கடல் சூழல் மண்டலத்தில் மிக முக்கிய அங்கம் திமிங்கலங்கள். கடற்சூழலின் ஆரோக்கியத்திற்கு இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒவ்வொரு நாளும் குறைந்து வரும் இவற்றின் எண்ணிக்கை கடல்வாழ் உயிரினங்களைப் பாதிக்கிறது. கடல் சூழலைத் தகர்க்கிறது. பாலூட்டிகளான இவை வெப்ப இரத்த பிராணிகள்.

வேட்டையின் வரலாறு

புராதன காலம் முதல் திமிங்கல வேட்டை நடந்து வருகிறது என்றாலும் கடந்த நூற்றாண்டின் தொடக்கம் முதல் இறைச்சி, உடலில் உள்ள கொழுப்பு, எலும்புகளைப் பயன்படுத்தி அணிகலங்கள் போன்றவற்றிற்காக பெரும் எண்ணிக்கையில் வேட்டையாடப்பட்டதால் பெருமளவில் இவற்றின் எண்ணிக்கை குறைந்தது. இதன் விளைவாக 1946ல் திமிங்கல வேட்டைக்கு உலக நாடுகள் ஒன்றுசேர்ந்து தடை ஏற்படுத்தின.

1904-1987 காலகட்டத்தில் 14 இலட்சம் திமிங்கலங்கள் கொல்லப்பட்டன. அண்டார்டிகாவில் 1964ல் நீலத் திமிங்கலங்களை வேட்டையாடுவது தடை செய்யப்பட்டது. அப்போது 20,000 நீலத் திமிங்கலங்கள் இருந்தன. இப்போதும் இதே எண்ணிக்கையிலேயே அவை உள்ளன. இருநூறு ஆண்டுகள் வாழும் இவற்றின் இனப்பெருக்கம் மிக மெதுவாகவே நடைபெறுகிறது. ஒரு முறை நஷ்டமானால் கடல்சார் சூழல் மண்டலத்தை அதே நிலைக்கு மறுபடியும் கொண்டு வருவது சுலபமானதில்லை என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது.whale 466ஆராய்ச்சி என்ற பெயரில்

ஆராய்ச்சி என்ற பெயரில் ஜப்பானில் இப்போதும் இவற்றை வேட்டையாடுவது தொடர்கிறது. தடை நடைமுறையில் இருந்தபோதும் 1986 முதல் 25,000 திமிங்கலங்கள் கொல்லப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் அவை கண்டிப்புடன் பின்பற்றப்படுவதில்லை.

பணத்தைப் பயன்படுத்தியே ஜப்பானும் நார்வேயும் தங்களுக்கு சாதகமாக மற்ற நாடுகளின் வாக்குகளை விலைக்கு வாங்குகின்றன என்ற குற்றச்சாட்டு உள்ளது.

மனிதனின் பொழுதுபோக்கு ஓர் உயிரினத்தின் அழிவு

பல நேரங்களில் ஒரு த்ரில்லுக்காக இவை வேட்டையாடப்படுகின்றன. பிடிக்கும் திமிங்கலங்களின் இறைச்சி கால்நடைகளுக்குக்கூட தீவனமாக போடப்படுகிறது. இழக்கப்பட்டால் மீட்டெடுக்க முடியாத இந்த அற்புத உயிரினங்களின் இறைச்சி அங்கு இந்த அளவிற்கு மதிப்பில்லாத பொருளாக்கப்படுகிறது. இதற்கு இடையில் திமிங்கல வேட்டையை மீண்டும் தொடரப் போவதாக ஜப்பான் சமீபத்தில் அறிவித்துள்ளது.

திமிங்கல வேட்டை என்னும் கொடூரம்

இரண்டு மூன்று குதிரைகளை ஒரு ஈட்டியில் கோர்த்து ஒரு டிரக்கில் கட்டி இரத்தம் கொட்டக் கொட்ட இழுத்துக்கொண்டு போவதைக் கற்பனை செய்து பாருங்கள். இப்படிதான் திமிங்கல வேட்டையும் நடக்கிறது. பல சமயங்களில் ஓட ஓட விரட்டிவிட்டு களைப்படைந்த நிலையை அவை அடைந்த பிறகே வேட்டையாடப்படும் திமிங்கலத்தின் மீது கூர்மையான அம்பு எய்யப்படுகிறது.

