தொல்காப்பியம், பத்துப் பாட்டு, எட்டுத் தொகை என அமையும் சங்க நூற்களில் உணவு முறை பற்றிய பல்வேறு குறிப்புகள், புலவர்களால் வருணனைகளாகவும், உவமைகளாகவும் பாடல் களில் கூறப்பட்டுள்ளன. கவிதை போன்ற இலக்கியப் படைப்புகளில் உணவு முறை போன்ற குறிப்புகள் முழுவதுமாக எதிர்பார்க்க இயலாது. எனினும் இலக்கியம் என்பது சமூக வாழ்வை விவரிக்கும் போக்குடையதால், அதிலும் குறிப்பாக, நாகரிகம் வாய்ந்த சங்க காலத்து மக்களின் வாழ்வைச் சங்க இலக்கியங்கள் படம்பிடித்துக் காட்டுவதால், சங்க இலக்கியங்களிலிருந்து அக்கால மக்களின் உணவு முறைகளும், பழக்கங்களும் தெளிவாகத் தெரிகின்றன.

தொல்காப்பியம் தரும் உணவுக் குறிப்புகள்

தொல்காப்பியத்தின் இலக்கண நூற்பாக்களில் சில, அக்காலத்திலேயே எண்வகை உணவுகள், தேன், எள், எண்ணெய் ஆகியன பழக்கத்தில் இருந்தன என்பதற்குரிய சான்றுகளைக் கூறு கின்றன.

பத்துப்பாட்டில் காணப்பெறும் உணவுக் குறிப்புகள்

அடுத்து வரும் சங்க இலக்கியமான பத்துப்பாட்டில், பல்வேறு உணவுக் குறிப்புகள் கிடைக்கின்றன. விருந்தோம்பும் பண்பு சங்கத் தமிழரின் உயிர்ப் பண்பாக விளங்கியது. அல்லில் ஆயினும் விருந்தினரை உவப்போடு வரவேற்கும் பண்பு, செல்விருந்தோம்பி, வருவிருந்தினை நோக்கிக் நிற்கும் மாண்புடைய மக்கள், சங்க கால மக்கள். அன்றாட வாழ்வில் விருந்தோம்பும் பணி தலையாய பணியாக இருந்ததால் உணவு முறைகளுக்குப் பஞ்சமே இல்லை. தலைவன்-தலைவியின் வாழ்க்கையை விவரிக்கும் இடமாயினும், பாடல் பெறும் அரசனின் புகழைப் பாடும் இடமாயினும், புலவர்கள் உணவு முறைகளைப் புகுத்தித் தங்கள் பாடலை இயற்றினர். மேலும் பொருநர், பாணர், கூத்தர் என்னும் கலைவாணர்கள் பேரரசர்களையும், சிற்றரசர்களையும், செல்வந்தர்களையும் கண்டு தத்தம் கலைகளை விளக்கிப் பரிசில் பெறச் செல்லுங்கால் மன்னர்கள் அவர்களுக்கு நல்லாடை கொடுத்து நல்ல சுவையான உணவு படைத்துப் பொருளு தவியும் அளித்தனர். இவ்வாறு பரிசில் பெற்ற கலைஞர்கள் தாங்கள் பரிசில் பெற்ற இடத்தின் உணவு, அவ்விடத்திற்கு ஏற்றவாறு அமைந்திருந்தலையும் பாடத் தவறவில்லை. அவர்களின் பாடல்களிலிருந்து கிடைக்கும் விவரப்படி ஐவகை நிலப்பாகுபாடிற்கேற்ற உணவு முறைகளைக் காண்போம்.

குறிஞ்சி நிலத்தார் உணவு

சோழ நாட்டுக் குறிஞ்சி நில மக்கள் தேனையும் கிழங்கையும் உண்டனர். பிற நிலத்தார்க்கும் இவைகளைக் கொடுத்து அதற்குப் பதிலாக மீன், நெய்யும், நறவையும் வாங்கிச் சென்றார்கள். நன்னன் என்னும் குறுநில மன்னனின் சவ்வாது மலையின் அடிவாரத்தில் இருந்த சிற்றூர் மக்கள், நெய்யில் வெந்த இறைச்சியுடன் தினைச்சோறு உண்டதாகக் குறிப்பு கிடைக்கின்றது.

