“ஒரு விருட்சம் சாய்கிற போது பூமி நடுங்கத்தான் செய்யும். என் அம்மா செத்தால் அதற்காக மூன்றாயிரம் பேர் சாகத்தான் வேண்டும்’’ என்ற புண்ணியவான் ராஜீவ்காந்தி போய்ச் சேர்ந்து பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. ஒரு இந்திராகாந்தியின் உயிருக்கு மூன்றாயிரம் சீக்கிய மக்களின் உயிர்கள் பழிவாங்கப்பட்டது என்றால் ஒரு ராஜீவ்காந்தியின் உயிருக்கு லட்சக்கணக்கான ஈழத் தமிழ் மக்களின் ரத்தத்தைக் குடித்துக் கொண்டிருக்கிறார் சோனியா.நேரடியாக நரவேட்டையில் ஈடுபடுவதைக் காட்டிலும் தனக்குத் தோதான பாசிஸ்ட் ஒருவனை உருவாக்கி அவனது கையில் பிஸ்டலைக் கொடுப்பது தேர்ந்த பாசிஸ்டுகளின் கைவண்ணம். அதைத்தான் இப்பொழுது இந்தியாவும் செய்து கொண்டிருக்கிறது. ஆயுதங்கள், தொழில் நுட்ப உதவிகள், பண உதவி போன்ற அனைத்தையும் கொடுத்து எப்படிச் சுட வேண்டும் என்று சிங்கள இராணுவத்திற்கு குறியும் பார்த்துக் கொடுக்கிறது இந்திய ராணுவம்.


இந்தியா, இலங்கைப் பிரச்சனையில் தலையிட்டு போரை நிறுத்த வலியுறுத்த வேண்டும் என்று தமிழ் நாட்டின் பல்வேறு தரப்பினரும் பல்வேறு குரலில் ஏற்ற இறக்கங் களுடன் வலியுறுத்திவிட்டனர். முத்துக்குமார், பள்ளப்பட்டி ரவி, சீர்காழி ரவிச்சந்திரன், சென்னை அமரேசன், கடலூர் தமிழ்வேந்தன், போன்றோர் தீக்குளித்து தங்கள் இன்னுயிரை மாய்த்தும்விட்டனர். ஆனால், இந்திய ஏகாதி பத்தியமோ, சென்ற வாரம் வரை கள்ள மௌனம் சாதித்து வந்தது. சென்ற வாரம் பிரணாப் முகர்ஜி, இந்தியா இன்னொரு நாட்டின் நிர்வாகங்களில் தலையிட முடியாது என்று முகத்திலடித்தாற் போல் கூறிவிட்டார். தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும், இந்தியா ஆயுதங்கள் எதுவும் கொடுக்கவில்லை என்றும் இலங்கைத் தமிழர்களுக்காக காங்கிரஸ் மிகப்பெரிய தியாகம் செய்துள்ளது என்றும், இன்னொரு நாட்டின் விவகாரங்களில் மத்திய அரசு தலையிடாது என்றும் அரைவேக்காட்டுத் தனமாக திரும்பத் திரும்பக் கூறிவருகிறார். தமிழ்நாட்டில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கிளைக் கழகமாகவே மாறிவிட்ட, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழீழம் எரிந்து கொண்டிருக்கையில் தன் மீதான தமிழக மக்களின் வெறுப்பை அனுதாபமாக மாற்றும் முயற்சியாக மருத்துவ மனையில் தங்கி, அதில் தோல்வியை சந்தித்திருக்கும் தமிழக முதல்வர் கருணாநிதியோ, சகோதர யுத்தம் கூடாது, இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு அமைதி வழியில் தீர்வு காணப்பட வேண்டும், இந்தியா இலங்கைக்கு ஆயுதங்கள் கொடுக்கவில்லை என்று பாடிய பாட்டையே திரும்பத் திரும்ப காங்கிரசின் குரலாக பாடிக்கொண்டிருக்கிறார்.