பெரும்பாலான திமிங்கலங்களும் ஒற்றை அம்பு பட்டு சாவதில்லை. பிடிக்கப்பட்ட திமிங்கலத்தை வேட்டைக் கப்பல்களுக்கு இழுத்துக் கொண்டு வந்து அவை ஏற்றப்படுகின்றன. வால் பகுதியில் அம்பு எய்யப்பட்டிருந்தால் தலைப்பகுதி நீருக்குள் மூழ்கியிருக்குமாறு அவை கப்பலின் மேற்பகுதிக்கு இழுக்கப்படுகின்றன. அப்போது அவை மூச்சுவிட முடியாமல் திணறுகின்றன. அந்த நிலையிலேயே அவை கொல்லப்படுகின்றன.

இது தவிர பெரிய மீன் பிடி வலைகளில் சிக்கி, கடலில் கொட்டிக் கிடக்கும் மாசுகள் உடலிற்குள் செல்வதால் இவை இறந்து போகின்றன. பாலூட்டும் திமிங்கலங்களின் உடலுக்குள் செல்லும் நஞ்சு அவற்றின் குட்டிகளுக்கும் நோய்களை ஏற்படுத்துகிறது. நெரிசல் மிகுந்த கப்பல் போக்குவரத்து உள்ள வழிகளில் ஏற்படும் ஒலி மாசு, கடல் ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்படும் மீ ஒலிக்கருவிகள் (sonar), வேதிப்பொருட்கள், கடல்களில் நிறுவப்படும் காற்றாடிகள், காலநிலை மாற்றம் போன்றவை இந்த உயிரினங்களை வெகுவாகப் பாதிக்கின்றன.

மிதவை உயிரினங்களும் திமிங்கலங்களும்

பூமியில் வாழும் ஏதேனும் ஓர் உயிரின வகையின் ஒட்டுமொத்த எடையைக் கணக்கிட்டால் மிதவை உயிரினங்களே (Krill) முதலிடம் பெறுகின்றன. இதன் அளவு சுமார் 40 கோடி டன். கடலில் வாழும் சிறிய உயிரினங்களான இவற்றின் ஒட்டுமொத்த எடை இது. இந்த உயிரினங்களில் பாதியளவை உணவாக உட்கொள்ளும் உயிரினங்களில் திமிங்கலங்களே முதன்மையானவை.

நீலத் திமிங்கலம் உண்ணும் உணவு

ஒரு நீலத் திமிங்கலம் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 4 கோடி மிதவை உயிரினங்களை உண்கிறது. இந்த திமிங்கலங்கள் இல்லாமல் விட்டால் மிதவை உயிரினங்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் பெருகும். இதனால் ஏற்படக்கூடிய சூழல் பிரச்சனைகள் கற்பனைக்கு எட்டாத பயங்கரமானவை.
இது போல திமிங்கலங்களின் இறந்த உடல்களும் சூழல் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆயிரக்கணக்கான டன் எடையுள்ள அவற்றின் உயிரற்ற உடல் ஆழ்கடல் சூழ்நிலையை வெகுவாகப் பாதிக்கும். ஒரு திமிங்கலம் உயிரிழந்தால் 407 வகையான உயிரினங்கள் அதன் இறந்த உடலை உண்பதற்காக ஒன்று சேர்கின்றன.

கார்பன் உறிஞ்சும் திறன்

இவற்றின் மலத்தில் உள்ள சத்துகள் வளி மண்டலத்தில் இருக்கும் கார்பன்ஐ உறிஞ்சியெடுக்கும் பைட்டோ ப்ளாங்டன்களின் (phytoplanktons) வளர்ச்சியைத் துரிதப்படுத்துகிறது. இதற்கு நான்கு இலட்சம் டன் கார்பனை வளி மண்டலத்தில் இருந்து அகற்றும் திறன் உள்ளது.

பெட்ரோலியம் கண்டுபிடிப்பும் திமிங்கலங்களும்

பெட்ரோலியம் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் இந்த உயிரினங்கள் என்றோ பூமியில் இருந்தே முற்றிலும் அழிக்கப்பட்டிருக்கும். மார்கரின் (Margarine) என்ற கொழுப்பின் கதை இதனுடன் தொடர்புடையது. ராணுவத்தைச் சேர்ந்தவர்கள், சமுதாயத்தில் கீழ் தட்டில் இருப்பவர்களுக்கு பயன்படுத்தக்கூடிய ஒரு பொருளைக் கண்டுபிடிக்குமாறு நெப்போலியன் பிரெஞ்சு மக்களைக் கேட்டுக் கொண்டார்.

