தமிழ் வேதம் எனப் போற்றப்படும் திருக்குறளின் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் 1730 ஆம் ஆண்டு இலத்தீன் மொழியில் பெயர்த்தவர். தமிழ் அகராதித் துறைக்கு மூலவர். தமிழ் எழுத்துக்களில் சீர்திருத்தம் கொண்டு வந்தவர். தமிழின் மரபினையொட்டி `தேம்பாவணிஎன்ற சிறந்த காப்பியம் படைத்தவர். தமிழ் இலக்கண மரபுப்படி கவிதைகள் புனைந்தவர். தமிழ் மொழியில் பிரபந்தம், கலம்பகம், அம்மானை, கலிப்பா எனப் பதிகம் தொடங்கி, `பாவகைகள் பலவற்றில், செய்யுள் இயற்றியவர். தமிழில் உரைநடை படைத்தவர். தமிழ் இலக்கியங்களை மேலை நாட்டு மொழிகளில் மொழிபெயர்த்தவர். “தாமே தமிழானார்; தமிழே தாமானார்!” என்று தமிழ் இலக்கியவாணர்கள் போற்றும் வண்ணம், தமிழுக்காக வாழ்ந்தவர். அவர்தான் இத்தாலி நாட்டில் பிறந்து, தமிழகம் வந்து தமிழ்த் தொண்டாற்றிய `கான்ஸ்டண்டைன் ஜோசப் பெசுகி `வீரமாமுனிவர்!

Veeramamunivarஇத்தாலி நாட்டில் வெனிஸ் மாநிலத்தில் மாந்துவா என்னும் மாவட்டத்திலுள்ள காஸ்திகிளியோனே என்ற சிற்றூரில் 08.11.1680 ஆம் நாள் பிறந்தார். தந்தையார் கொண்டோல்போ பெசுகி. அவர் இளமையிலேயே தாய்மொழிக் கல்வி பள்ளியில் சேர்ந்து கல்வி பயின்றார். 1698 ஆம் ஆண்டு, தமது 18-ஆவது வயதில் துறவுபூண்டு, இயேசு சபையில் தொண்டராகச் சேர்ந்தார். சமயப் போதகருக்குரிய பயிற்சி பெற்றார். 1706 ஆம் ஆண்டு சமய வேதாகமங்களை முiறாகப் பயின்று குருப்பட்டம் பெற்றார்.

இத்தாலி நாட்டில் தமது இளமைப் பருவத்திலேயே இத்தாலி, இலத்தீன், பிரெஞ்சு, கிரேக்கம் முதலிய மொழிகளில் தேர்ச்சி பெற்று விளங்கினார். தத்துவமும், இறையியலும் பயின்றார்.

 தமிழகத்திற்குக் கிறித்துவ மதத்தைப் பரப்பிட, 1711 ஆம் ஆண்டு வருகை புரிந்தார். தமிழகத்தில் கோவை, தூத்துக்குடி, மணப்பாடு , மதுரை காமநாயக்கன்பட்டி முதலிய ஊர்களில் தங்கி சமயப்பணி ஆற்றினார். தமிழ் பயின்றதுடன், தெலுங்கு, கன்னடம், வடமொழி முதலிய மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார்.

அக்காலத்தில் தென்னாட்டில் சந்தா சாகிபு என்னும் முஸ்லிம் மன்னர் ஆண்டு வந்தார். சந்தா சாகிபு வீரமாமுனிவரின் ஆழ்ந்த படிப்பையும், அறிவின் பரப்பையும், தூய வாழ்வையும், பெருமையையும் உணர்ந்து, அவருக்கு ‘இஸ்மாத்தி சந்நியாசிஎன்னும் பட்டமளித்துப் பாராட்டினார். ‘இஸ்மாத்தி சந்நியாசிஎன்றும் பாரசீகத் தொடருக்குத் ‘தூய துறவிஎன்பது பொருள்.

