“தோழர்களே... நீங்கள் கடுமையாகச் சிந்திக்க வேண்டுகிறேன்...... என்று தன்னுடைய நீண்ட உரையின் இடையே திருவாரூர் தங்கராசு சொன்னால் இதற்குப் பிறகு மிக ஆழமான செய்திகள் – வரலாற்றுச் சம்பவங்கள் – புள்ளி விபரங்கள் எல்லாம் வரிசையாகக் கொட்ட காத்து நிற்கின்றன என்று பொருள்.

தந்தை பெரியாரின் தலைமையில் இருந்த திராவிடர் கழகத்திலிருந்து பேரறிஞர் அண்ணாவும் – அவரது நண்பர்களும் விலகியதற்குப் பிறகு திராவிடர் கழகத்தினுடைய தோழர்களால் அன்போடு – ஆர்வத்தோடு கேட்கப்பட்ட எழுச்சி மிகுந்த பேச்சாளர் ஒருவர் உண்டென்றால் அவர் திருவாரூர் தங்கராசு தான். அழகான இலக்கிய நடையில் பேச்சு போய்க் கொண்டே இருக்கும். திடீரென்று பாமர மக்களுக்கும் புரியும் எளிய நடைக்குப் பேச்சைத் திருப்புவார். இந்த உத்தி திராவிடர் கழகத்தின் மூத்த பேச்சாளர்களில் அவருக்கு மட்டுமே வெற்றி தந்தது என்று சொல்லலாம்.

தஞ்சை மாவட்டம் திருவாரூரில் பிறந்த தங்கராசு அவர்கள் துவக்கத்தில் பல்வேறு வணிக நிறுவனங்களினுடைய எழுத்தராகவும் – காசாளராகவும் பணியாற்றி இருக்கிறார். பிறகு திராவிடர் கழகத்தினுடைய பரப்புரையாளராக மாறியதற்கு பிறகும் அவர் நாடக ஆசிரியராகவும் – திரைப்பட கதை வசன கர்த்தாவாகவும் பணியாற்றி பொருள் ஈட்டி தன் சொந்த வருவாயிலேயே இன்று வரைக்கும் தன்மான வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறவர்.

“தேசத்தின் சொத்து உங்கள் சொத்து” என்று பொது இடங்களில் விளம்பரம் பார்த்திருப்பீர்கள். அது போல் கட்சியின் சொத்து என் சொத்து என்ற தாரக மந்திரத்தை சொல்லிக் கொண்டு மாளிகையில் வாழ்ந்து – மகிழ்ந்துகளில் பயணம் செய்த – மகா பெரிய தன்மான வீரர்கள் மத்தியில் திருவாரூர் தங்கராசு தன் உழைப்பையே நம்பி பொருள் ஈட்டி வாழ்ந்தார் – வாழ்கிறவர்.

அண்மையில் கூட புகழ் பெற்ற அவருடைய திரைப்படமான இரத்த கண்ணீரினுடைய கன்னடப் பதிப்பு வெளியாயிற்று. கர்நாடக திரையரங்குகளில் நூறு நாட்களுக்கு மேல் ஓடி பெரும் புகழையும் – பணத்தையும் குவித்தது. அந்தத் திரைப்பட தயாரிப்பாளர் திருவாரூர் தங்கராசுவை அழைத்து பெரிய விழா எடுத்து பாராட்டுச் செய்து ஒரு பெரும் தொகையை அவருக்கு அன்பளிப்பாகத் தந்தார். தமிழ்நாட்டில் திரைப்பட எழுத்தாளர்களில் இப்படி பெரும் புகழையும் – பொருளையும் ஈட்டியவர்கள் பேரறிஞர் அண்ணா – கலைஞர் ஆகியவர்களை விட்டால் திருவாரூர் தங்கராசு தான்.

இராமாயணம் என்ற அவருடைய நாடக நூலும் – திருஞான சம்பந்தர் என்ற நூலும் மேலோட்டமான நாடகப் படைப்புகள் அல்ல. இராமாயண நாடகத்தை உலகப் புகழ் பெற்ற வரலாற்று ஆசிரியர்கள் – நேரு பண்டிதரை போன்ற அரசியல் தலைவர்கள் – இலக்கிய கர்த்தாக்கள் இவர்களெல்லாம் எழுதிய நூல்களை பல மாதங்கள் படித்து ஆய்ந்து – தோய்ந்து அதன் பிழிவாக திருவாரூர் தங்கராசு கொடுத்திருக்கிறார். அவைகள் வெறும் பொழுது போக்குக் கதைகள் அல்ல. இந்த நாடகம் குறித்து எழுந்த பல பிரச்சனைகள் நீதிமன்றத்திற்கே போய் தங்கராசுவினுடைய கருதத்துகளுக்கு ஆதரவான தீர்ப்புக்களைப் பெற்றிருக்கின்றன. தமிழ்நாட்டு நாடக வரலாற்றில் இது ஒரு மறக்க முடியாத மைல் கல்.

