vallabhaipatel thamildesam jan16 2014

சர்தார் பட்டேல் உண்மையிலேயே மதச் சார்பற்றவரா? ஒரு துணை பிரதமர் மற் றும் உள்துறை அமைச்சர் என்ற முறையில் அவர் தன் கடமைகளை ஆற்றினாரா? 1948இல் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை ஒட்டி எழுந்த வகுப்புக் கலவரங்களை அவரால் சமாளிக்க முடிந்ததா?

கடந்த கலவரங்களும் அதற்கு பட்டேலின் எதிர்வினையும் அவரு டைய நிர்வாகத் திறனுக்குச் சான்று கூறுகின்றனவா? காவல் துறைக்குப் பொறுப்பான உள்துறை அமைச்சர் என்ற முறையில் காந்தியைப் படு கொலையிலிருந்து காக்க, கொலை முயற்சிகள் முன்னமே தொடர்ந்து நடைபெற்று வருகின்றன எனத் தெரிந்திருந்தும், என்ன ஏற்பாடுக ளைச் செய்திருந்தார்? கொலையாளிகள் உறுப்பு வகித்த மதவாத அமைப்புகளிடம், காந்தியின் கொலைக்கு முன்னும் பின்னும், கரிசனம் காட்டியமைக்கு என்ன காரணம்? இந்துக்களையும், முஸ்லிம்களையும் பட்டேல் சமமா கத்தான் கருதினாரா?

முஸ்லிம்களை இந்து மதவாதிகளும், கோப முற்ற இந்து மக்களும் தாக்கிய போது அதை வரவேற்கும் போக்கு பட்டேலிடம் காணப்பட என்ன காரணம்? நேருவுக்கும் பட்டே லுக்கும் இடையிலான முரண் பாடுகள் தெரிந்தவை; தன்னைத் தலைவராக உருவாக்கிய காந்தியா ருடன் பட்டேல் முரண்பட என்ன காரணம்? இந்தியா முழுவதும் இருந்த சமஸ்தானங்கள் வல்லபாய் பட்டேலின் அருமுயற்சியால் தான் இந்தியாவுடன் ஒருங்கிணைக் கப்பட்டனவா?

உள்துறைச் செயலர் வி.பி.மேனன் மற்றும் மவுண்ட்பேட்டன் பிரபு அல்லாமல் சமஸ்தானங் களையும், மன்னர் ஆட்சிப் பகுதிகளையும் இணைத்ததில் பட்டே லின் பங்கு என்ன? - இக்கேள்வி களுக்கு வரலாறு புதைத்து வைத்திருக்கும் பதில்கள் வெளிப்படும் போது, வல்லபாய்பட்டேல் அளவுக்கு அதிகமாகப் புகழப்பட்டிருக்கிறார்; மிகைப்படுத்திக் காட்டப் பட்டிருக்கிறார் என்ற உண்மை தெளிவாகாமற் போகாது. அப்படிப் பட்ட மிகைத் தோற்ற உருவாக்கத் திற்கும் அவர் மதவாத அரசியல் சார்பு கொண்டிருந்தார் என்பதன்றி, வேறு காரணங்கள் இல்லை என்பதும் புலனாகும்.

மதக்கலவரமும் பட்டேலும்:

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் நிலப்பகுதிகள் வரையறுக்கப்படும் வரை அதன் விளைவு எவருக்கும் சரியாகப் புரியவில்லை, ஆனால் பஞ்சாபும், வங்காளமும் மத அடிப்படையில் பிரிக்கப்பட்டு, கிழக்கு பஞ்சாபில் உள்ள முஸ்லீம் கள் மேற்கு நோக்கியும், மேற்கு பஞ்சாபிலிருந்தும் பிற பகுதிகளிலி ருந்த சீக்கியரும், இந்துக்களும் இந்தியப் பகுதி நோக்கியும் இடம் பெயர வேண்டிய நிலை ஏற்பட்ட போதுதான் பிரச்சினையின் தீவிரம் புரிந்தது. பிரிட்டிஷ் வழக்கறிஞரான சிர்ல் ராட்கிளிப் வரைந்த இந்திய-பாகிஸ்தானிய எல்லைக்கோடு மொழிவழி இனத்தவர்களை மத அடிப்படையில் பிரித்தது. ஆனா லும் இந்துக்களை யும் முஸ்லீம் களையும் துல்லியமாக வாழ்விடங்க ளோடு பிரிக்க முடியவில்லை.

வரலாற்றின் மிகப் பெரிய மாந்த இடப்பெயர்வு நிகழ்ந்தது. 15 மில்லி யன் மக்கள் (1 கோடியே 50 இலட் சம்) இடம் பெயர்ந்தார்கள். இந்து-முஸ்லிம் கலவரம் மீண்டும் தொடங்கி விட்டது. ராட்கிளிப்பின் எல்லைப் பிரிவு ஆகஸ்ட் 17 1947 அன்று அறிவிக்கப்பட்டது. மேற்கு பஞ்சாபிலிருந்து இந்துக்களையும் சீக்கியர்களையும் விரட்டத் தொடங்கினர். அது போன்றே கிழக்கு பஞ்சாபில் அமிர்தசரசில் முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடங்கின. தொடர்ந்து எல்லை யோரப் பகுதியெல்லாம் கலவரம் தொடங்கியது.

பாகிஸ்தான் பகுதியிலிருந்து வெளியேறிய இந்துக்களும் சீக்கியர்களும் டில்லி மாகாணம் வரை வந்து, அன்றைய ஒருங்கி ணைக்கப்பட்ட மாகாண (United Province ) மேற்கு மாவட்டங்களில் குடியேறினர். அது போன்றே வன் முறைக்கு இலக்கான முஸ்லிம் கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு மேற்கு பாகிஸ்தான் நோக்கி ஓடி னர். தலைநகரமான டில்லி பெரும் கலவரத்தை சந்தித்தது.

டில்லியின் இந்துக்கள் வாழும் பகுதியான கரோல்பாக்கில் யாரோ வெடித்த குண்டு ஒன்று கலவரத்தைத் தொடங்கி வைத்தது. இக்கலவரங்கள் முன்னமே திட்டமிடப்பட் டவையாக இருந்தன. தன் கண் முன்னேயே, வாடி வதங்கி வந்து கொண்டிருந்த கூட்டத்தில் ஒருவரு டைய 10 வயது மகளை முஸ்லிம் வன்முறையாளர்கள் சிலர் பறித்துக் கொண்டு ஓடியதைக் கண்டு நேரு இரவு முழுவது தூங்க முடியாமல் கிடந்தார். இது போன்றே, இஸ்லாமியப் பெண்களை இந்து, சீக்கிய வன்முறையாளர்கள் அள்ளிச் சென்றனர்.

“தனது மக்கள் திடீரென்று வகுப்புவாதக் கொடூரத்தில் இவ் வளவு வல்லமையுடன் ஈடுபட்டது நேருவுக்கு அதிர்ச்சியளிக்கும் விஷயமாக இருந்தது. ஏற்கெனவே ஒரு கூட்டத்தின் போது, இதையெல் லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு தோள்களைக் குலுக்கியபடி, ‘ஆங்ஞ் இது நடக்க வேண்டியதுதான்’ என்று கூறிய நேருவின் நட்புள்ள எதிரி யான பட்டேலால் சகிக்க முடியும். ஆனால் நேருவால் முடியவில்லை.” (டொமினிக் லேப்பியர் - லேரி காலின்ஸ், ‘நள்ளிரவில் சுதந்திரம்’, அலைகள் வெளியீட்டகம் சென்னை, 1997, பக்-422)

1947 ஜீலை மாதம், காந்தியும் நேருவும் பஞ்சாப் எல்லையில் அகதிகளைச் சந்தித்துக் கொண்டிருந்த போது, பட்டேல் முஸ்லிம்களை டெல்லியிலிருந்து விரட்டு வதில் குறியாக இருந்தார். ஒருமுறை சர்ஸ்ட்ராபோர்டு கிரிப்சிடம் பட்டேல் ஒரு முறையீடு செய்தார்: ’கலவரம் என்பது முஸ்லிம்-இந்து ஆகிய இருவருமே ஈடுபடும் விளை யாட்டுதான் என்பதும், பாதிப்புக்கு உள்ளாகும் நிலையில் சாத்வீக இந்துக்களும் பழிவாங்கலாம் என்ப தையும் புரிந்து கொண்ட நிலையில், முஸ்லிம் லீகை இலண்டனுக்கு அழைத்தீர்கள்.