கான்ஸ்டண்டைன் ஜோசப்பு பெஸ்கி என்னும் தமது பெயரை ‘தைரியநாதர்என மாற்றிக் கொண்டார். அப்பெயரே, பின்னர் ‘வீரமாமுனிவர்என்னும் விழுமிய பெயராய் வழங்கலாயிற்று.

திருக்குறள், கம்ப இராமாயணம், சீவக சிந்தாமணி முதலிய தமிழிலக்கிய நூல்களைக் கற்றார். தமிழ் மொழியை நன்கு பயின்று கவிதை இயற்றும் ஆற்றலும் பெற்றார். பழனி சுப்பிரதீபக் கவிராயரிடம் சங்க இலக்கியங்களையும், காப்பியங்களையும், இலக்கண நூல்களையும், தமிழ்ப் பனுவல்களையும் தெளிவுரக் கற்றார்.

தஞ்சைக்கு அருகில் உள்ள ஏலாக்குறிச்சிக்கு வருகை தந்து, அங்கு தங்கி சமயப் பணிகளை மேற்கொண்டார். அங்கு ஒரு திருச்சபையை நிறுவினார். புதிய ஆலயம் அமைத்து, அதில் அன்னை மேரியின் திருவுருவை நிறுவனார். அந்த ஆலயம் ‘அடைக்கல மாதா ஆலயம்என்றழைக்கப்படுகிறது. ஏலாக்குறிச்சியில் சமயப்பணி ஆற்றிக்கொண்டு இருந்த போது, சித்த மருத்துவ பணியிலும் ஈடுபட்டார். அரியலூர் பெருநிலக்கிழார் அரங்கப்ப மழவராயரின் இராச பிளவை என்னும் நோயைக் குணமாக்கி, நூற்று எழுபத்தைந்து ஏக்கர் நிலத்தை 05.08.1735 அன்று நன்கொடையாக பெற்றார். அதற்குரிய கல்வெட்டு இன்றும் பேணி பாதுகாக்கப்பட்டு வருகிறது.

விருத்தாசலம் என்று தற்போது அழைக்கப்படும் திருமுதுகுன்றத்தை அடுத்த கோனான்குப்பம் என்னும் ஊரில் சமயப்பணி ஆற்றியதுடன், அங்கு தேவமாதாவுக்கு ஒரு ஆலயம் எழுப்பினார்.

`ஜைனமத நூலான `சீவக சிந்தாமணியைப் போன்ற, கிறித்துவ மதத்துக்காகவே சிறந்த காவியம் ஒன்றைப் படைக்க விருப்பம் கொண்டார். `தேம்பாவணிஎன்னும் காப்பியத்தை எழுதினார். இக்காப்பியம் தமிழில் தோன்றிய முதல் கிறித்துவக் காப்பியம் என்று போற்றப்படுகிறது. வேற்று நாட்டைச் சேர்ந்த ஒருவர், தமிழகம் வந்து, தமிழ் பயின்று, சிறந்த காப்பியம் ஒன்றைத் தமிழில் படைத்த பெருமைக்குரியவர் வீரமாமுனிவர்!

தேம்பாவணி மூன்றாயிரத்து அறுநூற்றுப் பதினைந்து விருத்தப்பாக்காளால் ஆனது. இந்நூல் மூன்று காண்டங்களையும், 36 படலங்களையும் கொண்டுள்ளது. மதுரை தமிழ்ச்சங்கத்தில் தமிழ் அறிஞர்களால் தேம்பாவணி வெகுச் சிறப்பாக அரங்கேற்றம் செய்யப்பட்டது. தமிழ் அறிஞர்கள் நூலின் சிறப்பினை போற்றியதோடு ‘தையரிநாதருக்கு ‘வீரமாமுனிவர்என்னும் சிறப்புப் பட்டம் வழங்கி பாராட்டினார்கள்.

