தற்சமயம் வேலை செய்யுமிடத்தில் சூழல் திருப்தியாக இல்லை என்ற நிலை. வேறு இடத்திற்கு மாறியாக வேண்டும். தன் படிப்பு, தகுதிகள், திறமை, அனுபவம் பற்றியெல்லாம் முறையாகத் தயார் செய்து மின் அஞ்சல் அனுப்பியாயிற்று. நண்பர்கள், தெரிந்தவர்கள் வழியாக மற்ற நிறுவனங்களில் நேர்காணல்களையும் முடித்து, நல்ல நிறுவனத்தில் அதிக சம்பளத்தில் தேர்வாகிவிட்டீர்கள். விலகல் கடிதமும் கொடுத்தாயிற்று. கடைசி சில நாட்களே உள்ளன.

அதிக வேலைப் பழு. மனதுக்குப் பிடிக்காத மேலதிகாரி. தொல்லை தரும் உடன் பணியாற்றியவர்கள். ஒரு வழியாக வேலையின் கடைசி நாளும் வந்தது. உங்கள் பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபடும் நாள். மனம் திக் திக் என்று அடித்துக் கொள்கிறது. வருத்தமாகவும் இருக்கிறது. வேறு சிலருக்கு மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. என்ன செய்வீர்கள்? என்ன செய்யக் கூடாது?

1. உங்கள் மேலதிகாரியுடன் கருத்து வேறுபாடு கொண்டு மோதிக் கொள்ளாதீர்கள். நீங்கள் வேலை செய்த நாட்களில் அதிக நேரமும், அதிக வேலைப் பழுவும், முடிப்பதற்கு அதிக குறியீடும் கொடுத்திருக்கலாம். அதுவே உங்கள் விலகலுக்கு காரணமாகவும் இருக்கலாம். இதையெல்லாம் கடைசி நேரத்தில் மேலதிகாரியிடம் சொல்லிவிட வேண்டும் என்ற விரக்தியும் இருக்கலாம். ஆனாலும் எதுவும் குறைகள் சொல்லாமலிருப்பது நல்லது. ஒருவேளை அவரிடம் நன்னடத்தை மற்றும் அனுபவ சான்றிதழ் பெற வேண்டியிருக்கலாம். ஒருவேளை உங்கள் அடுத்த நிறுவன அதிகாரிக்கு அவர் நண்பராய் இருக்கும் பட்சத்தில் அவர் உதவி உங்களுக்கு தேவைப்படலாம். எனவே மரியாதை நிமித்தமாக நன்றி சொல்லி மதிப்புடன் வெளியேறுவது நன்மை பயக்கும்.

2. நீங்கள் தயாரித்த கோப்புகளை அழித்துவிடாதீர்கள். உங்கள் நிறுவனத்தில் உள்ள வசதிகளைப் பயன்படுத்தி உண்மையாகவே சிரமப்பட்டு  உழைத்திருக்கிறீர்கள். நிறைய கோப்புகளை அலுவலகத்திலும், கணினியிலும் சேமித்திருக்கிறீர்கள். கோப்புகள் நிறுவனத்துக்கு சொந்தமானவை. கோப்புகளை சம்பந்தப்பட்டவர்கள் பார்த்து தெரிந்து வைத்திருக்கலாம். என்னதான் மேலதிகாரியையும், உடன் பணியாற்றியவர்களையும் பிடிக்கவில்லையென்றாலும், எந்தக் காரணம் கொண்டும் நீங்கள் தயாரித்த கோப்புகளை அழித்து விடாதீர்கள். இது சட்டத்துக்குப் புறம்பானதும், மனசாட்சிக்கு விரோதமானதுமாகும்.

3. வேலை செய்வதில் மெத்தனமாக இருக்காதீர்கள். நீங்கள் வேலையை விட ஏற்கெனவே முடிவெடுத்து, விலகல் கடிதத்தை 2  - 3 மாதங்களுக்கு முன்பே கொடுத்திருப்பீர்கள். இருந்தாலும் அந்தக் காலங்களில் எந்தக் காரணம் கொண்டும் வேலையில் மெத்தனமாகவும், அக்கறையின்றியும் இருந்து விடாதீர்கள். உங்கள் உழைப்பை அதிகப்படுத்தி, கவனத்துடனும் ஆர்வத்துடனும் உங்களுக்குக் கொடுத்த வேலையை முழுவதும் திருப்தியாக முடித்துக் கொடுங்கள். உங்கள் மேலதிகாரியும், உடன் பணிபுரிபவர்களும், 'இவரை, இவ்வளவு நன்றாக வேலை செய்பவரை இழக்கிறோமே என்றும், நீங்கள் செல்வது எங்களுக்கு மகிழ்ச்சியில்லை' என்றும் சொல்லும்படி இருக்கவேண்டும். 

4. அலுவலகப் பொருட்கள் எதையும் எடுத்துச் செல்லாதீர்கள். நீங்கள் பணி செய்த அலுவகத்திலிருந்து எந்தப் பொருளையும் எடுத்துச் செல்லாதீர்கள். அது உங்கள் மேல் உள்ள நல்ல எண்ணத்தைக் கெடுத்து விடும்.

5. விலகும் நாளில் மனிதவள மேலாளருடனான பேட்டியில் குறைகளைச் சொல்லாதீர்கள். பல நிறுவனங்களில் நீங்கள் விலகும் முடிவை எடுக்கும் பொழுதும், வேறு வேலை கிடைத்து விலகல் கடிதம் கொடுக்கும் பொழுதும் மேலதிகாரியோ அல்லது நிறுவனத்திலுள்ள மனிதவள மேலாளரோ நிச்சயம் உங்களைப் பேட்டி யெடுப்பார்கள். உங்கள் குறைகள் என்ன? விலக வேண்டிய காரணம் என்ன? எங்களால் முடிந்தால் மேலிடத்தில் சொல்லி உங்கள் குறைகளை நிவர்த்தி செய்கிறோம். உங்களை, உங்கள் சேவையை நம் நிறுவனம் இழக்கத் தயாரில்லை என தெரிவிப்பார்கள். பிணக்குகளைக் காரணமாகச் சொல்லாதீர்கள். சுமுகமாகவே பேசுங்கள். நல்லபடியாக சமாதானம் சொல்லி, மகிழ்வுடன் விடை பெறுங்கள்.

உங்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் கடைசி நாள் மன நிறைவுடன், நினைவில் கொள்ளத் தக்கதாக இருக்கட்டும். வாழ்க வளமுடன்.

ஆதாரம்: Rediff Get Ahead, அக்டோபர், 6, 2009

-வ.க.கன்னியப்பன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It