பெரியார் மீதும், திராவிடம் என்ற கருத்தியல் மீதும் பெரியார் காலம் முதல் இந்தக்காலம் வரை தமிழ்த் தேசியமாயைக்காரர்கள் அனைவராலும் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் குற்றச்சாட்டுக்களில் முக்கியமானவைகளில் சில.

“பலநூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டுக்கு வந்து தமிழர்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் சக்கிலியர், நாயக்கர், நாயுடு, கவுடர், ஒக்கலிகர் போன்ற சில ஜாதியினர் அந்நியர்கள். சுத்தத் தமிழர்கள் அல்ல. இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் பெரியாரே ஒரு தெலுங்கர், பெரியார் ஒரு கன்னடர்.”

“தமிழ்நாட்டின் மண்ணுரிமைக்காக பெரியார் போராடவில்லை. மொழிவாரி மாநிலப் பிரிவினையில் தமிழ்நாட்டின் தேவிகுளம், பீர்மேடு, இடுக்கி போன்ற பகுதிகள் கேரளாவுடன் சேர்க்கப்பட்டபோதும், திருத்தணி ஆந்திராவுடன் போனபோதும் பெரியார் அதை எதிர்த்துப் போராடவில்லை.”

பிறப்பை அடிப்படையாக வைத்து மனித இனத்தைப் பிரிப்பதும், அந்தப் பிரிவினையிலும் உயர்வு, தாழ்வு கற்பிப்பதும், அந்த ஏற்றத்தாழ்வை இன்றளவும் நடைமுறைப்படுத்துவதும் மனுதர்மத்தின் பணி; இந்து மதத்தின் பணி. அந்த வர்ணாஸ்ரம பாணியிலேயே, பார்ப்பன முறையிலேயே நமது தமிழ்த்தேசிய மாயைக்காரர்களும் ஒடுக்கப்பட்ட மக்களை பல கூறுகளாகப் பிரித்து வருகிறார்கள்.

மனித இனத்தை பிரித்துப் பார்க்கவேண்டும் என முடிவு செய்துவிட்டால் பல்வேறு வகைகளில் பிரிக்கலாம். உடலின் நிறத்தை வைத்துப் பிரிக்கலாம். அதற்குள்ளேயே உயரத்தை வைத்து ஆறடி உயரமுள்ளவர்கள் - ஆறடிக்கும் குறைவான உயரமுள்ளவர்கள் என்று பிரிக்கலாம், அதற்குள்ளேயும் உடல் பருமனை அடிப்படையாக குண்டானவர்கள் - ஒல்லியானவர்கள் என்று பிரிக்கலாம். வேகமாக ஓடுபவர்கள் - ஓட முடியாதவர்கள் என்று பிரிக்கலாம், ஆனால் எதற்காகப் பிரித்துப் பார்க்க வேண்டும்? என்ன காரணத்துக்காகப் பிரித்துப் பார்க்க வேண்டும் என்பது அடிப்படையான கேள்வி.

