஒரு. க்ர்ய்ப்டொக்ரப்ஹெர்.

பிளாக்பெர்ரி ஐ போன் ஸ்மார்ட் போன் எதுவும் விதி விளக்கு அல்ல. அந்த வகையில் உலகில் தற்போது உள்ள சுமார் 75 கோடி அலைபேசிகளில் இந்த விவரங்களைத் திரட்ட முடியும் என்கிறார்.

ஆனால் இப்போது டேட்டா என்கிரிப்சன ஸ்டாண்டர்ட் 3 என்ற புதிய தொழில்நுட்பம் உள்ள அலைபேசிகளில் இந்த விவரத்தைத் திருட முடியாது என்று அலைபேசி தயாரிப்பாளர்கள் மறுக்கின்றார்கள். எனவா பழைய கார்டுகளை மாற்ற வேண்டுமாம்.

அடுத்து ஒருவர் அதையும் உடைத்துக் காட்டுவார்.

தகவல் : ஆர் வெங்கடேஷ், கல்கி பக்கம் 14/15 (4 ஆகஸ்ட் 2013)
arunagiri
சீனாவின் உய்குர் பகுதியைச் சேர்ந்த மா (23) தன்னுடைய ஐ போனை சார்ஜ் செய்தார் . அப்போது அழைப்பு வந்தது. எடுத்துப் பேசினார். திடீரென அதில் மின்சாரம் பாய்ந்தது. மா உயிர் இழந்தார்.
தினமலர் சென்னை பக்கம் 12 (21.7.2013)
arunagiri
சென்னை உள்ளகரத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். வயது 20. பொறியியல் கல்லூரி மாணவர். மிந்தொடர்வண்டியில் தொங்கிக் கொண்டு மறு கையில் அலைபேசியில் பேசிக் கொண்டே வந்தார். பிடி விலகி விழுந்தார். மண்டையில் அடிபட்டு உயிர் இழந்தார். மாம்பலம் கோடம்பாக்கம் நிலையங்களுக்கு இடையே நிகழ்ந்தது. (தினத்தந்தி/9.8.2013). இதே நாளில் மற்றொரு மாணவி, வண்டி வருவதைக் கண்டு வேகமாகத் தண்டவாளத்தைக் கடக்க முற்பட்டு கால் இடறி விழுந்தார். துண்டாகி மடிந்தார்.
arunagiri
திருச்சி காஜாமலையைச் சேர்ந்த சுல்தானா என்ற எட்டாவது வகுப்பு மாணவியின் உடல் தண்டவாளம் அருகே சிதறிக் கிடந்தது.

தற்கொலை என்று போலீஸ் சொன்னது.

முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தின.

மீண்டும் விசாரணை நடந்தது.
மாணவியின் நோட்டில் இரண்டு அலைபேசி எண்கள் இருந்தன.

காதலன் உமர் பாரூகைப் பிடித்து விசாரித்தனர்
சம்பவ நாளில் சுல்தானாவை தன்னுடைய வண்டியில் ஏற்றிக் கொண்டு சென்றது
திருச்சி அரிஸ்டோ ஹோட்டல் அருகே சாலையில் இருந்த கண்காணிப்பு கமெராவில் பதிவாகி இருந்தது.

தன்னுடைய நான்கு நண்பர்களுடன் சேர்ந்து சுல்தானாவைக் கற்பழித்துக் கொன்றதாக ஒப்புக்கொண்டார்.

லண்டன் நகரில் 2000 ஆண்டில் ஐந்து லட்சம் கண்காணிப்பு காமெராக்கள் இருந்தன.
சாலைகளில் நீங்கள் ஒருமணி நடந்தால் ஏழு இடங்களில் உங்கள் நடமாட்டம் பதிவாகி விடும்.

