வங்கத்திலுள்ள சிட்டகங்க் நகரத்திற்கு அருகில் கர்ணபூலி நதிக்கரையோர கிராமமான ஸ்ரீபூரில் ஜமீன் குடும்பத்தில் 1914ம் ஆண்டு பிறந்தவர் கல்பனா. கல்பனாவின் குடும்பத்தினர் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தின் ஈடுபாடு கொண்டிருந்தனர். தன்னுடைய 13 வயதில் சிட்டகாங்கில் நடைபெற்ற காங்கிரஸ் மாணவர் மாநாட்டில் உரை நிகழ்த்தினார். அதன்பின் பல மேடைகளில் கலந்து கொண்டு பேசினார்.

இதன் மூலம் புரட்சி இயக்கமொன்றில் பணியாற்றிய தஸ்தீதார் என்ற இளைஞரின் தொடர்பு கல்பனாவுக்கு கிடைத்தது. அவர் கல்பனாவின் புரட்சிகரச் சிந்தனையை ஆழமாக்கினார். மேலும் பல புரட்சிகரத் தோழர்கள் கல்பனாவுக்கு நண்பர்களானார்கள். இவர்கள் அனைவரும் இணைந்து ‘இந்தியக் குடியரசுப் படை’என்ற அமைப்பை உருவாக்கினர். அதன் மூலம் மக்களின் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து போராடினர்.

கல்பனா உடற்பயிற்சிக் கழகத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார். கூடவே சிலம்பாட்டத்திலும், படகுசவாரியிலும், துப்பாக்கி சுடுவதிலும் தீவிரமாக ஈடுபட்டார். இதன் தொடர்ச்சியாக வெடிகுண்டு தயாரிக்கும் பணியில் ஈடுபடத் தொடங்கினார். அவர் தயாரித்த வெடிகுண்டுகள் சிறைச்சாலைகள், அரசு கட்டிடங்கள் ஆகியவற்றில் வைக்கப்பட்டன. தாக்குதல்களுக்கு தானே தலைமையேற்று சென்றார் கல்பனா.

தொடர்ச்சியான போராட்டங்கள், கைது, தலைமறைவு, சிறைவாழ்க்கை போன்றவற்றை முழுமனதோடு ஏற்றுக்கொண்டார் அவர். ராணுவ அதிகாரியை கொலை செய்ய முயற்சித்ததாக கைது செய்யப்பட்ட போது மிகக்கொடுமையான சித்ரவதைகளை கல்பனா அனுபவிக்க வேண்டி இருந்தது. இராணுவத் துப்பறியும் அதிகாரி ஸ்டீவன்சன் கல்பனாவை சாட்டையால் விளாசித் தள்ளியவாறு, ராணுவ அதிகாரியை கொலை செய்ய நோக்கம் என்ன என்று கேட்டான். அதற்கு கல்பனாவின் பதில் “நீங்கள் எங்கள் சுதந்திரத்தை பறித்து விட்டீர்கள், நாங்கள் எங்கள் சுதந்திரத்திற்காக போராடுகிறோம்”.

Pin It