மனித குலத்தின் ஆதிக்கவாதிகள் - அந்த ஆதிக்கவாதிகளால் சுரண்டப்படுகிறவர்கள் என்று இரண்டு பிரிவினை அவசியம் தேவை. ஆதிக்கவாதிகளை அடையாளம் கண்டு ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் உருவாக இது பயன்படும். அப்படியில்லாமல் ஒடுக்கப்படும், சுரண்டப்படும் இனத்திற்குள்ளேயே நுணுக்கி நுணுக்கி பிரித்துப் பார்ப்பது, பேசுவது யாருக்குப் பயன்படும்? ஆதிக்கவாதிக்குத்தானே பயன்படும். இந்துமதத்தால், மனுதர்மத்தால், இந்திய தேசியத்தால் ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களுக்குள்ளேயே பிறப்பின் அடிப்படையில் பிரிவினைகளை உண்டாக்குவதும், அத்தகைய பிரிவினைகளையே பெரிதாக்கிக் காட்டுவதும் முக்கிய எதிரியான, ஆதிக்கவாதிகளான பார்ப்பனர்களைக் காப்பாற்றுவதுமான காரியங்களைத் தொடர்ந்து பலகாலமாக தமிழ்த்தேசிய மாயைக்காரர்கள் செய்துவருகிறார்கள்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பல்வேறு காரணங்களால் இங்கு வந்து தமிழ்நாட்டுக்குள்ளேயே பெண் எடுப்பது, பெண் கொடுப்பது போன்ற மணஉறவுகளை வைத்துக்கொண்டு, தம் வருமானத்தையும் சொத்துக்களையும் தமிழ்நாட்டுக்குள்ளேயே வைத்துள்ளவர்களும், ஆந்திராவிலோ, கர்நாடகாவிலோ எந்த தொடர்பும் இல்லாமல், வேர்கள் இல்லாமல், தமிழர்களுக்கு உள்ள தீண்டாமைக் கொடுமைகளை தாமும் ஏற்று, தமிழர்களுக்குள்ள ஜாதி இழிவுகளைத் தாமும் சுமந்து, தமிழர்களாகவே வாழ்பவர்களுமான இலட்சக்கணக்கான மக்களை பிறப்பு பார்த்து, ஜாதி பார்த்து அவர்களை வேறுபடுத்திப் பார்க்கிறார்கள் தமிழ்த் தேசியர்கள். அவர்களை அந்நியர்கள் என்றும் சுத்தத்தமிழர்கள் அல்ல என்றும் அறிவிக்கிறார்கள்.

ஆனால் உண்மையிலேயே ஆந்திராவில் வாழ்ந்துவரும் உண்மையான தெலுங்கு இனத்துக்கும், நேரடியான மலையாள இனத்துக்கும், நேரடியான கன்னட இனத்துக்கும் பிறந்த மன்னர்களையும் பார்ப்பனர்களையும் தமிழர்கள் என்றும், தமிழ்ப்பேரரசன் என்றும் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுகிறார்கள். தாய்லாந்துக்குப் போய் தமிழை முற்றிலும் மறந்து உடன் கொண்டுசென்ற தேவாரம், திருவாசகத்தை வைத்து இன்றுவரை இராஜகுருவாகவே வாழ்ந்துவரும் பார்ப்பனர்கள் தமிழர்களாம்.

தெலுங்கு பரம்பரையில் பிறந்து, தெலுங்கர்களால் வளர்த்து ஆளாக்கப்பட்டு, மலையாளப் பெண்ணை மணந்து, தெலுங்கர்களுக்காக அண்டை நாட்டினருடன் போராடி தெலுங்கு தேசங்களை உருவாக்கி அவர்களுக்கே கொடுத்து, உடன்பிறந்த சகோதரியையும், தனது மகளையும் ஆந்திர தெலுங்கு தேசத்து ராஜாக்களுக்கு மணம்முடித்துக் கொடுத்து, கொள்வினை கொடுப்பினைகளை அந்நிய நாட்டவருடன் மட்டுமே செய்து கொண்ட இராஜராஜன் தமிழனாம்! தமிழ்ப் பேரரசனாம்! இராஜராஜனை ஒரு தமிழன் என்று சொல்வதைப் போன்ற மானக்கேடு தமிழனுக்கு இனி எப்போதும் நேரக்கூடாது.

தமிழ்த்தேசியர்களின் சுத்த இரத்த அளவுகோலை - சுத்தத் தமிழர்களைக் கண்டறியும் சோதனையை வரலாற்று அடிப்படையில் அவர்களுக்கே திருப்பிவிட்டுப் பார்த்தால் இங்கு இன்றைய நிலையில் சுத்தத் தமிழன் என்று யாரும் இல்லை என்ற உண்மையைக் கண்டறியலாம். தமிழ்த் தேசியர்களின் பிரிவினையில் உள்ள நேர்மையற்ற தன்மையையும் அறியலாம்.

