ஜெர்மனி வடக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள ஒரு நாடு. சுமார் 8 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கிறார்கள். பெர்லின் இந்நாட்டின் தலைநகரமாக உள்ளது. 99 சதவீதம் கல்வி அறிவு பெற்றவர்களாக இந்நாட்டின் மக்கள் உள்ளனர்.

           Salomon Alice    கிழக்கு ஜெர்மனி, மேற்கு ஜெர்மனி எனப் பிரிந்திருந்த இந்நாடு 1990 ஆம் ஆண்டில், அக்டோபர் 3 ஆம் நாள் ஒன்றுபட்ட சுதந்திர ஜெர்மனி ஆக உருப்பெற்றது. பி.எம்.டபிள்யூ, அடைடாஸ், மெர்சிடஸ் பென்ஸ், நிவியா, அவுடி, பேயர், வோல்க்ஸ்வேகன் மற்றும் சீமன்ஸ் போன்ற மிகப் பெரும் முதலாளித்துவ நிறுவனங்களின் பிறப்பிடமாகத் திகழ்கிறது ஜெர்மனி.

               தொழிலாளர்களின் தோழன் காரல் ஹென்ரிச் மார்க்ஸ், ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை கிறிஸ்டியன் பிரெடரிக் சாமுவேல் ஹானிமேன், இயற்பியல் அறிஞர் மற்றும் பொதுவுடைமைவாதி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்ற சமுதாய முன்னேற்றத்திற்கும், நலத்திற்கும் உலக மக்கள் அனைவருக்காகவும் உழைத்த பற்பல ஆக்கப்பூர்வமான முன்னோர்களை இவ்வுலகிற்குத் தந்த ஜெர்மனியைப் பற்றி பேச ஆரம்பித்தவுடன் நம் நினைவுக்கு வருவது என்னவோ, அழிவுப் பாதையில் நடைபோட்டு, ரஷ்ய சோசலிச செம்படையிடம் வீழ்ந்த அடால்ப் ஹிட்லர்தான்.

               ஆக்கப்பூர்வமான எண்ணங்கள் நம் மனதை வருடுவதைவிட, அழிவுப்பூர்வமான அதாவது எதிர்மறை எண்ணங்கள் எளிதாக நம் மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் காலமிது.

               இத்தகைய எதிர்மறை எண்ணங்களில் இருந்து விடுபட, புத்தக வாசிப்பு நமக்குப் பயன் தரும். சமூகத்தில் மாற்றத்திற்கான விதைகளை விதைத்த ஜெர்மனியின் செம்மலராய் மலர்ந்த பெண் ஒருவரைப் பற்றி, அறிந்து கொள்வதும் கூட நம் மனதை செம்மையான பாதையில் வழி நடத்த துணைபுரியும். அத்தகைய செம்மலர்களில் ஒருவர் ‘ஆலிஸ் சாலமோன்'.

               ஜெர்மனியின் தலைநகராம் பெர்லினில் 1872-ஆம் ஆண்டில் ஏப்ரல் 19 ஆம் நாளில் பிறந்தார் ஆலிஸ் சாலமோன். ஜெர்மனியின் பெண் சமூக சீர்திருத்தவாதியாகவும், சமூகப் பணிகளில் முன்சென்று வழிகாட்டும் நபராகவும் வாழ்ந்தார் அலைஸ். அவரது நினைவாக 1989 ஆம் ஆண்டில் அவரது உருவம் பொறித்த தபால் வில்லை ஜெர்மனி அரசால் வெளியிடப்பட்டது. பெர்லினில் உள்ள பல்கலைக்கழகம், பூங்கா மற்றும் சதுக்கமும் அலைஸ் சாலமோனின் பெயரைத் தாங்கி நிற்கிறது.

               ஆல்பர்ட் மற்றும் அன்னா சாலமோன் தம்பதியருக்குப் பிறந்த எட்டு குழந்தைகளில் 3 வது குழந்தையாகவும், இரண்டாவது பெண் குழந்தையாகவும் பிறந்தார் ஆலிஸ் சாலமோன். படித்து ஆசிரியராகப் பணிபுரிய வேண்டும் என்ற பெருங்கனவுடன் இருந்த அலைஸின் பள்ளிப் படிப்பு அவரது குடும்பச் சூழலால் தடைபட்டது.

               பள்ளிப் படிப்பு தடைபட்டாலும் அவரது ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் அவரை மென்மேலும் முன்னேறச் செய்தன. 1900 ஆம் ஆண்டில் ஜெர்மனி பெண்கள் சங்க கூட்டமைப்பில் சேர்ந்தார் ஆலிஸ் சாலமோன். 1920 வரை அக்கூட்டமைப்பின் துணைத் தலைவர் பதவி வகித்தார். இக்கூட்டமைப்பு ஆதரவற்றோர், கைவிடப்பட்டோர், கணவனை இழந்த பெண்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கும் ஆதரவுக் கரம் நீட்டியது.