ஒரு தீர்வை எட்டிய போது ஜின்னாவுக்கு அழைப்பு வந்தது. மேலும் பிரச்சினைகளிலும் வன்முறைகளிலும் ஈடுபடுவதன் மூலம் மேலும் சலுகைகளைப் பெறலாம் என்ற புரிதலை இஸ்லா மியருக்கு ஜின்னா உருவாக்கினார். படுகொலையில் ஒரு சமூகம் மற்றொன்றை விஞ்சிய போது, தீர்வுக்கான நேரம் வந்தது. இன்னும் கொஞ்சம் இரத்தம் சிந்தப்பட்டிருந் தால் அது காங்கிரசுக்கு உதவியிருக்கும்; முஸ்லிம்லீகை பலவீனப்படுத் தியிருக்கும்’ (வல்லபாய் பட்டேல் கடிதங்கள், தொகுப்பு 3, பக்-314; A.G.Noorani, ‘Patel’s Communalism - a documented record’, Frontline, Chennai, 13 December 2013, pp.4-21)

வங்காளத்தில் கலவரத்தில் முஸ்லிம்கள் பெரும் தாக்குதலுக்கு உள்ளாகி, அதைத் தடுக்கவே ஆள் இல்லா நிலை ஏற்பட்ட போது, பட்டேல் 1946 ஆகஸ்ட் 21 அன்று இராஜகோபாலாச்சாரியாருக்கு எழுதிய கடிதத்தில், இவ்வாறு குறிப்பிட்டார்: “பாதுகாப்பும் ஒழுங்கும் முற்றிலுமாக நொறுங்கியது; இவற்றைத் தடுக்க எவருமே இல்லை. ஆனாலும், முஸ்லிம் முஸ்லீம்களுக்கு இது ஒரு பாடமாக அமையும். ஏனெனில், இறந்தவர்களில் விகிதாச்சாரத்தில் முஸ்லிம்களே கணிசமாக அதிகம் என்று நான் கேள்விப்படுகிறேன்.’’

நேரு பீகார் கலவரம் (அக்டோபர் 1946) பற்றி பட்டேலுக்குக் கடிதம் எழுதினார்; “முஸ்லிம்களை ஒழிக்க இந்து கலகக் கும்பல்களால் முன்னெடுக்கப்பட்ட தெளிவான முயற்சி’’ என்று நேரு குறிப்பிட் டார். பட்டேல் அதைப் பற்றிக் கவலைப் படவில்லை. ‘முஸ்லிம்கள் தாக்கினார்கள்’ என்ற புகார் வந் தாலே, அதைப் பற்றி விசாரிக்கா மலே “அப்பகுதிகளில் உள்ள இந்துக்களின் கோழைத்தனம் அவ மானகரமானது’’ என்று பட்டேல் கருத்துரைத்தார். (A.G.Noorani, Patel’s Communalism, p.16)

ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் பட்டேலின் புகழ்பாடு வதற்குக் காரணங்கள் இருக்கின்றன. இந்துமகாசபையிலும், ஆர்.எஸ்.எஸ்.இலும் இருந்த பலர் காங்கிரசிலும் இருந்தார்கள். ஜனசங்கத்தை (இன்றைய பா.ஜ.க) உரு வாக்கிய சியாமா பிரசாத் சாட்டர்ஜி கூட காங்கிரசில்தான் இருந்தார். அத்வானி கூறுகிறார்.

“இந்திய இஸ்லாமியர்கள் குறித்த சர்தார் பட்டேலின் அணுகுமுறை பல்வேறு தருணங்களில் தவறு தலாகப் புரிந்து கொள்ளப் பட்டுள்ளது; அவற்றை நீக்குவது அவசியம்.’’ (தினமணி, திருச்சி, 25 டிசம்பர் 2013)அது ஏன் அவசியமென்றால், இவர்களுடைய இப்போதைய அரசியல் தேவையை மதவாதப் போக்கைக் கொண்டிருந்த வல்லபாய் பட்டேல் நிறைவு செய்ய இருக்கிறார்.

காந்தி ஆன்மிகவாதியும் அரசியல் வாதியுமாக இருந்தார். பல குறைபாடுகள் இருந்தாலும் கூட, அவர் ஓர் ஒப்பற்ற மக்கள் தலைவராகப் பரிமாணங் கொண்டிருந்தார். இந்து-முஸ்லிம் ஒற்றுமையில் உண்மையிலேயே நாட்டமும் நம்பிக்கையும் கொண்டிருந்தார். இஸ்லாமியர்களைப் பொறுத்த வரை ஜின்னாவைவிடவும் நம்பிக் கைக்குரியவராய் காந்தியே திகழ்ந்தார். இஸ்லாமியர் பால் அவர் கொண்டிருந்த பரிவு தான் அவரது இறப்பையும் கொண்டுவந்தது. கலவரம் வெடித்த போதெல்லாம் உண்ணாநிலை மேற்கொண்டு தன் இறப்பைக் காட்டி இந்து-முஸ்லிம் இருதரப்பாரையும் வழிக்கு கொண்டு வந்தார். இந்த வழிமுறை யில் அவர் தொடர்ந்து வெற்றி கண்டார்.

நேருவைதன் ‘தெரிவு செய்யப் பட்ட மகன்’ என்று காந்தி அறிவித்தார். பட்டேலை அரசியலுக்குக் கொண்டு வந்த வரும், தலைவராக உருவாக்கியவரும் காந்திதான். காந்திதான் பட்டேலின் குரு. பட்டேல் காங்கிரசைத்தன் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டார். பட்டேல் கை காட்டு பவர் தான் காங்கிரசின் தலைவர் என்ற நிலை உருவானது. அப்படி தான் இன்னொரு மதவாதியான புருஷோத்தம் தாஸ் டாண்டனை, நேருவின் எதிர்ப்புக்கிடையே, காங்கிரசின் தலைவராகத் தேர்ந் தெடுக்கச் செய்தார் பட்டேல். நிலைமை.

இவ்வாறு இருந்தாலும் காந்தி நேருதான் இந்தியாவின் பிரதமராக வர வேண்டும் என்று கருதினார். காந்தியின் வற்புறுத்தலாலேயே பட்டேல் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டார். நேரு இந்தியாவின் பிரதமராக வர வேண்டும் என்று காந்திக் கருதிய மைக்குக் காரணம், நேருவின் பால் அவருக்கு இருந்த அன்பு காரண மல்ல; இந்திய முஸ்லிம்கள் பற்றிய அவருடைய கவலைதான் முக்கிய காரணம். கட்சியின் பெருத்த ஆதர வில்லாமலேதான் நேரு பிரதம ரானார். இதற்குக் காரணம் நேருவிடம் குடிகொண்டிருந்த மதச்சார் பின்மைதான், இன்று சங்பரிவார் நேருவை வெறுக்கிறது, பட்டேலைத் துதிக்கிறது. என்ன காரணம்? அதே காரணத்திற்காகத் தான் பட்டேலைப் புறந்தள்ளி விட்டு நேருவை இந்தியாவின் பிரதமராகச் செய்தார் காந்தி.

வல்லபாய் பட்டேல் நிர்வாகத்திறன் உள்ளவரா?

வல்லபாய் பட்டேல் மிகப்பெரிய நிர்வாகி என்று பலரும் பதிவு செய்கிறார்கள். வல்லபாய் பட்டேல் பெரிய குற்றவியல் வழக்கறிஞர் என்பதிலும் காங்கிரசு கட்சியைத் தன் கைப்பிடிக்குள் வைத்துக் கொண்டவர் என்பதிலும் சந்தேக மில்லை. ஆனால், நாட்டின் நிர்வாகத்தில் என்னவாக இருந்தார்? “நாடுசுதந்திரம் பெற்றபிறகு, துணை பிரதமர், உள்துறை அமைச்சர் ஆக, தேசப்பிரிவினை உள்ளிட்ட நெருக் கடியான காலத்தில் நாட்டை உறுதியாக வழி நடத்தினார்’’ என்று நரேந்திர மோடியின் முன்னெடுப்பின் வல்லபாய் பட்டேலுக்கு சிலையெடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோர் ஊடகங்களில் பதிவு செய்கின்றனர். (தினகரன், 16.12.2013)

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை போன்ற நெருக்கடியான காலக்கட்டத்தில் பட்டேலின் நிர்வாகத்திறமை வெளிப்பட்டதால் டில்லியில் வன்முறை உச்சக் கட் டத்தை எட்டியது. ’அல்லாஹூ அக்பர்’ என்று குரல் கொடுத்து, பதிலுக்குக் குரல் வந்தால் அங்கே புகுந்து முஸ்லிம்களை சீக்கியர்கள் வெட்டி சாய்த்தார்கள். ‘ஆர்.எஸ்.எஸ் கும்பல் பர்தா அணிந்த ஒரு முஸ்லிம் பெண்ணைக் கடத்தியது. அந்தப் பெண் மீது பெட்ரோலை ஊற்றி, நேருவின் யார்க் சாலை வீட்டு வாசலுக்கு முன்னால் தீ வைத்துக் கொளுத்தினார்கள்.