தமிழன் என்றால் யார்? தமிழன் என்பதற்கு வரையறை என்ன?

முருகன், விநாயகன், இராமன் போன்ற பார்ப்பனக் கடவுளர்களுக்கு அடுத்தபடியாக மிகக்கடுமையாகப் பார்ப்பனர்களுக்குப் பயன்பட்டவன் இராஜஇராஜசோழன். அந்த இராஜராஜன் தான் தற்போது தமிழ்த்தேசியர்களின் கனவுநாயகன். எனவே முதலில் அவனது பரம்பரையை தமிழ்த்தேசியர்களின் பாணியிலேயே பிறப்புச் சோதனைக்கு உட்படுத்துவோம்.

திணைவழிப்பட்ட நாகரீக காலத்திற்குப் பிறகு அரசுகள் தோன்றியபிறகு சேர, சோழ, பாண்டியர்களுக்கிடையில் கணக்கிலடங்காத போர்கள் நடைபெற்றன. மூன்றுபுறமும் கடலால் சூழப்பட்டிருந்த நிலம் முழுதும் தமிழ் மன்னர்களின் ஆட்சிதான் நிலவியது. படையெடுப்புகளாலும், போர்களாலும் இம்மூன்று அரசுகளுக்குள்ளும், அந்த அரசுகளில் வாழ்ந்த மக்களுக்குள்ளும் இரத்தக்கலப்பு நடந்தே இருக்கும். போர்களால் இரத்தக்கலப்பு நடைபெறுவது உலகெங்கிலும் இன்றுவரை நடந்துகொண்டுதான் இருக்கின்றன. சங்க காலத்தில் மூன்று மன்னர்களும் தமிழ்பேசியவர்களே. ஆனால் அதன் பிறகு மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகள் தோன்றியபிறகு, தெலுங்கு, கன்னட, மராட்டிய அரசுகள் தோன்றிய பிறகு நடந்த ஆதாரப்பூர்வமான இரத்தக்கலப்புகளைப் பற்றிப் பார்ப்போம்.

rajaraja_chozhanகி.பி. 846 முதல் கி.பி 1279 வரையிலான பிற்காலச் சோழர்களின் வரலாற்றை அறிஞர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் அவர்கள் “பிற்காலச்சோழர் சரித்திரம்” என்னும் பெயரில் மூன்று பாகங்களாக எழுதியுள்ளார். அமிழ்தம் பதிப்பகம் வெளியிட்ட அந்நூலில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் சில செய்திகள். 

பிற்காலச் சோழப் பேரரசுக்கு வித்திட்ட விஜயாலயச் சோழனை அடுத்து கி.பி. 871 முதல் கி.பி 906 வரை சோழநாட்டை ஆண்ட முதல் ஆதித்தசோழனே வேற்றுமொழி இனத்தவருடன் இரத்தக்கலப்பை தொடங்கிவிட்டான். தற்போதைய மகாராஷ்ட்ராவிற்கும் கர்நாடகாவிற்கும் இடைப்பட்ட பகுதியில் கி.பி. 890 முதல் கி.பி. 915 வரை அரசாண்ட இராஷ்ட்ரகூட மன்னனான இரண்டாம் கிருஷ்ணதேவனின் மகளான இளங்கோப்பிச்சிதான் முதல் ஆதித்தசோழனின் பட்டத்தரசி. பிற்காலச்சோழப் பேரரசில் நடந்த முதல் மாற்று இனக்கலப்பு இது. சோழனுக்கும் இராஷ்ட்டிரகூடனுக்கும் கலந்து பிறந்த முதல் பராந்தக சோழன் கி.பி. 907 முதல் கி.பி. 953 வரை சோழ நாட்டை ஆண்டான்.