தேவாரம் பாடிய சைவ – சமயத் தொண்டர்களில் முக்கியமானவர் திருஞான சம்பந்தர். அவருடைய வரலாறு முழுமையும் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட கற்பனை மலர்களைக் கொண்டு கட்டப்பட்ட மாலை. அதுபோலவே தெய்வீகமானது என்று இன்றும் பேசப்படும் அவருடைய திருவிளையாடல்கள் பல சினிமாவிலும் வரும் வில்லன்கள் மிஞ்சக் கூடிய மர்மங்கள் நிறைந்தது. சமயப் பரப்புதல்களுக்காக வன்முறையை கையில் எடுத்து நாட்டையே ரத்த களறியாக்கும் இன்றைய வன்முறை தீவிரவாதிகளினுடைய பீஷ்ம பிதாமகன் திருஞான சம்பந்தன் தான்.

இப்போதுள்ள மத தீவிரவாதிகள் கூட அரசாங்கங்களுக்கு அஞ்சித்தான் – மறைமுகமாக – வன்முறை – சம்பவங்களை அரங்கேற்றுகிறார்கள். ஆனால் அரசன் ஆணையோடு – அரசியின் அங்கீகாரத்தைப் பெற்று ஆயிரக்கணக்கான மாற்று சமயத்தவரை கொலைசெய்த நவீன ரஸ்புட்டின் திருஞான சம்பந்தர். அவருடைய வரலாற்றையும் பல்வேறு நூல்களில் இருந்து ஆதாரங்களை திரட்டி அதை ஒரு நூலாக ஆக்கி இருக்கிறவர் திருவாரூர் தங்கராசு. இராமாயணத்துக்குக் கிடைத்த அளவிற்கு அவருடைய திருஞானசம்மந்தருக்கு விளம்பரம் கிடைக்கவில்லை என்பது வருத்தத்துக்குரிய செய்தி. ஆனால் இவைகள் இரண்டும் காலத்தால் அழிக்க முடியாத கருத்துக் கருவூலங்கள்.

இவருடைய இராமாயண நாடகத்திற்காக நடிகவேள் எம்.ஆர்.ராதா ஏராளமான நீதிமன்றங் களின் படிக்கட்டுக்களில் ஏறி இறங்கினார். அவர் நடத்தின இராமாயண நாடகங்களில் கிடைத்த வருவாய்க்கு மேலே அதற்கான வழக்குகளுக்கு செலவழித்து விட்டார் என்று வேடிக்கையாக அப்போதெல்லாம் சொல்வார்கள்.

திருச்சியில் ஒருமுறை திருவாரூர் தங்கராசுவினுடைய இராமாயணம் நாடகம் பகுத்தறிவாளரான மின்வாரிய துணைப் பொறியாளர் ஒருவர் தலைமையில் நடைப்பெற்றது. பின்னாளில் அது பெரும் விவகாரம் ஆயிற்று. மத உணர்வுகளை புண்படுத்துகிற நாடகத்தில் எப்படி ஓர் அரசு அலுவலர் கலந்து கொள்ளலாம் என்று பெரிய பிரச்சனையாகி அவர் துறை சார்ந்த அதிகாரிகள் அவரை வேலை நீக்கம் செய்ய வேண்டுமென்று ஒரு கோப்பை உருவாக்கினார்கள்.

அந்த கோப்பு அன்றைய தமிழக முதல்வர் கலைஞரால் வரவழைக்கப்பட்ட ஆய்வு செய்யப்பட்டது. மின்வாரிய துணைப் பொறியாளரை வேலை நீக்கம் செய்ய வேண்டுமென்ற அந்தப் பரிந்துரையைக் கலைஞர் ரத்து செய்தார். அதற்குக் காரணமாய் கலைஞர் எழுதிய குறிப்பு கல்வெட்டில் பொறிக்க வேண்டிய வரலாற்று வரிகள். “உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் – நீதிபதிகளாகவும் இருக்கிறவர்கள் இராமாயண உபன்னியாசத்திற்கும் – பட்டிமன்றங்களுக்கும் சென்று தலைமை தாங்கி கருத்துரைகள் வழங்குவது பன்நெடுங்கால மாக வழக்கத்தில் இருக்கிற போது அதைப் போல் இன்னொரு இராமாயணத்திற்கு ஒரு பொறியாளர் தலைமை தாங்குவது சட்டத்தை மீறிய செயலாகாது” என்று குறிப்பெழுதினார். வேலை காப்பாற்றப்பட்ட அந்த துணைப் பொறியாளர் பின்னாளில் கலைஞர் ஆட்சிக் காலத்திலேயே தலைமை பொறியாளராக பணி உயர்வு பெற்றார். ஓய்வு பெற்றார். கலைஞருக்கு அந்த நன்றியை தினமும் செலுத்துகிறார். கலைஞரை எவ்வளவு முடியுமோ அவ்வளவு இழிவாகப் பேசியும் – எழுதியும்...........!