’அகதிகளாக வந்த இந்துக்களும், சீக்கியர்களும் மசூதிகளுக்குள் குடியேறினார்கள். காவல் துறையிலிருந்த முஸ்லிம்கள் ஓடிப்போய் விட்டார்கள் செப்டம்பர் 4ஆம் தேதி பிற்பகலில், 1000க்கும் அதிக மானவர்கள் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில், இந்திய சிவில் சர்விஸ் ஊழியர்கள் கூட்டத்தை க்ஷி.றி.மேனன் கூட்டினார். “டில்லியில் வலுவான நிர்வாகம் இல்லை. தலை நகரும் நாடும் சீரழிவை எதிர்நோக் கியுள்ளன என்பது அவர்களின் ஒரு மனதான முடிவாக இருந்தது.’’ (டொமினிக் லேப்பியர், பக்.433)

பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு சிம்லாவில் ஒய்வுக்குச் சென்று விட்டார் மவுண்ட் பேட்டன் பிரபு. அவர் இப்போது முன் னாள் கவர்னர் ஜெனரல். ஏனெ னில் இந்தியா விடுதலை பெற்று விட்டது. பொறுப்பு பிரதமர் நேருவின் கையிலும், உள்துறை அமைச்சரும் துணை பிரதமருமான பட்டேலின் கையிலும் இருந்தன. இந்நிலையில் ஓய்வில் இருந்த மவுண்ட்பேட்டன் பிரபுவை தொலைபேசியில் உள்துறைச் செயலர் வி.பி.மேனன் அவசரமாகத் திரும்பி வரும்படி அழைத்தார். இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் மவுண்ட் பேட்டன் வராவிட்டால், நாம் இந்தியாவை இழந்திருப் போம் என்று மேனன் குறிப்பிட்டுக் கெஞ்சினார்.

1947 செப்டம்பர் 6 அன்று காலை மவுண்ட்பேட்டன் அறையில், மவுண்ட் பேட்டன், நேரும் பட்டேல் ஆகிய மூவரின் இரகசியக் கூட்டம் நடந்தது. “அங்கே மவுண்ட்பேட்டன், நேரு, பட்டேல் என மூன்று பேர் இருந்தனர். இரண்டு இந்தியத் தலைவர்களும் சோகமாகவும், சோர்ந்து போயும் இருந்தார்கள். ‘தண்டனைக் குள்ளான பள்ளிச் சிறுவர்கள் இருவரைப் போல்’ அவர்கள் கவர்னர் ஜெனரலைப் பார்த்தனர்’’. (டொமினிக் லேப்பியர், பக்.435)

nehru ghandhi thamildesam jan16 2014நேருவுக்கும், பட்டேலுக்கும் நெருக்கடி காலத்தில் எப்படி நிர்வாகம் செய்வது என்பது தெரிய வில்லை. ‘எங்களின் அனுபவம் போராட்டம்தானே தவிர நிர்வாகம் அல்ல’ என்று தெரிவித்தனர்.நேருவும் பட்டேலும் முன்வைத்த வேண்டுகோள்:“காலனியா திக்கம் எங்களுக்கு அளிக்க மறுத்த அனுபவத்தையும் அறிவையும் நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்.

ஆங்கிலேயரான நீங்கள் எங்கள் வாழ் நாள் முழுவதும் இங்கேயே இருந்து விட்டு இப்போது நாட்டை எங்களிடம் விட்டு எளிதாக வெளியேறுவது முறையல்ல. நாங்கள் நெருக் கடியில் இருக்கிறோம். எங்களுக்கு உதவி தேவைப்படுகிறது. இந்த நாட்டை நீங்களே ஆள முடியுமா?’’ (மேலது. பக்.436)

மவுண்ட்பேட்டன், இந்த நாட்டை நீங்கள் மீண்டும் என்னிடம் ஒப்படைக்கிறீர்கள் என்று தெரிந்தால் அத்தோடு உங்கள் அரசியல் முடிந்துவிடும். என்று கூறினார். “அதனை மறைத்து வைக்க நாங்கள் ஒரு வழி கண்டு பிடிக்கிறோம்.’’ என்று நேரு கூறினார்.

கடற்படைத் தளபதியாக அனுபவம் பெற்றிருந்த மவுண்ட்பேட்டன் நெருக்கடிக் காலக் கட்டத்தில் எப்படி செயல்படவேண்டும் என்று அறிந்தவர். நேருவையும், பட்டேலையும் பொம்மையாக முன்னிறுத்தி, மளமளவென செயல் திட்டங்களை வகுத்தார். “சுதந்திரம் பெற்ற மூன்றே வாரங்களுக்குப் பின் கடைநேர சமாளிப்புக்காக இந்தியா மீண்டும் ஒரு முறை ஆங்கிலேயர் ஒருவரால் ஆளப்படவிருக்கிறது.’’ (மேலது.)

லுயூட்டன்ஸ் அரண்மனையைப் போர்க்கால இராணுவத் தலைமையகம் போல் மவுண்ட்பேட்டன் மாற்றினார். அவரது மனைவி எட்வினா செஞ்சிலுவைச் சங்கம் பொறுப்பேற்று அவசரகதியில் நிவாரணப்பணி மேற்கொள்ளப் பட்டது. நேரு அமைதியாயிருந்தார். பட்டேல் விரக்தியில் இருந்தார். மவுண்ட்பேட்டன் முழு நிர்வாகியாக மாறிப் போயிருந்தார். நிலைமை சமாளிக்கப்பட்டது.

“ஒரே இரவில் நிலைமையில் மாற்றம் ஏற்பட்டது, மாட்டு வண்டி வேகத்திலிருந்து ஜெட் வேகத்தை அது அடைந்தது’’ என்று குழுவில் பங்கேற்ற இந்தியர் ஒருவர் குறிப்பிட்டார். (மேலது, பக்.440) இன்னோருபுறம், காந்தி இந்து, முஸ்லிம், சீக்கியர்களிடையே மன் றாடிக் கொண்டிருந்தார். மவுண்ட் பேட்டன் பிரபுவால் ‘ஒரு மனிதன் - ஒரு படை’ (Single Man Army) என்று வருணிக்கப்பட்ட காந்தி மக்களைத் தன் வழிக்குக் கொண்டு வருவதில் வெற்றிகண்டார். அவருடைய நடை பயணமும், சாகும் வரை உண்ணா நிலையும், மன்றாட்டுகளும் டில்லியிலும் பிற பகுதிகளிலும் அமைதியை கொண்டுவர உதவின.

இந்து-முஸ்லிம் கலவரங்களில் 2,25,00 பேர் முதல் 5,00,000 பேர் வரை இறந்ததாக. வெவ்வேறு கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. அமைதியைக் கொண்டு வருவதில் மவுண்ட்பேட் டனும், காந்தியும் பெரும் பங்கு வகித்தனர்.

வல்லபாய் பட்டேலின் நிர்வாகத் திறமை எப்போது வெளிப்பட்டது என்பது இன்று வரை அறியப்படாத ஒன்று. வல்லபாய் பட்டேல் இந்தியாவின் துணை பிரதமாராகவும் உள்துறை அமைச்சராகவும் 15 ஆகஸ்ட் 1947 முதல் 15 டிசம்பர் 1950 வரை (அவரது இறப்பு வரை) பதவிவகித்தார். இக்காலக் கட்டத்தில் அவருடைய பெருஞ்சாதனையாக எதையும் குறிப்பிடுவதற்கில்லை. ‘இந்தியாவை ஒருங்கிணைத்தார்’ என்றும் அது அவருடைய இமாலய சாதனை என்றும் குறிப்பிடுவோர் உண்டு. அது குறித்தும் அறிந்து கொள்ள வேண்டிய செய்திகளும் உண்டு.

சமஸ்தானங்களை ஒருங்கிணைத்தது யார்?

