மணிரத்னம் தற்போது பெரிய அளவில் field-ல் இல்லை. சுஜாதா மரணித்து விட்டார். பாலச்சந்தர் ஒய்வெடுக்கிறார் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் கே.வி.ஆனந்த், ஏ.ஆர்.முருகதாசு போன்றவர்கள் அமெரிக்க அடிப்பொடிகளாய், இந்துத்துவ தாங்கு சக்திகளாய் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சினிமாவை தொழில்நுட்ப அளவில் மட்டும் படித்து வரும் இளைஞர்கள் தமிழ் சமூகத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுக்கிறார்கள். மண்ணையும், மக்களையும் படித்து, கருவிகளையும் கையாள கற்றுக்கொண்ட பாரதிராசா, பாலுமகேந்திரா, மகேந்திரன், எஸ்.பி.ஜனநாதன், வசந்த பாலன் போன்ற இயக்குனர்களுக்கும், மேற்கத்திய தொழில்நுட்பத்தை கையாளுவதையே தன் படைப்புத் திறனின் ஆற்றலாக காட்டிக்கொள்ளும் ஏ.ஆர்.முருகதாசு, கே.வி.ஆனந்த் போன்றவர்களுக்கும் உள்ள வேறுபாட்டை நாம் எளிதில் உணர முடியும்.

vijay_thuppakki_600

'கோ' படத்தில் இடதுசாரி தத்துவத்தை கேவலப்படுத்தும் கே.வி.ஆனந்த் 'மாற்றான்' படத்தில் ரசியாவிற்கு எதிரான, அமெரிக்காவிற்கு ஆதரவான மனநிலையை அப்பட்டமாக காண்பித்தார். 'ஏழாம் அறிவு' படத்தில் மதமாற்றம் கூடாது என்று ஒரு வரியில் சொன்ன ஏ.ஆர்.முருகதாஸ், 'துப்பாக்கி' படத்தில் தன் இந்துத்துவ மனநிலையை வெளிப்படையாகக் காட்டியுள்ளார்.

'ஏழாம் அறிவு' படம் குறித்து நான் எழுதிய விமர்சனத்தில் ஈழத்தமிழர் பிரச்சனையை குறிப்பிட்டதற்காக, ஏ.ஆர் முருகதாசை கொஞ்சம் பாராட்டியிருந்தேன். அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அந்தக் கட்டுரையை படித்த நண்பர்கள் அப்போதே ஏ.ஆர்.முருகதாஸ் குறித்து என்னிடம் எச்சரித்தார்கள். ஏழாம் அறிவில் ஏ.ஆர்.முருகதாஸ் வலியுறுத்தியது ஈழ ஆதரவு அரசியல் அல்ல, இந்து நாடு கோரிக்கை என்பதை துப்பாக்கி நமக்கு உணர்த்துகிறது. இந்தியாவில் இராணுவத்திலும், காவல் துறையிலும் இசுலாமியர்களின் எண்ணிக்கை குறைவு என்கிற புள்ளிவிவரத்தை இசுலாமிய அமைப்புகள் பதிவு செய்து வருகின்றன. இச்சூழலில் இசுலாமியர் ஒருவர் நாட்டின் உயர் பொறுப்பில் இருந்தால் தீவிரவாதிகளின் கைக்கூலியாக மாறிவிடுவார் என்று ஆர்.எஸ்.எஸின் கொள்கை பரப்புச் செயலாளர் போல் கருத்து சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

இப்படத்தை பார்த்து விட்டு வரும் நபருக்கு தன் எதிரில் இசுலாமியப் பெயருடனோ, அல்லது தோற்றத்துடனோ யாரும் இருந்தால் அவர்களை எதிரியாக பார்க்கக்கூடிய மனநிலை தோன்றும். அந்த அளவிற்கு படத்தில் வரும் அனைத்து வில்லன்களும் இசுலாமியர்களாக இருக்கின்றனர். அதைவிட முக்கியம் அவர்கள் கொடூரமானவர்களாக இருக்கின்றனர். விஜய்யின் தங்கையின் கழுத்தை அறுக்க முயற்சிக்கும் இசுலாமியன் தன் கையில் இருக்கும் புனித நூலை வாசிக்கிறான் (அந்தப் புத்தகம் கண்டிப்பாக பகவத் கீதை அல்ல என்பதை நீங்கள் உணர முடியும்)

