‘‘எல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர்; ஆனால், எல்லா பயங்கரவாதிகளும் முஸ்லிம்கள்தான்'' - மும்பை தொடர் குண்டு வெடிப்புகளையொட்டி, வன்மத்தைத் தூண்டுகின்ற ‘எஸ்.எம்.எஸ்.' தகவல்கள், திட்டமிட்டுப் பரப்பப்பட்டன. பல ஆண்டுகளாக சிறுபான்மையினருக்கு, குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக செய்தி ஊடகங்கள் செய்துவரும் நச்சுப் பிரச்சாரங்கள்தான், குண்டு வெடிப்பு என்றாலே அது முஸ்லிம்கள் செய்ததாகத்தான் இருக்கும் என்ற தோற்றத்தை இந்திய மனங்களிலே ஆழமாக விதைத்திருக்கின்றன. இத்தகைய மனநிலையே ஆட்சி அதிகார போலிஸ் நிர்வாகத்திலும் எதிரொலிப்பதால், எவ்வித விசாரணையும் இன்றி முஸ்லிம்களை தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்ற பெயரில் சிறை பிடிப்பதும், சுட்டுக் கொல்வதும் வாடிக்கையாகி விட்டது.

மேற்கத்திய ஊடகங்களும், முஸ்லிம்களுக்கு எதிரான சிந்தனையை உருவாக்கி வருவதால்தான், அமெரிக்காவால் ஈராக்கை ஆக்கிரமித்து, அம்மக்களைக் கொன்று, அவர்களுடைய எண்ணெய் வளங்களைத் தடங்கலின்றி சுரண்ட முடிகிறது. 2003 இல் அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்ததிலிருந்து இதுவரை, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. அமெரிக்காவின் படுகொலைகளைக் கண்டித்து, ஈராக்கில் நாள்தோறும் தற்கொலைப்படைகளாக மாறி அம்மக்கள் உக்கிரமாகப் போராடினாலும் மனித உரிமைகள் பற்றி உரத்துப் பேசப்படும் இருபத்தியோராம் நூற்றாண்டில், உலகச் சமூகமே வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது. இந்த தைரியத்தில்தான், இஸ்ரேலும் லெபனான் மீதும், பாலஸ்தீனம் மீதும் அந்நாட்டு குடியிருப்புப் பகுதிகள் மற்றும் மருத்துவமனைகள் மீது விலங்காண்டித்தனமான தாக்குதல்களைத் தொடுத்திருக்கிறது. படுகொலை செய்வதற்கு மறுபெயர் போர். இப்போரில் எந்தப் பெருமையும் இல்லை. இருப்பினும், பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில், ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இந்தியாவிலும், காஷ்மீர், குஜராத், மும்பை போன்ற மாநிலங்களில் தீவிரவாதத்தை ஒடுக்குகிறோம் என்ற பெயரிலும், பாகிஸ்தான் ஊடுறுவலைத் தடுக்கிறோம் என்ற பெயரிலும் கடும் அடக்குமுறைகள் முஸ்லிம் சமூகத்தின் மீது ஏவப்பட்டுள்ளன. ஆனால், ‘முஸ்லிம் தீவிரவாதத்திற்கு' மூல காரணமாக இருக்கும் இந்து பயங்கரவாதம், அரசு துணையுடன் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. சூன் 1, 2006 அன்று நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தின் மீது நடைபெறவிருந்த தீவிரவாதத் தாக்குதலைத் தடுப்பதற்காக ‘என்கவுன்டர்' நடத்தப்பட்டது. இது குறித்து கண்டறிய, மக்கள் சிவில் உரிமைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை அமைப்புகளும், வழக்கறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் கொண்ட ஓர் உண்மை அறியும் குழு சென்றது. அவர்கள் கண்டறிந்துள்ள செய்தி, அதிர்ச்சியூட்டக் கூடியதாக இருக்கிறது. ஆனால், காவல் துறையும் இந்து மதவாதிகளும் இணைந்து நிறைவேற்றும் மதவாத ‘என்கவுன்டர் படுகொலை'கள் குறித்து ஊடகங்கள் வாய் திறப்பதில்லை.

ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் தாக்கப்படுவதைத் தடுப்பதற்காக ‘இஸ்லாமிய தீவிரவாதிகள்' சுட்டுக் கொல்லப்பட்டதாக போலிஸ் அறிவித்துள்ளது. ஆனால், அங்குள்ள மக்களிடம் விசாரித்தபோது, அதே இடத்தில் சில நாட்களுக்கு முன்பு ‘என்கவுன்டர்' ஒத்திகை நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். உண்மையிலேயே ‘என்கவுன்டர்' நடைபெற்றபோது, அதுவும் ஒரு ஒத்திகையே என்று மக்கள் நினைத்ததாகக் கூறியுள்ளனர். ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் தாக்கப்படக் கூடும் என்று செய்தி கிடைத்திருக்கிறது எனில், ஏன் முன்பே அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை? சில நாட்களுக்கு முன்பு ஒத்திகை நடத்தப்பட்டது ஏன்? தீவிரவாதிகள் 12 கையெறி குண்டுகளையும், 360 துப்பாக்கி ரவைகளையும், 5.6 கிலோ சக்தி வாய்ந்த ‘ஆர்.டி.எக்ஸ்.' வெடிபொருளையும் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. ‘பயங்கரவாதிகள்' 20 நிமிடங்கள் சண்டையிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், மேற்கூறிய எந்த ஆயுதங்களையும் அவர்கள் பயன்படுத்தவில்லையாம்! அங்கு நிறுத்தப்பட்டிருந்த மாருதி காரின் மறைவில் இருந்துதான் போலிஸ் சுட்டிருக்க வேண்டும். ஆனால், 140 ரவுண்டு சுட்ட பிறகும், அந்தக் காரின் மீது ஒரு சிறிய சேதாரம்கூட காணப்படவில்லை. ‘தீவிரவாதி'களின் டைரிக் குறிப்பில் இருந்த சங்கேத சொற்களை பத்து மணி நேரக் கால இடைவெளியில் கண்டுபிடித்து, அவர்களை முஸ்லிம் தீவிரவாதிகள் என்று இவர்களாகவே அடையாளப்படுத்தி, இஸ்லாமிய சடங்குகளுடன் புதைத்தும் விட்டனர்.

இந்து மதத்தால் நேற்றுவரை ஒடுக்கப்பட்ட மக்கள்தான், இன்றைய முஸ்லிம்கள் மற்றும் பிற மதச் சிறுபான்மையினர். அவர்கள் ‘இந்து'க்களாக இருந்தபோது, அவர்களுக்கு உரிமைகளை மறுப்பதும், அதன் காரணமாக பிற மதங்களைத் தழுவினால், அவர்களைத் தீவிரவாதிகளாக சித்தரிப்பதும் என்ன நியாயம்? முஸ்லிம்களை அனைத்து உரிமைகளும் கொண்ட குடிமக்களாக ஏற்று, ஜனநாயகத்தில் அவர்களுக்குரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும்போதுதான் தீவிரவாதங்களை வேரோடு சாய்க்க முடியும். நோய் நாடி நோய் முதல் நாட வேண்டும்.