ஏ.ஜி.நூராணி, “பட்டேலின் சாதனைகள் பெரிய அளவில் மிகைப்படுத்தப்பட்டுள்ளன; அவருடைய மோசமான தோல்விகள் காணப்படாமல் புறக்கணிக் கப்பட்டுள்ளன. அவரை இந்தியாவின் பிஸ்மார்க் என்று அழைக்கும் ‘வரலாற்றுத் தற்குறிகள்’ இவை இரண்டு பற்றியும் அறிய மாட்டார்கள்.”என்கிறார்(A.G. Noorani, Patel’s Commuan alism, Frontline 13 December, 2013, p-10)

ஏ.ஜி.நூராணி இந்தியாவுடன் மன்னராட்சிப் பகுதிகள் ஒருங்கி ணைக்கப்பட்டது பற்றி இப்படிக் கூறுகிறார். ஒருங்கிணைப்பு இரு கட்டங்களைக் கொண்டது. முதற் கட்டம், சமஸ்தானங்கள் இந்தியா வுடன் ஒப்பி வருதல் (accession). இரண்டாவது கட்டம், அவை மறுசீரமைப்பு செய்யப்பட்டு B-பிரிவு மாநிலங்களாக ஒருங்கி ணைக்கப் படுவது (merger). இவற் றுள் முக்கியமானது முதற்கட்டம். இக்கட்டத்தில்தான், சமஸ்தானங் கள் மற்றும் மன்னராட்சிப் பகுதி களின் மிக முக்கிய ஒப்புதலைப் பெறுதலும் (ஒப்பந்தங்கள்)

ஒருங்கிணைப்பும் நடைபெற்றன. “முன்பு நம்பிக்கையற்று, அந்தப்புரங்களில் கிடந்த, மன்னர்களுடைய நாடுகளை இந்தியாவுடன் இணைக்க அதிகம் பேச வேண்டிய தேவை கூட இருக்கவில்லை. 1947 ஆகஸ்ட் 15க்குள் (அதாவது வல்லபாய் பட்டேல் உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முன்னரே) அனைத்து சமஸ்தானங்களின் அரசர்கள் - ஜீனகத், காஷ்மீர், ஐதரா பாத் தவிர - இந்தியாவுடன் இணைந்து ஒப்பந்தங்கள் கையொப் பமிடப் பட்டுவிட்டன.”

இதை சாதித்தது யார்? மவுண்ட் பேட்டன் பிரபுவும் உள்துறைச் செயலராகப் பொறுப்பேற்ற வி.பி. மேனனும்தான் இந்திய ஒருங்கி ணைப்பைச் சாதித்தவர்கள். 1947 ஜீலை 28 முதல் மவுண்ட்பேட்டன் முயற்சிகளை வி.பி.மேனன் வல்ல பாய் பட்டேலுக்கு தெரிவித்து வந்தார். மவுண்ட்பேட்டனின் திறன்களும், மேனனின் சட்டபூர்வ மாகப் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறமையும் உண்மையில் இதைச் சாதித்தன. (மேலது.)

இந்தியாவுடன் சமஸ்தானங்கள் ஒருங்கிணைப்பு குறித்து சில கருத் துக்களை ஏ.ஜி.தூரானி பதிவு செய்திருக்கிறார்.

இணைப்பு ஒப்பந்தம் (Instrument of Accession) என்பது முன்னமே 1935ஆம் ஆண்டு சட்டம் செயல்படத் தொடங்கியதுமே தயாரிக்கப்பட்டது. ஆனால் அச்சட்டத்தில் கூட்டாட்சி முறை செயல்பாட் டுக்கு வராமல் இருந்தது. சமஸ்தா னங்கள் இணைவது குறித்து சர்தார் பட்டேலுக்கு இப்படி ஒரு கருத்து இருந்தது: ‘ஆங்கிலேயர் வெளியேறியதும் மன்னராட்சிப் பகுதிகளில் உள்ள மக்கள் புரட்சி செய்து மன்னர்களை நீக்கி விட்டு, காங்கிரசை ஆதரித்துக், இந்தியாவுடன் இணைவார்கள்.’ ஆனால் அந்தந்த மன்னர்களுக்கும் தனித்தனிப் படைகள் இருந்தன. அவற்றை ஆங்கிலேயர்களே பயிற்றுவித்தி ருந்தனர். அவற்றைக் கொண்டு கலகத்தை மன்னர்களால் அடக்க முடியும் என்று மவுண்ட்பேட்டன் பிரபு நினைவூட்டினார்.

ஆங்கிலேயர்களின் அரசியல் அமைச்சகத் துறையின் அறிவுறுத்தலின் பேரில் அப்படைகளும் தயார் நிலையி லேயே இருந்தன. ஆகவே, அமைதியான வழியிலேயே மன்னராட்சிப் பகுதிகளை இணைப்பது குறித்து வைசிராய் மவுண்ட்பேட்டன் பிரபு ஆலோசனை வழங்கினார். மன்னர்கள் தங்கள் பட்டங்களையும், தனிச் சொத்துக்களையும் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டு, இந்தியா- பாகிஸ்தான், ஆகியவற்றில் ஏதாவது ஒரு டொமினியனில் சேர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். இதை ஏற்றுக் கொண்டு பகல்பூர் போன்றவை பாகிஸ்தா னுடன் சேர முடிவெடுத்தன.

மேலும் பாதுகாப்பு, வெளியுறவு, தொடர்வழிகள் போன்ற துறைகள் மட்டுமேமைய அரசுடன் இருக்கும் என்றும் இது பற்றி சிந்திக்குமாறு மவுண்ட்பேட்டன் வல்லபாய் படேலிடம் கூறினார்.

பட்டேல் வி.பி.மேனனிடம் தன் கருத்தைக் கூறினார். மவுண்ட் பேட்டன் கூறியதைத் தாம் ஏற்ப தாகவும், 565 மன்னர் நாடுகளும் தம் பழக்கூடையில் விழ வேண்டும் என்றும் பட்டேல் கூறினார். சில பிரிந்து செல்வதைத் தவிர்க்கவி யலாது என்று மவுண்ட்பேட்டன் கூறினார். இத்திட்டத்தை வகுத் தவர்கள் மவுண்ட்பேட்டனும், வி.பி.மேனனும் ஆவர். இதன்படி மூன்று நாடுகளைத் தவிர (ஜீனகத், ஐதராபாத், காஷ்மீர்) பெரும்பான் மையானவை இந்தியாவுடன் இணைவு ஒப்பந்தத்தில் கையொப்ப மிட்டன. ஜீனகத், ஐதராபாத், காஷ்மீர் ஆகியவற்றின் இணைப்பு முயற்சிகள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

ஜீனகத் இந்தியாவுடன் இணைய மறுத்துவிட்டது. இதில் இந்துக்களே பெரும்பான்மையர், ஆனால் மன்னர் மொகம்மத்கான் இஸ்லாமியர் வி.பி.மேனன், இந்துக்கள் அதிகம் உள்ள ஜீனகத் இந்தி யாவுடன் தான் இணைய வேண்டும் என்றார். குஜராத்தைச் சேர்ந்த பட்டேலின் விருப்ப தெய்வமான சோமநாதரின் ஆலயம் கஜினி முகமதுவால் முன்பு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப் பட்டது, அந்த கோயில் ஜீனகத்தில் இருக்கிறது என்பதற்காகவே அதை இந்தியாவுடன் இணைக்கபட் டேல் விரும்பினார். 1942இல் ஒரு கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.இதன் பிறகு சோமநாதபுரம் ஆலயத்தை அரசுப் பணத்தில் மறு கட்டுமானம் செய்து, தம்மத உணர்வை வெளிக்காட்டிக் கொண்டார் பட்டேல்.

ஐதராபாத் இராணுவ நட வடிக்கை மூலம் இணைக்கப் பட்டது. சவகர்லால் நேரு ஐதரா பாத் விவகாரத்தை ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு கவுன்சில் மூலம் தீர்த்துக் கொள்ளலாம் எனக் கருதினார். ஐதராபாத் இணைக்கப் பட்ட விதம் குறித்து, எம்.கே. கே.நாயர் தம் ‘the story of an era told without it’swill என்ற நூலில் குறிப்பிடுகிறார் (<http://www.outlookindia.com/article.aspx?288433>).