ar_murugadoss     இசுலாமியர்கள் 'ஹலால்' செய்து (இறைவனின் அனுமதி பெற்று) ஆடு, கோழியை அறுப்பது போல் பொதுமக்களையும் அறுத்து விடுவார்களாம். (கறிக்கடை 'பாய்' கிட்ட எச்சரிக்கையாக இருங்க என்கிறார் ஏ.ஆர்.முருகதாசு). கதாநாயகியின் சதையை வைத்து விளம்பரம், கொலை, கொள்ளை, வன்முறை மீதான காதல் என்று தன்னுடைய எல்லா வக்கிரங்களையும் திரையில் காண்பித்து வி;ட்டு, அதற்கான எதிர்வினைகள் அனைத்தையும்; சிறுபான்மையினர் மீது திருப்பிவிடும் இயக்குநரின் வஞ்சக வியாபாரப் புத்தியை என்னவென்று சொல்வது? தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் 'குண்டு' வைத்து விட்டு இசுலாமியர்கள் மீது பழியை சுமத்தினானே ஓர் ஆர்.எஸ்.எஸ்.காரன். அவனை விஞ்சிவிட்டார் ஏ.ஆர்.முருகதாஸ். ஏற்கனவே, அவருடைய தயாரிப்பில் வெளிவந்த 'எங்கேயும் எப்போதும்' திரைப்படத்தில் இடதுசாரிகளின் போராட்டத்தை இழிவு செய்யும் வகையில் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். 'ரமணா' படத்தில் அமெரிக்காவில் உள்ள செய்தி நிறுவனம் குறித்த பெருமிதத்தை வெளியிட்டிருப்பார். 'ஏழாம் அறிவில்' இடஒதுக்கீடடிற்கு எதிரான வசனம் வரும். அந்தப் படத்தில் தமிழுக்கு எதிராக பேசுபவர் பெயர் நெல்சன். ('நெல்சன்' என்கிற பெயர் கண்டிப்பாக 'இந்து' பெயர் அல்ல).

     இட ஒதுக்கீடு எதிர்ப்பு, அமெரிக்க ஆதரவு, சிறுபான்மையர் மீதான அவதூறு என ஏ.ஆர்.முருகதாஸ் பயணிக்கும் பாதையை ஒரே நேர்க்கோட்டில் வைத்துப் பார்த்தால் அது 'அகண்ட பாரத' இலட்சியத்தை நோக்கிச் செல்கிறது. 90களுக்குப் பிறகு, அமெரிக்க ஆதரவு அரசியலும், இசுலாமியர் எதிர் அரசியலும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்க ஆரம்பித்தன. அதில் தமிழ் சினிமாவிற்கு முக்கிய பங்கு உண்டு. மணிரத்னம் அதில் பிதாமகன். சங்கர் அவரின் சீடர். ஏ.ஆர்.முருகதாசு ஓர் கடைநிலை ஊழியராக அதில் பணியாற்றுகிறார். இந்நிலையில் இசுலாமிய அமைப்புகள், இப்படத்தில் நடித்ததற்காக 'விஜய்' வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகின்றனர். ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டிற்கு முன் போராட்டம் நடத்த வேண்டும். அம்பை எய்தவன் யாரென்று கண்டுபிடியுங்கள். அதை விடுத்து 'அம்பை' குற்றம் சொல்வதில் பயனில்லை. (அந்த அம்பு எதற்கும் பயனில்லை என்பது வேறு விசயம்)

அலிபாபாவும் 40 திருடர்களும், படிக்காதவன் என 90களுக்கு முந்தைய திரைப்படங்களில் இசுலாமியர்கள் பெரும்பாலும் நல்ல கதாப்பாத்திரங்களாகவே சித்தரிக்கப்பட்டார்கள். உலகமயமாக்குதலுக்குப் பிறகு வளைகுடா நாடுகளின் சந்தையைக் குறிவைத்து 'இசுலாமியர்கள்' அனைவரும் 'தீவிரவாதிகள்' என்கிற மனநிலையை மேற்குலகம் கட்டமைத்தது.

     பாபர் மசூதி இடிப்பிற்குப் பின் வலுப்பெற்ற இந்துத்துவ அமைப்புகளும் இந்திய முஸ்லிம்களை அந்நியப்படுத்தும் மனநிலையை உருவாக்க முயற்சித்து வருகின்றன. அமெரிக்கா மற்றும் ஆர்.எஸ்.எஸ். கனவின் திரை வடிவமாக ஏ.ஆர்.முருகதாஸ் உருவெடுக்கிறார். இது போன்ற பாசிச வித்துக்களை ஆரம்ப நிலையிலேயே அடையாளம் காட்ட வேண்டிய சமூகப் பொறுப்பு படைப்பாளர்களுக்கு உண்டு. அடையாளம் கண்டு அகற்ற வேண்டிய பொறுப்பு தமிழ் சினிமா பார்வையாளர்களுக்கு உண்டு. அமெரிக்கா சார்பாக அரேபியர்களின் மீதும், இந்து சனாதனிகள் சார்பாக சிறுபான்மையினரின் மீதும் குறிவைக்கிறது இந்த 'துப்பாக்கி' என்பதே உண்மை. 

- ஜீவசகாப்தன்

Pin It