இந்தியா உண்மையிலேயே இலங்கையின் விவகாரங்களில் தலையிட்டதில்லையா? இவர்கள் அனைவரும் மக்களை முட்டாள் களாகவே கருதி, தொடர்நது பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். மக்கள், தலைவர்களை விட ஆழ்ந்து சிந்திப்பவர்களாகவும் மிகப்பெரிய அறிவாளிகளாகவும் இருக்கிறார்கள. இவர்களை யாரும் நம்பத் தயாராக இல்லை. இந்திய ராணுவம் இலங்கையில் இருந்து வெளியேறிய அவமானகரமான நிகழ்வுக்குப் பிறகு இந்தியா இலங்கையில் தலையிட்டதில்லை என்பதெல்லாம் சுத்தப்பொய். இந்தியாவின் கண்ணசைப்பு இல்லாமல் இலங்கையில் சிறு அசைவு கூட ஏற்படாது என்பதுதான் உண்மை. அது நேற்றும் இன்றும் நாளையும் இலங்கையை தனது அறிவிக்கப்படாத காலனியாகவே வைத்திருக்கும். அமெரிக்கா விற்கு எப்படி இந்தியாவோ அது போல இலங்கை இந்தியாவுக்கு.

Multi national Armyஇந்து மகா சமுத்திரமும் அதை அண்டிய நாடுகளும் தென்கிழக்கும் இருக்கும் வரை இந்தியாவின் போர் வெறி ஓயப்போவதில்லை. ஏதோ ஒருவகையில் யாராவது ஒரு தரப்பினர் மூலம் இலங்கையின் நிம்மதியைக் குலைப்பதும். இனவாதத் தீயை ஊதி விட்டு வளர்த்தெடுப்பதுமே இன்றைய இந்தியாவின் இருப்பு. இந்தியாவின் இந்த விருப்பங் களிலிருந்தும் ஆக்ரமிப்பு ஆசையிலிருந்துமே எண்பதுகளில் அவர்கள் பல்வேறு போராளிக் குழுக்களை உருவாக்கினார்கள். தங்களின் விருப்பங்களுக்கு உட்பட்டு அடியாள் வேலைபார்க்கும் கூட்டமாக போராளிக் குழுக்களை மாற்றியதன் விளைவுதான் சகோதரப்படுகொலைகள். அந்தக் கொலைகளின் சூத்திரதாரி இந்தியாவே. இதைப்பற்றி இப்பொழுது காங்கிரசின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் முன்பு தெளிவாகவே கூறிவிட்டார்.

திம்பு பேச்சுக்களின் முடிவில் ஒரு குழுவுக்குத் தெரியாமல் இன்னொரு குழுவுக்கு ஆயுதங்கள் கொடுத்து ஈழத்தின் கிழக்குக் கரைகளில் இறக்குவதும். தங்களின் போலி ராணுவ புரட்சிக்கு ஈழப் போராளிகளை பயன்படுத்துவதுமாக போராளிகளை கைக்கூலிகளாக மாற்றினார்கள். ஈழ மக்களின் விடுதலைப் போருக்காக இந்தியாவின் உதவிகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற எண்ணத்தில் வந்த விடுதலைப் புலிகளோ இந்தியாவின் அடியாட்களாக மாற மறுத்தனர். விளைவு இந்தியாவின் விருப்பங்களை நிறைவேற்றத் தொடங்கிய குழுக்களுக்கும் ஈழ மக்களின் விடுதலைப் போருக்கு மட்டுமே போராடிய விடுதலைப் புலிகளுக்கும் தவிர்க்க முடியாமல் சகோதரப் படுகொலைகள் துவங்கியது. அன்றைய சகோதரப் படுகொலைகளில் புலிகள் வெற்றி பெற்றார்கள். ஒரு வேளை புலிகள் கொல்லப்பட்டு இன்னொரு அமைப்பு அதில் வெற்றி பெற்றிருந்தால். அந்தக் குழுவால் ஈழ மக்களின் சுதந்திரப் போரை முன்னெடுத்திருக்க முடியாது.

