1889 சனவரியில் ஒரு நாள். சூரியன் வெளிவரத் தொடங்குவதற்கு முன் பனிபடர்ந்த காலைப் பொழுதில் மூன்று தோட்டாக்கள் வெடிக்கும் சத்தம் கேட்டது. இடம் - வேட்டையாடும் போது தங்கும் இல்லம். அங்கேரி நாட்டில் இளவரசன் ருடால்ஃபுக்குச் சொந்தமான இல்லம். அவருடன் தங்கியிருந்த அவரின் இரண்டு நண்பர்கள் ஓடிவந்து படுக்கையறையின் கதவைத் தட்டினார்கள். திறக்கப்படவில்லை. தாழ்ப்பாளைக் கழற்றித் திறந்தார்கள். உள்ளே...

பயத்தால் கண்கள் தெறித்து விழும் நிலை. அறை முழுவதும் அலங்கோலம். எதுவுமே ஒழுங்காக இல்லை. நாற்காலிகள் கவிழ்ந்து கிடந்தன. ஷாம்பெய்ன் மதுப் போத்தல்கள், தரையில் கண்டபடி கிடந்தன.

தலையணைகள் செஞ்சிவப்பு இரத்தத்தில் உறைந்தது... சுவர்களில் இரத்தம் தெறித்தும்... ஒரே களேபரமாகக் காட்சி, பட்டத்து இளவரசர் வேட்டை பூட்சுகள் உள்பட அணிந்து முழு ஆடை அலங்காரத்துடன் படுக்கையின் குறுக்காக... தலை சிதைந்து... பக்கத்தில் ஒரு அழகுப் பெண் உடலில் துணி ஏதுமின்றி.... இளவரசர் நேசித்த பாவை... நெற்றிப் பொட்டில் பாய்ந்த துப்பாக்கி ரவைக் காயம்... பட்டுப்போன்ற அவளின் மயிர்க்கற்றைகளால் மறைந்து... இளவரசனால் காதலுடன் கோதி உணர்ச்சியூட்டி மகிழ்ந்த மயிர்க் குழல்கள்... கிரேக்க அழகுத் தேவதை போல மாசு மறுவற்ற உடல் கிடந்தது...

என்ன இந்தச் சாவுக்கு அவ்வளவு முக்கியத்துவம்? ஜெர்மனி நாட்டின் கெய்சர் அரசனின் படையுடன் ஆஸ்திரியப் படைகளும் சேர்ந்து போரிட வேண்டும் எனக் கேட்டால் ருடால்ஃப் மறுத்திருப்பான், 1914இல் முதல் உலகப்போர் மூண்டிருக்காது. அப்படிப்பட்ட அமைதிப் பிரியன் அவன். அவன் இறந்துவிட்டான்.

தன் காதலியைச் சுட்டுக் கொன்று விட்டுத் தற்கொலை செய்து கொண்டிருப்பானா? அல்லது இருவரையும் யாராவது கொலை செய்திருப்பார்களா? இதுவரை இந்த இரகசியம் தெளிவாக்கப்படவில்லை. இறப்புக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ருடால்ஃபுக்கும் பெல்ஜிய இளவரசி ஸ்டெபேனியாவுக்கும் திருமணம் நடந்தது. இருமனங்கள் ஒன்று சேர்ந்த திருமணம் அல்ல. இரண்டு நாடுகளின் பிணைப்பு. அவ்வளவே. இருவரும் சந்தித்துக் கொள்வதே கிடையாது. தனித்தே வாழ்ந்தனர். மண் ஒட்டியது. மனங்கள் ஒட்டவில்லை. ருடால்ஃப் பல நாடுகள் சுற்றியவன். பத்து மொழிகளில் பேசும் புலமை உள்ளவன். நூல்கள் பல எழுதியவன். அய்ரோப்பாவின் அல்வாத்துண்டு. சாம்ராஜ்யத்தின் மதிப்புள்ள விக்ரகம்.

ஓராண்டுக்கு முன்னால்தான் கிரேக்க இரத்தம் ஓடும் பாரோனஸ்மேரி வெட்சரா எனும் அழகுப் பெட்டகத்தைச் சந்தித்தான். அவளுக்கு வயது 19. இவனுக்கு 10 கூடுதல். கண்டதும் காதல். வியன்னா நகரத் தெருக்களில் இவர்களின் காதல் பற்றியே பேச்சு. வெட்டிப் பேச்சுக்காரர்களுக்கு வம்பளப்பதுதானே பொழுது போக்கு! மாமன்னரின் காதுகளில் மகனின் காதல் களியாட்டங்கள் விழுந்தன. முதலில் கண்டுகொள்ளவே இல்லை. அவர் மட்டும் என்ன, கற்புக்கரசனா? நாள் செல்லச் செல்ல வியன்னாவும் புடாபெஸ்ட் நகரமும் வேறு பேச்சே பேசுவதில்லை.

