பத்தொன்பதாம் நூற்றாண்டில் (1823-1874) தமிழ்ச் சமூகத்தில் வாழ்ந்த சிதம்பரம் இராமலிங்கம் எனும் வள்ளலார் குறித்த தொன்மங்கள் சுவையானவை. சில தனி மனிதர்களின் செயல்பாடுகள் பெரிதும் தனித்து இருக்கும் போது, அவர்களை சமகால நிகழ்வுகளிலிருந்து அந்நியப்படுத்தி, தொன்மங்களை உருவாக்கி, அவரை "கடவுள்” தன்மைமிக்கவராகக் காட்டுவது மரபு. பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த வள்ளலாருக்கும் மேற்குறித்த தன்மை நிகழ்ந்தது. சாகாக்கலை கைவரப்பெற்று அவர் மறைந்து விட்டதாக இன்றும் நம்பப்படுகிறது. அவர் மீண்டும் வருவார் என்றும் சொல்லப்படுகிறது. வள்ளலார் தொடர்பான இவ்வகையான தொன்மை உருவாக்கம் குறித்த உரையாடல் இங்கு நிகழ்த்தப்படுகிறது. அவரது செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு இவ்வுரையாடலை நாம் நிகழ்த்தலாம்.

1823ஆம் ஆண்டில் மருதூர் என்னும் சிற்றூரில் பிறந்தார். பிறந்த அடுத்த ஆண்டே அவரது குடும்பம் சென்னைக்கு இடம் பெயர்ந்தது. இளமை வாழ்க்கை சென்னையில் தொடங்கியது. தமது 12ஆம் வயதில் அவர் கவிதை பாடத் தொடங்கியதாகக் கருதப்படுகிறது. 1835 முதல் வள்ளலார், புற உலகில் செயல்படத் தொடங்கினார் என்று கருத முடியும். விவரம் அறியா பருவத்தில் தந்தையை இழந்தவர். தமது தமையனால் வளர்க்கப்பட்டவர். தாயையும் இளமையில் இழந்தவர். பெற்றோரை இளம் வயதில் இழந்து வாழும் மனநிலையைக் கவனத்தில் கொள்வது அவசியம். 1858 ஆம் ஆண்டு வரை சென்னையில் வாழ்ந்திருக்கிறார். பிரித்தானியர் ஆட்சிக் காலங்களில், சென்னை அப்போது நகரமாக வளர்ந்து வந்த காலம்.

இந்நகரின் மீது ஈடுபாடு அற்றவராகவே அவ்வூரில் வாழ்ந்திருக்கிறார். இக்காலங்களில், திருவொற்றியூர், திருத்தணிகை ஆகிய இடங்களில் உள்ள இறைவனைப் பற்றிய பாடல்களைப் பாடியவராக வாழ்ந்தார். இவைகளே பின்னர் 1867இல் ஐந்து திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டவை. 3269 பாடல்களை இக்காலங்களில் பாடியிருக்கிறார். ஆறாம் திருமுறையில் உள்ள சில பாடல்களும் இக்காலங்களில் பாடப்பட்டவை. 34 ஆண்டுகள் சென்னையில் வாழ்ந்தபோது, திருமணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் நடந்தேறின. இக்காலங்களில் இவரது வாழ்க்கை பற்றிய ஆதாரபூர்வமான தகவல்கள் கிடைப்பது என்பது அரிது. எனவே தொன்மங்களாகவே சில நிகழ்வுகள் இக்காலங்களில் இவரைப் பற்றிக் கூறப்படுகின்றன. வள்ளலாரைப் புரிந்துகொள்ள அவை பெரிதும் உதவாது. இக்காலங்களில் இவர் மேற்கொண்ட பதிப்புப்பணிகள், ஓரளவு இவர் குறித்த புரிதலுக்கு உதவக்கூடும். 1851இல் "ஒழிவிலொடுக்கம்” எனும் நூலைப் பதிப்பித்துள்ளார். இக்காலங்களில் பெரிதும் விவாதத்தில் இருந்த வேதாந்தம், சித்தாந்தம் குறித்த உரையாடலின் ஒரு வடிவமாக இச்செயலைப் பார்க்கலாம்.

சைவ சித்தாந்தங்களான மெய்கண்ட சாத்திரங்களின் தொடர்ச்சியாக, சைவ சித்தாந்தம் குறித்துப் பேசும் நூலாக இதனைக் கருதமுடியும். இவ்வகையில் சைவ சித்தாந்தப் புரிதலில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு, அதன் வெளிப்பாடாகவே இந்நூலை வள்ளலார் பதிப்பித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக 1854இல் இவரால் உருவாக்கப்பட்ட உரைநடை நூல் "மநு முறை கண்ட வாசகம்”. வேதாந்தத்தை எதிர்கொண்ட வள்ளலார், சித்தாந்தத்தை முதன்மைப்படுத்தினார் என்பதற்கு மேற்குறித்த செயல்பாடுகள் சான்றுகளாக அமைகின்றன. வேதாந்தம் - சித்தாந்தம் என்பது அன்றைய சூழலில் தமிழ்மரபு - வைதீக மரபு என்ற இருமைகளின் முரண்களாகச் செயல்பட்டிருக்க வேண்டும். இத்தன்மை சார்ந்து வள்ளலார் எவ்வகையில் செயல்பட்டார் என்பது குறித்தும் விரிவாகப் பேச இடமுண்டு. அவரது சிந்தாந்த ஈடுபாடு, பின்னர் அனைத்தையும் இணைக்கும் முயற்சி ஆகியவை குறித்து தனித்து விரிவாக உரையாட இடமுண்டு. அதனை வேறு சந்தர்ப்பத்தில் செய்யலாம்.