மாறாக இந்தியாவின் அடியாளாக இருந்து இலங்கையின் இன முரணைப் பயன்படுத்தி அந்தப் பிரச்சனையை தீரவிடாமல் நீரூற்றும் இந்தியாவ¤ன் அடியாள் குழுவாகவே இருந்திருக்கும். ஆனால் புலிகள் ஒரு பக்கம் இந்தியாவுக்கு அடிபணியவில்லை. இலங்கைக்கும் அடிபணியவில்லை. விளைவு இந்தியாவால் புலிகளின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆக, இலங்கை ராணுவத்தோடு சேர்ந்து புலிகளை அழித்து விட்டு பழைய பாணியில் ஈழத் தமிழ்த் தேசீய ராணுவம் என்கிற பெயரில் ஆயுதக் குழுக்களை உருவாக்கி இலங்கை அரசை இனப் பிரச்சனையிலிருந்து மீள விடாமல் தன் கட்டுக்குள் வைத்துக் கொள்வதற்கு அது முயற்சி செய்து கொண்டிருக்கிறது. அதன் விளைவாகத்தான் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரும், சமீப காலங்களில் புதிதாக உருவாகியுள்ள பிள்ளையான், கருணா கும்பல்கள். இதுதான் இந்தியாவின் சதி.

இதற்கு சமீப காலங்களில் பல எடுத்துக்காட்டுகளை கூற முடியும். சர்வதேச முயற்சிகளை குலைத்தது யார்? ஆனையிரவை வென்று ராணுவ ரீதியில் புலிகள் பலம் பொருந்திய நிலையில் இருந்த பொழுது நார்வேயின் அனுசரணையுடன் சமாதான முயற்சிகள் தொடங்கியது. தமிழர் தாயகத்தின் மூன்றில் ஒரு பங்கு நிலத்தில் புலிகள் தங்களின் நீதி நிர்வாக ஆட்சியை நிறுவி இருந்தார்கள். சிங்களப் பேரினவாதி களின் ராணுவ ஆட்சிக்குள் வாழ்வதைக் காட்டிலும் தமிழ் மக்கள் நிம்மதியாகவே புலிகளின் ஆளுகைக்குள் வாழ்ந்தார்கள். ஒரு போராளி அமைப்பிற்கே உண்டான இயற்கையான பலவீனங்கள் எதையும் புலிகள் தங்கள் மக்களிடம் காட்டிக் கொண்டதில்லை. இலங்கை இனப்பிரச்சனையை ஆகக் கூடிய சுதந்திரத்துடன் தீர்த்து விடவே விரும்பினார்கள்.

ஆனால் இந்தியா? இந்தியாவுக்கும் நார்வே முன்னெடுத்த சமாதான முயற்சிகளுக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லையா? இந்தியா உண்மையிலேயே ஒதுங்கித்தான் இருந்ததா? என்றால் இல்லை. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சமாதானக் காலத்தில் புலிகளை பலவீனப் படுத்த இந்தியா இலங்கையுடன் கைகோர்த்திருந்தது. இந்த சமாதானக் காலத்தில்தான் மேற்குலக நாடுகள் புலிகள் மீது தடைகளைக் கொண்டு வந்தார்கள். அது எப்படி ? யுத்தம் நடைபெறும் காலத்தில் இல்லாமல், சமாதானக் காலத்தில் பேச்சுவார்த்தை மேஜையில் பிரச்சனைக்குரிய இருதரப்பும் அமர்ந்திருக்கும்போது சமாதானத்தை முன்னெடுக் கிறோம் என்று கூறிக்கொண்டு, அதோடு தொடர்புடைய நாடுகள் புலிகள் மீது எவ்வாறு தடை விதிக்க முடியும் என உங்களால் சிந்திக்க முடியும் என்றால் இந்தியா இலங்கையோடு இணைந்து புலிகளுக்கு எதிராக சர்வதேச அளவில் முன்னெடுத்த துரோகத்தையும் உங்களால் புரிந்துகொள்ள முடியும்.