இவைமட்டுமின்றி, உடும்பின் இறைச்சியையும், பன்றி இறைச்சியையும், மானின் இறைச்சியும் உண்டனர். நெல்லால் சமைத்த கள்ளையும் மூங்கில் குழையினுள் முற்றிய கள்ளையும் பருகினர்; மூங்கில் அரிசிச் சோற்றுடன் பலாக்கொட்டை, மா, புளிநீர், மோர் கொண்டு தயாரித்த குழம்பு சேர்த்து உண்டதாகவும் அறிகின்றோம். இந்நிலப் பிரிவைச் சேர்ந்த மக்கள் அவரவர் இருக்கும் இடம், சூழ்நிலைக்கேற்பவும், உணவு முறை கவின்பற்றியிருப்பதை அறியலாம். மலை நாட்டைக் காவல் புரிந்த வீரர்கள் உட்கொண்ட இறைச்சியும் கிழங்கும், மலைமீது நடந்து சென்ற கூத்தர்கள் தினைப்புனக் காவலனால் கொல்லப்பட்ட காட்டுப் பன்றியின் இறைச்சியை வாட்டித் தின்றமையும் இக்கருத்திற்குச் சான்றாகும்.

பாலை நிலத்தார் உணவு

பாலை நிலத்து மக்கள் இனிய புளியங்கறி இடப்பட்ட சோற்றுடன் ஆமாவின் இறைச்சியை உண்டனர். தொண்டை நாட்டினைச் சேர்ந்த பாலை நில மக்கள் புல்லரிசியினை நில உரலிற் குற்றிச் சமைத்து அதனுடன் உப்புக் கண்டம் சேர்த்து உண்டிருக்கின்றனர். விருந்தினர்க்குத் தேக்கிலையில் விருந்து படைத்து மகிழ்ந்திருந்தனர். மேட்டு நிலத்தில் விளையக்கூடிய ஈச்சங்கொட்டை போன்ற நெல்லரிசிச் சோற்றுடன் உடும்பின் பொரியலையும் அவர்கள் உட் கொண்டனர்.

முல்லை நிலத்தார் உணவு

நன்னனது மலைநாட்டு நிலத்தார் அவரை விதைகளையும் மூங்கில் அரிசியையும், நெல்லின் அரிசியையும் கலந்து புளி கரைக்கப்பட்ட உலையிற் பெய்து புளியற்கூழாகக் குழைத்து உட் கொண்டனர். அதுவுமின்றிப் “பொன்னை நறுக்கினாற் போன்ற அரிசியுடன் வெள்ளாட்டிறைச்சி கூட்டி ஆக்கிய சோற்றையும் தினைமாவையும் உண்டனர்”. தொண்டை நாட்டு முல்லை நிலத்தார் பால் கலந்த திணையரிசிச் சோறும் வரகரிசிச் சோற்றுடன் அவரைப் பருப்பு கலந்து பெய்த கும்மாயம் என்று பெயர் பெற்ற உணவையும் உண்டிருந்தனர்.

மருத நிலத்தார் உணவு

நீர் வளமும் நில வளமும் நிறைந்து இந்நிலத்து மக்கள் கரும்பினையும், அவலையும் குறிஞ்சி நிலத்தார்க்குக் கொடுத்து அவர்களிடமிருந்து மான் தசையையும் கள்ளையும் பெற்றனர்.

ஒய்மாநாட்டு மருத நிலத்தார் வெண் சோற்றையும், நண்டும் பீர்க்கங்காயும் கலந்த கலவையையும் உண்டனர். தொண்டைநாட்டு மருத நிலச் சிறுவர்கள் பழைய சோறு உண்டனர். அவலை இடித்து உண்டனர். தொண்டை நாட்டு மருதநில மக்கள் நெற்சோற்றுடன் பெட்டைக் கோழிப் பொரியல் உண்டதுடன் பலாப்பழம், இளநீர், வாழைப்பழம், நுங்கு, வள்ளிக்கிழங்கு ஆகியவற்றையும் உண்டனர்.