1948ஏப்ரல் 30, ஆங்கிலேய அரசின் இந்தியப்படைகள் ஐதரா பாத்திலிருந்து வெளியேறி விட்டது. ஐதராபாத்தில் கடுமையான நிலைமை நிலவியது. நிசாம் பாகிஸ்தானுடன் தொடர்பில் இருந்தார். பட்டேல் இந்திய இராணுவத்தை அனுப்பி ஐதராபாத்தைக் கைப்பற்றிக் கொள்ள வேண்டும் என்று கருதினார். இதை அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்தபோது, நேரு ‘நீங்கள் ஒரு முழு மதவெறியாளர். உங்கள் பரிந்துரையை ஒரு போதும் ஏற்க மாட்டேன்’ (<http://www.outlookindia.com/article.aspx?288433>).என்று அமைதியிழந்து கூறினார்.

பட்டேல் அறையை விட்டு வெளியேறினார். இதன் பிறகு அன்றைய கவர்னர் ஜெனரல் இராஜாஜி, இது குறித்து நடவடிக்கைகள் மேற்கொண்டார். வி.பி.மேனனிடம் இராஜாஜி பேசினார். படைகள் தயாராக இருப்பதாக வி.பி.மேனன் கூறினார். இதன் பிறகு, நேருவையும், பட்டேலையும் இராஷ்டிரபதி பவனுக்கு அழைத்தார். இதற்கிடையில் பிரிட்டிஷ் ஹைகமிஷனரிடமிருந்து வந்த கடிதத்தை வி.பி.மேனன் இராஜா ஜியிடம் அளித்தார். ஐதராபாத்தில் ரசாக்கர்கள் என்னும் நிசாம் படையினர் 70 வயது அருட்சகோத ரியரை ஒரு கிறித்தவ கான்வென்ட்டில் பாலியல் வன்முறைக்கு ஆட் படுத்தியதைப் பற்றி சொல்லப் பட்டிருந்தது.

இதைப் பற்றி இராஜாஜி கூறிய தும் நேரு பொறுமை இழந்தார். இந்தியாவின் நற்புகழுக்குக்களங்கம் வந்துவிடக் கூடாது என்று கருதினார். ‘ஒரு கணம் கூட தாமதிக்கக் கூடாது; அவர்களுக்கு நாம் ஒரு பாடம் புகட்ட வேண்டும்’ என்று நேரு கத்தினார். இராஜாஜி வி.பி. மேனனிடம் தலைமைத் தளபதியிடம் திட்டப்படி தொடரும்படி கூறினார். இதன்படி இந்தியப் படைகள் ஐதராபாத்துக்குள் நுழைந்தன. ஐதராபாத் விவகாரத்தில் இராஜாஜி, வி.பி.மேனன் ஆகியோரின் கருத்து இராணுவ நட வடிக்கைக்குச் சார்பாக இருந்தது.

ஐதராபாத்தில், இதற்கு முன்பு, முஸ்லிம்கள் இந்து வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட போது பட்டேல் கண்டு கொள்ளவில்லை பண்டிட் சுந்தர்லால் இப்படு கொலைகளை ஆவணப்படுத்தியுள்ளார். முஸ்லிம் படுகொலைகளை ஆவணப்படுத்தியவர்கள் மீது பட்டேல் கடுமை காட்டினார் (Frontline, 13 December 2013, p-20) ஐதராபாத்துக்கு மிதமிஞ்சிய இந்து உணர்வாளர் கே.எம்.முன்ஷியை இந்தியப் பிரதிநிதியாகப் பட்டேல் அனுப்பி வைத்தார். இப்போது, இராணுவத்தை அனுப்புவது என்று முடிவு எடுக்கப்பட்டதும், ஒரு லெப்டினன்ட் ஜெனரல், மூன்று மேஜர் ஜெனரல்கள், முழு கவசப் படையணி மற்றும் விமானப்படை ‘போலிஸ் நடவடிக்கை’ என்ற பெயரில் அனுப்பப்பட்டது.

பதவி இழந்த ஐதராபாத் நிசாமை பட்டேல் இழிவு படுத்திப் பேசி னார். ‘முஸ்லிம்களின் இரத்தத்தை நாடு கிற ஆர்.எஸ்.எஸ்., இந்து மகாசபா ஆகியவர்களுடன் சேர்ந்து திட்ட மிடுகிற முஸ்லிம்-விரோதத் தலைவராக பட்டேல் இருந்தார்.’ (மேலது)

காஷ்மீர் இணைப்புப் பிரச்சினை யிலும் பட்டேல் ஒரு மதவாதி யாகவே அணுகினார். காஷ்மீர் மன்னர் ஹரிசிங் ஓர் இந்து என்ப தால் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல் வால்கரின் உதவியை பட்டேல் நாடினார். பட்டேல் எப்போதுமே ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் தலைவர்களிடம் உளப்பூர்வமான அன்பைக் காட்டிவந்தார். முஸ்லிம் களைப் படுகொலை செய்வது தொடர்பான ஆவணத்தாள்களை தலைமைச் செயலர் ராஜேஸ்வர் தயாள் கைபற்றிவிட்டார். ஆனாலும் கோல்வால்க்கர் காவந்து செய்யப்பட்டார்.

1947 அக்டோபரில் கோல்வால்க் கர் பட்டேல் கேட்டுக் கொண்ட படி காஷ்மீர் மன்னர் ஹரிசிங்கைச் சந்தித்துப் பேசினார் பஞ்சாபிய இந்துக்களையும், சீக்கியர்களையும் காஷ்மீர் படைகளில் சேர்க்கும்படி கூறினார். இதன் பொருள், காஷ் மீரத்து முஸ்லிம்களைத் தாக்குதல் நடத்தி வழிக்குக் கொண்டு வருவது என்பதாகும்.

காஷ்மீரில் முஸ்லிம் மக்களை இந்து வெறியர்கள் தாக்கினர். ஆனால், இந்திய உளவுத்துறை அதிகாரி பி.என்.முல்லிக் தமது அறிக்கைகளை மாற்றி எழுதும் படிச் செய்தார் பட்டேல். (Frontline, 29 November 2013)

காஷ்மீரின் பிரச்சினை தனித் துவமானது. அதை இந்தியாவுடன் சேர்ப்பதா,அல்லது பாகிஸ்தானுடன் சேர்ப்பதா என்று காஷ்மீர் பிரச்சனையைக் குறுக்கிப் பாக்க முடியாது. காந்தி இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.

“ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் இவர்களிடம் (காஷ்மீரிகளிடம்) இருந்து வருகிறது. நான் பார்த்த வரையில் இவர்கள் ஒரே மக்களாகவே இருந்து வருகிறார்கள். காஷ்மீரி இந்துவுக்கும், காஷ்மீரி முஸ்லீமுக்கும் இடையே எந்த வேறுபாட் டையும் என்னால் காண முடிய வில்லை. ஜம்மு-காஷ்மீர் ஆகியவற் றின் எதிர்காலத்தை காஷ்மீரிகளின் விருப்பமே தீர்மானிக்க வேண்டும் என என் அறிவு கட்டளையிடுகிறது.’’ (மேற்கோள். காஷ்மீரின் தொட ரும் துயரம், கோவை, 1999, பக்.86)

நேரு நிதானமாக மன்னரின் ஒப்புதலோடு, ஷேக் அப்துல்லாவின் ஆதரவோடு இராணுவத்தை அனுப்பி வைத்தார். காஷ்மீரை அதிரடியாகக் கைப்பற்றியிருக்க வேண்டும் என்று பட்டேலை உயர்த்திப் பிடிக்கும் இந்து மதவாதி கள் கருத்துரைக்கின்றனர். அவ்வாறு செய்திருந்தால், இன்று காஷ்மீர் பிரச்சினை இருந்திருக்காது என்பது இவர்கள் கருத்து. இது மிகத் தவறானது. அவ்வாறு ஒரு தேசிய இனம் அடிமை கொள்ளப் பட்டால், அது வாளாவிருக்காது ஐ.நா. உதவியுடன் கருத்துக் கணிப்பை எப்போதோ பாகிஸ்தா னின் முன்முனைப்புடன் நடத்தியிருப்பர். காஷ்மீர் விடுதலை பெற்றி ருக்கும் நேருவின் நயமான, வஞ்சக மான போக்கு காஷ்மீரின் விடு தலையை ஒத்திப் போட்டிருக்கிறது.