அப்படிப்பட்ட ஒன்றைக் கண்டுபிடிப்பவருக்கு பரிசுகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதன்படி உருவாக்கப்பட்ட ஓர் உணவுப்பொருளே இது. கால்நடைக் கொழுப்பு, கொஞ்சம் சோடா, பால் மற்றும் மஞ்சள் நிறம் ஆகியவை சேர்த்து திடவடிவத்தில் உண்பதற்குத் தகுதியான ஒரு கொழுப்பை பிரெஞ்சு வேதியியலாளர் ஹிப்போலிட் மீஜ் மீரீஸ் (Hippolyte Meege-Mouriees) உருவாக்கினார். இதற்காக 1869ல் மூன்றாம் நெப்போலியனிடம் இருந்து பரிசு பெற்றார்.

பிரெஞ்சுகாரர்களுக்கு இது அவ்வளவாகப் பிடிக்கவில்லை யென்றாலும் ஐரோப்பியர்களிடம் இது பிரபலமடைந்தது. இன்று இதில் இருந்து விலங்கு கொழுப்புகள், தாவர எண்ணைகள் உண்டாக்கப்படுகின்றன. பாதுகாத்து வைக்கவும் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லவும் குறைந்த கால அளவில் விரைவாக ஆற்றலைப் பெறவும் மற்ற பல தேவைகளுக்காகவும் இது இப்போது பயன்படுகிறது.

லாபம் தரும் தொழில்

19ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தெருக்களிலும் வீடுகளிலும் வெளிச்சத்திற்காக திமிங்கலங்களிடம் இருந்து எடுக்கப்பட்ட கொழுப்பே முக்கியமாகப் பயன்படுத்தப்பட்டது. திமிங்கல வேட்டையைப் போலவே திமிங்கலக் கொழுப்பும் லாபம் தரும் தொழிலாக மாறியது. பெட்ரோலியம் உற்பத்தி செய்யப்படத் தொடங்கியதுடன் இந்த நிலை மாறியது. திமிங்கலக் கொழுப்பின் இடத்தை மண்னெண்ணெய் பிடித்தது.

அதிக அளவில் உண்டாக்கப்பட்ட இந்த கொழுப்பிற்கான புதிய தேவைகளையும் சந்தைகளையும் இவற்றை உற்பத்தி செய்து வந்த நிறுவனங்கள் புதிதாகக் கண்டுபிடிக்கத் தொடங்கின. இப்படி மீண்டும் திமிங்கலக் கொழுப்பின் பயன்பாடு அதிகரித்தது. உணவு எண்ணெய்களில் இதன் விலை குறைய ஆரம்பித்தது. பெரிய ஒரு படகை திமிங்கலம் பிடிக்கும் படகாக மாற்றுவது சுலபமானதாக இருந்தது. விலை குறைந்ததால் எல்லோரும் திமிங்கலத்தைப் பிடிக்கும் படகுகளை வாங்க ஆரம்பித்தனர்.

யூனிலிவரின் கதை

உற்பத்தி அதிகரித்ததால் இதன் விலை மேலும் குறைந்தது. இதை விற்பவர்கள் கொழுப்பை அதிக அளவில் வாங்கிக் குவித்தனர். பிரிட்டிஷ் லிவர் மற்றும் டச்சு நிறுவனம் யூனி திமிங்கலக் கொழுப்பைக் கெட்டியாக்கி அதில் இருந்து மார்கரினை உருவாக்கும் வேதிமுறையைக் கண்டுபிடித்தன. தங்களுக்குள் போட்டி போட்டு அதனால் வியாபாரத்தை நஷ்டமாக்க விரும்பாத இந்த இரண்டு நிறுவனங்களும் யூனிலிவர் என்ற பெயரில் ஒரே நிறுவனமாக இணைந்தன.

இந்த நிறுவனமே இன்று 1.5 இலட்சம் ஊழியர்கள் மற்றும் ஐயாயிரம் கோடி டாலர்களுக்கும் கூடுதல் சொத்தும் உள்ள யூனிலிவர். 1935ல் உலகில் உருவாக்கப்படும் திமிங்கலக் கொழுப்பின் 84 சதவிகிதமும் மார்கரின் உருவாக்கப் பயன்பட்டது. நார்வே உற்பத்தி செய்த திமிங்கலக் கொழுப்பு முழுவதையும் யூனிலிவர் வாங்கிக் கொண்டது. அதை ஜெர்மனியில் உள்ள தொழிற்சாலைக்கு அனுப்பினர்.