அப்படி தமிழ்நாட்டில் சிக்கி உள்ள முதலாவது கொலைக்குற்றவாளி உமர் பாரூக்

25.8.2013 ஜூனியர் விகடன் பக்கம் 26/27
harish
செல்ப்பொனை குப்பை தொட்டீல் போடவும் அதுதான் என் கோனீக்கை
harish
don't use the cell phone
arunagiri
தினத்தந்தி 31.8.2013 பக்கம் 12 செய்தி. திண்டுக்கல் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் பிரவீன்குமார் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவர் மீதே காவல்துறைக்கு சந்தேகம். சம்பவ நேரத்தில் தாம் நண்பரோடு வெளியூரில் இருந்ததாகச் சொன்னார். அவரது அலைபேசியை ஆய்வு செய்தனர். சம்பவம் நடந்த இரவு 12 மணிக்கு அவர் தமது வீட்டு அருகே இருந்ததாக அலைபேசி கோபுரம் காட்டிக் கொடுத்தது. முறையான விசாரணைக்குப் பிறகு தாம்தான் அந்த குண்டை வீசியதாக ஒப்புக் கொண்டார். காரணம் என்ன தெரியுமா? தமிழக அரசியலில் விரைவாக பிரபலம் அடைவதற்காக அவர் போட்ட திட்டம் இது.
arunagiri
கர்நாடக பாரதிய ஜனதா அரசு கூட்டுறவு அமைச்சர் லக்ஷ்மன் சாவடி, மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் சி சி பாட்டில் இருவரும் சட்ட மன்றம் நடைபெற்றுக் கொண்டு இருந்தபொழுது அலைபேசியில் ஆபாசப் படம் பார்த்து ரசித்தனர். மாடத்தில் இருந்த செய்தியாளர் இந்தக் காட்சியைப் படம் பிடித்து வெளியிட்டார். இரண்டு அமைச்சர்களின் பதவியும் பறி போனது. அரசியல் வாழ்வும் முடிந்து போனது. (2012 பெப்ரவரி 7)
arunagiri
ஜூனியர் விகடன் (15.9.2013) பக்கம் 28,29::

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை பேராசிரியர் சம்பத்குமார். திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. மனைவியின் தலைவலிக்கு மருந்து வாங்குவதற்காக நள்ளிரவு ஒரு மணிக்கு வீட்டை விட்டு வெளியில் வந்தார். காரில் அடிபட்டு இறந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் கொண்டார் தந்தை. காவல் நிலையத்தில் புகார் செய்தார். வழக்கம்போல சம்பத்குமார் மனைவி கிரண் ரூபினியின் அலைபேசியை வாங்கி ஆய்வு செய்தனர். மாட்டிக் கொண்டார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மிஸ்டு கால் வந்ததாம். அந்தக் குரல் அவருக்குப் பிடித்துப் போயிற்றாம். தொடர்ந்து பேசினார். நேரில் சந்த்திதனர். கள்ளக் காதல் வளர்ந்தது. கணவரின் கொலையில் முடிந்தது.
arunagiri
தினத்தந்தி 2.10.2013 பக்கம் 10 செய்தி::

தமிழக அமைச்சர் /செல்லூர் ராஜு, சட்டமன்ற அண்ணாதுரை ஆகியோர் பெயரில், மதுரை மாநகராட்சியில் இறப்புச் சான்றிதழ் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மூவருள் ஒருவரான பத்மநாபன் என்பவர், தம்மை காவல்துறை தேடுவதை அறிந்து சென்னைக்குத் தப்ப முயன்றார். அவரது அலைபேசியை பிந்தொடர்ந்து வந்த காவலர்கள் மதுரை மாட்டுதாவணி பேருந்து நிலையத்தில் அவரை வளைத்துப் பிடித்தனர்.
arunagiri
சங்கரன்கோவிலுக்கு தொடர்வண்டியில் சென்றுகொண்டு இருந்தேன். இரவு இரண்டு மணி. திருச்சியில் மூவர் ஏறினர். மேல் படுக்கையில் இருந்தவர் பக்கவாட்டில் மேல்படுக்கையில் இருந்தவரிடம் சொன்னார்.

மாமா பாத்ரூம் போக வேண்டுமென்றால் குரல் கொடுங்கள். இல்லாவிட்டால் ஒரு மிஸ்டு கால் கொடுங்கள் என்றார்.

அது சரி. இந்த எளவுல நான் நம்பரைத் தேடுறதுக்குள்ளே விடிஞ்சு போயிருமே மாப்பிள்ளை என்றார்.

