Power Paandi

தனுஷ் இயக்கத்துல ராஜ்கிரன் ரேவதி பட்டையைக் கிளப்பியிருக்குற படம் "பவர் பாண்டி". தனுஷின் மீதான மரியாதையை இந்தப் படம் அதிகமாக்கிருச்சுன்னு கூட சொல்லலாம்.

தன்னுடைய வயதான காலத்துல அடையாளத்தையும் மரியாதையையும் இழந்து மகனோட வாழ்ந்து வரும் ராஜ்கிரன், அவருடைய மகனைப் பிரிந்து தன் மனநிறைவுக்கான ஒரு ரோட் ட்ரிப்பை ஆரம்பிக்கிறார். அந்தப் பயணம் அவரின் முதல் காதலுக்கு அவரை அழைத்துச் செல்கிறது.

படத்துல மொத்தம் ஐந்து விஷயங்கள்.

ஒன்று :- பவர் பாண்டி மற்றும் அவர் மகனின் குடும்பம். படம் ஆரம்பிச்சதுல இருந்து ஒவ்வொரு காட்சியும் தெளிவா நகருது. முதலில் பாண்டிக்கும் அவரோட குடும்பத்துக்குமான உறவு எப்படி இருக்குன்னு காட்டப்படுது. ஒரு காலத்துல சினிமாவுல பெரிய ஸ்டன்ட் மாஸ்டரா இருந்த பவர் பாண்டி இப்போ தன்னோட மகனுக்கு இன்னொரு பிள்ளையாக மாறி சுதந்திரமற்ற நிலையில இருக்காரு. ஆனா அதை ஏத்துக்குற பக்குவமும் அவர்கிட்ட இருக்கு.

இரண்டு:- பவர் பாண்டி தான் எதாவது வேலைக்கு போனா தன்னுடைய சுதந்திரத்தையும் பழைய மரியாதையையும் மீட்டெடுக்க முடியும்னு நம்புறது. அப்படி அவருக்கு படப்பிடிப்புத் தளத்துல கிடைக்குற மரியாதை அவர் யாருன்னு நமக்குப் புரிய வைக்குது. மேலும் அவருடைய இப்போதைய நிலமையைக் கண்டு நம்மை வருத்தப்படவும் வைக்குது.

மூன்று:- அடுத்தது ரசிகர்களுக்காக வலுக்கட்டாயமா வைக்கப்பட்ட இரண்டு சண்டைக்காட்சிகள். கோலிசோடாவுல நாலு சின்னப் பசங்க ரவுடிங்களை அடிச்சி வீழ்த்தும்போது எப்படி ஒரு உற்சாகம் ஏற்பட்டுச்சோ அந்த உற்சாகம் வயதான ஒருவர் போடும் சண்டையிலயும் ஏற்படுது. (சண்டை இன்னும் வேற மாதிரி இருந்துருக்கலாம்). முதல் சண்டை முடிஞ்ச பின்னாடி தந்தைக்கும் மகனுக்கும் பிரச்சினை ஏற்பட்டு ரோட் டிரிப் போறதுக்கு பாண்டி முடிவு பண்றாரு. அதுவும் கொஞ்சம் மசாலாத்தனம்தான்.

நான்கு:-அடுத்து படத்தின் மிகவும் சலிப்பூட்டுற பகுதி தனுஷ் மடோனா வர்ற ஃப்ளாஷ்பேக் பகுதிதான். தமிழ்சினிமாவுல நூறு வருசமா இதைத்தானே பாக்குறோம். ஒரு சுரணையோ ஃபீலிங்கோ எதுவும் ஏற்படல.

ஐந்து:- தனுஷ்ங்குற இயக்குனர் முழுசா வெளிப்பட்டுருக்குற இடம் ராஜ்கிரண் ரேவதி எபிசோட்லதான். மொக்கையான ஃப்ளாஷ்பேக் முடிஞ்சதுமே அடுத்ததா வர்ற ஒவ்வொரு காட்சியும் குறும்பு கலந்த காதல் கவிதையா இருந்தது. நட்போட அவங்க மாறி மாறி அன்பா பேசிக்கிறதும் செல்போன் சேட்டிங்கெல்லாம் வேற லெவல். படம் முடிஞ்சதும் ஒரு மனநிறைவு ஏற்பட்டு படம் நல்லா இருக்கு அப்படிங்குற உணர்வு ஏற்பட்டுச்சுன்னா அதுக்கு முக்கியக் காரணம் ராஜ்கிரண் ரேவதிக்குமான கெமிஸ்ட்ரிதான்.

இந்த ஐந்து விஷயங்கள்ல மூன்று மற்றும் நான்காவது விசயங்கள் படத்தை அடுத்த லெவலுக்குப் போகவிடாம தடுத்து ஒரு சாதாரண கமர்சியல் படமா மாத்திடுது. ஆனாலும் இதுபோன்ற வித்தியாசமான கதாபாத்திரங்களை லீட் ரோல்கள்ல பயன்படுத்துறது தமிழ்சினிமா பிழைக்குறதுக்கான சில வழிகள்ல ஒன்னு. பாடல்கள் ஒருதடவை கேட்டதுமே பிடிக்குற மாதிரி இருந்தது.

நம்ம ஒரு பெரிய ஹூரோ. தனக்குன்னு இருக்குற இமேஜை பயன்படுத்தி தன்னையே வச்சி ஒரு மாஸ் படத்தை இயக்க நினைக்காம ராஜ்கிரணை கதாநாயகனாக்கி ஒரு ஃபீல்குட் படத்தை குடுத்துருக்காரு தனுஷ். இது தனுஷ், சினிமா மேல வச்சிருக்க அளவுகடந்த காதலைதான் காட்டுது.

பவர் பாண்டி - கொண்டாடப்பட வேண்டிய படம்.

- சாண்டில்யன் ராஜூ

Pin It