மதுரையில் நடைபெற்ற திருவாரூர் தங்கராசுவினுடைய இராமாயண நாடகத்தில் தேசீய கட்சியை சேர்ந்த ரவுடிகள் கலவரம் செய்தார்கள். (தேசீயக் கட்சி ரவுடிகள் என்பது என்னுடைய வார்த்தைகள் அல்ல குற்றப்பத்திரிக்கையில் இருந்தபடி நீதிபதி தன் தீர்ப்பிலேயே பயன்படுத்திய வார்த்தை) அந்த வழக்கு நீதிமன்றம் போயிற்று. அந்த உயர்நீதிமன்ற நீதிபதி இந்தச் சம்பவத்தைக் கடுமையாக கண்டனம் செய்து கலவரம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்கினார். பின்னாளில் உச்சநீதிமன்ற நீதிபதியாக வேண்டியவர்களினுடைய பெயர் பட்டியல் அன்றைய முதலமைச்சரின் பார்வைக்குப் போயிற்று. தன்னுடைய கட்சிக்காரர்கள் “ரவுடிகள்” என்று குறிப்பிட்ட நீதிபதி எப்பேர்பட்ட யோக்கியன் ஆனாலும் – திறமைசாலியானாலும் அவர் உந்சநீதிமன்றத்திற்கு செல்லக்கூடாது என்று அவர் கோடு கிழிக்கப்பட்டார். அந்த நீதிபதி யார் தெரியுமா? பார்ப்பனர்களும் – வெள்ளையர்களும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த சென்னை உயர்நீதிமன்றத்தில் “ஓமந்தூராரால் அமர்த்தப்பட்ட முதல் தமிழன்” என்று சொல்லுவோமே அவர் தான்! (மேலே சொன்ன செய்தியை தலைவர் பெரியார் பலரிடம் பலமுறை சொல்லியிருக்கிறார்.)

திருவாரூர் தங்கராசுவுக்கு கலைஞர் தமிழக அரசின் சார்பில் பெரியார் விருது கொடுத்தார். அந்தத் தொகையோடு தானும் ஒரு சிறு தொகையை சேர்த்து திருச்சியில் உள்ள தந்தை பெரியார் குடில் என்கின்ற கல்வி நிறுவனத்திற்கு தங்கராசு கொடுத்து விட்டார். அந்த விழாவில் கலந்து அந்த நிறுவனத்திற்கு அந்த தொகையை கலைஞர் கையாலேயே கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார்.

அண்மையில் திருச்சியில் தங்கராசுவினுடைய எண்பதாவது பிறந்த நாளுக்காக ஒரு விழா ஏற்பாடு செய்து ஒரு கணிசமான தொகையைத் தோழர்கள் திருவாரூர் தங்கராசுவுக்கு கொடுத்தார்கள். அதையும் அவர் பொது நிகழ்ச்சி ஒன்றுக்கே கொடுத்துவிட்டார். தான் வேறு – நிறுவனம் வேறு என்ற கொள்கை உள்ளவர். நிறுவனத்தையும் – தன்னையும் ஒன்றாகவே இணைத்துப் பார்க்கும் பேருள்ளம் திருவாரூர் தங்கராசுவுக்கு இல்லாமல் போனது உண்மையிலேயே தீவினைப் பயனாகும்.(?)!

திருவாரூர் தங்கராசு பரப்புரைக்கு வருகிற போதெல்லாம் கையில் இரண்டு மூட்டைகளோடு வருவார். பெரிய மூட்டை அவர் எழுதிய பிரச்சார நூல்கள் – சிறிய பை அவர் அணியும் துணிமணி. அன்றும் சரி இன்றும் சரி உண்மையிலேயே எளிய வாழ்க்கை வாழ்கிறவர். நீண்ட வெளியூர் பயணங்களின் போதெல்லாம் அவருடைய துணிமணிகளை அவரே துவைத்து அறையிலேயும் – அறைக்கு வெளியேயும் உலர்த்தி அணிந்து கொள்வதை நானே பார்த்திருக்கிறேன்.

‘மானம் பார்க்காதீர்கள்’ என்ற பெரியாரினுடைய பொன் மொழிகளை தங்கராசு தவறாகக் கையாள மாட்டார். உணர்ச்சிவசப்படுகிறவர். தன்னுடைய தன்மானத்திற்கு இழுக்கென்றால் கோபிப்பார். சண்டை போடக் கூடத் தயங்க மாட்டார். மனதுக்குள் வைத்து கழுத்தறுக்கும் பார்ப்பன குணம் கிடையாது. அப்போதே சண்டை போடும் அசல் தமிழன்.