வள்ளலாரின் "மநு முறை கண்ட வாசகம்”, அவரது செயல்பாடுகளில் ஒரு திருப்புமுனையாகக் கருதலாம். அன்றைய சூழலில் உரைநடை வடிவத்தில் எழுதுவது என்பதே ஓர் அரசியல் செயல்பாடு. இதனை ஆறுமுக நாவலர் பெரிதும் உணர்ந்து செயல்பட்டார். அவரது "பெரிய புராண வசனம்” இதனை உறுதிப்படுத்தும். (உரைநடை குறித்த அவரது பார்வைகள் குறித்து பிரிதொரு கட்டுரையில் விரிவாகப் பேசியுள்ளேன்.) நாவலர் உரைநடை குறித்துக் கூறியுள்ள பின்வரும் செய்திகள், அன்றைய உரைநடையின் அரசியலைப் புரிந்துகொள்ள உதவும்.

"செய்யுள் வடிவாகிய நூல்களும் அவைகளின் உரைகளும் கற்றுவல்லார் சிலருக்கன்றி மற்றவர்களுக்குப் பயன்படாவாம். ஆதலால், விவேகமில்லாதவர்களுக்கும், விவேகமுள்ளவர்களுள்ளும் இங்கிலீசு பாஷையைக் கற்றலிலும் வெளகிகங்களைச் செய்தலிலும் தங்கள் காலத்தைப் பெரும்பான்மையும் போக்கிறவர்களுக்கும், பெண்களுக்கும் எளிதிற் பயன்படும் பொருட்டு, நீதி நூல்களையும், சரித்திரங்களையும், சமய நூல்களையும், வெளகிக நூல்களையும் வெளிப்படையாகிய வசன நடையிற் செய்து, அச்சிற் பதிப்பித்துப் பிரகடனஞ் செய்தல் வேண்டும்.” (திருக்கோவையார்: 1860)

இவ்வகையில் தமிழ் உரைநடை குறித்து, தமிழில் முதன்முதல் விரிவான அகராதி உருவாக்கிய வின்சுலோ, மாயூரம் வேதநாயகம்பிள்ளை ஆகிய பிறர் கூறியுள்ள செய்திகள், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை அரசியலைப் புரிந்துகொள்ள உதவும். இது குறித்து பிறிதொரு சந்தர்ப்பத்தில், வரிவாகப் பேசலாம். இங்கு வள்ளலார் தமது மநுமுறை கண்ட வாசகத்தை உரைநடையில் உருவாக்கியது மேற்குறித்த பின்புலத்தில் புரிந்து கொள்வது அவசியம். வைதீக மரபு சார்ந்த "மநு தர்மம்” பேசப்பட்ட சூழலில், சைவ மரபு சார்ந்த, பெரிய புராண வழிப்பட்ட "மநு” பற்றி இவர் பேசுவதும் வேறொரு கோணத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தியாகும். வள்ளலார் என்ற மனிதர், வேதாந்தம்-சித்தாந்தம், சைவமரபு - வைதீக மரபு என்ற இருமைகள் குறித்த புரிதலோடு செயல்பட்டவர் என்றும் கருதமுடியும். இது நிற்க,

"மநுமுறை கண்ட வாசகத்”தில் வள்ளலார் என்ற மனிதநேயம் மிக்க மனிதரை நாம் பார்க்க முடியும். அவரது பின்கண்ட வரிகள் இப்பின்புலத்தில் குறிப்பிடத்தக்கவை.

"நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!
வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!
தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!
கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!
மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!
குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!
தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ!
மண்ணோரம் பேசி வாழ்வழித்தேனோ!
உயிர்க்கொலை செய்வோர்க்கு உபகாரஞ் செய்தேனோ!
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ!
பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ!
ஆசை காட்டி மோசஞ் செய்தேனோ!
வரவுபோக் கொழிய வழியடைத்தேனோ!
வேலை யிட்டுக் கூலி குறைத்தேனோ!
பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ!
இரப்போர்க்குப் பிச்சை இல்லையென்றேனோ!
கோள் சொல்லிக் குடும்பங் குலைத்தேனோ!
நட்டாற்றிற் கையை நழுவ விட்டேனோ!
கலங்கி யொளிந்தோரைக் காட்டிக் கொடுத்தேனோ!
கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ!
காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ!
கணவன்வழி நிற்போரைக் கற்பழித்தேனோ!
கருப்ப மழித்துக் களித்திருந்தேனோ!
குருவை வணங்கக் கூசி நின்றேனோ!
குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ!
கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ!
பெரியோர் பாட்டிற் பிழை சொன்னேனோ!
பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ!
கன்றுக்குப் பாலூட்டாது கட்டி வைத்தேனோ!
ஊன்சுவை யுண்டு உடல் வளர்த்தேனோ!
கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ!
அன்புடை யவர்க்குத் துன்பஞ் செய்தேனோ!
குடிக்கின்ற நீருள்ள குளம் தூர்த்தேனோ!
வெய்யிலுக் கொதுங்கும் விருக்ஷ மழித்தேனோ!
பகை கொண்டு அயலோர் பயிரழித்தேனோ!
பொது மண்டபத்தைப் போயிடித்தேனோ!
ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ!
சிவனடியாரைச் சீறி வைதேனோ!
தவஞ்செய் வோரைத் தாழ்வு சொன்னேனோ!
சுத்த ஞானிகளைத் தூஷணஞ் செய்தேனோ!
தந்தைதாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ!
தெய்வ மிகழ்ந்து செருக்கடைந்தேனோ!
என்ன பாவம் செய்தேனோ! இன்னதென் றறியேனே!

(மநு முறை கண்ட வாசகம்)

மகனது செய்கையால் மநுச்சோழன் புலம்புவதாக எழுதப்பட்டிருக்கும் இவ்வரிகள், வள்ளலார் என்ற மனித நேயரின் சொற்களாகக் கருத வேண்டும். சமகால வாழ்வின் அவலங்கள் அனைத்தையும் பட்டியல் இட்டுத் தந்துள்ளார். பத்தொன்பதாம் நூற்றாண்டு குறித்து அறிய உதவும் அரிய சமூக ஆவணமாக இவ்வரிகள் அமைகின்றன. இவ்வகையான மனநிலையோடு வாழ்ந்தவர், சென்னை நகரை விட்டுக் கிளம்பி 1858 இல் கருங்குழி என்னும் சிற்றூரில் வேங்கட ரெட்டியார் என்பவர் வீட்டில் தங்கத் தொடங்கினார். 1867 வரை, ஒன்பது ஆண்டுகள், இப்பகுதியில் வாழ்ந்தார். பின்னர் 1867-1870 வரை கடலூரில் வாழ்ந்தார். வள்ளலர் என்ற மனிதரின் செயல்பாடுகள் முற்றும் முழுதாக வேறு தளத்தில் செயல்படத் தொடங்கிய காலம் 1865-1974 என்று கூறுமுடியும். இறுதிக் காலங்களில் அவரது செயல்பாடுகளை பின்கண்டவாறு தொகுத்துக் கொள்ளலாம்.

- அவருடைய "ஜீவகாருண்ய ஒழுக்கம்” என்னும் படைப்பு இக்காலத்தில்தான் உருவானது.

- சுத்த சன்மார்க்க சங்கம் (1865), சத்திய தருமச் சாலை (1867), சத்தியஞான சபை (1872), சித்திவளாகம் (1870) ஆகியவை இக்காலங்களில்தான் உருப்பெற்றன.

- "அருட்பா” தொகுக்கப்பட்டு முதல் ஐந்து திருமுறைகள் 1867இல் வெளிவந்தது. ஆறாம் திருமுறை அவரது மறைவிற்குப் பின்பு (1888) வெளிவந்தது.

ஐம்பது ஆண்டுகள் ஒன்பது மாதங்கள் - மட்டுமே வாழ்ந்த வள்ளலாரின் கடைசி ஒன்பது ஆண்டுகளே, அவரைப் புரிந்துகொள்ளப் பெரிதும் உதவும் காலம். இளமை முதல் சிவ வழிபாடு மிக்க இளைஞராக வளர்ந்து, திருமூலர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், சேக்கிழார், தாயுமானவர் ஆகிய பிற சைவப் பெரியவர்களின் ஆக்கங்களில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு வாழ்ந்தவர். 1865 வரை அவர்களைப் போலவே பாடல்களை எழுதி வந்தவர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் நேரடித்தாக்கங்களுக்கு உட்பட்டவர் என்பதை அவரது "மநு முறை வாசகம்” தவிர, பிற ஆக்கங்களில் நேரடியாக அறிவது அவ்வளவாக இல்லை. பாரம்பரியமான சைவப் பாடல்களாகவே அவரது பாடல்கள் இருந்தன. ஆனால் அவரது இறுதிக் காலங்களில் பாடியவை பெரும்பகுதி ஆறாம் திருமுறையாக (1888) தொகுக்கப்பட்டுள்ளன. அப்பாடல்களில் பல, முன்னர் உள்ள பாடல்களின் பாடுபொருளிலிருந்து வேறுபட்டிருப்பதைக் காண முடிகிறது. மிகப்பெரும் மனித நேயராக அவரை ஆறாம் திருமுறைப் பாடல்களே வெளிப் படுத்துகின்றன.