நார்வே முன்னெடுத்த பேச்சு வார்த்தையில் தமிழர் தரப்பு தயாரித்த தீர்வுத்திட்டங்கள் எல்லாமே டில்லி ஆட்சியாளர்களின் அறிவுக்கு அப்பாற்பட்டு நடந்த தில்லை. தயாரிக்கப்பட்ட, முன் வைக்கப்பட்ட எல்லா கோரிக்கைகளுமே, பரிந்துரைகளுமே இந்திய ஆட்சியாளர்களின் பார்வைக்கு முதலில் வைக்கப்பட்டது. அப்போது இந்தியாவை ஆண்டு கொண்டிருந்தது பாரதீய ஜனதா கட்சி. ஈழத்தின் அமைதி குறித்த எந்த பார்வையும் இல்லாத பி.ஜே.பி வழக்கம் போல் அதை பிராந்திய நோக்கில் அணுகியது. ஆனால் 2004-மே மாதம் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி சர்க்கார் ஆட்சிக்கு வந்து மன்மோகன் சிங் பிரதமர் ஆனது முதல் நார்வேயின் கைகள் கட்டப் பட்டன. வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் மக்களின் பொருளாதார நலன்களில் பிரதான காரணி வகிக்கும் ஏ-9 சாலை மூடப் பட்டதோடு சமாதான முயற்சிகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. அத்தோடு இந்தியா கொடுத்த அழுத்தத்தில் இலங்கை முன்னெடுத்த தடை நடவடிக்கைகள் வெற்றியளித்தது.

Ealam Chjldrenமுப்பதிற்கும் மேற்பட்ட நாடுகள் புலிகள் அமைப்பை மட்டுமல்லாமல், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களையும் முடக்கின. ஈழத்தில் நிலவிய நான்காண்டு கால அமைதி இந்தியாவின் வன்மத்தினால் முடிவுக்கு வந்தது. அதற்குள் கருணாவையும் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து நயவஞ்சகமாக வெளியேற்றி தனது ராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் திட்டத்தை இந்தியா வகுத்துக் கொடுக்க அதுவும் இந்தியாவின் விருப்பப்படி ஈடேறியது. கிழக்கு மாகாணத்தை மீட்டு இந்தியாவின் செல்லப்பிள்ளையான பிள்ளையானை ஆட்சியில் அமர்த்தவும் உதவியது. இன்று பிள்ளை யானுக்கு இலங்கை அரசின் ஆதரவு இருக்கிறதோ இல்லை இந்தியாவின் ஆதரவு இருக்கிறது. கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி என்னும் பெயரில் தன் வியாபாரத்தை கடைபிடித்து வருகிறது இந்தியா. கருணா இலங்கை அரசின் தீவீர விசுவாசி ஆன பின்பு பிள்ளையானை இன்று தன் கைக்குள் வைத்துக் கொண்டு கிழக்கில் கபடியாடிக் கொண்டிருக்கிறது இந்தியா இன்று.

கிழக்கை வென்று வசந்தத்தை பரிசளித்த ராஜபக்ஷேவுக்கு ராணுவ தள வாடங்கள், ரேடார்கள், உளவுக் கருவிகள், பீரங்கிகள், உளவு விமானங்களையும் அதை இயக்க பொறியாளர்களையும் அனுப்பிய இந்தியா தனது தென் பிராந்திய கடல் எல்லையை பெரும் பதட்டத்திற்குள்ளாக்கி அங்கு தன் கப்பல் படையை அடிக்கொன்றாக தற்போது நிறுத்தி வைத்துள்ளது.