நெய்தல் நில மக்களின் உணவு

நெய்தல் மக்கள் கடல் இறால், வயல் ஆமை இவற்றைப் பக்குவப்படுத்தி உண்டனர். பனங்கள், நெல்லரிசிக் கள் போன்றவற்றை உண்டனர். கள் விற்கப்படும் இடங்களில் மீன் இறைச்சி, விலங்கிறைச்சி ஆகியனவும் விற்கப்பட்டன. ஓய்மாநாட்டு நெய்தல் நிலத்தார் உலர்ந்த குழல் மீனின் சூடான இறைச்சியுடன் கள் உண்டதாகத் தெரிகின்றது. தொண்டை நாட்டுப் பட்டினத்தில் கொழுக்க வைத்த கருப்பஞ்சாறு பருகினர்.

-----------------------

அரண்மனையில் விருந்தோம்பும் பணி, நாள் தவறாமல் நடந்து வந்த ஒன்றாகும். நாவிற்குச் சுவையான உணவுடன், பருகியவரை மயங்கச் செய்யும் சுவையான கள்ளும் தரப்பட்டது. உணவில் இனிப்புகள், முல்லையரும்பு ஒத்த அன்னம், பாலைக் காய்ச்சி அதனோடு கூட்டின் பொரிக்கறிகளும், கொழுத்த செம்மறிக் கடாவின் இறைச்சியினைச் சுட்டும் வேகவைத்தும் படைக்கப்பட்டன. விருந்தின் முடிவில், குங்குமப்பூ மணக்கின்ற தேறல் பருகத் தரப்பட்டது. தொண்டை நாட்டுத் தலைவன் இளந்திரையன் பலவகையான இறைச்சி உணவைத் தயாரித்து விருந்து படைத்தது மட்டுமின்றிச் செந்நெற்சோறு வடித்துச் சர்க்கரை அடிசில் ஆக்கிச் சிறியவர்கட்குச் சிறிய வெள்ளிக் கலங்களிலும், முதியோர்க்குப் பெரிய வெள்ளிக் கலங்களிலும் அளித்து மகிழ்வித்தான்.

பல்வகை உணவுகள்

சங்க காலத்தில் கரிய சட்டியில் பாகுடன் வேண்டுவன கூட்டி நூல் போல அமைத்த வட்டிலும், பாகில் சமைத்த வரிகளையுடைய தேனிறாலைப் போன்ற மெல்லிய அடைகள், பருப்பையும் தேங்காயையும் உள்ளீடாகக் கொண்ட கண்ட சருக்கரை கூட்டிப் பிடித்த மோதகம், இனிப்புடன் மாவு கரைத்துத் தயாரித்த சிற்றுண்டிகள் ஆகியவற்றைத் தயாரித்து உண்டனர். தென்பாண்டி நாட்டுப் பரதவர்கள், கொழுத்த இறைச்சியிட்டுச் சமைக்கப்பட்ட சோற்றைப் பெரிதும் விரும்பி உண்டனர். பாண்டியர் தலைநகரான மதுரையில் ஏழைகளுக்கென உணவுச்சாலைகள் அமைக்கப் பெற்று, அங்கிருந்த எளியவர்களுக்கு, பலாப்பழம், மாம்பழம், வாழைப்பழம், முந்திரிப்பழம், பாகற்காய், வாழைக்காய், வழுதுணங்காய், இனிப்புச் சுவையுடைய பண்ணியங்கள் சமைக்கப் பெற்ற கிழங்கு வகைகள், பாற்சோறு ஆகியன படைக்கப்பெற்றன. தோப்புகளில் வாழ்ந்த உழவர்கள், பலா, வாழை, இளநீர், நுங்கு ஆகியவற்றை வழிநடை செல்லும் பாணர்க்கு அளித்து விருந்தோம்பினர்.

எட்டுத் தொகை கூறும் உணவு முறைகள்

உழுந்து மாவினை நெய்விட்டுப் பிசைந்து கொடி போன்று கயிறு திரித்து வெய்யிலில் உலர்த்தினர். இக்காலத்து ‘வடாகம்’ போன்று அமைவது இது. எயினர்கள் முள்ளம்பன்றியின் ஊனை உண்டனர். சோறு வேறு, ஊண் வேறு எனப் பிரிக்க இயலாதவாறு, ஊன் குழையச் சமைத்த உணவு பற்றிய குறிப்பினைப் பதிற்றுப்பத்தில் காணலாம். செவ்வூணுடன் துவரையைக் கலந்து துவையலாக்கி அருந்தினர். அவரை முதலானவற்றை உணவில் கூட்டிச் சர்க்கரை கலந்து உண்டனர்.