பரப்புரையின் போது அவர் சந்தித்த சோதனைகள் - தாக்குதல்கள் ஏராளம். நம்முடைய கொள்கை எதிரிகள் ஒரு முறை கிருஷ்ணகிரியில் அவருடைய கூட்டத்தில் கற்களை வீசி – ஆயுதங்களைப் பயன்படுத்தி அவர் உயிருக்கே குறி வைத்தார்கள். திருவாரூர் தங்கராசு எப்படியோ தப்பினார்.

திருச்சி காட்டூரில் ஒரு திராவிடர் கழகப் பொதுக் கூட்டம். நானும் (செல்வேந்திரன்) அவரும் கலந்து கொண்டோம். திரு.குடந்தை ஜோசப் பேசிக் கொண்டிருந்தார். திடீரென்று என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த திருவாரூர் தங்கராசு ‘அய்யோ’ என்று அலறிக் கொண்டு கீழே விழுந்தார். முண்டும் – முடுச்சுமான ஒரு பெரிய கருங்ல் அவர் தலையை தாக்கி இரத்த வெள்ளம். அவரை அவசர அவசரமாக என்னுடைய காரில் தூக்கிப் போட்டுக் கொண்டு திருச்சி தலைமை மருத்துவமனைக்கு வந்தோம். பெருக்கெடுத்த இரத்தத்தில் மூன்று நான்கு துண்டுகள் – இரண்டு வேட்டிகள் முழுவதுமாய் நனைந்து போய்விட்டன.

முதலில் ஒரு டாக்டர் வந்தார். பிறகு சிறப்பு மருத்துவர் வரவழைக்கப்பட்டார். “நாளைக்கு காலை வரைக்கும் என்னாகும் என்று சொல்ல முடியாது” என்று சொல்லி விட்டார்கள். காரணம் கல் தாக்கிய பகுதி அவ்வளவு நுட்பமானது. மண்டை ஓடு உடைந்து உள்ளே சேதம் ஏற்பட்டிருக்குமானால் திருவாரூர் தங்கராசு வெறும் மூச்சு மாத்திரம் ஓடிக் கொண்டிருக்கின்ற - எந்த ஒன்றும் இல்லாத ஜடமாகப் படுக்கையில் கிடந்திருக்க வேண்டியிருந்திருக்கும். அவருடைய தலையில் பதினொரு தையல்கள் போடப்பட்டன. தந்தை பெரியார் நேரில் வந்து பார்த்தார். போகிற போது தலைவர் பெரியார் என்னுடைய கையைத் தட்டி “ஜாக்கிரதயா இருங்கோ” என்று சொல்லி விட்டுப் போனார். இதற்குக் காரணம் அந்த கல் என்ன நோக்கி குறி வைக்கப்பட்டதாகும். பாவம் தங்கராசு! என்னை விட உயரமாக இருந்த காரணத்தினால் கல் அவருடைய தலையில் பட்டு விட்டது.அவர் உடலால் மட்டும் உயரமானவர் அல்ல. உள்ளத்தாலும் உயரமானவர்.

அண்ணன் தங்கராசு எண்பத்தைந்து வயதை தாண்டி விட்டார். ஆறடியைத் தொடுகின்ற உயரம். ஆஜானுபாகுவான தோற்றம். இந்த வயதிலேயும் முகத்தில் – கையில் சுருக்கங்கள் இல்லாத சிவந்த உடல்வாகு. தீய பழக்கங்கள் ஏதுமில்லாத காரணத்தால் இன்றும் மாமிசத்தின் எல்லா வகை உணவுகளையும் மகிழ்வோடு – மன நிறைவோடு உண்டு செரிக்கும் உடல் வளம். வயது மூப்புக்குரிய சில தொல்லைகளை தவிர ஏதுமில்லை.

“உள்ளத்தில் ஒளி உண்டாயின் வாக்கினில் ஒளி உண்டாகுமாம்.
வாக்கினில் ஒளி உண்டானால் சிந்தையில் தெளிவு உண்டாகுமாம்.
சிந்தையில் தெளிவு உண்டானால் செவியை குளிர வைக்குமாம்.
தெளிந்த குரல் உண்டாகுமாம். தோற்றத்தில் பொலிவு உண்டாகுமாம்.
திருவாரூர் தங்கராசுவை நேரில் பாருங்கள்.
இந்த வரிகள் சரி என்று தெரியும்”.

(‘மறக்கப்பட்ட மாவீரர்களின் மறக்க முடியாத வரலாறு’ நூலிலிருந்து)

சுயமரியாதை பதிப்பகம், உடுமலைப்பேட்டை

Pin It