சத்தம் இல்லாமல் சிரித்துக் கொண்டேன்

காலத்துக்கு ஏற்றார் போல் சற்றே அளவில் பெரிய அலைபேசி வைத்துக் கொள்வது நல்லது.
arunagiri
செல் போனுக்காகக் கொலை : தினமலர் சென்னை 16.10.2013. பக்கம் 4

ஐ ஐ டி மாணவர் அசோக்குமார் நண்பர்கள் இருவருடன் சினிமா பார்த்தார். அப்போது அவரது அலைபேசி தொலைந்தது. நண்பந்தான் எடுத்தான் என்று சந்தேகம். ஒரு மாதம் கடந்தது. மூவரும் சேர்ந்து மது அருந்தினர். அலைபேசியைக் கேட்டு அசோக்குமார் தகறாரு செய்தார். அவரைப் பிடித்துத் தள்ளினர். கல்லில் மோதி விழுந்தார். நினைவு இல்லை. இறந்து விட்டார் எனக் கருதி ஒரு குழியில் தள்ளினர். அரை லிட்டர் பெட்ரோல் வாங்கி வந்து ஊற்றி எரித்தனர்.
arunagiri
தி ஹிந்து 17.10.2013 பக்கம் 12 செய்தி::

திரை அரங்கில் படம் பார்க்கும்போது அலைபேசியில் பேசவோ குறுஞ்செய்தி அனுப்பவோ கூடாது என்ற விதியை அமெரிக்காவில் கடுமையாகப் பின்பற்றுகிறார்களா. ம்
பிரபல பாடகி மடோன்னா, தி அலோமா டோர்ப்ட் ஹவுஸ் என்ற திரை அரங்கில் படம் பார்த்தபோது தனது அலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பி இருக்கிறார்.
விதியை மீறியதால் இனி அவர் எங்களுக்குச் சொந்தமான எந்தத் திரை அரங்கிலும் படம் பார்க்க முடியாது என்று அந்தத் திரை அரங்க உரிமையாளர் தடை விதித்து விட்டார். மடோன்னா தனது செயலுக்கு வருந்தி படம் பார்க்கும்போது மற்றவர்களுக்கு இடையூறு செய்ததற்காக வருந்தி பகிரங்க மன்னிப்பு கேட்டால் தடையை விலக்குவது குறித்து பரிசீலிப்போம் என்றும் அறிவித்து இருக்கிறார்.
arunagiri
சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.(20.10.2013 நாளேடுகளில் செய்திகள்)
அலைபேசி எண்ணை ஆய்வு செய்தபோது, யுவராஜ் என்பவரைப் பிடித்தார்கள். அவர் சில நாள்களுக்கு முன்பே அலைபேசியைத் தொலைத்து விட்டார். அதனால் வந்த வினை இது. எனவே அலைபேசி தொலைந்தால் உடனே தொடர்பைத் துண்டியுங்கள். அல்லது காவல் நிலையத்தில் புகார் தெரிவியுங்கள்.
arunagiri
நாகராஜ் என்ற வங்கி அதிகாரி கொலை. (20.10.2013 நாளேடுகளில் செய்திகள்) அலைபேசியை ஆய்வு செய்தனர். ராயபுரம்/ காசிமேடு பகுதியைச் சேர்ந்த ஆறு இளைஞர்களை மறுநாளே கைது செய்தனர். தவறான உறவால் நிகழ்ந்த கொலை இது.
arunagiri
ஸ்பெக்ட்ரம் ஊழலை வெளிக்கொணர்ந்த நீரா ராடியாவின் அலைபேசி உரையாடல்களை முழுமையாக ஆராய்ந்தபோது மேலும் 17 கிரிமினல் வழக்குகளை பெரிய அதிகாரிகள்/தொழில் அதிபர்கள் மீது பதிவு செய்வதற்கான ஆதாரங்கள் கிடைத்து உள்ளதாம். எனவே இதுகுறித்து சி பி ஐ விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் இன்று (20.10.2013) ஆணை பிறப்பித்து உள்ளதாம்.இந்த அலைபேசி உரையாடல்களில் மாட்டிக்கொண்டு திகார் சிறை சென்று சாதனை படைத்த கனிமொழி/ராசா ஆகியோர் இப்போது அலைபேசியில் நலம் நலம் அறிய ஆவல் என்று மட்டும்தான் பேசுவார்களோ?
arunagiri
சேலம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கொள்ளைக்காரி மைதிலியிடம் இரண்டு அலைபேசிகள் பிடிபட்டன. அதில் பேசியவர்கள் யார்? சிறைத்துறை வார்டன்கள்/ காவல்துறை அதிகாரிகள்/கொள்ளைக் கும்பல். அதுவும் இரவுகளில் அதிக நேரம் பேசி உள்ளனர். மைதிலியை கோவை சிறைக்கு மாற்றினர். அங்கே அவரிடம் இருந்து மறறொரு அலைபேசியைப் பிடுங்கினார். விசாரணை நடைபெற்றது. திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சிறை அதிகாரிகள் இரு பிரிவாகச் செயல்பட்டு வந்து உள்ளனர். கண்கணிப்பாளர் கணேசன் மைதிலியின் அலைபேசியில் இருந்துதான் மற்ற காவல் அதிகாரிகளுக்குத் தொடர்ந்து பேசி வந்து உள்ளார். ஒருவரை மற்றவர் பழிவாங்க திட்டமிட்டுச் செயலாற்றி வந்தது அந்த அலைபேசி உரையாடல்களில் உறுதியானது. அதிகாரிகள் கூண்டோடு மாற்றப்படுவார்கள் என்கிறது தினமலர் (22.10.2013) செய்தி.

பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டு அலைபேசியில் பேசிநார் ஒருவர். அவரது தலையில் இடி விழுந்தது. உடன் நின்ற வேறு இருவரும் இறந்தனர்.
arunagiri
தமிழ்முரசு 22.10.2013 பக்கம் 3 செய்தி:: கேளம்பாக்கம் தையூரில் ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியை ஹெப்சிபாய் கொல்லப்பட்டார். அவரிடம் இருந்து எதுத்துச் சென்ற அலைபேசியைப பயன்படுத்திக் கொண்டு இருந்த கொலையாளி முருகன் நான்கே நாள்களில் கைது செய்யப்பட்டார். வீட்டு வேலைக்காரி பிரமிளா இந்தக் கொலைக்கு உடந்தை.
arunagiri
சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த வழக்கில்/ அலைபேசியைத் தொலைத்து விட்டதாக சொன்ன யுவராஜ்தான் குற்றவாளி என்று கைது செய்யப்பட்டு உள்ளார். அலைபெசியைத் தொலைத்ததாக அவர் சொன்ன நாளுக்குப் பிறகும் அவர் தன தந்தை நண்பர்களுடன் அதே அலைபேசியில் பேசி இருந்ததை அலைபேசி நிறுவனத்திடம் இருந்து பெற்ற உரையாடல்களில் உறுதி செய்த காவல்துறையினர் யுவராசைக் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். குடிபோதையில் மிரட்டல் விடுத்ததாக யுவராஜ் ஒப்புக் கொண்டு உள்ளார்.
arunagiri
காஞ்சிபுரம் மாவட்டம் வடநெமிலியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். வயது 27. லாரி ஓட்டுனர். நாள்தோறும் டாஸ்மாக் கடைக்குள் நுழைவார். தண்ணியைப் போடுவார். அலைபேசியை எடுப்பார். சென்னை காவல் நிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்பு கொள்ளுவர். மகளிர் காவலர்களிடம் ஆபாசமாகப் பேசுவார். அதில் அவருக்கு ஒரு குஷி. ஆறு மாதங்கள் 1041 முறை பேசியதாக தினத்தந்தி நாளிதழும்/ 700 முறை பேசியதாக தி ஹிந்து தமிழ் நாளிதழும் கூறுகின்றன. (26.10.2013) ஒரு மகளிர் காவலர் எழும்பூருக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். வந்தார் பன்னீர்செல்வம். வகையாக வாங்கிக் கொண்டார். இப்போது புழல் சிறையில் உள்ளார்.