இராஷ்ட்ரகூடர் - தமிழர் கலப்பில் பிறந்த முதல் பராந்தகசோழனின் பட்டத்தரசி யார் தெரியுமா? மலையாள மொழி உருவானதற்குப் பிந்தைய காலகட்டத்தில் வாழ்ந்த சேரநாட்டு இளவரசி கோக்கிழானடி. பராந்தகனின் மற்றொரு அரசியும் கேரளாவைச் சேர்ந்தவள்தாள். இப்படி இராஷ்ட்டிரகூடர் - தமிழர் - மலையாளி கூட்டுக்கலப்பில் பராந்தகனுக்குப் பிறந்த மகள் வீரமாதேவி மீண்டும் இராஷ்ட்டிரகூட இளவரசன் நான்காம் கோவிந்தனுக்கு மனைவியாகிறாள்.

பராந்தகனுக்குப் பிறகு கி.பி.953 முதல் கி.பி.957 வரை சோழநாட்டை பராந்தகனின் மகன் கண்டராதித்த சோழன் ஆண்டான். அவனும் தன் பங்குக்கு ஒரு வேற்றுஇன இரத்தக்கலப்பை உருவாக்கினான். கண்டராதித்தனின் பட்டத்தரசியும் ஒரு மலையாளம் பேசும் கேரளப் பெண். அவள் பெயர் செம்பியன் மாதேவி. கண்டராதித்த சோழனுக்குப் பிறகு அவனது தம்பி அரிஞ்சயசோழன் பட்டத்துக்கு வருகிறான்.

இந்த அரிஞ்சய சோழன்தான் இன்றைய தமிழ்த்தேசியர்கள் சிலரின் கனவுநாயகனான, இலட்சியப் பேரரசனான இராஜராஜனின் பாட்டனாவான். இராஜராஜனின் பாட்டனான அரிஞ்சயனே இராஷ்ட்ரகூடர் - தமிழர் - மலையாளிகளின் கூட்டணியில் கருவானவன்தான். அந்தக் கூட்டணி போதாதென்று அரிஞ்சயனும் தன் கடைமைக்காக தானும் ஒரு புது இனத்தோடு இரத்தக்கலப்பை உருவாக்குகிறான். ஆம், அரிஞ்சய சோழனின் பட்டத்தரசி வீமன்குந்தவை என்பவள் தெலுங்கு மொழி பேசிய ஆந்திரப் பெண் ஆவாள். அரிஞ்சயனின் மற்றொரு மனைவி கோதைப்பிராட்டி ஒரு மலையாளப் பெண். மற்றொரு துணைவியான கல்யாணி வைதும்பராயன் என்ற தெலுங்கு மன்னனின் மகள்.

ஆக, இராஜராஜனின் தந்தை இரண்டாம் பராந்தக சோழன் என்ற சுந்தரசோழனே தமிழர் - மலையாளி - தெலுங்கர் - இராஷ்ட்டிரகூடர் கலப்பில், நான்கு இனக்கூட்டணியில் கருவானவன் தான். இந்த சுந்தர சோழனுக்கு மனைவியும், துணைவியுமாக பராந்தகன் தேவியம்மன், வானவன் மாதேவி என இருவர் இருந்தனர். பராந்தகன் தேவி வழக்கம்போல ஒரு மலையாளப்பெண். இராஜராஜனின் தாயார் வானவன் மாதேவி வைதும்பர்கள் என்னும் தெலுங்கர்குலப் பெண். இராஜராஜன் தன்னுடன் பிறந்த சகோதரி குந்தவையை கீழைச்சாளுக்கியனான வல்லவரையன் வந்தியத்தேவன் என்ற ஆந்திர இளைஞனுக்குத்தான் மணம்முடித்தான். அதோடு தனது மகள் குந்தவையையும் சாளுக்கியனான விமலாதித்தன் என்ற ஆந்திர இளைஞனுக்குத்தான் மணம்முடித்துக் கொடுத்துள்ளான். குந்தவை என்ற பெயரே தமிழச்சிகள் வைத்துக் கொள்ளும் பெயர் அல்ல என்று சதாசிவப் பண்டாரத்தார் விளக்குகிறார்.

