பதினெட்டாம் நூற்றாண்டில் காது கோளாத, வாய் பேச இயலாத மக்களுக்காக குறியீட்டு மொழி (Sign-language) உருவாக்கப்பட்டது. அப்பே சார்லஸ் மைக்கேல் எபே (Abbe Charles Michel Epea) (1712-1789) என்பவர் பல நூற்றாண்டுகளாக இந்த மக்களிடம் வளர்ந்து வந்த குறியீட்டு மொழியைச் (Sign-language) செப்பம் செய்து நெறிப்படுத்திக் கற்கவும் தொடர்பு கொள்ளவும் பயன்படுமாறு வரையறை செய்து செம்முறை மொழியாக்கினார். அப்பே சிக்கார்டு (Abbe Sicard) (1742-1827)) என்பவரால் அந்தச் செம்மைப்படுத்தும் பணி மேலும் சீராக்கி வளர்க்கப்பட்டது. எழுத்துக்களின் அடையாளமாகவும், முழுச் சொற்கள் அல்லது தொடர்களின் குறியீடாகவும் கைகள் சார்ந்த குறியீட்டு விதிகள் அடைவு (Code of  Manual gestures) உருவாக்கப் பெற்றது.

signlanguage_370தன் செவித்திறன் குன்றியோருக்கானப் பள்ளியில் சைகைகள் வழி கற்பிப்பதிலேயே அப்பே எபே ஊன்றிய கவனம் செலுத்தினார். ஆனால் மற்ற ஆசிரியர்கள், செவித்திறன் குன்றியோர், உதட்டு அசைவு வழிதான் கற்பிக்கப்பட வேண்டும் எனவும், முடியுமானால் ஓசை மூலம் கருத்துப் பரிமாற்றம் நிகழ்த்த வேண்டும் எனவும் நம்பிக்கையுடன் செயல்பட்டனர். இந்த உதட்டு அசைவு நெறியைப் பின்பற்றிய சிறந்த ஆசிரியர்களுள் ஒருவர் ஜெர்மன் மோரிட்ஸ் ஹில் (1805-1974) (German Noritz Hill) ஆவார். இந்நாளில் பல கற்பிப்போர் இந்த இரண்டு முறைகளையும் கலந்து பயன்படுத்துகின்றனர். ஹலன் கெல்லர் (1880-1968) (Helen Keller) என்ற பார்வையற்ற, செவித்திறன் குன்றிய மாணவர்க்குக் கற்பிப்பதில் தன் வாழ்வை ஈடுபடுத்திக் கொண்ட ஆசிரியர் அன்னெ கல்லிவன் (Anne Sullivan)) என்பார், கற்பிக்கக் கையாண்ட நெறி இலட்சக்கணக்கான மக்களுக்கு உண்மையை உணர்த்தியது. இந்தக் கற்பிப்பு நெறி, செவித்திறன் குன்றியோர் பேசும் ஆற்றலை வளர்க்க இயலாமைக்குக் காரணம், அவர்கள் பிற மக்கள் பேசுவதைக் கேட்க முடியாமல் இருப்பதே என்ற உண்மையை மக்களுக்கு உணர வைத்தது.

காது கேளாமையைத் தொடக்கத்திலேயே கண்டறிதல், ஆசிரியர்களுக்குப் பயிற்சி தருதல், நிபுணர்களைப் பயிற்றுவித்தல் ஆகிய செயல்முறைகள் இந்த இருபதாம் நூற்றாண்டில் பிரமாண்டமான முறையில் முன்னேற்றம் கண்டுள்ளன.

(நன்றி: உடலும் மருந்தும் நூல், என்.சி.பி.எச். வெளியீடு)

Pin It