சொல்லோடு சொல்லையும் கருத்தோடு கருத்தையும் ஒப்பு நோக்கி, சுவையும் பயனும் காணும் ஒப்பாராய்ச்சித் திறன் பெற்றவர். தனது மேடைப் பேச்சு மூலம் தமிழ் உணர்ச்சியையும், தமிழ் அறிவையும் பட்டி தொட்டியெல்லாம் பரப்பியவர். தனித்தமிழ் நடையில் கட்டுரைகள் வரைந்து தமிழ் உலகுக்குப் பெருமை சேர்த்தவர். “அருமையான தமிழ்ச்சொல் இருக்க, ஆங்கிலத்தை எடுத்தாளுதல் அறிவீனம் அல்லவா? கரும்பிருக்க இரும்பைக் கடிப்பார் உண்டோ?” என தாய்மொழி தமிழின் வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டவர். ‘செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை’ எனத் தமிழ் அறிஞர்களால் போற்றப்பட்டவர். மொழி ஆராய்ச்சித் துறையில் புதுத் திருப்பத்தையும், மேம்பாட்டையும் அளித்தவர். அவர்தான் ‘சொல்லின் செல்வர்’ எனப் போற்றப்படும் பேராசிரியர் இரா.பி. சேதுப்பிள்ளை ஆவார்.

rpsதிருநெல்வேலிக்கு அருகில் உள்ள இராசவல்லிபுரம் என்னும் ஊரில், பெருமாள்பிள்ளை – சொர்ணம்மாள் தம்பதியினருக்கு பன்னிரெண்டாவது பிள்ளையாக 1896 ஆம் ஆண்டு பிறந்தார். இராசவல்லிபுரம் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஆரம்பக் கல்வி கற்றார். 5 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பாளையங்கோட்டை சேவியர் உயர்நிலைப்பள்ளியிலும், புகுமுக வகுப்பின் இரண்டாண்டு படிப்பை திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும், இளங்கலை படிப்பை சென்னை பச்சையப்பர் கல்லூரியிலும் பயின்று தேர்ச்சி பெற்றார்.

மாணவர் பருவத்திலேயே தமிழ்த் தேர்வுகளிலும், தமிழ்ப் பேச்சுப் போட்டிகளிலும், தமிழ் வளர்ச்சித் தொண்டிலும் தலைசிறந்து விளங்கினார். இவரது பேச்சாற்றலைக் கண்டு வியந்த பச்சையப்பர் கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியர் திருமணம் செல்வகேசவராயர், அதே கல்லூரியில் சிற்றாசிரியராக பணிபுரிய வாய்ப்பை ஏற்படுத்தி நல்கினார். கல்லூரியில் பணிபுரிந்து கொண்டே சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டக் கலை பயின்றார்.

திருநெல்வேலிக்குச் சென்று, தமிழகத்தின் முன்னாள் மாநில அமைச்சரும், புகழ் பெற்ற வழக்கறிஞருமான எஸ்.முத்தையா முதலியாரிடம் பயிற்சி பெற்றார். வழக்கறிஞர் தொழிலில் பெரும் புகழுடன் விளங்கினார்.

நெல்லை நகர மக்கள் அவரது பொது நலத்தொண்டைப் பார்த்து, நெல்லை நகர் மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தனர். அவர் அந்நகராட்சியின் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமது இருபத்து மூன்றாம் வயதிலேயே இப்பொறுப்புகளை ஏற்றுச் சிறப்புடன் செயலாற்றினார்.

இவரது தமிழ்ப் புலமையை அறிந்த அண்ணாமலை பல்கலைக்கழகத்தார், தமிழ் விரிவுரையாளராக அமர்த்தினர். இவர் பேராசிரியர் கா.சு.பிள்ளை, விபுலானந்த அடிகளார், நாவலர் சோமசுந்தர பாரதியார் முதலிய தமிழறிஞர்கள் தலைமையில் ஆறு ஆண்டுகள் அருந்தமிழ்ப் பணியாற்றினார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1936 ஆம் ஆண்டு, தலைமைத் தமிழ் விரிவுரையாளராக பணியில் சேர்ந்தார். அப்போது தமிழ்த் துறை தலைவராக விளங்கிய எஸ். வையாபுரிபிள்ளை அவர்களுடன் இணைந்து சென்னை பல்கலைக்கழகத்தின் சார்பில் தமிழ்ப் பேரகராதியின் இணைப்புத் தொகுதியை முடித்து வெளியிட அரும்பாடுபட்டார். உள்நாட்டு – அயல்நாட்டு ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாக விளங்கினார்.