விஜயாலயச் சோழனை அடுத்து பட்டத்துக்கு வந்த முதல் பராந்தகசோழன் காலம் முதல் இராஜராஜன் காலம் வரை ஒவ்வொரு சோழனும் தான் பெண்கொடுத்த, பெண் எடுத்த சாளுக்கிய, இராஷ்ட்ரகூட, மலையாள, கன்னட அரசுகளுக்காக பல்வேறு போர்களை தமிழ்ப்படையினரைக் கொண்டு நடத்தியுள்ளனர். மேலைச் சாளுக்கியர்களுக்கும், கீழைச்சாளுக்கியர்களுக்கும் இடையே நடந்த போர்கள், இராஷ்ட்டிர கூடர்களுக்கும், சாளுக்கியர்களுக்குமிடையே நடந்த போர்கள், கங்கர்களுக்கும் வாணர்களுக்கும் நடந்த போர்கள், மகாராஷ்ட்ராவினருக்கும், ஆந்திரர்களுக்குமிடையிலான போர்கள் என பல்வேறு வகைப்பட்ட போர்களுக்கு சோழப்படைகள் அனுப்பப்பட்டுள்ளன. அந்தந்த அரசுகளோடு சோழர்கள் கொண்ட மண உறவுகள் காரணமாக அவர்களுக்கு ஆதரவாக தெலுங்கர்களின் வெற்றிக்காகவும், சில சமயம் கன்னடர்களின் வெற்றிக்காகவும், சில சமயம் மராட்டியர்களின் வெற்றிக்காகவும், சில சமயம் மலையாளிகளின் வெற்றிக்காகவும் சோழர்களால் குறிப்பாக இராஜராஜ சோழனாலும் தமிழர்கள், தமிழ்ப்படைவீரர்கள் இலட்சக்கணக்கில் பலியாக்கப்பட்டுள்ளனர்.

எல்லாவற்றையும்விட மிகக் கொடுமையான வரலாறுகளும் மூவேந்தர்கள் காலத்தில் நடந்துள்ளன. தெலுங்கர், கன்னடர், மராட்டியர் வெற்றிக்காக தமிழ்ப்படையினர் சோழர்களால் பயன்படுத்தப்பட்டது போல சிங்களனின் வெற்றிக்காகவும் சோழர்கள், பாண்டியர்கள், சேரர்கள் உழைத்திருக்கின்றனர். இராஜராஜ சோழனின் தந்தையே நான்காம் மகிந்தன் என்ற சிங்கள மன்னனோடு நட்புரிமை பூண்டு உடன்படிக்கை செய்துகொண்டு பலகாலம் சிங்களரின் நட்பு நாடாக சோழநாட்டை வைத்திருக்கிறான். அதுபற்றி தனி கட்டுரையாக எழுத வேண்டிய அளவுக்கு செய்திகள் உள்ளன. தேவை வரும்போது அவற்றை விளக்கலாம்.

இராஜராஜன் ஆட்சிக்காலத்தில் கி.பி.1007இல் அப்போது மராட்டியப் பகுதியாக இருந்த தார்வார் பகுதிக்கு இராசேந்திரசோழனின் படை சென்று பெரும் போர்புரிந்து பெரும் செல்வங்களைக் கொண்டு வந்ததோடு தமிழ்ப்படையினர் ஆயிரக்கணக்கான பெண்களை மனைவியராக்கி தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்தனர் என்று ஹொட்டூர் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இவ்வாறு வேற்று இனத்தவரோடு அந்நிய இனத்தவரோடு சோழமன்னர்கள் கொண்ட மணஉறவுகளுக்காக போரிடச் சென்ற தமிழ்ப்படையினர் ஒவ்வொருவரும் தத்தம் பங்குக்கு வேற்றுஇன இரத்தக்கலப்புகளை உருவாக்கியே வந்துள்ளனர். தமிழினத்தை ஒரு சர்வதேசிய இனமாக மாற்றியுள்ளனர்.

