snakeநஞ்சு துப்பும் பாம்புகள் எதிரியின் கண்களைக் குறிவைத்தே நஞ்சைத் துப்புகின்றன. இந்த பாம்புகளின் செயலைக் குறித்த ஆய்வில், எதிரியின் கண்களை நிச்சயமாகத் தாக்கிவிடும் வகையில் இவை தலையையும் கழுத்தையும் அசைப்பது தெரிய வந்துள்ளது. இவை விஷத்தைத் துப்பிவிடுகின்றன என்பதைக் காட்டிலும் எதிரியின் முகத்தை நோக்கி விஷத்தை விசிறி விடுகின்றன என்பதுதான் ஆராய்ச்சியின் முடிவு. மசாசூஸட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் புரூஸ் யங் அண்மையில் நஞ்சு துப்பும் பாம்புகளைக் குறித்த ஆய்வில் இந்த புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

நஞ்சு துப்பும் பாம்பின் நஞ்சுச்சுரப்பி விசையுடன் சுருங்குவதால் பாம்பின் நாக்குகள் வழியாக நஞ்சு பீச்சியடிக்கப்படுகிறது. எதிரியின் கண்களின்மீது நஞ்சு விழவேண்டும் என்பதே பாம்பின் நோக்கமாக இருக்கும். ஆறு அடி தொலைவுவரை பீச்சியடிக்கப்படும் இந்த நஞ்சு கண்களில் எரிச்சலை உண்டு பண்ணுவதோடு, பார்வை இழப்பையும் ஏற்படுத்திவிடும். இரண்டு அடி தொலைவில் இருந்து பீச்சியடிக்கப்படும் நஞ்சு நிச்சயமாக எதிரியின் கண்களைத் தாக்கிவிடுமாம்.

இந்த வகைப் பாம்புகள் எதிரியின் முகத்தில் கண்களை மட்டும் குறிவைத்து நஞ்சை துப்புவதில்லை. பாம்பின் கழுத்துத் தசைகள் தலையுடன் பொருத்தமாக இயங்கி எதிரியின் கண் இருக்கும் பிரதேசத்தில் நஞ்சை விசிறி விடுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி

Pin It