"சாதியும் மதமும் சமயமும் பொய் என
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி”

(அருட்பெருஞ்சோதி அகவல் - ஆறாம் திருமுறை)

"சாதி சமயச் சழக்கைவிட்டேன் அருட்
ஜோதியைக் கண்டேனடி – அக்கச்சி”

(ஆறாம் திருமுறை - அக்கச்சி 129)

எனப் பல வகையில் சாதி, மதம் தொடர்பான - விமரிசனங்களைப் பிற்காலங்களில்தான் வெளிப்படுத்துகிறார். மனிதனின் பசியே முதன்மையான செயல் என்பதாகப் பலபடக் கூறுகிறார். 1865இல் சன்மார்க்கம் தொடங்கிய காலத்தில் அவரால் எழுதத் தொடங்கிய நூல் "ஜீவ காருண்யம்”. அந்நூல் கருத்து என்பது பசிப்பிணிக்கு எதிரான போர் என்பதுதான். அந்நூலில் அவர் வெளிப்படுத்தும் கருத்து பின்வருமாறு:

"பசியினால் வருந்துகின்றவர்கள் எந்தத் தேசத்தாராயினும் எந்தச் சமயத்தாராயினும் எந்தச் சாதியாராயினும் எந்தச் செய்கையாராயினும் அவர்கள் தேச வொழுக்கம் சமயவொழுக்கம் சாதியொழுக்கம் செய்கையொழுக்கம் முதலானவைகளைப் பேதித்து விசாரியாமல், எல்லாச் சீவர்களிடத்தும் கடவுள் விளக்கம் பொதுவாய் விளங்குவதை அறிந்து பொதுவாகப் பார்த்து அவரவர் ஒழுக்கத்திற்குத் தக்கபடி அவர்கள் பசியை நிவர்த்தி செய்விப்பதே ஜீவ காருண்யம்.”

(ஜீவகாருண்ய ஒழுக்கம்)

இவ்வகையில் பசி பற்றிய அக்கறை கொண்ட இவர், அதனை நடைமுறைப்படுத்தவே "சத்திய தருமச் சாலை (1867) உருவாக்கி, அணையா அடுப்பை நடைமுறைப்படுத்தினார். பசி குறித்த இவரது அக்கறை, இக்காலங்களில் வேறு எவருக்கும் இவ்வகையில் இருந்ததாக அறிய முடியவில்லை. இவரது வாழ்நாளில் கடும் பஞ்சங்கள் ஏற்பட்டதைப் பார்த்திருக்கிறார். இவரது மறைவிற்குப் பிறகு 1875-79 ஆம் ஆண்டுகளில் சென்னை இராஜதானிப் பகுதியில் உருவான கடும் பஞ்சத்தின் ஆரம்பக் கூறுகளை இவர் நேரில் உணர்ந்திருக்கக்கூடும். எனவே மக்களுக்கு நாம் ஆற்றும் முதன்மைப் பணி பசி நீக்குதலே என்பதைத் தமது நடைமுறையாகக் கொண்டு வந்தவர் வள்ளலாராகத்தான் கருத வேண்டியுள்ளது. பஞ்சம் அதன் மூலம் ஏற்பட்ட துன்பங்கள், அதனால் மக்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியவை பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்படுத்திய விளைவுகள் அடிப்படையில், வள்ளலாரின் அணுகுமுறைகளைப் புரிந்துகொள்ள வேண்டிய தேவையுண்டு. (அதனை வேறு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பேசலாம்.)

சமூகத்தில் சமயத்துறையில் செயல்படுபவர்கள், வெறும் தொண்டு செய்பவர்களாக இருக்கும்வரை, எவருக்கும் சிக்கல் இல்லை. ஆனால், அவர்கள் நிறுவனங்களை உருவாக்கும் போது, பல்வேறு எதிர்விளைவுகளை சந்திக்க வேண்டிய தேவை ஏற்படுவது தவிர்க்க இயலாது. வள்ளலார் நிறுவனங்களை உருவாக்கத் தொடங்கும்போது, அவர் எதிர்கொண்ட செயல்பாடுகளைப் பின்கண்டவாறு தொகுத்துக் கொள்ளலாம்.

1867இல் இவரது பாடல்கள் அருட்பா என்னும் பெயரில் தொகுக்கப்பட்டு வெளிவந்தமை; 1865இல் இவர் உருவாக்கிய "சமரச சன்மார்க்க சங்கம்” ஆகியவை ஆறுமுக நாவலருக்கு உவப்பனதாக அமையவில்லை. எனவே அவர் தமது எதிர்விளைவுகளை காட்டுகின்றார்.

- இவர் உருவாக்கிய நிறுவனங்களின் செயல்பாடுகளில் ஈடுபட்டவர்கள், வள்ளலாருக்கு மனத்துன்பத்தைத் தருகிறார்கள்.