பிறப்பிலோ, வளர்ப்பிலோ, அடையாளப்படுத்திக் கொள்வதிலோ, கொள்வினை - கொடுப்பினையிலோ பல நூற்றாண்டுகளாக பிற்காலச் சோழர்கள் சுத்தத் தமிழர்களாக இல்லை. இராஜராஜனும் சுத்தத்தமிழன் இல்லை. இல்லவே இல்லை. யார் யாருக்கெல்லாம் பயன்பட்டிருக்கிறார்கள் என்று பார்த்தாலும் பார்ப்பனர்கள் மற்றும் மாற்று இனத்தவர்களைத் தவிர தமிழர்களுக்குச் சிறிதும் பயன்படவில்லை. இப்படி எதிலுமே தமிழனாக இல்லாத இராஜராஜன் தமிழ்த் தேசிய மாயைக்காரர்கள் கண்களுக்கு மட்டும் எப்படி தமிழ்ப் பேரரசன் ஆனான்?

சர்வதேசிய இனத்தான் என்றும், தேசிய இனசார்பற்றவன் என்றும் அடையாளப்படுத்தப்பட வேண்டிய இராஜராஜனின் இரத்தப் பரிசோதனை அறிக்கையும் - எம் பாட்டன் இராஜராஜன் என வீரமுழக்கமிடும் பேரன்களாகிய நமது இரத்தப் பரிசோதனை அறிக்கையும் இதுதான். நான் சைவப்பிள்ளை, நான் முக்குலத்தான், நான் படையாச்சி, நான் கவுண்டன், நான் ராஜராஜசோழன் பரம்பரை, நாங்களெல்லாம் சுத்தத்தமிழர்கள். சக்கிலியர்களும், நாயக்கர்களும், ஒக்கலிகர்களும் சுத்தத் தமிழர்கள் இல்லை என்று யாராவது சொன்னால் ஒன்று அவருக்கு வரலாறும், அறிவியலும் சுத்தமாகத் தெரியாமல் இருக்க வேண்டும். அல்லது மனநலக் காப்பகத்தில் அனுமதிக்கப்பட வேண்டியவராக இருக்க வேண்டும்.

உணர்வால், வளர்ப்பால், உழைப்பால், செயலால் தமிழனாக வாழ்ந்து, தமிழருக்கே தமிழரை உணர வைத்து, உயரவைத்த தோழர் பெரியார் தெலுங்கராம்? நேரடியாக வேற்று இனத்தவரான நான்கு இனங்களின் கூட்டணியில் கருவாகி வாழ்நாளெல்லாம் பார்ப்பானுக்கும் ஆந்திராக்காரனுக்கும். கன்னடத்தானுக்கும், மலையாளிக்கும் உழைத்துக்கொண்டிருந்த இராஜராஜன் தமிழனாம்? தமிழ்த்தேசியமாயைக்காரர்களின் நேர்மையை எப்படிப் பாராட்டுவது? இவர்கள் அளவுகோலில் தமிழினத்துக்கு உண்மையாக உழைப்பவர்கள் எல்லாம் அந்நியர்கள். பார்ப்பனர்களுக்கு உண்மையாக உழைப்பவர்கள் எல்லாம் தமிழர்கள்.

மனுவின் முறையில் பிறப்பின் அடிப்படையில் சுத்த இரத்தப்பரிசோதனை செய்து பார்த்தால் இங்கு யாரும் தமிழன் இல்லை. திராவிடனும் இல்லை. பெரியாரின் ஆரியர் - திராவிடர் என்ற பிரிவினைகள் இரத்த அடிப்படையிலோ, பிறப்பின் அடிப்படையிலோ கடைபிடிக்கப்படுவதல்ல. பெரியாரே இதைத் தெளிவாக விளக்குகிறார்.

