இன்றைய ஹோமோசேப்பியன்ஸ் மனித இனத்திற்கு முன்பு பூமியில் வாழ்ந்த நியாண்டர்தால்கள் (Neanderthals) காலத்தில் விண்வெளியில் இருந்து வருகை தந்த (C/2023 A3) என்ற விண்கல் 80,000 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பூமிக்கு அருகில் வருகிறது. 2023ன் தொடக்கத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டது. சூச்சின்ஷென் அட்லஸ் (Tsuchinshan–Atlas) என்றும் இது அழைக்கப்படுகிறது.

ஒவ்வொரு 80,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த விண்கல் பூமிக்கு அருகில் வருகிறது. இது நீட்டிக்கப்பட்ட சுற்றுவட்டப் பாதையில் சூரியனைச் சுற்றுகிறது. நெப்ட்யூனின் சுற்றுவட்டப் பாதைக்கு அப்பால் இருக்கும் ஊர்ட் மேகத்திரளில் (Oort cloud) இருந்து இந்த விண்கல் வருகிறது என்று கருதப்படுகிறது. ஊர்ட் மேகத்திரள் பகுதியில் பனிக்கட்டியால் ஆன விண்கற்கள் நிறைந்துள்ளது. இது சூரியனிடம் இருந்து 2.5 – 2.8 விண்வெளி அலகுகள் தொலைவில் உள்ளது.cometஒரு விண்வெளி அலகு என்பது (Au) 150 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தைக் குறிக்கிறது. இப்பகுதி பனிக்கட்டிகளால் ஆன விண் குப்பைகளைக் கொண்ட பெரிய மலைகள் அளவு அடர்ந்த சுவர்களுடன் கூடிய குமிழ் போன்ற பகுதி. நீண்ட காலத்திற்குப் பிறகு பூமிக்கு வரும் இது போன்ற விண்கற்கள் ஊர்ட் மேகத்திரளில் இருந்தே வருகின்றன என்று நாசா கூறுகிறது.

“பரந்து விரிந்த இந்த விண்கல் ஏறக்குறைய வட்ட வடிவில் சூரியனை சுற்றுகிறது. சூரிய மண்டலம் தோன்றியபோது உருவான பனிக்கட்டிகளால் ஆன எச்சமே இந்த விண்கல்” என்று ராயல் கிரீன்விட்ச் வான் ஆய்வுமைய (Royal Observatory Greenwich) விஞ்ஞானி டாக்டர் க்ரகரி ப்ரவுன் (Dr Gregory Brown) கூறுகிறார். 2024 செப்டம்பர் கடைசியில் சூரியனுக்கு மிக அருகாமையில் வந்த இந்த விண்கல் அக்டோபர் 2024ல் பூமிக்கு அருகில் காட்சியளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பூமியில் இருந்து 99.4 மில்லியன் மைல் தொலைவில் இருக்கும்போது நாசா விஞ்ஞானி மாத்யு டொமினிக் பந்நாட்டு விண்வெளி மையத்திலிருந்து இந்த விண்கல்லைப் படமெடுத்தார்.

இது போன்ற விண்கற்கள் சூரியனுக்கு அருகில் இருக்கும்போது பிரகாசமாகத் தோற்றமளிப்பது போல பூமிக்கு அருகில் வரும்போதும் காட்சியளிக்கின்றன. அதனால் அருகாமைப் பகுதிகளில் இருக்கும்போது மட்டுமே இவை பிரகாசமாகத் தோன்றுவதில்லை. 2024 அக்டோபர் 9ல் இது சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் தென்படும். இதை வெறும் கண்களால் பார்க்க முடியும். வெறும் கண்களால் பார்க்கக்கூடிய பிரகாசமான விண்கற்கள் பூமிக்கு வருவது மிக அரிது.

பூமியின் வட மற்றும் தென் கோளங்களில்

கடந்த சில பத்தாண்டுகளுக்குப் பிறகு இத்தகைய ஒன்று பூமிக்கு அருகில் வருகிறது. வெகுதொலைவில் இருந்து வருவதால் பூமிக்கு அருகில் வரும்போது இது எந்த அளவு பிரகாசமாகத் தோன்றும் என்று தெரியவில்லை. பூமியின் வட மற்றும் தென் கோளப்பகுதியில் வாழும் வான் ஆய்வாளர்கள் அக்டோபர் ஆரம்பத்தில் சூரிய உதயத்திற்கு முன்பு கிழக்கு திசையில் செக்ஸ்ட்டன்ஸ் (Sextans) விண்மீன் கூட்டம் இருக்கும் திசையை நோக்கிய பகுதியில் இதைப் பார்க்கலாம்.

சில நாட்களுக்குப்ப் பிறகு இது சூரியனின் மறுபக்கத்திற்கு நகரும். அதனால் அக்டோபர் 13க்குப் பிறகு மாலை நேரத்தில் சூரியன் மறைந்த பிறகு மேற்கில் போஓட்டீஸ் (Boötes) என்ற விண்மீன் திரளை நோக்கிய திசையில் இதைப் பார்க்கலாம். இது வானில் ஒரு அழுக்குத் தடம் போல காட்சி தந்தாலும் இதன் வால் பகுதியை பைனாகுலர்கள் அல்லது சிறிய வான் தொலைநோக்கிகள் மூலம் காணலாம் என்று ப்ரவுன் கூறுகிறார்.

இந்த விண்கல் பார்ப்பதற்கு அழகானதில்லை. ஆனால் கற்காலத்திற்குப் பிறகு பூமிக்கு வரும் ஒரு வான் பொருளைப் பார்ப்பதன் மூலம் சூரிய மண்டலத்தின் தோற்றம், வரலாறு, பூமியின் கதை போன்ற பல அரிய தகவல்களை நாம் அறிய முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

** ** **

மேற்கோள்: https://www.theguardian.com/science/2024/oct/01/comet-last-seen-in-stone-age-to-make-closest-approach-to-earth?

&

https://news.sky.com/story/most-impressive-comet-of-the-year-set-to-burn-across-the-night-sky-13226397?utm_medium=10today.uk.rd.20241002&utm_source=email&utm_content=article&utm_campaign=email-2022

சிதம்பரம் இரவிச்சந்திரன்