இன்று வன்னி மக்கள் எதிர் கொள்ளும் படுகொலைகளுக்கு இந்தியாவே காரணம். பல்லாயிரம் மக்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்படுவதற்குக் காரணமான இலங்கை ராணுவத்தின் செய்கைகளில் இந்திய இராணுவத்தின் பங்கு மிகப்பெரிய அளவு இருக்கிறது என்று சொன்னால், அதில் உண்மை இல்லாமல் இல்லை. இந்தியா இப்பொழுது தான் மிகப்பெரிய வெற்றியை நெருங்கிக் கொண்டி ருக்கிறோம் என்றும் இலங்கையின் மொத்த பிரதேசமும் தங்கத் தாம்பாளத்தில் வைத்து தனக்குக் கிட்டும் என்றும் கனவு கண்டு கொண்டிருக்கிறது. இந்திய அரசுக்கு முக்கிய இடைஞ்சலாக இருந்து கொண்டிருப்பது, முல்லைத் தீவில் குற்றுயிரும் குலையுயிருமாக வாழ்ந்து கொண்டிருக்கும் இரண்டரை லட்சம் தமிழர்களும், இந்தியாவால் இன்று வரை வீழ்த்தப்பட முடியாமலிருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பும்தான். ஆகவே இடையில் இருக்கும் தடைகளை அகற்றி தனது கனவை நிறைவேற்றுவதற்கு முழு மூச்சாக பணியாற்றிக் கொண்டிருக்கிறது. புலிகளைச் சொல்லி இன்னும் எத்தனையாயிரம் மக்களைக் கொன்றொழிக்கப் போகிறது இந்தியாவும் இலங்கையும் என்று தெரியவில்லை. அப்படியே புலிகளை அழித்து விட்டாலும் இந்த பிரச்சனை தீர இந்தியா விரும்புமா?

இதுதான் இன்றைய தினத்தில் பிரதானக் கேள்வி. விரும்பாது. ஏனென்றால், ஈழத்தின் பூகோள அமைப்பும் அதன் கடற்கரைத் துறைமுகங்களும் இந்திய ஏகாதிபத்திய முதலாளிகளின் கழுகுக் கண்களை நீண்ட காலமாக உறுத்திக் கொண்டிருக்கிறது. அவர்கள் தங்களின் முதலீடுகளை பல்கிப்பெருகச் செய்வதற்கு ஏற்ற சொர்க்க பூமியாக இலங்கையையும், குற¤ப்பாக தமிழீழப்பகுதிகளையும் நினைத்துக் கொண்டி ருக்கிறார்கள.

அதற்கு அவர்களுக்கு இடையூறாக இருப்பது விடுதலைப் புலிகள் அமைப்பு மட்டும்தான். ஆகவே, விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்கு என்ன விலையேனும் கொடுப்பதற்கு இநதிய ஆளும் வர்க்கம் தயாராக இருக்கிறது. இதன் மூலம் தங்களால் நீண்ட காலமாக வீழ்த்தப்பட முடியாத எதிரியான விடுதலைப் புலிகளை ஒழித்தல், இலங்கை அரசை தனது காலனி ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருதல், தனக்கு விசுவாசமான ஏகாதிபத்திய எஜமானர்களுக்கு ஏற்ற சாம்ராஜ்யத்தை ஈழத்தில் உருவாக்குவதற்கு உதவி புரிதல் என பல முனை வெற்றிகளை ஈட்ட முடியும் என கருதுகிறது. அதற்காக ஆயுத உதவி, தொழில் நுட்ப உதவி, பண உதவி என எதையும் செய்யத் தயாராக இருக்கிறது. ராஜபக்சே அரசு அதைப் பயன்படுத்திக் கொள்ள தயாராக இருக்கிறது.