“இந்நாட்டில் வாழும் தற்காலப் பார்ப்பனர்கள் மத்திய ஆசியாவில் இருந்து குடியேறிய ஆரியர்களின் நேரான சுத்தமான சந்ததியர்கள் அல்ல என்பது உண்மையே ஆனாலும் அவர்களையும் திராவிடர்கள் என்று ஒப்புக்கொள்ளாமைக்கு காரணம், அவர்களுக்கும் நமக்கும் உள்ள பல்வேறு பண்பு, கலை, ஆசாரம், நடப்பு ஆகிய பல வேறுபாடுகள் தாம்.

நம் கழகத்தில் யாரையும் பிறவி காரணமாக வேறினத்தவர் என்று ஒதுக்கவில்லை. பழக்க வழக்கங்களையும் பார்த்துத்தான் அவர்களுக்கும் நமக்கும் இருந்து வரும் அடிப்படை பேதத்தைக் கருதித்தான் பிரிவினை செய்கிறோம். அவர்கள் எப்போதுமே திராவிடர்களை ஒதுக்கி வைத்துத்தான் வந்திருக்கிறார்கள். ஒதுக்கி வைத்திருக்கும்படியான கலாச்சாரத்தைத் தான் பின்பற்றி நடந்து வருகிறார்கள். அதாவது தாம் உயர்ந்தவர்கள் திராவிடர்கள் தாழ்ந்தவர்கள் இருவருமே தனித்தனிப் பிறப்பு என்கிற உணர்ச்சி அவர்களை விட்டு எப்போதும் நீங்கியதில்லை."- (பெரியார் - விடுதலை 6-10-1948)

"ஆரியன் - திராவிடன் என்பது கலந்து போய்விட்டது. பிரிக்க முடியாதது இரத்த பரிட்சையிலும் வேறுபடுத்த முடியாதது என்று சிலர் வாதாடலாம். அது நமது கருத்தை அறியாமல் பேசும் அறிவற்ற பேச்சு என்றே சொல்வேன். ஆரிய திராவிட இரத்தம் கலந்து விட்டிருக்கலாமே தவிர ஆரிய - திராவிட அனுஷ்டானங்கள் கலந்து விட்டனவா? சட்டைக்காரர் என்று கூட்டம் இருக்கிறது. இது வெள்ளை ஆரிய - கருப்பு திராவிட ரத்தக் கலப்பு என்பதில் எவருக்கும் ஆட்சேபனை கிடையாது என்றாலும் நமக்கும் அவர்களுக்கும் எதில் கலப்படம் இருக்கிறது?

இன்றைய தினம் ஆரிய - திராவிட என்ற பிரிவினை இரத்தப் பரீட்சையின் பேரிலல்ல. அல்லாமல், கலாச்சார, பழக்க வழக்க அனுஷ்டானத்தின் படியாகும் என்பதை அனைவரும் உணர வேண்டும். அந்தப்படி பார்க்கிறபோது, யார் ஆரியர், யார் திராவிடர் என்றால், சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், தங்களைப் பிராமணர்கள் என்றும், அந்தப்படி பிராமணர்கள் என்பதால் உயர் ஜாதிக்காரர்கள் என்றும் சொல்லப்படுகிற பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள். அதுபோலவே அந்தப் பார்ப்பனர்களாலும், அவர்களின் கடவுள், மதம், சாஸ்திரம், புராண, இதிகாசங்கள் என்பவைகளின் பேரால் நாலாவது ஜாதி மக்கள், கீழ் ஜாதி மக்கள் என்று சொல்லப்படுகிற சூத்திர மக்கள் என்பவர்கள் திராவிடர்கள் ஆவார்கள்."  (28.08.1953-இல் தருமபுரி மாவட்டம் பொம்மிடியில் தந்தை பெரியார் சொற்பொழிவு)

தமிழன் என்பதற்கு என்ன வரையறை? எந்த அடிப்படையில் தமிழனை அடையாளம் காண்பீர்கள்? மனுவைப் போல பிறப்பின் அடிப்படையிலா? பிறப்பின் அடிப்படையில் என்றால் படையெடுப்புகள் நடப்பதற்கு முந்தைய காலகட்டத்தில் வாழ்ந்தவர்களைத்தான் சுத்தத் தமிழர்கள் என்று ஒரளவுக்குச் சொல்லலாம். அது தமிழனோ, தெலுங்கனோ, பீகாரியோ, குஜராத்தியோ யாராக இருந்தாலும் சுத்தரத்தத் தத்துவம் பேசமுடியாது.