இறைச்சியைத் துண்டித்து வேக வைத்து நெய்விட்டுத் தாளிதம் செய்தனர். கடுகைக் கொண்டு நெய் கலந்தும் தாளிதம் செய்தனர். பாலுடன் கலந்த சோற்றில் தேன் கலந்து உண்டனர். பழஞ்சோறு, புளிச்சோறு ஆகியவற்றையும் உணவாகக் கொண்டனர். கைத்துத்தல் அரிசியைப் பயன்படுத்தினர். மட்பாண்டங்களைக் கொண்டு சமையல் செய்தனர். உணவு உண்ணும்போது, சோற்றில் நெய் பெய்து உண்டனர். குறமகள் தன் பசி தீரத் தினைமாவினை உண்டாள். முற்றிய தயிரைப் பிசைந்தும், ‘புளிப்பாகன்’ எனும் கழம்பைத் தலைவனுக்கு அளித்தும் தலைவி மகிழ்ந்தாள்.

பாலை நிலத்து வழிச் செல்வோர் நீர்வேட்கை தணிய நெல்லிக்காய் உண்டனர். பசி தீர விளாம்பழம் உண்டனர். மருதநில உழவன் நிலம் உழுதற்குச் செல்லுமுன் விடியலில் வரால்மீனைச் சோற்றில் பிசைந்து உண்பார். கார் காலத்து மரை பெய்தபின் புற்றில் இருக்கும் ஈசலை இனிய ஆட்டு மோருடன் பெய்து அத்துடன் புளிச்சோற்றைக் கலந்து உண்பர். மறவர், வெண்சோற்றுடன் பன்றி இறைச்சியைக் கலந்து உண்டனர். இறைச்சியுணவு தெவிட்டி வெறுத் தால், பால் கலந்து செய்தனவும் வெல்லப்பாகு கொண்டு செய்தனவுமான பணியாரங்களை உண்டனர். இறைச்சி கலந்த சோற்றுணவில் நெய்யை நீரினும் மிகுதியாகப் பெய்து உண்டனர். நெய்யால் வறுக்கப்பட்ட வறுவலையும், சூட்டுக்கோலால் சுடப்பட்ட கறியையும் சுவைத்தனர். உழவர்கள் வாளை மீன் அவியலுடன் பழைய சோற்றை உண்டனர்.

குடிவகை

சங்க கால மக்கள் பல்வேறு பொருள்களிலிருந்து தயாரித்த மதுவையும் கள்ளையும் பருகி மகிழ்ந்தனர். தென்னங்கள், பணங்கள், அரிசிக்கள், தேக்கள், யவன மது தோப்பிகள், நறும்பிழி, குங்குமப்பூ மணம் கமழும் தேறல் போன்ற பல்வகை மதுவையும், கள்ளையம் அவரவர் விருப்பத்திற்கும் வாழ்க்கைத் தரத்திற்குமேற்ப தயாரித்துப் பருகினர்.

பத்திய உணவு

பிணியுற்றபோது உணவுக் கட்டுப்பாட்டினைக் கடைப்பிடித்தனர். கடும் பிணிகள் உற்றபோது பிணியாளன் விரும்பிய உணவு வகைகளைக் கொடுக்காமல் மருந்தின் தன்மைக்கேற்ப உணவை ஆய்ந்து கொடுத்தனர். இக்காலப் பத்திய உணவுக்கு இணையாக இதனைக் கருதலாம்.

குழந்தை உணவு

குழந்தைகட்கு நெய்ச் சோறு ஊட்டினர்.

விரத உணவு

பார்ப்பனர் எனும் பிரிவினர் எப்போதும் விரத உணவு கொள்வர். இதனைப் படிவ உண்டி என்று குறுந்தொகை குறிப்பிடும். காமத்தின் இயல்பைக் கட்டுப்படுத்தும் தன்மை இப்படிவ உண்டிக்கு இருந்தது என்பதை உரையாசிரியர் குறிப்பிடுகின்றார்.