1952இல் கல்கத்தாவில் நேரு இவ்விதம் பேசினார். “காஷ்மீரில் நிகழ்வுகளைத் தீர்மானிக்கும் இடத்தில் ஜனசங்கம் அல்லது வேறு மதவாதக் கட்சி இருந்திருந் தால் என்ன ஆகியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். ஜன சங்கம் அல்லது ஆர்.எஸ்.எஸ். தங்களை நிரந்தரமாக முற்றுகை யிடுகிற நாட்டில் எதற்காக வாழ வேண்டும் என்று வேறு எங்காவது போய் விடுவார்கள்; நம்முடன் இருக்க மாட்டார்கள்’’ (Selected Works of Jawaharlal Nehru, Vol. 17 pp.77-78; A.G.Noorani, Patel’s Communalism P.20)

ஆங்கிலேயர்கள் சேர்த்து பயிற்சி கொடுத்து வைத்திருந்த இராணுவத் தைப் பயன்படுத்தி எல்லா பகுதிகளையும் வலுவில் பிடுங்கி ஒருங்கிணைத்துவிட வேண்டும் என்ற உந்துதலும் முனைப்பும் பட்டேலி டம் மிகுந்து கிடந்தன. இதே கனவுதான் ஆர்.எஸ்.எஸ் இடமும் ‘அகண்டபாரதம்’ என்ற திட்டமாக வும், காந்தியைக் கொலை செய்த நாதுராம் கோட்சேயிடம் ‘இந்து ராஷ்டிரம்’ என்ற பெயரிலும் இருந்து வந்தது. இன்று நரேந்திர மோடியும், வல்லபாய் பட்டேலும், பிற இந்து மதவாத அமைப்புகளும் எந்த புள்ளியில் சந்திக்கிறார்கள் என்பது இப்போது புரியும் ‘இந்து மயமே இந்தியம்’, ‘வன்முறையே வழிமுறை’ என்பதில் கோட்சேவுக்கும், பட்டேலுக்கும், நரேந்திர மோடிக்கும் வேறுபாடே கிடையாது.

ஆர்.எஸ்.எஸ். - பட்டேல் உறவுநிலை

பட்டேல் காங்கிரசில் இருந்தார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பை அப்படியே காங்கிரசுக்குள் கொண்டு வர முயற்சி செய்தார். அது நேருவின் கையை பலவீனப் படுத்தி, தன்னைப் பலப்படுத்திக் கொள்ள அவர் எடுத்த முயற்சியாக இருக்கலாம். ஆர்.எஸ். எஸ். காரர்களுக்கு தன்னலக்குறிக்கோள்கள் இல்லை என்று கருத்துரைத்தார். இந்து மகா சபையினரையும் காங்கிரசில் சேர அழைத்தார். ‘இந்து மதத்தின் பாதுகாவலர்கள் நீங்கள் மட்டுமே என்று நீங்கள் கருதியிருந்தால், தவறு செய்கிறீர்கள்’ என்று கூறினார்.

‘ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தங்கள் அறிவுத் திறனைப் பயன்படுத்தி சாதுர்யமாக செயல்பட வேண்டும்’ என கூறிய பட்டேல், இஸ்லாமியர்களை நோக்கி, ‘நாட்டுப்பற்று அற்றவர்கள் பாகிஸ்தானுக்குப் போய்விட வேண்டும். இன் னமும் இரண்டு குதிரைகளில் சவாரி செய்கிறவர்கள் (முடிவெடுக்காதவர்கள்) இந்துஸ்தானத்தை விட்டு வெளியேறி விட வேண்டும்’ என்றார் இந்தியா என்று சொல்லை விட இந்துஸ்தானம் என்ற சொல் பட்டேலுக்கு இனிப்பானது.

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை அடக்கி வைக்க வேண்டும் என்று கோருவோர் காங்கிரசில் இருந்தனர். பட்டேல் அவர்களுக்குக் கூறினார்.

‘காங்கிரசின் அதிகாரமான இடத்தில் இருப்பவர்கள் தங்கள் அதிகார நிலையைப் பயன்படுத்தி ஆர். எஸ். எஸ் அமைப்பை நொறுக்கிவிடலாம் என்று கருது கிறார்கள். ‘தடி’ எடுத்து ஓர் அமைப்பை அடக்கி விட முடியாது. மேலும் ‘தடி’ என்பது திருடர்களுக்கும் கொள்ளைக்காரர்களுக்குதான். தண்டம் எடுப்பது அதிக பலனைத்தராது. அது மட்டுமல்லாது, ஆர்.எஸ். எஸ். அமைப் பின் திருடர்களோ கொள்ளைக்காரர்களோ அல்லர். அவர்கள் தேச பக்தர்கள். அவர்களின் சிந்தனைப் போக்கு மட்டுமே மாறுபட்டது. காங்கிரசுக் காரர்கள் அவர்களை அன்பால் வெற்றி கொள்ள வேண்டும் (‘For a United India’, Speeches of Sardar Patel, Publi cation Division, Govt. of India, pp.64-69; A.G.Noorani, Patel’s Communalism, p.15)

நேரு வெளிநாடு சென்றிருந்த நேரம், அவர் அருகே இல்லாததைப் பயன்படுத்தி, 1949 நவம்பர் 10ஆம் தேதி, ஆர்.எஸ்.எஸ்.அமைப்பினரை காங்கிரசில் சேர அனுமதித்து தீர்மானம் இயற்றினார் நேரு திரும்பி வந்து, நவம்பர் 17 அன்று இத் தீர்மானத்தை இரத்து செய்தார்.

பட்டேலும் அவர் குழுவினரும் நேருவுக்கு ஒரு தொல்லையாகவே இருந்தனர். நேரு தன் அமைச்சரவையைக் கூடத் தன் விருப்பப்படி அமைத்துக் கொள்ள முடியாத நிலை இருந்தது. 1947 ஜீலை 24 அன்று காந்தி நேருவிடம் அவரது முதலாவது அமைச்சரவையில் அபுல்கலாம் ஆசாத்தை சேர்க்க வேண்டாம் என்றார். காரணம் சர்தார் பட்டேல் அதை எதிர்க் கிறார் என்றார். இந்திய விடுதலை வீரரும், அறிஞரும், சமய சார்பற்ற வருமான அபுல் கலாம் ஆசாத்தின் நாட்டுப் பற்றைப் பொய்யானது என்று லக்னோவில் பேசினார்.

vallabhaipatel 600

காந்தி கொலையும், பட்டேலின் போக்கும்

1948 சனவரி 30ஆம் நாள் காந்தி டில்லியில் பிர்லா மாளிகையின் பின்புறம் அங்கேயே வழிபாட்டுக் கூட்டத்திற்குச் சென்று கொண் டிருக்கும் போது மாலை 5.12 மணிக்கு நாதுராம் விநாயக் கோட்சே என்ற சித்பவன் பிரா மண இந்து வெறியனால் சுட்டுக் கொல்லப்பட்டார். மாலை 4 மணிக்கு வந்திருந்த பட்டேலுடன் ஒரு மணி நேரமாக நேருவும் பட்டேலும் ஒத்துப்போக வேண்டியதன் அவசியம் குறித்து வாதாடிக் கொண்டிருந்தார். இடம் பெயர்ந்து அல்லல்படும் இஸ்லாமியர் அவரவர் இடங்களுக்கு கொண்டு வரப்பட்டு குடியமர்த்தப்பட வேண்டும் என்றும், மசூதிகளில் குடியேறிய இந்துக்கள் வெளியேற வேண்டும் என்றும், மதக்கலவரம் நிற்க வேண்டும் என்றும், பாகிஸ்தானுக்குச் சேர வேண்டிய 55 கோடியை நேருவும், பட்டேலும் கொடுத்து விட வேண் டும் என வலியுறுத்தி அனைத்து சமூகத்தினரும் கலவரத்தை நிறுத் திக் கொள்ள உறுதி கொடுத்தால் மட்டுமே உண்ணா நிலையைக் கைவிட முடியும் என்று கூறி மேற்கொண்ட அவரது உண் ணாநிலை சனவரி 18ஆம் தேதி முடிவுக்கு வந்தது. கலவரமும் நின்றி ருந்தது.

பட்டேல் காந்தியின் உண்ணா நிலை தன்னை எதிர்த்தே நடப்பதாகக் கருதினார். காந்தியாரிடம் பட்டேல் கொண்ட முரண்பாடு இயல்பானது. மதவாத பட்டேலால் காந்தியின் சமயசம உணர்வைச் சகிக்க முடியவில்லை. கலவரம் குறித்து காந்திக்குக் கிடைக்கும் தகவல்கள் தவறானவை என்றார்; முஸ்லிம்கள் குறை கூறவோ பயப்படவோ தேவை இல்லை என்றார்.