மன்னர் மகனைக் கண்டித்தார். மகன் கேட்கவில்லை. மேரியைக் கைவிட முடியாது என்று கூறிவிட்டான். மணிமுடிகூட வேண்டாம் எனக்கு, என் மனங்கவர்ந்த மேரியே போதும் என்றான். மனைவியை மணவிலக்கு செய்திடுவேன் என்றான். மன்னர் மவுனமாகி விட்டார். என்றாலும் வேட்டை இல்லத்தில் ருடால்ஃபும் மேரியும் கமுக்கமாகச் சந்தித்து களிபேருவகையில் ஆழ்ந்தனர். அடர்ந்த பைன் மரக்காடுகளின் இடையே அமைந்த இந்த இல்லம் யாருடைய கழுகுக் கண்களிலும் படவில்லை. எப்படியும் பேசவல்ல நாக்குகளும் அசையவில்லை. அப்படி ஒரு நாள் வேட்டை இல்லம் போய் இன்பக்கடலில் நீந்திக் கொண்டிருந்தபோதுதான் அந்தச் சம்பவம் நடந்துவிட்டது. அன்று காலை 6.30 மணிக்கு ருடால்ஃபை வேலையாள் எழுப்புகிறார். வேட்டை ஆடப்போகவில்லையா? எனக் கேட்கிறான்.

வெளியே பனிமூட்டமாக இருக்கிறது என்பதையும் சொல்லிவிடுகிறான். கடுங்குளிர் என்பதையும் சொல்கிறான். ருடால்ஃப் நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியது சாக்கு என்று வேட்டைக்குப் போகவில்லை. கன்னி வேட்டை முக்கியம் அல்லவா? முடித்துவிட்டு, வியன்னா திரும்பலாம் என நினைத்தான். கோச் வண்டியை ரெடி பண்ணும்படி வேலையாளிடம் சொன்னான். அதற்குள் ஆயுள் எடுக்கப்பட்டுவிட்டது. யார் எடுத்தது? இன்னும் தெரியவில்லை.

மன்னர் மருத்துவரை அழைத்தார். “அப்போ பிளக்சி” நோயால் தாக்கப்பட்டு ருடால்ஃப் இறந்துபோனதாக அறிக்கை தரச் சொன்னார்.

அது ஒரு விசித்திர நோய். எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல் திடீரெனத் தாக்கிப் புலன்களையும், தசைகளையும் செயலற்றுப் போகச் செய்து சாகடித்துவிடும். ஆனால் மன்னரே சொல்லியும் மருத்துவர் மறுத்துவிட்டார்.

வேறு வழியில்லை. இளவரசர் அடக்கம் செய்யப்பட்டார். அடக்கம்கூட ஆடம்பரமாகவே நடந்தது. ஆனால் அவனின் இதயம் கவர்ந்தவளின் உடல்... அழுக்குத் துணிகள் அடைத்து வைக்கப்படும் கூடைக்குள் திணிக்கப்பட்டு பட்லரின் அறையில் வீசப்பட்டுப் பல நாள்கள் அப்படியே கிடந்தது.

ஒருநாள், யாரோ எடுத்துப்போய், இரவில் புதைத்தார்க்ள. சாதாரண சவப்பெட்டியில் போட்டுப் புதைத்தார்கள். அவள் தலையில் தொப்பி அணியும் அழகே தனி. அந்தத் தொப்பி அவளது தலைக்கீழ்.... தலையணையாக... மோசமான அடக்கம்தான். பைன் மரக்காடுகளின் ரீங்காரம்தான் அவள் சாவுக்கும், அடக்கத்துக்கும் பாடப்பட்ட இரங்கல் கீதம்.

ஆறு நூற்றாண்டுகள் ஆஸ்திரிய நாட்டை ஆண்ட பரம்பரையின் சாவு முடிச்சு இன்னும் அவிழ்க்கப்படவில்லை. இனியும் அதற்கான வாய்ப்பும் இல்லை.

நன்றி: உண்மை

Pin It