சென்னைப் பல்கலைக் கழகத்தில் கிழக்கு நாடுகள் கலை ஆய்வு மலரில் ஆங்கிலத்தில் ஒன்பது ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், தமிழில் இரண்டு ஆராய்ச்கிக் கட்டுரைகளையும் எழுதி தமிழுக்குப் பெருமை சேர்த்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1955-ம் ஆண்டு நடைபெற்ற அனைத்திந்திய கீழை நாடுகள் கலை ஆராய்ச்சி மாநாட்டுக்கு தலைமை தாங்கி அவர் ஆற்றிய பேருரை சென்னைப் பல்கலைக்கழக வெளியீடாக வரப்பெற்றது. தமிழ் கலைக் களஞ்சியத்தில் கட்டுரைகள் வரைந்து கலைக் களஞ்சியம் வெளிவர தனது உழைப்பை நல்கினார்.

தமிழில் சுருக்க அகராதி தயாரித்தல், மொழி இலக்கியம் நலம் கருதி நிபுணர் குழுக்களில் இடம் பெற்று தொண்டாற்றுதல், கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் சிறப்பு வகுப்பு நடத்துதல், தென்னாட்டுப் பல்கலைக் கழகங்களில் தமிழ்த்துறை செழிக்கப் பாடுபடுதல், முதலிய பணிகளை தனது வாழ்நாள் பணியாக ஆற்றி வந்தார்.

‘தமிழ் பேசுவது தாழ்வு’, ‘தமிழில் உரையாற்றுவது இழிவு’ என்று அந்நாளிலிருந்த சூழ்நிலையைப் பேராசிரியர் இரா.பி.சேதுப்பிள்ளை தமது மிடுக்கான பேச்சால் மாற்றியமைத்தார். ‘கம்ப இராமயணச் சொற்பொழிவுகள்’, ‘சிலப்பதிகாரச் சொற்பொழிவுகள்’ , ‘கந்தபுராணச் சொற்பொழிவுகள்’, ‘திருக்குறள் சொற்பொழிவுகள்’ முதலிய சொற்பொழிவுகளை நிகழ்த்தி தமிழுக்குப் பெருமை சேர்த்தார்.

“நன்றாக எழுதப்பட்ட ஒரு வாழ்க்கை வரலாறு, நன்றாக வாழ்ந்த ஒரு வாழ்க்கையைப் போன்று அரியது. படிப்பதற்கு மிகவும் இன்பமும், பயனும் பயக்க வல்லது வாழ்க்கை வரலாறு” என்று அறிஞர் கார்லைல் கூறியது போல, பேராசிரியர் இரா.பி. சேதுப்பிள்ளை, ‘தமிழ்நாட்டு நவமணிகள்’ என்ற தமது நூலில் ஆதிரையார், விசாகையார், மருதியார், கோப்பெருந்தேவியார், மணிமேகலையார், கண்ணகியார், புனிதவதியார், மங்கையர்க்கரசியார், திலகவதியார் ஆகிய ஒன்பதின்மர் வாழ்க்கை வரலாறுகளைச் சுருக்கி தமிழுலகுக்கு அளித்துள்ளார்.

“உண்மையாகவே ஒரு நூலின் அடையாளம் என்பது, அது புதியதாகவும், எதையாவது சொல்வதாயும் அமைய வேண்டும். அப்படிச் சொல்வதையும், புதிய முறையிலும் தனக்கே உரிய நடையிலும் சொல்ல வேண்டும்” - என பேரறிஞர் ஹட்சன் இலக்கிய நூலின் தன்மை குறித்துக் கூறியுள்ளார். அந்த கோட்பாட்டின் அடிப்படையில் தனது வாழ்நாள் பணியாக ‘ஊரும் பேரும்’ என்ற அரிய நூலை தமிழுலகுக்கு அளித்துள்ளார். அந்த நூலில் ஆயிரத்து முன்னூற்றுக்கும் மேற்பட்ட ஊர்களின் பெயர்களையும் ஆராய்ந்து விளக்கியுள்ளார். மேலும், அந்த நூலில், நிலம் - மலை – காடு – வயல் – ஆறு – கடல் – நாடு – நகரம் - குடி – படை – குலம் - கோ – தேவு – தலம் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்து ஊர் பெயர் ஆராய்ச்சியை நிகழ்த்தியுள்ளார். அந்த நூலில் அவர் தந்துள்ள குறிப்புகள் தமிழ் வரலாற்று உலகுக்கு, பெரு விருந்தாகும் என பேராசிரியர் ந. சஞ்சீவி புகழ்ந்துரைத்துள்ளார்.

