எந்த சூழலிலும் போர்கள் நாசத்தைத்தான் ஏற்படுத்தும். ஏற்படுத்தி இருக்கிறது. இன்றும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

இரண்டாம் உலக போர் கால கட்டத்தில் வேறு ஒரு பக்கம் போட வேண்டிய வெடிகுண்டை இடம் மாற்றி ஒரு பள்ளி மீது போட்டு விடுகிறார்கள். உள்ளே நடந்து கொண்டிருக்கும் நாடக ஒத்திகையில் ஈவிரக்கமின்றி துர்மரணம் அரங்கேறுகிறது. யார் உள்ளே... யார் வெளியே.. யார் உயிரோடு.. யார் தப்பித்தார்கள் என்ற பதபதைப்போடு கடைசி அரை மணி நேரம் நம் கண்கள் அறுபடுவதை உணர்கிறோம். மிக மெல்லிய கோட்டில் மானுட விசாரணைகள்... மனதுக்குள் நடத்தும் போராட்டங்கள்... போர்க்களங்களை விட மோசமான அனுபவங்களைத் தருபவை.

The Bombardmentஅழகான டென்மார்க் காட்டுப்பகுதி வெகு நேர்த்தியாக விரிய துவங்க... ஹென்றி சைக்கிளை தள்ளிக் கொண்டு விசில் அடித்துக் கொண்டே செல்லும் முதல் காட்சியே கண்களை மலர செய்யும் அட்டகாசத்தை நமக்குள் கடத்த துவங்கும். ஆனால் அதே நேரம் ஒரு குடும்பம்.. ஒரு திருமணத்துக்கு கிளம்பிக் கொண்டிருக்கும். அதைத் தொடர்ந்து... அவர்களின் பயணத்தில் நிகழும் வன்மம்... அதைக் கண்ட சிறுவன் ஹென்றிக்கு... நித்திரை இழக்க செய்கிறது. நிதானமும் அவனை கை விடுகிறது.

போர்க்கால வன்மங்கள் கூட்டு முயற்சியில் கிளர்ந்து எழும் தனிமனித அயர்ச்சியாக அவனை ஊமையாக்கி விடும்.

நிஜமாக நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் என்று இணையம் சொல்கிறது. இதயம் இடி படும் சம்பவங்கள் படத்தில் ஏராளம். போர்ச்சூழல் யாரையும்... யாரையும் ஒருபோதும் நிம்மதியாக இருக்க விடாது. அதிர்வில் மாட்டிக் கொண்ட ஹென்றி படம் முடியும் வரையில் வானம் பார்க்க அச்சப்படுகிறான். பேச்சு போய் விடுகிறது. மூச்சில் ஒவ்வொரு நொடியும் பயமும் பயங்கரமும் தான். ஹென்றியுடன் சேர்ந்து மூன்று சிறுமிகளின் வாழ்வும் தினமும் நம் முன்னே அச்சத்தோடு விரிகையில் ஜெர்மனியின் கட்டுப்பாட்டில் இருக்கும் டென்மார்க் குடிமக்களின் மொத்த வாழ்க்கையும் நம் முன்னே கட்டுப்பாடுகளோடு ஒளிந்து ஒளிந்து விரிகிறது.

ஒரு போர் விமானம் தவறுதலாக பள்ளி கட்டடத்தின் மீது முட்டி விழுந்து விட... பின்னால் பறந்து கொண்டிருந்த மற்ற போர் விமானத்தில் இருந்தவர்கள்... அந்த கட்டடம் தான் நாஜி படையின் ஹெட் கோட்டர்ஸ் (டார்கெட்) என்று தவறுதலாக முடிவுக்கு வந்து... குண்டு போட ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால் அது பள்ளிக்கூடம் என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. போர்களின் கண்களில் எப்போது குருடு விழும் என்று எப்போதும் யாருக்கும் தெரியாது என்பதற்கு இது தான் உதாரணம்.

நல்ல தேவையோ.... கள்ள தேவையோ... என்ன தேவையோ... அது எந்த தேவையின் அடிப்படையிலோ.... டென்மார்க்கில் இருக்கும் ஜெர்மனி நாஜி படையை நாசம் செய்யும் சித்து வேலையில்.... இறங்கும் பிரிட்டிஷ் குறி தவறி நிகழும் விபத்து... ஒரு பள்ளியில் ஏற்படுவது தான் கதை. நிஜமும்.

டென்மார்க்கை ஆக்கிரமித்த ஜெர்மனி அரசின் ஹெட் கோட்ரசை போட்டு தாக்க வேண்டும் என்று வான்வெளி தாக்குதலில் ஈடுபடுகிறார்கள் பிரிட்டிஷ்... ப்ளக்கர்ஸ்.