`தேம்பாவணிக் காப்பியத்தில், காலப்போக்கில் இடைச்செருகல் அமைந்துவிடாமல் இருக்க எச்சரிக்கையாக, பாடல்கள், படலங்களின் எண்ணிக்கைகளைக் குறிப்பாகச் சுட்டிக்காட்டியுள்ளார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே, பாடல்களில் சில மேல் நாட்டு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட சிறப்புப் பெற்றது. தமிழில் முதன் முதல், முழுமையாக அச்சில் வந்த சிறப்புடையது. கீர்த்தனை, சிந்து, வசன காவியம், விருத்தியுரை, உரைநடை, சுருக்கம் ஆகிய பல்வேறு வடிவங்களைக் கொண்ட பெருமையுடையது. `அன்பை விதைப் போருக்கு அன்பே கிட்டும்என்ற உயர்ந்த சிந்தனையை ஊட்டுவது. `தேம்பாவணிக் காப்பியம், தமிழ்நாட்டு மரபோடு ஒன்றிய, தீந்தமிழ்க் காப்பியம் எனக் கிறித்துவ மக்களால் போற்றப்படும் புனித நூலாகும்!

`தேம்பாவணிகாப்பியத்தை இயற்றியதற்காக வீரமாமுனிவருக்கு, `செந்தமிழ்த் தேசிகர்என்னும் பட்டம் வழங்கப்பட்டது.

சென்னைக் கலெக்டராய் இருந்த எல்லீசு பிரபு என்பவர் தேம்பாவணியினை அகில உலகிற்கும் அறிமுகம் செய்திடக் கருதி, அந்நூலில் உள்ள சில செய்யுட்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து வெளியிட்டார்.

தமிழ் இலக்கணத்தை விரிவாக ஆராய்ந்து `தொன்னூல் விளக்கம்என்ற இலக்கண நூல் இயற்றியுள்ளார். அந்நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து கூறுகளையும் அழகிய முறையில் விளக்கியுள்ளார்.

பல பெயர்களைக் கண்ட பொருட்களின் பெயர்ச் சொற்களைத் தொகுத்துப் `பெயரகராதிஎனவும், பொருள்களின் பெயர்களைத் தொகுத்து `பொருளகராதிஎனவும் சொற்கள் பலவாகக் கூடிநின்று ஒரு சொல்லாக வழங்குவதைத் தொகுத்துத் `தொகையராதிஎனவும், எதுகை மற்றும் ஓசை ஒன்றாக வரும் சொற்களை வரிசைப்படுத்தித் `தொடையகராதிஎனவும் அமைத்துத் தமிழுக்குச் செழுமை சேர்த்தவர்! `சதுரகராதிகண்ட பெருமையும் வீரமாமுனிவரையே சாரும். தமிழ் மொழியில் தோன்றிய நிகண்டுகளில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது இந்தச் ` சதுரகராதி.

திருக்காவலூர்த் திருத்தலத்தையும், ஏலாக்குறிச்சியில் உள்ள அடைக்கலமாதாவையும் போற்றும் வண்ணம் `திருக்காவலூர் கலம்பகம்பாடியுள்ளார்.

செந்தமிழ் மொழியில் பயிலும் சொற்களை வகுத்தும் தொகுத்தும் அகராதி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உழைத்தார். அவரது இடைவிடா உழைப்பின் பயனாக 1732 ஆம் ஆண்டு ‘சதுரகராதிஎன்னும் பெயரால் சிறந்த ஓர் அகராதி வெளிவந்தது. இதுவே தமிழில் வெளிவந்த முதல் அகராதி ஆகும்.

ஒரு மொழி அகராதி சதுரகராதி, இரு மொழி அகராதி-தமிழ்-இலத்தீன்-அகராதி. மூன்று மொழி அகராதி போர்த்துக்கீஸ்-இலத்தீன்-தமிழ்-அகராதி உருவாக்கியதால், `தமிழ் அகராதியின் தந்தைஎனப் போற்றப்பட்டார்.