அறிவர் உணவு

அறிவர் எனும் முக்காலமும் உணரும் துறவியர் வீடுதோறும் சென்று பிச்சை எடுத்து, சிவந்த நெல்லால் சமைத்த சோற்றுடன் வெண்ணெயைக் கலந்து வயிறார உண்டனர். அதன்பின் ‘வெப்பத் தண்ணீர்’ அருந்துவர். இதற்கெனச் சேமச் செப்பினையும் உடன் வைத்திருந்தனர்.

கைம்மை மகளிர் உணவு

கணவனை இழந்த பெண்டிரை ‘உயவர் பெண்டிர்’ ‘கழிகல மகளிர்’ என்று அக்காலத்தில் அழைப்பர். இவர்கள் உணவில் நெய் போன்றவை சேர்க்கப்படவில்லை. கைகளில் இலையை இட்டு அதில் வெறும் நீர்விட்டுப் பிழிந்த சோற்றுடன் எள்ளுத் துவையலையையும், புளி கொண்டு வேக வைத்த வேளைக் கீரையையும் உண்பர். சிலர் அல்லி அரிசியை உண்பர்.

அந்தணர் உணவு

மறையவர்கள் பாற்சோறு, பருப்புச்சோறு, நெற்சோறு, மிளகு கலந்த நெய்யுடன் கூடிய கொம்மட்டி மாதுளங்காய், மாவடு ஊறுகாய் போன்றவற்றை உண்டனர். அத்துடன் பலாப்பழம், வாழை, இளநீர், நுங்கு ஆகியவற்றையும் உண்டிருக்கின்றனர்.

உணவைச் சமைக்கும் முறை

இக்காலத்தில் சமையற்கலையைக் கற்பிக்கும் நூல்கள் பல இருப்பதைக் காணலாம். சங்க காலத்தும் ‘மடை நூல்’ என்னும் பெயரில் சமையற்கலை நூல் இருந்தது என்பதையும் அந் நூலினை வீமசேனன் எழுதினான் என்பதையும் அந்நூலில் நுட்பமாகக் கூறப்பட்டுள்ள உணவு களையெல்லாம் அக்காலத்தவர் சமைத்து உண்டனர் எனும் செய்திகளைச் சிறுபாணாற்றுப் படைப் பாடல் மூலம் அறியலாம். சங்க கால மக்கள் மண்பாண்டத்தில் சமைத்துப் பானையில் சோறு உண்டனர்.

கைத்குத்தல் அரிசியினைச் சமைப்பதுதான் சத்தான உணவு என்று இன்று அறிவுறுத்தும் அறிவியலார் கொள்கையின் முன்னோட்டம், சங்க இலக்கியத்தில் காணப் படுகிறது. உலக்கைக் கொண்டு நெல்லைக் குற்றி அதனை உலையில் பெய்து சமைத்தனர். அரிசியை அரிக்கும் பழக்கத்தால் அதில் உள்ள பல சத்துக்கள் கழிநீரில் வீணாகி விடுகின்றனர். எனவே, அரிசியை அரிக்காமல் அப்படியே உலை பெய்து சமைத்தலே நல்லது. சங்க கால மக்கள் இயல்பாகவே அரிசியை அரிக்காமல் உலையில் இட்டுச் சமைத்தனர். இவ்வாறு பழந்தமிழரின் சமைக்கும் முறைகள் இயல்பாகவே இக்கால அறிவியல் நெறிக்கேற்ப அமைந்திருப்பது எண்ணி மகிழத்தக்கது.

உண்ணும் முறை

சங்க காலத்து மக்கள் உணவை வாழை இலையிலும் தேக்கிலையிலும் இட்டு உண்டனர். வெள்ளி, பொன் போன்ற கலங்களிலும் உண்டனர். சமைத்த உணவைச் சுடச்சுட உண்டு வயிர்த்தனர். உணவை நாவினால் புரட்டிக் கொடுத்து மென்று விழுங்கினர். இதனை “நாத்திறம் பெயர்ப்ப உண்டு” என்று புறநானூறு அழகுற விளக்கும்.

நன்றி: மூலிகை மணி

Pin It