“நடை என்பது ஒரு ஆசிரியன் அணியும் ஆடையன்று. அது அவன் உடலோடு ஒட்டிய தோலேயாகும்” என்று மேல்நாட்டு அறிஞர் கார்லைல் கூறியது போல பேராசிரியர் இரா.பி. சேதுப்பிள்ளை எளிய தமிழ் நடையில், இலக்கிய செய்திகளையும், ஆராய்ச்சி முடிவுகளையும் தமிழர்களுக்குப் புலப்படுத்தும் வண்ணம் தமது கட்டுரைகளை அளித்துள்ளார்.

“உரையாடல் இழிநகையற்ற இனிமையுடையதாய், செயற்கையற்ற சதுரப்பாடுடையதாய், தாழ்வற்ற தாராளமுடையதாய், கரவற்ற கல்வி நலமுடையதாய், பொய்மையற்ற புதுமை உடையதாய் இருத்தல் வேண்டும்” என உரையாடல் கலைபற்றி இலக்கிய மேதை ஷேக்ஸ்பியர் கூறியுள்ளதை மனதில் கொண்டு, பேராசிரியர் இரா.பி. சேதுப்பிள்ளை தனது நூல்களைப் படைத்துள்ளார்.

‘தமிழ்நாட்டு நவமணிகள்’, ‘திருவள்ளுவர் நூல்நயம்’, ‘சிலப்பதிகார விளக்கம்’, ‘கால்டுவெல் ஐயர் சரிதம்’, ‘வேலும் வில்லும்’, ‘வழிவழி வள்ளுவர்’ , ‘அலையும் கலையும்’, ‘தமிழர் வீரம்’, ‘வேலின் வெற்றி’, ‘கடற்கரையிலே’, ‘திருக்காவலூர் கோவில்’, ‘கம்பன் கவிநயம்’, ‘சிலப்பதிகார நூல்நயம்’, ‘சொற்களும் அவற்றின் பொருட்சிறப்பும்’, ‘தமிழ் இன்பம்’, ‘இலக்கியத் தமிழும் பேச்சுத் தமிழும்’ முதலிய முப்பதிற்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்தளித்துள்ளார்.

‘குமரன்’, ‘ஆனந்தபோதினி’ முதலிய இதழ்களில் இருநூறுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார், அக்கட்டுரைகள் தமிழார்வத்தையும், நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் ஊட்டுவதாக அமைந்துள்ளன. மேலும் அவரது கட்டுரைகள் தமிழாராய்ச்சிக்குத் தூண்டுகோலாக விளங்குகின்றன. பேராசிரியர் இரா.பி. சேதுப்பிள்ளை இருபதாம் நூற்றாண்டு தமிழ் உரைநடையில் கட்டுரைக் கலைக்கு பெரும் வாழ்வு நல்கியவரென்று போற்றப்படுகிறார்.

‘கந்தபுராணத் திரட்டு’, ‘பாரதியார் இன்கவித் திரட்டு’, ‘செஞ்சொற் கவிக்கோவை’, ‘தமிழ்க் கவிதைக் களஞ்சியம்’, முதலிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.
தனித்தமிழின் இனிமையையும், ஏற்றத்தையும் மெய்ப்பித்து அரை நூற்றாண்டு காலம் தமிழ் மொழி வளர்ச்சிக்காக தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.

இவரது பேச்சாற்றலைப் போற்றி தருமையாதீனம் 1950-ஆம் ஆண்டு ‘சொல்லின் செல்வர்’ என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது. தமிழ் எழுத்தாளர் சங்கம் 1954-ஆம் ஆண்டு இவரது தமிழ்த்தொண்டைப் பாராட்டி கேடயம் வழங்கிச் சிறப்பித்தது. தமிழ் வளர்ச்சிக் கழகம் ‘ஊரும் பேரும்’ என்ற நூலுக்கு சிறந்த ஆராய்ச்சி நூலுக்கான பரிசளித்தது. 1955-ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி ‘தமிழின்பம்’ என்ற நூலுக்கு விருது வழங்கிச் சிறப்பித்தது.

சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு விழாவின்போது, ‘ இலக்கியத் துறைப் பேரறிஞர்’ என்னும் பட்டம் வழங்கி பாராட்டப்பட்டார்.

செந்தமிழ் பேச்சுக்கும், செந்தமிழ் எழுத்துக்கும் மட்டுமின்றி செந்தமிழ் வாழ்வுக்குமே தனது வாழ்நாள் முழுவதும் தொண்டாற்றிய பேராசிரியர் இரா.பி. சேதுப்பிள்ளை 1961-ஆம் ஆண்டு தமது அறுபத்தைந்தாவது வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தார். அவர் மறைந்தாலும், தமிழர் நெஞ்சில் என்றென்றும் தமிழ் மணக்க வாழ்ந்திருப்பார்.

- பி.தயாளன்

Pin It