வீரமாமுனிவர் பிரெஞ்சு-தமிழ் அகராதியை தயாரித்து 1744 ஆம் ஆண்டு வெளியிட்டார்.

அவற்றுள் தமிழ்-இலத்தீன் அகராதியில் ஒன்பதாயிரம் தமிழ்ச் சொற்களுக்கு இலத்தீன் மொழியில் விளக்கமளித்துள்ளார். போர்த்துக்கீசியம்-தமிழ்-இலத்தீன் அகராதியில் நான்காயிரத்து நானூறு போர்த்துக்கீசியச் சொற்களுக்கு தமிழிலும், இலத்தீனிலும் உரை எழுதியுள்ளார். இவ்விரண்டு அகராதிகளின் துணையால் பிற நாட்டினர் தமிழைக் கற்பதற்கும், தமிழர் பிற மொழிகளைப் பயில்வதற்கு வழி வகுத்தார்.

வீரமாமுனிவர் மேனாட்டு மொழிகள் பலவற்றை கற்றுத் தேர்ந்த பண்டிதர். அவர் அம்மொழிகளில் உள்ள வசன நூல்கள் பலவற்றைப் படித்து மகிழ்ந்தவர்; அம்மொழிகளைப் போல தமிழ் மொழியிலும் வசன நூல்கள் பெருகுதல் வேண்டும் என்னும் விருப்பம் கொண்டார் அவ்விருப்பத்தால் வசன நூல்கள் பல எழுதித் தமிழ் மொழியை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுப்பட்டார்.

வீரமாமுனிவர் எழுதி அளித்த வசன நூல்களுள் ‘பரமார்த்த குரு கதைஎன்னும் நூல் தலைச்சிறந்தது ஆகும். அந்நூல் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மனி, தெலுங்கு கன்னடம் உட்பட 54 மொழிகளில் மொழிப் பெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது.

`பரமார்த்த குரு கதையைத் தமிழில் எழுதி உரைநடை வளர்ச்சிக்கு வித்திட்டார். அந்நூல் `எள்ளல் சுவைமிகுந்த இலக்கிய உரைநடை என்பதால், இவர், `உரைநடைச் செம்மல்எனவும் அழைக்கப்பட்டார்.

தமிழில் வரலாற்று நூல்கள் வருவதற்கு, அடித்தளமிட்டவர் வீரமாமுனிவர்! அவர் எழுதிய `வாமன் சரித்திரம்அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு!

தொன்னூல் விளக்கம், `செந்தமிழ் இலக்கணம் , `கொடுந்தமிழ் இலக்கணம், `இலக்கணத் திறவுகோல்ஆகிய இலக்கண நூல்களையும், `திருக்காவலூர் கலம்பகம், `கித்தேரியம்மாள் அம்மானை, `அடைக்கல மாலை, `அடைக்கலநாயகி மேல் வெண் கலிப்பாமுதலிய சிற்றிலக்கியச் செய்யுள்களையும், `வேதவிளக்கம், `வேதியர் ஒழுக்கம், `பேதகம் மறுத்தல்போன்ற உரைநடை நூல்களையும் படைத்துள்ளார்! வீரமாமுனிவரின் வேதியர் ஒழுக்கம் என்னும் நூல் தெலுங்கிலும், கன்னடத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. “பெஸ்கியாரின் உரைநடை நூல்களுள் வியத்தகு நூல் வேதியர் ஒழுக்கமேஎன்று ஜி.யூ.போப் பாராட்டியுள்ளார். பலரும் படித்து பயன் பெறத்தக்க வசன நூல்கள் பலவற்றை ஆக்கித் தந்து தமிழ் மொழிக்குப் பாடுப்பட்ட வீரமாமுனிவரை ‘வசன நடை வல்லாளர்என்றும் ‘தமிழ் மறுமலர்ச்சி உரைநடையின் தந்தைஎன்றும் தமிழுலகம் போற்றிப் பாராட்டியது.