1851இல் வள்ளலார் பதிப்பித்த "ஒழிவிலொடுக்கம்” நூலை உருவாக்கிய "காழிக் கண்ணுடைய வள்ளலார்” என்பவர் பதினான்காம் நூற்றாண்டின் இறுதி பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (1375-1425) வாழ்ந்தவர். சமயத்தைப் பரப்புவதற்கான மடங்களை நிறுவியவர்களில் இவர் முதல்வராகக் கருதப்படுகிறார். (பார்க்க: மு. அருணாசலம் இலக்கிய வரலாறு 14 & 15 ஆம் நூற்றாண்டு). இவரை அடிப்படையாகக் கொண்டே தமிழ்நாட்டில் 14ஆம் நூற்றாண்டு முதல் சமயங்கள் உருவாக்கிய மடங்கள் உருப்பெற்றன. இவ்வகையில் உருவான சமய மடங்களின் தொடர்ச்சியாக, அதன் அடிப்படைத் தன்மைகளில் பெரிதும் வேறுபட்ட அமைப்புகளை வள்ளலார் உருவாக் கினார். இதே காலத்தில் ஆறுமுக நாவலரும் இவ்வகையான செயல்பாடுகளில் ஈடுபட்டார். குறிப்பாக, பிரித்தானியர் முன்னெடுத்த கல்வி நிறுவன உருவாக்கப் பணியில், அவரது பங்களிப்பு முதன்மையானது. இந்தப் பின்புலத்தில் நாவலர் - வள்ளலார் முரண்களைப் புரிந்து கொள்ளவேண்டும். வள்ளலார் முன்னெடுத்த சமரச சன்மார்க்கம், நாவலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இத்தன்மைகள் குறித்து, வள்ளலாரின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக எழுதிய ஊரன் அடிகள் பதிவு குறிப்பிடத்தக்கது.

"பழுத்த சைவராகிய ஆறுமுக நாவலருக்கு வள்ளற் பெருமானின் சமரச சன்மார்க்கக் கொள்கைகள் பிடிக்கவில்லை. அடிகளின் சீர்திருத்தக் கொள்கைகள் புறச்சமயத்தார்களுக்கு, முக்கியமாகக் கிறித்தவர்களுக்கு இடங்கொடுப்பதாக உள்ளனவென்று அவர் கருதினார். இக்காரணிகளால் வள்ளற் பெருமானின் மீது நாவலருக்கு ஒருவகை வெறுப்பு உண்டாயிற்று.” (இராமலிங்க அடிகள் வரலாறு. ப.425)

மேற்குறித்த பின்புலத்தில்தான் "போலியருட்பா மறுப்புப்” போர் உருப்பெற்றதாக ஊரன் அடிகள் எழுதுகிறார். வள்ளலார் உருவாக்கிய சத்திய தருமச் சாலையில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து வள்ளலாரின் 9-3-1872 கடிதத்தின் மூலம் அறிய முடிகிறது. அதில் பின்கண்டவாறு வள்ளலார் எழுதுகிறார்.

"அப்பாசாமி செட்டியாரவர்களுக்கு,

இந்த சாலையால் எனக்கு மிகவும் சலிப்புண்டாகிறது. அந்த சலிப்பு இரண்டு பக்கத்திலும் உபத்திரவம் பண்ணும். ஆதலால் சாலையில் இருக்கிறவர்கள் எல்லாம் சன்மார்க்கத்திற்கு ஒத்து வாயடங்கி மனமடங்கி இருக்க வேண்டும். என்மேல் பழிஇல்லை. சொல்லிவிட்டேன். பின்பு வந்ததைப் படவேண்டும்.”

வள்ளலார் உருவாக்கிய சத்திய ஞான சபை செயல்பாடுகள் குறித்து ஊரன் அடிகள் பதிவு செய்திருப்பதை நாம் கவனத்தில் கொள்வது அவசியம்.

"அடிகளின் கட்டளைகளுக்கிணங்க ஞானசபை இன்று நடைபெறவில்லை. நேர்மாறாகவே நடைபெறுகிறது. அடிகளின் கட்டளைகளுக்கு அறவே மாறாக நடக்கத் துணிந்தோர் அறியாமையால் அன்று. அறிந்தே நடக்கத் துணிந்தோர் - இன்ன பயனை அனுபவிப்பர் என்று கூற நாம் விரும்பவில்லை. அது அவர்களுக்குத் தெரியும். இரண்டொருவர் பயனை அனுபவிக்கத் தொடங்கி விட்டனர்...”

(மேற்படி நூல்: 482)

பிற்காலத்தில், வள்ளலார் உருவாக்கிய அமைப்புகள் செயல்பாடுகள் குறித்து திரு.வி.க. பதிவு செய்கிறார்.