குறி தவறுதல் இயல்பு தானே. ஆனால் தவறிய குறி எங்கு சென்று விழுகிறது என்று ஒன்று இருக்கிறதே. அது பள்ளிக்கூடம். உள்ளே இருக்கும் ஒவ்வொரு குழந்தையும்... அது எந்த நாட்டு குழந்தையாய் இருந்தால் என்ன. பலி ஆவதை போர் கால சகஜம் என்றா எடுத்துக் கொள்ள முடியும். குண்டு வீச்சில் சிதிலமடைந்த கட்டடம் என்னாகும்.. எப்படி நொறுங்கி கிடைக்கும்... உள்ளே இருந்தோர் மாட்டிக் கொண்டு... உடல் நசுங்கி... பேச்சிழந்து கை கால்கள் இழந்து... மூச்சுக்கு தவித்து.... இதில் வெளியே இருந்த பைப் உடைந்து நீர் உள்ளே சென்று என்று ஏக காலத்தில் எல்லா சாத்தான் வேலையும் அரங்கேறுகையில்... நாம் கண்கள் பிசைந்து பார்த்துக் கொண்டிருப்போம். செய்வதறியாது எல்லாமும் நிகழ்த்தி விட்ட போர் வெறுமனே விட்டேத்தி மன்னிப்பை பிறகு கோரும். ஆனாலும் உள்ளே இறங்கி காப்பாற்ற முயற்சிக்கும் ஒரு போர்வீரன்... கடவுளாக நமக்கு காட்சி அளிக்கிறான். உள்ளே குழந்தைகளோடு மாட்டிக் கொண்ட சிஸ்டர் தெரசா ஒரு டீச்சராக படும் வேதனையும் ஒரு சக மனுஷியாக கொள்ளும் பரிதவிப்பும்.. சக உயிர்களுக்கு கொடுக்கும் நம்பிக்கையும்.. நம்மை போட்டு தாக்குகிறது. உள்ளே மாட்டிக் கொண்ட ஒவ்வொரு குழந்தையும்... தெரசா தெரசா.... என்று அழுதுகொண்டே கத்துவதை வார்த்தையில் சரியாக பொருத்தி விட முடியாது. அது உயிர் நோக்கும் உள் நோக்கிய படபடப்பு.

தன்னை தானே அடித்து துன்புறுத்திக் கொள்ளும் கிட்டத்தட்ட கதையின் நாயகி அந்த சிஸ்டர் தெரசா ஒரு நன்னாக இருக்கும் ரிபெல் என்று தான் புரிந்து கொள்கிறோம். அன்பை போதிக்கும் அவளின் அருகாமை எப்போதும் காதலால் நிரம்பி இருக்கிறது. இறுதியில் அவள் எடுக்கும் முடிவு கடவுளின் பிள்ளையில் இருந்து கடவுளாகவே அவளை காலம் ஆக்குகிறது. கடவுளைத் தேடிக் கொண்டே இருக்கும் அவளை... கடவுளே கண்டடைவது என்று அந்த பாத்திரம் பாதி தேவதையாகவும் மீதி தாயாகவும் மாறி விடுகிறது.

விபத்தில் இருந்து தப்பித்துக் கொண்ட ஹென்றி.. கட்டட துகள்கள் உடலில் அப்பியபடி அங்கும் இங்கும் ஓடி அடிபட்டவர்களின் பெயர்களை சேகரிக்கையில்... கண்ணீரை உதிர்த்து கொண்டே இருக்கும் அவன் கண்களில் ஆயிரம் வார்த்தைகள்.. லட்சம் கேள்விகள். அவன் பேசாமொழி.... பேசும் மொழியாக மாறுகையில்.. மொழியின் சூட்சுமம் வெடுகுண்டுகளால் நிரம்பி இருக்கிறது. ஏன் பேசுவதை நிறுத்தி விட்டு சண்டையிட ஆரம்பித்தோம் என்று ஏதேதோ கேள்விகள் சிதிலமடைந்த பூச்சு பவுடர்களின் தூசு படலத்தில் இருந்து எழுவதாகவே நம்புகிறேன்.

தங்கள் குழந்தை எப்படியாவது வெளியே வந்து விடாதா என்று தப்பி வெளியே வரும் ஒவ்வொரு குழந்தையாக பார்த்து பரிதவிக்கும் அம்மா அப்பாக்கள் இதயங்களில் தொடர் குண்டுகள் வெடித்துக் கொண்டே இருப்பதாக நாம் உணர்கிறோம். நமக்குள்ளும் வெடி சத்தம் மௌனமாய் எழும்புகிறது. குருதி தோய்ந்த ஒற்றைக்கால்... இடிபாடுகளுக்குள் சிக்கி கிடக்கும் காட்சி... திரும்ப திரும்ப போரின் மூர்க்கத்தை மொத்தமாய் துப்புகிறது. அடிபட்டு இறந்து கிடப்பது தன் குழந்தையாக இருக்குமோ என்று பார்த்து பதட்டப்படும் 'ரிமோ'ரின் அம்மாவும் அப்பாவும் அது அவள் இல்லை என்று தெரிந்ததும் மெல்ல ஆசுவாசமடைந்து ஆனால் அதே நேரம் மீண்டும் அச்சத்துள் அடங்குவது செய்வதறியாத சிந்தனையின் வலி.