வைத்திய நச காண்டம்என்னும் நூலில் வீரமாமுனிவர் முப்பது மருந்துகளின் செயல்முறைகளைக் கூறியுள்ளார். இந்நூலை போளூர் நாராயணசாமி பதிப்பித்துள்ளார். வீரமாமுனிவரின் ‘இரணவாகடம்என்னும் மருத்துவ நூலை வேங்கடாசலமும், ‘அநுபோக வைத்திய சிகாமணிஎன்னும் நூலை வாசுதேவனும் பதிப்பித்துள்ளனர்.

திருக்காவலூரில் ஒரு கல்லூரியை ஆரம்பித்து அதில் தாமே தமிழாசிரியராக இருந்து இலக்கணம் கற்பித்தார்.

தமது வாழ்நாளில் முப்பத்தைந்து நூல்கள் படைத்தளித்துள்ளார். அகராதி ஆக்கம், இலக்கணப் படைப்பு, எழுத்து வரிவடிவச் சீர்திருத்தம், உரைநடை மறுமலர்ச்சி, கடித இலக்கிய வளர்ச்சி, காப்பியப்புனைவு, சித்த மருத்துவ நூலாக்கம், சிறுகதைத் தோற்றம், சிற்றிலக்கிய எழுச்சி, தமிழ் இலத்தீன் உறவுப்பாலம், மொழியியல் முனைப்பு, வள்ளுவத்தை வையக நூலாக்கும் முயற்சி, சமய நல்லிணக்கச் சால்பு என்று பல்வேறு துறைகளில் வீரமாமுனிவர் நற்பணியாற்றியுள்ளார்.

தமிழகத்தில் வாழ்ந்த புலவர்களுள் பல்துறை வித்தகராகத் திகழ்ந்தவர் வீரமாமுனிவரே! இலக்கண அறிவு, இலக்கியப் புலமை, மொழியியல் உணர்வு, பக்தி இலக்கிய ஆற்றல், ஆய்வியற் சிந்தனை, பண்பாட்டில் தோய்வு எனப்பல்வகையிலும் சிறந்தவர்! அவர்தம் திறமையைப் பயன்படுத்தித் தமிழுக்கு ஆற்றியுள்ள பணிகள் தமிழக வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும். தமிழுக்காகவே வாழ்ந்து தொண்டு செய்து புகழ் எய்திய வீரமாமுனிவர் 04.02.1747ஆம் நாள் அம்பலக்காட்டு குருமடத்தில் இயற்கை எய்தினார். 

வீரமா முனிவர் தைரிய நாதர் விரிதமிழ்க் கலைமணம் கமழும்

ஆரமா முனிவர் அகத்தியர் போல அருளினார் அரிய நன்னூல்கள்.

சாரமாந் தேம்பா வணியினைத் தொடினும் தமிழ்மணங் கமழுமென் கரமே!

ஈரமா நெஞ்சில் இடம் பெற்ற நட்டால் இன்பமாய் மலருமென் வாழ்வே!”

 -              என்று கவியோகி சுத்தானந்த பாரதியார் வியந்து போற்றியுள்ளார்.

வீரமாமுனிவர் மாசற்ற யேசுநாதர் காட்டிய நெறியைத் தமிழகம் எங்கும் பரப்பி வெற்றி கண்டவர். பல்வேறு துறைகளில் நூல்கள் ‘இயற்றித் தமிழ் மொழிக்குச் செயற்கரிய பணி செய்து சிறப்புற்றவர்என்று பெரும்புலவர் ஈ.பண்டாரம் நம்பியார் போற்றிப் புகழ்ந்துள்ளார்.

- பி.தயாளன்

Pin It