புத்தம் சரணம் (கட்டுரைகள்)
அ.மார்க்ஸ்
வெளியீடு: கறுப்புப் பிரதிகள்
45ஏஇஸ்மாயில் மைதானம்
லாயிட்ஸ் சாலை
சென்னை-5.
விலை ரூ.50.

தமிழ்ச்சூழலில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல், பொருளியல், கல்வி, கலாச்சாரம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் மாற்றுக்கள் குறித்த ஆழ்ந்த தேடல்களின் வழி விவாதங்களை உருவாக்கியதிலும், மாற்றுக் கருத்துக்களை ஒருங்கிணைத்து பொதுவெளியில் (ஓரளவு வெகுசன ஊடகங்களில்கூட) அவற்றைக் கொண்டுசென்றதும் நிறப்பிரிகையின் - குறிப்பாக - அ.மார்க்சின் பங்களிப்பு முதன்மையானதாகும்.

இந்துத்துவத்தின் கொடுநெறிகளை பல்வேறு எதிர்ச்சொல்லாடல்களினூடாக அம்பலப்படுத்திக் கொண்டிருப்பது ஒரு அறிவு ஜீவியாக அ.மா.தொடர்ந்து செய்துவரும் அரும்பணியாகும். இந்நிலையில் “இந்துத்துவம் என்பது ஒரு மதமல்ல அதுவொரு வாழ்க்கைமுறை” (பிரமோத் மகாஜன்) என்று இந்து பயங்கரவாதிகள் தத்துவக்களத்திலும் அவ்வப்போது மென்முகம் காட்டிப் பல்லிளித்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் தனது புத்தம் சரணம் நூலின் மூலம் பௌத்தத்தை ஒரு மாற்று வாழ்நெறியாக அறிவியல் தொகுப்பாக முன்மொழிந்துள்ளார் தோழர் அ.மார்க்ஸ். அந்தவகையில் அவரின் இந்துத்துவ எதிர்ப்புச் செயல்பாடுகளின் நீட்சியாகவே இந்நூலைக் காணமுடிகிறது.

மனிதகுல வரலாற்றில் மதங்களின் இடைக்கால சமூகப்பங்களிப்பை பேராசான் மார்க்ஸ் தொடங்கி அறிஞர் அம்பேத்கர், பெரியார் போன்றோரும் அங்கீகரித்துள்ளனர். போலவே பெர்ட்ரண்ட் ரசல், அனடோல் பிரான்ஸ், அல்பர்ட் அய்ன்ஸ்டீன், சார்லஸ் எ கின்செய்ட், தேவிபிரசாத், கோசாம்பி, ராகுல்ஜி, நேரு, ஆர்.எஸ். சர்மா, டாக்டர். ராதாகிருஷ்ணன் போன்ற பகுத்தறிவு ‘மதச்சார்பற்றஞ’ இடதுசாரி உலகசிந்தனையாளர்கள் பலரும் 2500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட பௌத்தத்தின் புரட்சிகரத் தன்மைகளால் ஈர்க்கப்பட்டனர். இங்கே பௌத்த சிந்தனைகளை ஒரு மதமாக அணுகாமல் மாற்று வாழ்நெறியாகக் கொண்டு அதன் அறிவியல் கூறுகளை தமக்கேயுரிய வியப்பூட்டும் எளியமொழியில் அ.மா. தொகுத்தளித்துள்ளார்.

புத்தர் தோன்றுவதற்கு முன்பிருந்த கங்கைச் சமவெளியின் நிலை - அவர் பிறந்து வளர்ந்தது- அறிவெழுச்சியடைந்தது - அறிவுப்பரவலுக்காக கிராமம் கிராமமாக, நகரம் நகரமாகப் பயணம் செய்தது - பரிநிர்வாணம் எய்தியது... என்று புத்தரின் வாழ்க்கை வரலாற்றை விவரிப்பதன் மூலமாக பௌத்தத்தின் சமூக - அரசியல் - கலாச்சார பரிமாணங்களை தெளிவாக விளக்கிச் செல்கிறார். அதனூடாக பெரும்பான்மையான எளிய மக்களுக்கான வாழ்நெறியாக பௌத்தம் விளங்கி வந்துள்ளதை அறிய முடிகிறது.

பொதுமைப் பண்புகள் நிறைந்த இனக்குழு - குடியரசுகளும் காடுகளும் அழிந்து - மருதநில மயமாக்கலும் உபரிகளும் தனிச்சொத்துக்களும் தழைத்த முடியரசின் காலம்தான் புத்தரின் காலம், பார்ப்பணிய நால்வருண முறையை - சாதியம் - பிராமண சத்ரியக் கூட்டாதிக்கம் நின்று தழைத்த காலம். வேள்விகளிலும், யாகங்களிலும் எளிய உயிர்கள் எரியூட்டப்பட்ட காலம். மொத்தத்தில் பார்ப்பனீயத்தின் பொற்காலம். இத்தகைய காலச்சூழலில் வாழநேர்ந்த புத்தர் அவற்றுக்கான தீவிர எதிர்வினைகளினூடாக உயிர் தரித்திருந்தார். இவ்வாறு அழிந்துகொண்டிருந்த இனக்குழு வாழ்வின் சமத்துவக் கூறுகளை இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு எங்கனம் புத்தர் மீட்டெடுத்துச் சென்றார் என்பதை அ.மார்க்ஸ் மிகச் சிறப்பான முறையில் எடுத்துரைக்கிறார்.

