தேவையான பொருட்கள்:

சிக்கன் ட்ரம்ஸ்டிக்ஸ் - 8
எலுமிச்சை சாறு - ஒரு மேசைக்கரண்டி
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
பூண்டு - 6 பல்
பச்சை மிளகாய் - 4
தயிர் - ஒரு கப்
கடலை மாவு - 2 மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் - ஒரு மேசைக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
சாட் மசாலாத்தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

• சிக்கன் ட்ரம்ஸ்டிக்ஸ் என்றால் கோழியின் தொடைப் பகுதி இல்லாத கால் துண்டங்கள் ட்ரம்ஸ்டிக்ஸ் என்றழைக்கப்படும். ஒரு முனையில் சதைப் பகுதி உருண்டையாய் குவிந்த நிலையிலும், மறுமுனையில் மூட்டு இணைப்பு எலும்புமாக பார்பதற்கு ட்ரம்ஸ் வாசிக்க உதவும் குச்சியினைப் போன்று இருக்கும்.

• கால் துண்டங்களை நன்கு கழுவி, கொழுப்புகளையும், மேல் உள்ள தேவையற்ற தோலையும் நீக்கி விட வேண்டும்.

• சுத்தம் செய்த துண்டங்களை நன்கு துடைத்து, நீர் இல்லாமல் செய்து, அதன் மேல் கத்தி கொண்டு இரண்டு மூன்று வெட்டுகள் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அவற்றை எலுமிச்சை சாற்றில் நன்கு பிரட்டி, ஊற விட வேண்டும்.

• இஞ்சி, பூண்டு தோலுரித்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். மிளகாயின் தண்டுபாகத்தினை நீக்கி, பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

• ஒரு மெல்லிய (மஸ்லின்) துணியில் தயிரினைக் கட்டித் தொங்க விட்டு, அதில் உள்ள அதிகப்படியான நீரையெல்லாம் வடித்துவிட வேண்டும்.

• கடலை மாவினை குறைந்த தீயில் ஒரு அடிப்பிடிக்காத வாணலியில் இட்டு, தொடர்ச்சியாக கிளறிய வண்ணம் வறுத்துக் கொள்ள வேண்டும்.

• பிறகு அதனை எடுத்து ஆறவிட்டு, தயிர், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், கரம் மசாலாத் தூள், மிளகாய்த் தூள், உப்பு மற்றும் நறுக்கின பச்சை மிளகாய் ஆகியவற்றுடன் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

• இந்த கலவையை கோழியின் கால்துண்டங்கள் மீது நன்கு பூசி, சுமார் இரண்டு மணி நேரங்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து ஊற விட வேண்டும்.

• பிறகு எடுத்து, தந்தூரி அடுப்பில், மிதமான சூட்டில், அனைத்துப் பக்கங்களும் ஒரே அளவில் வேகுமாறு தணலில் சுட்டெடுக்க வேண்டும்.

• இதையே 220 டிகிரி C க்கு சூடேற்றப்பட்ட ஓவனில் சுமார் ஐந்து நிமிடங்கள் வைத்து வேகவிட்டு, பிறகு ஓவனின் வெப்பநிலையை 180 டிகிரி C க்கு குறைத்து மேலும் 15 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்க வேண்டும்.

• எல்லாப்புறமும் நன்கு வெந்துள்ளதா என்று பார்த்து, சாட் மசாலாத்தூள் தூவிப் பரிமாற வேண்டும்.

Pin It