               இதனால் ஆதரவற்ற குழந்தைகள் சமூகப் புறக்கணிப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டனர். மேல்படிப்பு படிக்க போதிய கல்வித் தகுதி இல்லாத போதிலும், பெர்லினின் பிரெடரிக் வில்கெல்ம் பல்கலைக்கழகத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். 1902 முதல் 1906 வரை பொருளாதாரம் பயின்றார். அவரது படைப்புகளும், எழுத்தும், வெளியீடுகளும் பல்கலைக்கழக நுழைவுக்குப் போதுமானதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. (இந்நேர்வில் 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே பயின்றாலும், எளிய மக்களின் வாழ்நிலை பேசிய தம் எழுத்துக்களால், சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி நினைவிற்கு வருகிறார்).

               1908 -ல் ‘ஆண் மற்றும் பெண் இடையே ஊதிய சமத்துவமின்மைக்கான காரணங்கள்' என்ற தலைப்பில் தனது ஆராய்ச்சிக் கட்டுரைக்காக டாக்டர் பட்டம் பெற்றார் ‘ஆலிஸ் சாலமோன்'.

               அதே வருடத்தில், சமூகப் பெண்கள் பள்ளியொன்றை பெர்லினில் துவக்கினார். பின்னர் 1932 -ல் அப்பள்ளி ‘ ஆலிஸ் சாலமோன் பள்ளி' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

               தற்போது அப்பள்ளி, மேல்படிப்புக்கான ‘ சாலமோன் பெர்லினின் சமூகப் பணி மற்றும் சமூக அறிவியல் கல்லூரி' என அழைக்கப்படுகிறது.

1909 -ல் தேசிய பெண்கள் சபையின் செயலாளராகப் பணிபுரிந்தார். 1919 -ல் அலைஸ் தலைமையேற்றிருந்த ‘ஜெர்மன் பெண்கள் சமூகப் பள்ளிகள் கூட்டமைப்பின்” கீழ் 16 பெண்கள் சமூகப் பள்ளிகள் செயல்பட்டு வந்தன.

1925 -ல் ‘ஜெர்மன் பெண்கள் சமூக மற்றும் பள்ளிக் கல்வி பணிக்கான அகாடெமி ஒன்றை நிறுவினார் ஆலிஸ் சாலமோன். அகாடெமியின் சிறப்புப் பேச்சாளர்களாக இருந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் இயற்பியல் மேதை ‘ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்' ஆவார்.

1920 முதல் 1930 வரையிலான காலகட்டத்தில் இந்த அகாடெமி, ஜெர்மனியில் வாழும் உழைக்கும் வர்க்கம் சந்திக்கும் சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகள் குறித்த 13 தனிக் கட்டுரைகளை வெளியிட்டது.

அலைஸ் சாலமோனின் 60 -வது பிறந்த நாளில் பெர்லின் பல்கலைக்கழகம், அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

1933 ஆம் ஆண்டில், ஜெர்மனியில் ஆட்சிக்கு வந்த நாசிக் கட்சி யூதர்களுக்கு எதிரான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது. 1933, ஜனவரி - 30 ஆம் நாளில் ஜெர்மனியின் அதிபராக நாசிச அடால்ப் ஹிட்லர் பதவியேற்றான்.

இந்நிலையில், தனது 65 வது வயதில் ஆலிஸ் சாலமோன், அகதிகளாக இடம்பெயர்ந்த யூதர்களுக்காக நிவாரணக் குழு நடத்தியமைக்காக, நாசிச அரசால் ஜெர்மனியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் குடியேறினார் ஆலிஸ் சாலமோன். அவரது ஜெர்மன் குடியுரிமையையும், அவரது கல்வியால் பெற்ற டாக்டர் பட்டங்களையும் பறித்துக் கொண்டது நாசிச ஹிட்லரின் ஆட்சி.

இத்தனை தடைகளையும் மீறி 1945 ஆம் ஆண்டில் தேசிய பெண்கள் கூட்டமைப்பு மற்றும் தேசிய சமூகப் பள்ளிகள் சங்கத்தின் கவுரவத் தலைவராக பதவியேற்றார் ஆலிஸ் சாலமோன்.

1948 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் - 30 ஆம் நாளில் இவ்வுலக வாழ்வைத் துறந்தார் ஆலிஸ் சாலமோன். அவர் செயல்களுக்கு என்றும் இறப்பில்லை.

பல வாழ்க்கை இடர்பாடுகளிடையே வாழ்ந்து, தானும் கல்வி கற்று, தான் கற்ற கல்வியாலும், ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளாலும், அனைத்து பெண்களுக்கும் முன்னோடியாகத் திகழும் அவர் ஜெர்மனியின் செம்மலராய் மனித உள்ளங்களில் இன்றளவும் பூத்துக் குலுங்குகிறார்.

நாசிச ஆட்சியால் அவரது குடியுரிமையைத்தான் பறிக்க முடிந்ததே தவிர, அவரது முற்போக்கான சமூக முன்னேற்றத்திற்கான செயல்பாடுகளை எள்ளளவும் தடுக்க இயலவில்லை என்பதே காலம் சொல்லும் உண்மை.

இன்றளவும், நாசிசத்திற்கும், பாசிசத்திற்கும் எதிராக சமரசமற்ற சமர் புரியும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இந்த செம்மலரின் வாழ்வு ஒரு வழிகாட்டி.

- சுதேசி தோழன்

Pin It