பிரிட்டனில் திமிங்கலக் கொழுப்பு

ஐரோப்பாவில் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. இதற்குள் இந்த கொழுப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறியது. பிரிட்டனில் இதை கட்டுப்பாடுகளுடன் விற்பனை செய்யும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உணவுப் பொருட்களின் பட்டியலில் சேர்த்தனர். ஜெர்மனி திமிங்கல வேட்டைக்காக புதிய இடங்களைத் தேடி, தேடுதல் குழுக்களை அண்டார்டிகாவிற்கு அனுப்பியது. போர் முடிவுக்கு வந்ததுடன் இதன் முக்கியத்துவம் மெல்ல மறையத் தொடங்கியது.stop whalingபோரில் தோற்ற ஜப்பானும் திமிங்கல வேட்டையும்

திமிங்கல வேட்டை தார்மீகமாக சரியானது இல்லை என்று கருதப்படலாயிற்று. ஆனால் 1945ல் நேசநாடுகளால் தோற்கடிக்கப்பட்ட மில்லியன் கணக்கான ஜப்பானிய மக்கள் பட்டினியில் இருந்து தப்ப திமிங்கல வேட்டையைத் தொடர்ந்து நடத்த வேண்டும். அதிக இறைச்சியை உற்பத்தி செய்ய வேண்டும். அதன் மூலம் இறைச்சியின் விலையைக் குறைத்து சாப்பிட வேண்டும்.

இதற்கு மக்கள் வேட்டைப் படகுகளை அதிக அளவில் வாங்கி திமிங்கல வேட்டையைத் தொடர வேண்டும் என்று அப்போது ஜப்பான் நாட்டை நிர்வகித்த ஜெனரல் டக்லஸ் மாகார்தர் (General Douglas MacArthur) அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து அங்கு திமிங்கல வேட்டை மீண்டும் தொடர்ந்தது. இந்த சமயத்தில் மார்கரின் கொழுப்பை தாவர எண்ணெயில் இருந்து குறைந்த விலையில் உற்பத்தி செய்யும் முறையை பல நிறுவனங்கள் கண்டுபிடித்தன. இதனால் கொழுப்பின் பயன்பாடு குறையத் தொடங்கியது.

இன்றைய நிலை

இன்று சர்வதேச அளவில் திமிங்கல வேட்டை மிக மோசமான செயலாகக் கருதப்படுகிறது. சர்வதேச திமிங்கல கமிஷன் (International Whaling Commision IWC) இந்த உயிரினங்களின் எண்ணிக்கையை இவை வேட்டையாடப்படும் காலத்திற்கு முன்பு இருந்த நிலைக்குக் கொண்டுவர பாடுபடுகிறது.
என்றாலும் ஜப்பான் மற்றும் நார்வே ஆய்வுப் பணிகளுக்காக என்ற பெயரில் வேட்டையைத் தொடர்கின்றன. இதில் நார்வே முதலிடத்தில் உள்ளது.

பன்னாட்டு அழுத்தங்களுக்கு நடுவிலும் வணிக நோக்கங்களுக்காக வேட்டையை மீண்டும் தொடங்கப் போவதாக ஜப்பான் அண்மையில் அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த அற்புத உயிரினங்கள் அழியாமல் பாதுகாக்கப்படுவது அந்த நாடுகளின் ஆட்சியாளர்களின் கையில் உள்ளது என்று திமிங்கல நிபுணர்கள் கருதுகின்றனர். மனிதனின் குறுக்கீடுகளால் ஏற்கனவே மில்லியன்கணக்கான உயிரினங்கள் பூமியில் இருந்தே முற்றிலும் அழிக்கப்பட்டு வரும் இன்றைய நிலையில் இந்த உயிரினங்கள் கொல்லப்படுவது முழுவதுமாக நிறுத்தப்பட்டு இவை சுதந்திரமாக ஆர்பரிக்கும் கடலில் நீந்தும் காலம் வரும் என்று நம்புவோம்.

மேற்கோள்: https://www.mathrubhumi.com/environment/columns/all-you-need-to-know-about-whales-and-their-importance-eco-story-1.8526232

சிதம்பரம் இரவிச்சந்திரன்