பெரும்பாலும் சிற்றூர் புறங்களில் நம்முன்னர்வர்கள் பயன்படுத்திய சொல் ‘நட்டாமுட்டி’. இச்சொல் பெருமளவில் இன்று புழக்கத்தில் இல்லை.

அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் மட்டுமே பயன்படுத்துகின்றனர்.

‘நட்டாமுட்டி’ எனும் இச்சொல்லிற்கு 'கழகத் தமிழ் அகராதி'

1.‘ஒரு நூல்’
2. கீழ்மை
3.‘நடுத்தரம்’
4. வெறுவிலி
5. வஞ்சகம்

என்ற பொருட்களை (Meaning) கூறுகிறது. மேற்கண்ட பொருட்களை, இச்சொல் தன்னகத்தேக் கொண்டிருந்தாலும், ஒருவர் செயலின் தரத்தை மிகையின்றியும் குறையின்றியும் குறிப்பிட ‘நடுத்தரம்’ என்னும் பொருள்பட தற்போது சிறு வழக்கில் உள்ளச் சொல் இது.

ஒரு வேலையை ஒருவரிடம் சொல்லியிருப்போம். அவருக்கு தேவையான தெளிவு இன்மையால் அதை குழப்பி முடிவு காணாது செய்திருப்பார். அவ்வேலையை கொடுத்தவர், ஒரு ‘நட்டாமுட்டியிடம்’ கொடுத்தேன், அவன் அப்படியே குழப்பியுள்ளான், எனக் கூறுவதை நாமறிவோம்.

‘நடுத்தரம்’ என்ற பொருளுக்கான சான்றாக இவ்விளக்கம் அமைகிறது. அதற்குமேல் சிந்தித்தால் கொடுத்தவரும் ‘நட்டாமுட்டி’ எனும் இச்சொல்லுக்கு ஆளாவார். இச்சொல் ‘கழகத் தமிழ் அகராதி’ கூறும் ‘ஒருநூல்‘ எனும் முதற் பொருளுக்கான சான்று பின்ருமாறு உள்ளது.

ஆசீவகர்குரிய ‘சினேந்திர மாலை' எனும் நூல் உள்ளது. அந்நூல் 'கணி' எனும் சொல்லுக்கான கணித்தல்,மதித்தல் எனும் பொருட்களைப் பல பாடல்களில் சுட்டியுள்ளது. மேலும் அந்நூல் எட்டு அங்கங்களைக் கொண்டுள்ளது.

அவை,

1. உதய காண்டம்
2. தாது காண்டம்
3. மூல காண்டம்
4. சீவ காண்டம்
5. நட்டாமுட்டி’ காண்டம்
6. பொருள் பேறு கெடுதி காண்டம்
7. சல்லிய காண்டம்
8. கீழ்நீர் காண்டம் ஆகியனவாம்.

இவற்றில் ஐந்தாவதாக உள்ள ‘நட்டாமுட்டி காண்டம்’ ஒரு நூலுக்கு ஆகி வந்துள்ளதன் சான்றாகும். இந்த எட்டு அங்கங்களும் ‘அறப்பெயர் சாத்தானார்’ வகுத்தளித்த எட்டு மாநிமித்தங்களாகலாம் அல்லது அதனை ஒட்டி அமைந்த வழிநூலாகலாம் என பேராசிரியர்.க.நெடுஞ்செழியனார் தெரிவிக்கிறார். ஆக; இவற்றையெல்லாம் வைத்து சிந்திக்கின்றபோது, ஒவ்வொரு சொல்லும் பொருளுடையதாகும்.

- ப.தியாகராசன்