ஆன்மாவே நிலையான ஒளியாகும் என வலியுறுத்தும் வேத உபநிடத சிந்தனைகளுக்கு எதிராக “நீயே உன் கைவிளக்கு” என மாற்று சிந்தனையை பௌத்தம் வழங்கியது. சித்தார்த்தர் தான் புத்தராக உருப்பெற்றதை பிரம்மத்தில் கரைந்து அமைதியாதல் என்கிற பிராமண மதக் கோட்பாட்டிற்கு நேர்மாறாக “எழுச்சிபெறுதல்” - விழிப்படைதல் எனப் பகர்கிறார். சித்தார்த்தன் துறவுநிலை மேற்கொண்டதற்கு பல்வேறு புனைவுகள் காரணமாக்கப் பட்டுள்ள நிலையில், ரோகினி நீர்ப்பங்கீட்டுப் பிரச்சனையில் சாக்கியர்க்கும் கோலியகுலத்தோர்க்குமிடையே உருவாகவிருந்த போரைத் தடுப்பதற்காகவே சித்தார்த்தர் துறவுபூண முடிவுசெய்தார் என்று அம்பேத்கரின் கூற்றிலிருந்து அ.மா. முன்வைக்கும் பகுத்தறிவு சார்ந்த காரணம் கவனத்திற்குரியது.

1. போர் சத்திரியதருமம் என்பதற்கு மாற்றாக அன்பையும் கருணையையும் முதன்மைப் படுத்துதல்.
2.வருண-சாதி வேற்றுமைகளுக்கு மாறாக எல்லாவிதமான வேறுபடுத்தல்களுக்கும் ஒதுக்கல்களுக்கும் அப்பாற்பட்ட துறவுநிலை.
3. தருக்கங்களைப் புறக்கணித்து பிரம்மத்தை சரணடைதல் என்பதற்கு மாறாக தருக்கங்களின் ஊடாக(அவற்றை பெரிய அளவில் பொருட்படுத்தாமல்) முரண்களை ஏற்றலும் அவற்றில் திளைத்தலும்.
4. தியானத்தினால் உண்டாகும் உடல்ஞிமன பரவசங்கள் தற்காலிகமானவை. மனித துயரங்களிலிருந்து விடுபட அது வழியல்ல என்பது.
5.கட்டற்ற களிப்பு என்கிற உலகாய்த சிந்தனைக்கும் - உடல் வருத்த தியானம் என்கிற யோக நிலைக்கும் இடைப்பட்ட மத்திம பாத்ததை கைக்கொள்ளுதல்.
6. சாராம்சம் - ஸ்வதர்மம் - ஆத்மம் - என்கிற பார்ப்பனீயக் கோட்பாடுகளை மறுத்ததின் மூலம் வருண-சாதி வேறுபாடுகளை மறுக்கும் வலுவான எதிர் கோட்பாடுகளாக அநிச்சம் - துக்கம் - அனாத்மம் என்பனவற்றை முன்வைத்தல் என்று இத்தத்துவத்திலிருந்து போதிசத்துவம் முரண்படும் புள்ளிகளாக அ.மார்க்ஸ் விரிவான முறையில் விளக்கிச் செல்கிறார்.

பார்ப்பனீய இந்துமதத்தால் பௌத்தம் உள்வாங்கி செரிக்கப்பட்டதும், அதன் வீழ்ச்சிக்கான காரணங்கள் குறித்தும் விரிவான செய்திகளைக் கூறும் அ.மா., கூடவே சமகால அரசியல்ஞி கலாச்சாரப் பிரச்சனை ஒன்றையும் தொட்டுச் சென்றிருக்கலாம். இந்துஞிசைவ மதங்கள் பௌத்தத்திற்கு இழைத்த கொடுமைகளும் அதன் சமகாலச் சான்றுகளும் பள்ளிகள், ஆலயங்கள், காவுகள், அய்யனார் மேடைகள் அனைத்தும் பௌத்த அடையாளங்கள்தான் என்று மயிலையார் தொடங்கி அயோத்திதாசர் வரை நிறுவியுள்ளனர்.

அயோத்திக்குப் பிறகு மதுரா, காசி என்று இந்து பயங்கரவாதிகள் அழிமதிக்கான திட்டங்கள் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் - பௌத்த அடையாளங்களை மீட்டெடுப்பதும் - அவை குறித்த சொல்லாடல்களை புழக்கத்தில் விட்டு இந்துத்துவத்தின் கோரமுகத்தை அம்பலப் படுத்துவதும் உடனடித் தேவையாகும்.

Pin It