"... சமரசக் கோயிலை (வடலூர் சபை) அமைத்துச் சென்றார். இங்கேயாதல் சுவாமிகள் கொள்கை ஆட்சியிலிருக்கிறதா? ஈங்கும் வழிப்பேய் புகுந்து தன்னாட்சி செலுத்துகிறது. இந்தக் கொள்ளைக்கு - இந்தக் கொலைக்கு - என் செய்வது? (இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம் (1955) ப.34)

இவ்வகையில் வள்ளலார் காலத்திலேயே அவர் உருவாக்கிய அமைப்புகள் சிக்கலுக்கு ஆட்பட்டதைக் காண்கிறோம். அதன் தொடர்ச்சிதான் மேற்குறிப்பிட்டவாறு தொடர்வதை நாம் உணர முடிகிறது. வள்ளலார் சித்தி வளாகத்திலும் தருமச் சாலையிலும் வசிப்பவர்கள் எவ்வகையில் ஒழுக வேண்டும் என்ற விதியையும் உருவாக்கியுள்ளார் (1872).

"..... கால பேதத்தால் அல்லது மற்ற வகையால் அவ்வத் தருணங்களில் நேரிடும் பேதத்தால் அல்லது மற்ற வகையால் அவ்வத் தருணங்களில் நேரிடும் குரோதத் தால் விளையும் துவேஷாதிகள் உண்டாயினாலும் .... எதிர்த்துச் சண்டை தொடுப்பவர்களும் இங்கிருத்தல் அனாவசியம். அப்படிப் பட்டவர்களை ஒரு பேச்சுமில்லாமல் இந்த இடம் விட்டுப் போய்விடத் தக்க முயற்சி ஒவ்வொரு வரும் செய்தல் வேண்டுவது.”

சி. இராமலிங்கம்
(திருஅருட்பா உரைநடைப்பகுதி - ப.436)

மேற்குறித்த தகவல்கள் அனைத்தும் வள்ளலார் உருவாக்கிய நிறுவனங்கள் செயல்பட்ட முறைமைகளைப் புரிந்து கொள்ள உதவுகின்றன. 1865ஆம் ஆண்டு முதல் வள்ளலார் பல்வேறு வகையிலும் உலக நிகழ்வுகளால் பெரிதும் பாதிப்புக்கு ஆட்பட்டு வந்ததைக் காண்கிறோம். இதன் விளைவாக அவர் ஒருவகையான மனப்பிராந்திக்கு (Hallucination) ஆட்பட்டார். இதனால் மன ரீதியாக ஒருவகையான உருவெளி மயக்கத்திற்கு ஆட்படுகிறார். இதன் விளைவு அவர் வடலூரில் வாழ விரும்பவில்லை. தாம் உருவாக்கிய சத்திய தருமச் சாலை, சத்திய ஞான சபை ஆகியவற்றை விட்டுவிட்டு, மேட்டுக்குப்பத்தில் சிறிய குடில் ஒன்றில் தங்கத் தொடங்குகிறார். வைணவர்களால் கட்டப்பட்ட அந்தக் குடிலில் சுமார் நான்கு ஆண்டுகள் வாழ்ந்தார். இக்காலப் பகுதி முழுவதும் அவர் பாடல்களிலும் உபதேசங்களிலும் மனப்பிராந்தி நிலைசார் தன்மைகள் இருப்பதைக் காண்கிறோம்.

தாம் தொடக்க காலத்தில் செயல்பட்டதையெல்லாம் மறுக்கிறார். அது "அற்ப அறிவு” என்கிறார். எந்தச் சமயத்திலும் இலட்சியம் வைக்க வேண்டாம் என்கிறார். "இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேல் ஏற்றியிருக்கிறார். இப்போது எல்லாவற்றையும் விட்டுவிட்டதினால் வந்த லாபம் இது...”

.... என்னை ஏறாநிலை மிசை ஏற்றி விட்டது யாதெனில் தயவு. தயவு என்னும் கருணைதான் என்னை தூக்கி விட்டது..... இப்போது என்னுடைய அறிவு அண்டாண் டங்களுக்கு அப்பாலும் கடந்திருக்கிறது.... (உரைநடைப் பகுதி: பேருபதேசம் 1974)

மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் நிகழ்த்திய இறுதிப் பேருபதேசம் என்பது, அவர் உலகத்தை மறுப்பதை உறுதிப்படுத்துகிறது. உலக நிகழ்வுகளை மறுக்கிறார். ஒளி வடிவம் பற்றியே பேசுகிறார். இச்சூழலில், ஜனவரி முப்பதாம் தேதி 1874இல் மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்தி வளாகத்தில், உட்புறம் தாழ்ப்பாளைப் போட்டுக் கொண்டார். அந்நாள் அவரது இறுதிநாள்.