உள்ளே மாட்டிக் கொண்ட சிஸ்டர் தெரசாவோடு துக்கமும் துயரமுமாக மானுடமும் தத்தளித்துக் கொண்டிருப்பதாகத்தான் தோன்றுகிறது.

பசியின் பொருட்டு ஈவா பள்ளியை விட்டு வெளியேறிட ஏதேச்சையாக வராண்டா தாண்டி கொண்டிருக்கிறாள். அந்த தருணத்தில் தான் அந்த தவறான முதல் வெடிப்பு நிகழ்கிறது. அவளுக்கு பின் சற்று தூரத்தில் நிகழும் அந்த வெடிப்பில் அவள் மாட்டிக் கொள்வதில்லை. மயிரிழையில் தப்பித்த அவள் மீது கட்டட பூச்சு துகள்கள்... அதிர்ச்சியா அசரீரியா... ஒன்றும் தோன்றாத மனநிலையா.... இல்லை முன்பே வந்து விட்ட பசியா... அங்கு என்னவோ நடக்கப்போகிறது என்பதை தவறாக வந்து மோதிய முதல் வெடிப்பிலேயே உணர்ந்து கொள்கிறாள். உணர்ந்து கொண்டாளா. அப்படியே வீடு நோக்கி நடக்க ஆரம்பித்து விடுகிறாள். இறுதிக்கும் இறுதியாக... விபத்தின் ஆரம்பித்திலேயே வெளியேறி விட்ட அந்த சிறுமியின் பசி அவளை வீடு நோக்கி தள்ளி விட்டிருப்பதை உணர்கையில் படம் முடிந்து விடுகிறது. ஆனால் பாதிப்பு இன்னமும் முடியவில்லை. அது தீரா சோகத்தை ஒவ்வொரு வீட்டிலும் வளர்த்துக் கொண்டுதானிருக்கிறது. ஈவாவின் அதிர்வுகள்.... நடந்து கொண்டிருப்பது என்ன என்று புரியாமல் அவள் பாடும் பாடலின் அலைவரிசை என்று அவளே இந்த கதையின் அந்தியும் ஆதியுமாக இருக்கிறாள்.

பசி கொண்ட சிறுமி ஈவா பாதியில் வெளியேறியது குறித்தான தெளிவு வேண்டி... அப்படியா... அது அப்படி இருந்தால்... இருக்க வேண்டுமே.. என இறுதி காட்சியில்... அந்த தாயின் நடையும் ஓட்டமும் கேமரா பின்னோக்கியே வீடு வரை நகர... நாம் அந்த தாய்க்கு முன்பாக ஓடிக் கொண்டிருப்போம். அழுகையும் சிரிப்புமாக புள்ள உயிரோட தான் இருக்கு போல... என்பதாக மனதில் பிசைந்து உருளும் உயிரை பிடித்துக் கொண்டு ஈவாவின் தாய் வீடடைகையில்.... நமக்கும் மூச்சு வாங்குகிறது. இந்த நெடு நீண்ட ஷாட்டின் இறுதியில் வெடித்து அழும் அந்த தாயின் கண்ணீரில் அப்பப்பா நமக்கும் கூட ஆசுவாசம்.

எரியும் கட்டடத்துக்கு முன் செய்வதறியாமல் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்கும் பெற்றோர்கள்... இந்த போர்களின் சாட்சி. அவர்கள் தலையுமற்ற வாலுமற்ற நிர்பந்தங்கள். சொற்கள் அற்ற பெரும் துயரம் மரணங்களை வெகு சுலபமாக நிகழ்த்தி விடுகிறது. மாண்டவர் போக மீண்டவரின் மனதுக்குள் அனுதினமும் வெடிக்காத அணுகுண்டுகள். புழுதி படிந்த முகத்தோடு வானத்தை வெறித்துப் பார்க்கும் ஈவா இந்த கதையின் மொத்த குறியீடு. முட்டாள்தனமான போரின் அடையாளம் என்றும் சொல்லலாம்.

குழந்தைகளை பலி கொடுப்பதும் பறி கொடுப்பதும் போலொரு குற்ற உணர்ச்சிக்குள்ளாகும் செயல் உலகில் வேறுண்டோ. அதுவும் யாரோ செய்யும் என்னவோ கோமாளித்தனத்திற்கு... அது விபத்தென்றாலும்... தன் பிள்ளையை சாக கொடுக்க யாருக்கு மனசு வரும். வெறி ஏறிய அழுகையின் ஆற்றாமையை காலம் காலமாக போர்கள் நிகழ்த்திக் கொண்டே இருப்பதை எப்படி பார்ப்பது.

போரின் ஆரம்பம் வேண்டுமானால் அதிகார வர்க்கத்தின் அட்றாசிட்டியில் ஆரம்பிக்கலாம். அதன் முடிவு சாதாரண மனிதனின் வீதியில் ஒரு சொரணையற்ற நாயாகவே செத்து கிடக்கும். அது தொடர் துயரத்தின் ஆகிருதி.

Film : The Shadow in My Eye ( The Bombardment )
Director : Ole Bornedal
Year : 2021
Language : Danish

- கவிஜி

Pin It