“பட்டப்பகலில் டெல்லியில் முஸ்லிம்கள் கொலைசெய்யப் பட்டு வந்த அந்தக் காலத்தில் ஜவகர்லாலின் குற்றச்சாட்டுகள் அடியோடு புரிந்து கொள்ள முடியாத வையாக இருக்கின்றன என்று அவர் (பட்டேல்) அமைதியாக காந்தியிடம் தெரிவித்தார்’’. (மௌலானா அபுல்கலாம் ஆசாத், ‘இந்திய விடுதலை வெற்றி’ (India Wins Freedom), அடையாளம், 2010, பக்.278)

சர்தார் படேலின் உளநிலை காந்திக்கு உறுத்தலைத் தந்தது. காந்தியின் கடைசி (15ஆவது) உண்ணாநிலை தொடங்கிய போது, பட்டேல் காரணமில்லாமல் உண் ணாநோன்பைக் காந்தி மேற் கொண்டுள்ளதாகக் குறை கூறி னார். அதற்கு பதிலாகக் காந்தி ‘என் கண்களையும் காதுகளையும் நான் இன்னும் இழந்து விடவில்லை.’ என்று பதில் கூறினார். (மேலது, பக்.281)

தன் உண்ணாநிலை கலவரக் காரர்கள் கண்ணைத் திறந்து விடும் என்று காந்தி கூறியதும் சர்தார் பட்டேல் காந்தியிடம் கடுமையாகப் பேசினார்; அவர் குரலை உயர்த்திப் பேசியதை ஆசாத்தம் நூலில் பதிவு செய்கிறார். (மேலது, பக்.282). பட்டேல் பம்பாய்க்குப் புறப்படு வதாகக் கூறிவிட்டு,

“எனக்கு செவி சாய்க்க காந்திஜி தயாராக இல்லை, உலகத்தின் முன் இந்துக்கள் முகத்தில் கரிபூச அவர் உறுதி கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது.’’ (மேலது.)

பட்டேல் புறப்பட்டுச் சென்று விட்டார். ஆனால் காந்தியின் உண்ணாநிலை கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தது.

அகண்ட பாரதம் ஆரிய மேலாண்மை, வருணாசிரமப் பாதுகாப்பு, சித்பவன் பார்ப்பன அரசியல் தலைமை ஆகியவற்றை யெல்லாம் கொண்ட இந்துராஷ் டிரத்தைத் தங்கள் இலக்காகக் கொண்ட இந்துமகாசபை மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் காந்தியை கொலை செய்துவிட ஆலாய்ப் பறந்தனர்.

காந்தியாரைக் கொலை செய்ய ஐந்து முறை முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன. ஆர்.எஸ்.எஸ் அமைப்பை உருவாக்கிய ஐவருள் ஒருவரான வி.டி.சாவர்க்கரின் வாழ்த்துக்களைப் பெற்று நாது ராம் கோட்சே, நாராயண் ஆப்தே, மதன்லால் பாவா, திகம்பர் பாட்கே, கோபால் கோட்சே, கார்கரே போன்றோர் டில்லி வந்திருந்தனர்.

நான்காவது முயற்சியாகக் காந்தி யைக் கொல்ல மதன்லால் பாவா மேற்கொண்ட முயற்சி (20 சனவரி 1948) தோல்வியுற்றது. மதன்லாலை ஒரு கிழவி பிடித்துக் கொடுத்தாள். இதன்பிறகு வி.டி.சாவர்க்கர் மீது சந்தேகம் விழுந்தது.

பிற்காலத்தில் 1965 மார்ச் மாதம் நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.கே.கபூர் விசாரணை குழு, ‘அனைத்து உண்மைகளையும் சேர்த்துப் பார்த்தால் சாவர்க்கரும் அவருடைய குழுவினருமே காந்தி யைக் கொலை செய்ததாகத் தெரி கிறது’ என்று உறுதிபடத் தெரிவித்தது.

சனவரி 20ஆம் தேதி, மதன்லால் பாவாவின் வெடிகுண்டு வீச்சு தோல்வியடைந்தது. அவன் காவல் துறையிடம் தான் சாவர்க்கரை சந்தித்து விட்டு வந்ததையும், தன்னுடன் வந்த கோட்சே அடையா ளத்தை வெளியிட்டு விட்டான். இடத்தை விட்டுத் தப்பியோடிய நாதுராம் வினாயக் கோட்சே பூனா விலிருந்து வெளியாகும் மராத்தி இதழ் ‘இந்து ராஷ்டிரா’ வின் ஆசிரியர் என்றும் தப்பியோடிய நாராயண் ஆப்தே அவ்விதழின் உரிமையாளர் என்றும் காவல் துறைக்குத் தெரிந்து விட்டது.

கொலைகாரர்கள் குழுவில் ஏழு பேர் என்பதையும், தனது சகாக்களுடன் சாவர்க்கர் சதனில் இருந்ததையும் தெரிவித்தான்.

“மே மாதத்திலிருந்து காவல் துறை கண்காணிப்பில் இருந்து வரும் வீர சாவர்க்கரின் ஆதரவா ளர்கள் இதில் ஈடுபட்டிருக்கிறார் கள் என்பதும் தெரிந்துள்ளது. அன்றிரவே சதிகாரர்கள் பற்றிய அடையாளங்கள் அறியப் பட்ட நிலையில் அவர்களைக் கைது செய்ய டில்லியில் இருந்த சாதாரண காவலருக்குக் கூட வெகுநேரம் பிடித்திருக்காது ஆனால், நன்றாகத் தொடங்கப்பட்டஇந்த விசாரணை பின்னர் முறையாகத் தொடரப் படாமலும்,தீவிரமிழந்தும் போனது’’.

(டொமினிக் லேப்பியர் - லேரி காலின்ஸ், நள்ளிரவில் சுதந்திரம், அலைகள் வெளியீட்டகம், சென் னை, 1997, பக்கம்.563)

டில்லி காவல்துறை மெத்தனமாக இருந்தது. சதிகாரர்கள் பூனாவைச் சேர்ந்தவர்கள். பம்பாய் போலீஸ் உதவி கமிஷனர் ஜம்ஷித் நாகர்வாலாவிடம் பம்பாய் உள் துறை அமைச்சர் மொரார்ஜி தேசாய் சதிகாரர்களைக் கண்டு பிடிக்கும் வேலையை ஒப்படைத் தார். அவர் முஸ்லிமும் இந்துவும் அல்லாதவர்,ஒரு பார்சி; மிகத் திறமையான அதிகாரி.

நாகர்வாலா என்ற பம்பாய் காவல்துறைத் துணை கமிஷனர் குற்ற அறிக்கை 1 இல் ‘சாவர்க்கரே இச்சதியின் பின் னணி என்பதைத் தெளிவு படுத்தி யது. காந்தி 30 சனவரி 1948 அன்று கொலை செய்யப்பட்டார். அதற்கு மறுநாள், (31 சனவரி 1948) நாகர் வாலா அரசுக்கு அனுப்பிய கடிதத் தில், கொலையாளிகளான கோட்சேயும், நாராயண் ஆப்தேயும் டில்லிக்குப் புறப்பட்டு வருதற்கு முன்பு சாவர்க்கரை சந்தித்து 40 நிமிடங்கள் பேசினர் என்று தெரிவித்திருந்தார்.

இது சாவர்க்கரின் மெய்க்காப்பாளர் காசர் மற்றும் செயலர் தம்ளே ஆகியோர் அளித்த தகவல் ஆகும். இதற்கு முன்பே சனவரி 14 மற்றும்17 தேதி களில் சதிகாரர்கள் சாவர்க்கரை சந்தித்திருந்தனர். சாவர்க்கரின் பணியாளர்கள் குறிப்பிட்டது கொலைப் பணிக்குப் புறப்படும் போது சந்தித்த நிகழ்ச்சி பற்றியது.’

காந்தி கொலை வழக்கில் தலைமை வழக்குரைஞராகத் தோன்றி வழக்கு நடத்தியவர் சர்தார் வல்லபாய் பட்டேல், அன்றைய துணை பிரதமரும் உள்துறை அமைச்சரும் ஆவார். காந்தியின் படுகொலைக்கு மறுநாளே நாகர் வலா கண்டுபிடித்த முக்கியத் தகவல்கள் நீதிமன்றத்தில் பேசப்பட வில்லை. சாவர்க்கரின் பணியாளர்கள் சாட்சிகளாக இறுதிவரை நிறுத்தப்படவே இல்லை, சாவர்க்கர் தண்டனையிலிருந்து தப்பினார்.

