‘மேதாவி’ என்ற சொல்லை பலரும் அறிந்துள்ளோம். இது பெயர்ச்சொல். ஆனால் தமிழ்ச்சொல் அன்று.
சிலரை நாம், அவர் பெரிய மேதாவி எனக் கூறுவோம். இச்சொல்லைச் சிலர் உடன்பாட்டு நிலையிலும் சொல்வர். வேறு சிலர் எதிர்றையாகவும் சொல்வர்.
இச்சொல், தமிழன்று என்றாலும்'கழகத் தமிழகராதியில்' இடம் பெற்று, "அறிவு, உணர்வு, கிளி, பண்டிதன், அறிவுள்ளவன்" என்ற பொருள்களை தருகிறது.
முன்னர் வடநாட்டில் ஏறத்தாழ ‘மேதாவி’ என்னும் சொல்லுக்கு இயைபான,‘மேதாதிதி’ என்ற பெயரையுடைய சமற்கிருத அறிஞர் ஒருவர் இருந்துள்ளார்.
அவருடன் ‘குல்லுக பட்டர்’ என்ற சமற்கிருத அறிஞரும் இருந்துள்ளார். இருவரும் சமகாலத்தவராக தெரியவருகிறது.
‘குல்லுக பட்டர்’ ஆரிய மரபில் வந்த சிறந்த சமற்கிருத அறிஞர் என்பதால், ‘மூதறிஞர் இராஜாஜியை’ இவரின் அறிவுத் திறமைக்கு ஒப்பிட்டு ‘தமிழகத்தின் குல்லுக பட்டர்’ எனக் குறிப்பிடுவார்;
‘பேரறிஞர் அண்ணா’. ‘மேதாதிதி, குல்லுக பட்டர்’ இருவரும் கல்வி கேள்விகளில் வல்லவர்கள். இவர்கள் இருவரும் வேதத்தை நன்கு ஆய்ந்துள்ளனர்.
‘மேதாதிதி’ என்பவர் "கல்வி என்பது ஆத்மாவை அறிவது" என்கிறார்.
இந்த பின்புலத்தில் ஆய்ந்தால், ‘மேதாதிதி’ என்ற வட சொல், தமிழில் ஒருவரின் மேதமையைக் குறிக்க, ‘மேதாவி’ என்பது திரிபாக வந்துள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இச்சொல்லை பேராசிரியர் க. நெடுஞ்செழியன் அவர்களின் சிறந்த படைப்பாம் 'ஆசீவகமும் ஐயனார் வரலாறும்' நூலில் கண்டெடுத்தேன்.
அந்நூலை தோண்டத் தோண்ட, அறிவை விரிவுச் செய்யும் புதையல்கள் நிறைய கிடைத்துக்கொண்டே உள்ளன.
இதுபோன்ற நூல்களைப் படிப்பதால் வாழ்நாள் நீடிக்கலாம். ஆனால், ‘கொரோனா’ பொறாமை கொள்ளும்; மனித உருவிலும்.
- ப.தியாகராசன்