வள்ளலார் என்ற மனிதர், தமது கடைசி ஆண்டுகளில், சாதிக்கு எதிராக, சமயத்துக்கு எதிராகப் போராடினார். பசிப்பிணி போக்கும் தயவே வாழ்க்கை என்று பேசினார். ஜீவ காருண்யமே தமது இலட்சியம் என்று வாதிட்டார். இவ்வகை நிகழ்வுகளுக்கு எதிரான விளைவாகத்தான் ஆறுமுக நாவலர் குழுவினர் செயல்பட்டனர். வள்ளலாரின் அமைப்பில் இருந்தவர்களும் அவரது கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டவர்களாக அவரால் கருத முடியவில்லை. அதற்கான சான்றுகளை நாம் காண முடிகிறது. எனவே அவர் உலக வாழ்வை மறுத்து, தம்மை மாய்த்துக்கொள்ளும் முடிவுக்கு வந்திருக்க வேண்டும். அவரது "மநுமுறை வாசகம்” (1851) தொடங்கி "ஜீவகாருண்ய ஒழுக்கம்” (1869) வரை அவரது மனிதநேய வளர்ச்சியை நாம் காணமுடிகிறது.

மனித நேயத்தை சமயம் வளர்க்கவில்லை என்பதை உணர்கிறார். எனவே அதனை விடுக்க அறைகூவல் விடுகிறார். இவ்வகையான செய்திகளை ஆறாம் திருமுறையிலும் உபதேசங்களிலும் "ஜீவ காருண்ய ஒழுக்கத்”திலும் காண முடிகிறது. இவை அனைத்தும் இவரது பிற்கால படைப்புகள் (1865-1974). இத்தன்மைகள் நடைமுறையில் சாத்தியப்படுத்த அவர் மேற்கொண்ட இயக்கம் சார்ந்த செயல்பாடுகள் தோல்வியடைகின்றன. இப்பின்புலத்தில், உலக மறுப்பு என்பதும் உடலை மாய்த்துக் கொள்ளுதலும் இயல்பாகவே நடைபெறும் சாத்தியக் கூறுகள் மிகுதி. மிகவும் கருணை மிக்க மனநிலையுடைய வள்ளலாருக்கு, "வாடிய பயிரைக் கண்டு வாடியவருக்கு” இவ்வகையான முடிவுகள் இயல்பாக அமையும். இதற்கான கூறுகளை அவரது இறுதிக்கால உபதேசங்கள் உறுதிப்படுத்துகின்றன.

வள்ளலாரின் இவ்வகையான முடிவை ஏற்றுக்கொள்ள இயலாத உலகம், அவர் பேசிய "மரணமிலாப் பெருவாழ்வு” என்ற கருத்தாக்கத்தையும், அவர் குறித்துப் புனையப்பட்ட தொன்மங்களையும் முதன்மைப்படுத்தி, அவரை தொன்மங் களால் கட்டமைத்துவிட்டனர். சமூகக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடியவர்கள் தொன்மங்களால் கட்டப் படுவது உலக வழக்கு. நமது கதைப் பாடல்களிலும், நாட்டார் கதைகளிலும் வரும் தொன்ம மனிதர்கள் போன்றே, சமயம் சார் தொன்ம மனிதராக வள்ளலார் கட்டப்பட்டு, மறைந்து விட்டதாகவும் மீண்டும் வருவதாகவும் பேசும் தொன்மங்கள் நிலைத்து விட்டன. அம்மனிதரின் செயல்பாடுகளை ஏற்றுக்கொள்ளாத உலகம், அவரை தொன்ம மனிதராக்கிவிடும் தந்திரத்தை மேற்கொண்டு விட்டது. "நேதாஜி சுபாஸ் சந்திர போசும் இன்னும் உயிரோடு இருக்கிறார்” என்று நம்பும் மனிர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அவ்வகையில் வள்ளலார் இறப்பை, மாயமாக்கிவிட்டார்கள். இதன் மூலம் அவரை மீண்டும் நவீன சைவராக்கி வழிபடுவதையும் காண்கிறோம். அவரது பாடல்களில் உள்ள ஒலிநயம் சார்ந்த கவர்ச்சி, ஈடுபடுபவரை வெகு ஆழமாக ஈர்க்கும் என்பது இயல்பு. வரலாற்றில் இவ்வகையான விநோதங்கள் இயல்பே. மேற்குறித்தப் பின்புலத்தில், தமிழகத்தில் ஜரோப்பிய புத்தொளித் தாக்கத்தால் செயல்பட்ட இயக்கம் 1878-1888 ஆண்டுகளில் செயல்பட்டதை அறிகிறோம். இந்து சுயாக்கியான சங்கத்தாரால் பரிபாலிக்கப்பட்டு வருகின்ற, வாராந்திர ஆங்கிலோ திராவிட சுயாக்கியான பத்திரிக்கை” ஒன்று 1882-1888 வரை வெளிவந்தது. "தத்துவ விவேசினி” என்ற அவ்விதழில் (மார்ச் 18, 1883) வள்ளலார் "தற்கொலை” புரிந்துகொண்டார் என்ற செய்தி வெளிவந்துள்ளது. அச்செய்தியை வள்ளலார் மீது ஈடுபாடு கொண்ட காஞ்சி வரதராஜ முதலியார் மறுத்துள்ளார். (25-3-1883) அதற்கு மறுப்பையும் "தத்துவ விவேசினி” அடுத்த இதழில் வெளியிட்டுள்ளது.