சென்னை புறநகர் மிந்தொடர்வண்டிகளில் பயணிகளிடம் தொடர்ச்சியாக அலைபேசிகளைத் திருடி வந்த எண்ணூர் சுனாமி குடியிருப்பு குணசேகரன் பிடிபட்டார். புழல் சிறையில் அடைப்பு. (தினத்தந்தி/பக்கம் `14/28.10.2013
arunagiri
22.11.2013 அனைத்து ஏடுகளிலும் செய்தி::

மதுரவாயல் ஆலப்பாக்கத்தில் அதிகாலை மூன்று மணிக்கு காவல்துறையினர் வாகன சோதனை. இரண்டு பைக்குகளில் நான்கு பேர் வந்தனர். எல்லோரும் போதை. ஒருவர் சட்டையில் இரத்தம். காவலர்கள் உரிய முறையில் விசாரித்தனர். அப்போதுதான் அருகில் ஒரு வீட்டில் ஒருவரை கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டு வருவது தெரிந்தது. அருகில் உள்ள அஷ்டலக்ஷ்மி நகருக்கு காவலர்கள் அங்கே சென்றனர். அழைப்பு மணியை அழுத்தினர்.

வித்யா என்பவர் கதவைத் திறந்தார். நேரம் காலை நான்கு மணி. காவலர்களைக் கண்டதும் ஒப்பாரி வைத்தார். என் கணவரைக் கொன்று நகையை எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள் என்றார். ஒரு காவலர் கொலையாளிகளிடம் பறித்த அலைபேசியில் வித்யாவின் எண்ணைத் தொடர்பு கொண்டார். பதற்றத்துடன் வித்யா அலைபேசியை எடுத்துப் பேசினார். கையும் அலைபேசியுமாக கைதானார். கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்த வித்யா புழல் சிறைக்குப் போனார்.

இப்போதெல்லாம் கொலைகாரர்கள் ஒரு மணி நேரத்தில் பிடிபடுகிறார்கள். வாழ்க அலைபேசி.
arunagiri
22.11.2013 படுக்கை அறையில் தம்முடன் இருந்த காட்சிகளை அலைபேசியில் பதிவு செய்து வைத்துக் கொண்டு மிரட்டுவதாக, தயாரிப்பாளர் பைசல் மீது நடிகை ராதா (நான்கு படங்களில் நடித்து உள்ளார்) காவல்துறை ஆணையரிடம் புகார் மனு.
arunagiri
இன்றைய தினத்தந்தி செய்தி::
2010 கோவை சிதம்பரம் பூங்காவில் காதலனை எதிபார்த்துக் காத்து இருந்தார் ஒரு கல்லூரி மாணவி. வரவில்லை. பூங்காவில் எதையோ எதிர்பார்த்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தார் குனியமுத்தூர் செல்வம். அவரிடம் அலைபேசியை வாங்கி காதலனை அழைத்தார் மாணவி. இப்போது வர முடியாது என்றான். வருத்தப்பட்டார் மாணவி. ஆறுதல் சொன்ன சினமாவுக்கு அழைத்தார். காதலனை நமபி அன்று மட்டம் போட்டு வந்த மாணவி நேரத்தைப் போக்க வேண்டுமே? அழைப்பை ஏற்றார். சினிமாவுக்குப் போனார். படம் முடிந்தது. என் வீட்டுக்கு வந்து போங்கள் என்றார். அங்கேயும் போனார். வீட்டுக்குள் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்தார். சீரழிந்த மாணவி காவல் நிலையம் போனார். வழக்கு நடந்தது. நேற்று வெளியான தீர்ப்பில் செல்வத்துக்கு 10 ஆண்டுகள் தண்டனை. கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
arunagiri
எங்கள் குடியிருப்பு வளாகத்தில் கண்காணிப்பு கேராக்களில் பதிவான காட்சியை அவசரக் கூட்டம் கூட்டி அனைவருக்கும் போட்டுக் காண்பித்தனர்.
வளாகத்திற்கு உள்ளே நுழைகின்ற காரை ஒட்டியே இரண்டு இளைஞர்கள் ஈருருளை வண்டியில் உள்ளே நுழைகிறார்கள். மிந்தூக்கியில் ஏறுகிறார்கள். பத்து நிமிடங்களில் படிகளில் வேகமாக ஓடி வருகிறார்கள். அப்போது ஒருவர் காதில் அலைபேசியை வைத்துப் பேசிக்கொண்டே ஓடி வருகிறார். அப்போது மணி மாலை 6.48
காவலர்கள் ஒன்பது மணிக்கு வந்தனர். பதிவான காட்சிகளைப் பார்த்தனர். இரவு 1.30 மணிக்கு முகப்பேரில் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த ஒரு குற்றவாளியைப் பிடித்து விட்டனர். எப்படி?