Ealam Tamilsஆனால் இந்த நேரத்தில் தாய்த் தமிழகமோ 7 வீர மறவர்களின் இன்னுயிரைப் பலிகொடுத்து நெருப்பில் தகித்துக் கொண்டிருக்கிறது. அதைப் பயன்படுத்தி மக்கள் எழுச்சியைக் கொண்டுவர வேண்டிய தலைவர்களோ உறங்கிக் கொண்டிருக் கிறார்கள். ராஜீவ் காந்தி கொலையை காரணம் காட்டி தி.மு.க. அரசைக் கலைத்து துரோகம் செய்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து கெண்டிருக்கும் தி.மு.க.வோ இன்று ஈழத் தமிழர்களுக்காக மிகப்பெரிய தியாகத்தை தாம் செய்திருப்பதாக கூறிக்கொண்டு அதே காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து, தமிழர்களைக் கொல்லும் காங்கிரசின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் மக்கள் எல்லாவற்றையும் அமைதி யாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ராஜீவ் கொலைக்குப் பிறகு ஈழத் தமிழருக்கு என்ன நடந்தாலும் தமிழக மக்கள் மௌனிகளாக சகிப்பார்கள். ஏனென்றால் நாம் ஆகப்பெரிய விலை கொடுத்தி ருக்கிறோம் என்றுதான் காங்கிரஸ் கட்சி முதலில் நினைத்தது. ஆனால் முத்துக்குமார் கொழுத்திய நெருப்பு காங்கிரஸை சுட்டுப் பொசுக்கியதோடு அதன் துரோகத்துக்கு துணை நிற்கும் நபர்களையும் இன்று தனிமைப்படுத்தி இருக்கிறது.இந்திய ராணுவ முகாம்கள் முற்றுகைக்குள்ளாகின்றன,மத்திய மாநில அரசு அலுவலகங்களில் அதிக எண்ணிக் கையிலான பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது இலங்கை அரசின் எல்லா அலுவலகங்களுக்கும் நூற்றுக்கணக்கான போலீசாரைக் கொண்டு பாதுகாப்புக் கொடுத்திருக்கிறார்கள். அதை எல்லாம் விட காங்கிரஸ் கொடியை யாரும் எரிக்கக் கூடாது என நடந்த கைதுகளை எல்லாம் மீறி தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் காங்கிரஸ் கொடிகள் தீக்கிரையாக்கப்படுகிறது. கொடிக்கம்பங்கள் வெட்டிச் சாய்க்கப்படுகின்றன. சீர்காழி ரவிச்சந்திரன் என்கிற காங்கிரஸ் நிர்வாகி தீக்குளித்து மாண்ட பிறகு தமிழகத்தில் எங்காவது காங்கிரஸ் கொடிக்கம்பம் இருந்தால் அதற்கும் இரண்டு போலீசைப் போட்டு கொடிக்கம்பத்துக்கு காவல் கொடுத்திருகிறார்கள். இது மாற்றத்திற்கான காலம். எண்பதுகளில் கிளர்ந்த மக்கள் இனி ஈழ மக்களுக்காக கிளரமுடியாது என்ற எண்ணங்கள் எல்லாம் பொய்யாய் பழங்கதையாய்ப் போனது. எண்பதை விட ஈழ நெருப்பு தமிழகத்தை தகிக்க வைத்துக்கொண்டிருக்கிறது.

தமிழர்களைக் கொன்றொழிக்கத் துணை போகும் காங்கிரஸ் கட்சிக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் பாடை கட்டுவார்கள். துணைபோகும் தி.மு.க.விற்கு துரோக வரலாற்றின் அத்தியாயத்தில் முக்கிய பக்கங்களை ஒதுக்குவார்கள். ஆனால், இந்தியாவின் கனவு ஈழத்தில் நிறைவேறுமா? என்று பார்த்தோமானால், ஈழத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பை வீழ்த்த முடியாது. பல டக்ளஸ் களையும், ஆனந்தசங்கரிகளையும், பிள்ளையான் களையும் இந்தியா உருவாக்கும் அதே நேரத்தில் ஈழத்தில் பிறந்த தாயருத்தி பத்து பிரபாகரன்களை உருவாக்கி ஈழ மண்ணுக்கு பரிசளிப்பாள். இந்தியாவால் டக்ளஸ்களை மட்டுமே உருவாக்க முடியும். ஆனால் வன்னியோ புதிய போராளிகளை ஈன்றெடுக்கும். இந்தியா எத்தனை மாய்மாலங்கள் செய்தாலும் அதன் கனவு நிறைவேறாது.

 

Pin It