வள்ளலார் மறைவு குறித்து தொன்மக் கருத்தாக்கத்தில் மாட்டிக்கொண்டுள்ள நமக்கு அவர் மறைந்த ஒன்பதாவது ஆண்டில், அம்மறைவு குறித்துப் பேசப்பட்டுள்ள செய்தி முக்கியமானது. அவர் மறைந்து 15-20 ஆண்டுகளுக்குப் பின்பு மறைமலையடிகள், பின்னர் திரு.வி.க. ஆகியோரும் அவரது தொன்ம மறைவை ஏற்றுக் கொள்ளவில்லை. கிறித்தவ நிறுவனங்கள் அவரது செயல்பாட்டை சமகாலத்திலேயே விமரிசனம் செய்துள்ளன. 1871இல் இ. ஆக்ஸ் எனும் டேனிஷ் மிஷினரியைச் சார்ந்தவர் பின்வருமாறு கூறுகிறார்.

"ஏமாற்று வித்தைக்காரன் ஒருவன் வடலூர் வட்டாரத்தில் உலவுகின்றான். செத்தாரை எழுப்பப் போவதாகப் பறை சாற்றுகின்றான். மக்கள் சென்னை போன்ற இடங்களிலிருந்து வந்தபடி இருக்கிறார்கள். அண்மையில் கள்ளர் அவன் திரட்டி வைத்திருந்த செல்வத்தைச் சூறையாடிச் சென்றனர். ஆகவே இப்போது பணம் திரட்ட இப்புது வழியைக் கண்டுபிடித்திருக்கிறான்”.

(இந்தியாவில் தற்கால சமய இயக்கங்கள். மதி: இறாபின்சன் 1971)

இவ்வகையான பதிவுகளை முழுவதுமாகப் புறக்கணிப்பதற்கில்லை. வள்ளலார் பற்றிய தொன்மக் கதைகளில், திருடர்கள் திருட்டு பற்றி வருவதைக் காண்கிறோம். மேற்குறித்த செய்தியோடு இதனை இணைத்துப் பார்க்க வாய்ப்பு உண்டு.

இவ்வகையில் "தத்துவ விவேசினி” கூறும் வள்ளலாரின் தற்கொலை என்ற செய்தி நாம் கவனத்தில் கொள்ள வேண்டியதாக அமைகிறது. ஏனெனில் நாம் முன்னர் விளக்கியதைப் போல், வள்ளலாரைப் போன்ற மனிதர்கள் தற்கொலையைத் தெரிவு செய்வதற்கான நிறைய கூறுகளை அவரது கடைசி காலப் பதிவுகளில் காண முடிகிறது. அவரது உபதேசங்களும் கடைசிக் காலப் பதிகங்களும் அம்மனநிலையை உறுதிப்படுத்துகின்றன. இவ்வகையான மனப்பிராந்தி (Hallucination) அவருக்கு ஏற்பட்டமையும் அதனால் தன்னை மாய்த்துக் கொண்டதையும் ஏற்க மறுத்த உலகம், அவரை தொன்மங்களில் கட்டமைத்துவிட்டது. இத்தொன்மங்களை கட்டவிழ்த்து, ஒரு சமூகப் போராளியின் வாழ்வில் ஏற்பட்ட சோகமாகப் புரிந்துகொள்ள வேண்டிய தேவை நமக்குண்டு.

சான்றாதார நூல்கள்:

1. திருஅருட்பா ஐந்து திருமுறைகள், திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலைய வெளியீடு, இரண்டாம் பதிப்பு 2002.

2. திருஅருட்பா ஆறாம் திருமுறை, திருஅருட்பிரகாச தெய்வ நிலைய வெளியீடு: இரண்டாம் பதிப்பு 2002.

3. திருஅருட்பா உரைநடைப்பகுதி, இராமலிங்கர் பணி மன்றம் - சென்னை, இரண்டாம் பதிப்பு 1981.

4. திருஅருட்பா, திருமுகப் பகுதி - 1934, ஆ. பாலகிருஷ்ண பிள்ளை.

5. ஒழிவிலொடுக்கம், இரத்தின நாயக்கர் சன்ஸ் பதிப்பு.

6. இறாபின்சன் ஞான (பதிப்பு) இந்தியாவில் தற்கால சமய இயக்கங்கள். கிறித்தவ இறையியல் இலக்கியக் குழு 1971.

7. ராஜ் கௌதமன். கண்மூடி வழக்கம் எல்லாம் மண்மூடிப்போக. சி. இராமலிங்கம் 1823-1974 தமிழினி 2001.

8. ப. சரவணன், அருட்பா X மருட்பா, தமிழினி, 2001. 

நன்றி : கவிதா சரண்

Pin It