6.48 மணிக்கு எங்கள் பகுதியில் உள்ள அலைபேசி கோபுரத்தின் வழியாக பேசிய எண்களின் முகவரியை உடனே வாங்கி விட்டனர். மற்றொரு குற்றவாளி இரண்டு நாள்களாக அலைபேசியை அணைத்து விட்டார். மூன்றம் நாள் காலையில் புதுக்கோட்டை மாவட்டம் கொளத்தூரில் அலைபேசியை இயக்கினார். அடுத்த அரை மணி நேரத்தில் அவரையும் பிடித்து விட்டார்கள்.
நடந்த குற்றம் என்ன? ஒரு பெண்மணியிடம் வேலை பார்த்த ஓட்டுநரை மூன்று மதங்களுக்கு முன்பு நீக்கி விட்டனர். அவரது மகன் வெளிநாட்டில் இருக்கின்றார். மகள் வேறு ஊரில். வசதியானவர். அவரது நடவடிக்கைகளை நன்கு அறிந்த அந்த ஓட்டுனர் வேறு ஒரு நண்பரைச் சேர்துக்க் கொண்டு வீட்டுக்கு வந்து அடையாளம் காட்டி விட்டு நண்பரை மட்டும் உள்ளே அனுப்பி தாக்குதல் நடத்தி இருக்கின்றார். பறி போனது என்ன என்பதை அவர்கள் எங்களுக்குத் தெரிவிக்கவில்லை. காட்சிகளை மட்டும் காண்பித்து விளக்கம் அளித்தார்கள்.
இப்போது பாதுகாவலர்களை மாற்றி விட்டனர்.
arunagiri
காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் கருவறையில் நடத்திய காம லீலைகளை தமது அலைபேசியில் படம் பிடித்து வைத்துக் கொண்டு தனிமையில் ரசித்து வந்தார். அலைபேசி பழுதானது. கடையில் கொடுத்தார். சரிபார்த்த இளைஞன் உள்ளே இருந்த கட்சிகளைப் பார்த்து ரசித்தான். தான் பெற்ற இன்பத்தை இணையத்தின் வழியாக உலகத்திற்குப் பகிர்ந்து கொண்டார். அர்ச்சகர் தேவநாதன் மாட்டிக் கொண்டார்.
arunagiri
புதுச்சேரியில் பள்ளி மாணவன் நீரஜ் ஜெயின் கடத்தல்-மீட்பு. 5 முறை மிரட்டல் விடுத்த அலைபேசியின் உரிமையாளரைப் பிடித்தனர். அவர் ஒரு காவலாளி. சில நாட்களுக்கு முன் யாரோ பறித்துச் சென்றதாகக் கூறினார். விசாரணை தொடர்கிறது. (8.12.2013)
arunagiri
எச்சரிக்கை. நண்பர் ஒருவர் குடும்பத்தோடு காரில் திருப்பதி போனார். வாகன சோதனை சாவடியில் இந்தக் காரை மலைக்கு மேலே அனுப்ப முடியாது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருப்பதி மலையில் நோ பார்கிங் பகுதியில் இந்தக் காரை நிறுத்தி இருக்கின்றீர்கள். அதற்கு அபராதமாக 1500 கட்டினால்தான் போக முடியும் என்றனர்.
தான் வரவே இல்லை என்று சாதித்த நண்பர் யோசித்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மற்றொரு நண்பர் திருப்பதி செல்ல கார் கொடுத்தது நினைவுக்கு வந்தது. வேறு வழி இல்லை. அபராதம் கட்டித்தான் மேலே சென்றார்.
arunagiri
மதுரையில் பிணையில் வந்த கொலையாளிகள் மீது தாக்குதல். முத்து விஜயன் படுகொலை. பிரவீன் என்பவர் தேடப்பட்டார். அவரது நண்பர்களை வைத்துக்கொண்டு அலைபேசியில் தொடர்பு கொண்டனர். ஏன்டா இப்படிச் செஞ்சே என்று கேட்டார் நண்பர். இதையெல்லாம் சொல்லிக்கிட்டே செய்வாய்ங்க என்றார் பிரவீன். அவர் தூத்துக்குடியில் இருப்பதாக அலைபேசி காட்டியது. காவல்துறை நெருங்கிக் கொண்டு இருக்கின்றது. (7.12.2013)

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.