உள்துறை அமைச்சர் என்ற முறையில், காந்தியாரின் படு கொலை பற்றிய தகவல்களைத் திரட்ட வேண்டிய வேலைகளை முடுக்கிவிடும் பொறுப்பு பட்டேலுடையது. நேருவுக்கு பட்டேல் 27 பிப்ரவரி 1948இல் எழுதிய கடிதத் தில் காந்தியின் படுகொலை பற்றிய விசாரணயின் முன்னேற்றம் குறித்து தினந்தோறும் தொடர்பில் இருப்பதாகவும், இதை நடத்தியவர்கள் சாவர்க்கரின் கீழ் உள்ள இந்து மகாசபையின் ஒரு பிரிவினர்தான் என்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு காந்தி கொலையில் தொடர்பில்லை என்றும் குறிப்பிட்டி ருந்தார்.

1948 செப்டம்பர் 9 அன்று ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங் (ஆர்.எஸ். எஸ்) அமைப்பின் தலை வர் குருஜி கோல்வால்கருக்கு பட்டேல் எழு திய கடிதத்தில் ‘ஆர்.எஸ்.எஸ். பரப் பிய வகுப்பு வாத நஞ்சினால்தான் காந்தியை இழக்க வேண்டி வந்தது’ என்று எழுதினார். ஆனால், அதே கடிதத்தில் ஆர்.எஸ்.எஸ் தனது தேசப் பற்று செயல்பாடுகளை காங்கிரஸ் சேர்வதன் மூலமே செய்ய முடியும் என்று அழைப்பு விடுத்தார். பட்டேலின் பார்வை யில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஒரு தேசப்பற்றாளர் அமைப்பு.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பை உருவாக்கிய குருஜி கோல் வால்க்கர் 1948 நவம்பர் 13 அன்று கைது செய் யப்பட்டார். அவருடைய அழைப்புக்கு ஏற்ப அவருடைய ஆதரவா ளர்களும் அமைப்பினரும் டிசம்பர் 9ஆம் தேதி பல இடங்களில் சத்தியாகிரகப் போராட்டம் நடத்தினர். இப்பிரச்சினைக்கு வல்லபாய் பட் டேல் ஒரு வழியைக் கூறினார். ஆர். எஸ்.எஸ் அமைப்புக்கு ஒரு அமைப்பு வரைவைத் தயாரித்து அரசாங்கத்துக்கு அனுப்பி வைக்கும் படிக் கூறினார். இதைப் பெற்றுக் கொண்டு (சூன் 1949) ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மீதான தடையை பட்டேல் நீக்கினார். (12சூலை 1949) மறுநாள் குருஜி கோல்வால்க்கரும் விடுதலை செய்யப்பட்டார்.

ஆர்.எஸ்.எஸ். மீது கட்டாயத் தின் பேரிலேயே பட்டேல் தடை விதிக்க நேர்ந்தது. 1949 ஜீலை 12இல் ஆர்.எஸ்.எஸ் மீதான தடை நீக்கப் பட்டது. பட்டேல் குருஜி கோல் வால்கருக்குக் கடிதம் எழுதினார். அதில். ‘எனக்கு அருகாமையில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும், சங்கத்தின் மீதான தடை நீக்கப்பட்ட போது எவ்வளவு மகிழ்ச்சிய டைந்தேன் என்பது’ என்று எழுதி னார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பை பாதுகாக்கிற வேலையை சர்தார் பட்டேல் செய்தார். ஆர்.எஸ்.எஸ். அல்லது இந்து மகா சபை முழுவதும் பாதிக்கப்பட்டு விடாமல், அகப்பட்டுக் கொண்ட அந்த சிலரோடு பிரச்சினை முடிக்கப்பட வேண்டும் என்பது அவருடைய உள்ளார்ந்த விருப்பமாக இருந்தது. 1948 பிப்ரவரி 27இல் நேருவுக்கு எழுதிய கடிதத் தில், பட்டேல் ‘பாபு (காந்தி)வின் கொலைச் சதி பலரும் பொதுவாகக் கருதுகிறபடி விரிவான ஒன்று அல்ல. ஜின்னாவும் பேச்சுவார்த் தைக்குக் காந்தி போனதிலிருந்து அவருக்கு விரோதமாகப் போன சில மனிதர்களோடு மட்டுமே குறுகிப் போன ஒன்று’. காந்தியின் படுகொலையை ஆர்.எஸ்.எஸ். மற்றும் மகாசபைக்காரர்கள் வரவேற்றார்கள் என்பது உண்மை.

நமக்கு முன் உள்ள சான்றுகளின் அடிப்படையில், ஆர்.எஸ்.எஸ். அல்லது இந்து மகா சபையின் வேறு எந்த உறுப்பினரையும் தண்டிக்க இயலாது என்றே நான் கருதுகிறேன்’ என்று குறிப்பிட்டார். இது ஆர்.எஸ்.எஸ் செய்தது அல்ல என்பதே கடிதத்தில் வலியுறுத்தப் பட்ட செய்தி.

ஆர்.எஸ்.எஸ்க்கும் சாவர்க் கருக்கும், கோட்சேக்கும் உள்ள தொடர்பு மறுக்க முடி யாத ஒன்று. ஆர்.எஸ்.எஸ்ஸை உருவாக்கிய ஐந்து தலைவர்களுள் சாவர்க்கர் ஒருவர். கோட்சே அவருக்குக் கிடைத்த மிகச்சிறந்த சீடர். காந்தி யைக் கொலை செய்த நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ் சிலேயே வளர்ந்தவன். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் விடுதலை யான கோட்சேயின் தம்பி கோபால் கோட்சே தாங்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் என் பதை உறுதிப்படுத்தினார்.

“நாங்கள் அனைவரும் ஆர்.எஸ். எஸ்.இல் இருந்தோம் நாதுராம், தத்தாத்ரேயா, நான், கோவிந்த் எல்லோரும் எங்கள் வீட்டில் நாங்கள் வளர்ந்ததை விட ஆர்.எஸ். எஸ்.இல் வளர்ந்த வர்கள் என்று சொல்வதுதான் பொருத்தம். ஆர். எஸ். எஸ்.தான் எங்கள் குடும் பம். நாதுராம் அதில் பவுத்திக் காரிய வாஹ் ஆக (Intellectual Worker) பணியாற்றினார்.

தன் வாக்குமூலத் தில் நாதுராம் தான் ஆர்.எஸ்.எஸ்.ஐ விட்டு வெளியேறியதாகச் சொன்னார். காரணம், கோல்வால்கரும் ஆர். எஸ்.எஸ்சும் கொலைச் சம்ப வத்துக்குப் பிறகு மிகுந்த நெருக்கடிக்கு உள்ளானது தான். ஆனால் நாதுராம் ஆர்.எஸ். எஸ்.ஐ விட்டுப் போகவில்லை.’’ www.sscnet. ucla.edu/southasia/History/Hindu_Rashtra/nathuram.html) நாதுராம் கோட்சேக்கும் ஆர். எஸ். எஸ் அமைப்புக்கும் தொடர்பில்லை என்று காந்தி கொலை வழக்கை முடித்தார்கள். சர்வர்க் கருக்கும் தொடர்பில்லை என்று கூறி அவரையும் காப்பாற்றினார்கள். பட்டேலைத் தவிர வேறு எவராவது உள்துறை அமைச் சராக இருந்திருந்தால் சாவர்க்கர் தப்பியி ருக்க முடியாது.

ஆனால், கொலைச் சதியிலிருந்து காந்தி தப்பித்திருப் பார். காந்தி சில வாரங்களில் கொல் லப்படுவார் என்று முன்கூட்டியே தெரிந்திருந்தும், தகவல் உரிய காலத்தில் கிடைத்தி ருந்தும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏன் செய்ய வில்லை? காந்தியை ஏன் காப்பாற்ற முடியவில்லை

நரேந்திர மோடி கோரும் மத சார்பின்மை வல்லபாய் பட்டேலிடம் இருந்தது. அது முஸ்லிம்கள் விரட்டப்படுவதை, கொத்துக் கொத்தாய் கொல்லப்படுவதை ஏற்றுக் கொண்டது. 2002இல் இஸ்லாமியர்களைக் குஜராத்தில் படுகொலை செய்த நரேந்திரமோடி தனக்கு முன் மாதிரியாக சர்தார் பட்டேலைக் கொள்வதில் ஒரு பொருத்தப்பாடு இருக்கிறது.

(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழில் வெளியானது)

Pin It