தமிழ்த் தேசிய இன மாயை

விஞ்ஞானப்பூர்வமான(!) தேசிய இனவாதிகளின் தேசிய இன வரையறையை மீண்டும் நினைவு கொள்வோம். ஒரு பொதுமொழி, ஒரு பொதுப்பண்பாட்டில் வெளிப்படும் உளவியல் உருவாக்கம், பொதுவான பொருளியல் வாழ்வு, தொடர்ச்சியான நிலப்பரப்பு ஆகிய நான்கு சிறப்புக்கூறுகள் ஒரு தேசிய இனத்துக்கு வேண்டும்.

அய்.நா. பொது அவையில் 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாள் பிரகடனப்படுத்தப்பட்ட அனைத்துலக மனிதஉரிமைப் பிரகடனத்தின் 15 ஆவது பிரிவு,

“தேசிய இன உரிமையைப்பெற ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. தேசிய இன உரிமையை எவரிடமிருந்தும் தன்னிச்சையாகப் பறித்துவிடக்கூடாது. தன் தேசிய இனத்தை மாற்றிக்கொள்ளும் உரிமையையும் எவருக்கும் மறுத்தல் கூடாது.”

என்று கூறுகிறது. ஒருவன் தனது தேசிய இனத்தையே மாற்றிக்கொள்ளலாம் என ஒரு நெகிழ்வுத் தன்மை கொண்டதாகவே அகில உலக மனித உரிமைப் பிரகடனங்கள் உள்ளன. அந்த நெகிழ்வுத்தன்மையை இங்குள்ள தமிழ்த்தேசியர்கள் எதிரியான பார்ப்பானை உள்ளே நுழைப்பதற்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர். பார்ப்பனர்களால் ஒடுக்கப்படும், சுரண்டப்படும் மக்களை ஒருங்கிணைக்க நெகிழ்வுத்தன்மைகளைப் பயன்படுத்துவதில்லை. அவர்களது முறையிலேயே விஞ்ஞானப்பூர்வ தேசிய இனவாதிகளின் வழியிலேயே நாமும் கட்டுத்திட்டமாக, கறாராக தேசிய இன வரையறையை தமிழ்இனத்துக்குப் பொருத்திப் பார்த்தால் தேசிய இனம் என்ற சட்டகம் (Frame) தமிழனுக்குப் பொருந்தாமல் இருப்பதைக் காணலாம். தமிழ்தேசியம் என்பதே மாயை என்பதை உணரலாம்.

பொதுமொழியை வைத்து தமிழனை எப்படி அடையாளம் காண்பீர்கள்? மொழியின் அடிப்படையில் தமிழனை அடையாளங் காணத் தொடங்கினால், ஒடுக்கும் பார்ப்பான் தமிழனாக வந்துவிடுவான். ஒடுக்கப்படும் இஸ்லாமியர்கள் வெளியே நிற்பார்கள். ஆதிக்கத்தின் உச்சியில் இருக்கும் ஆரியர்கள் தம்மை அந்தணர் எனக் கூறிக்கொண்டு உள்ளே வந்துவிடுவர். ஆரிய அடக்குமுறையால் மிகக் கடுமையாக நசுக்கப்படும் இலட்சக்கணக்கான தாழ்த்தப்பட்ட தோழர்கள் வெளியே நிற்பர். தமிழ்நாட்டில் அய்யரும் அய்யங்காரும், கேரளாவில் நம்பூதிரியும், கர்நாடகாவில் ஹெக்டேயும், வங்காளத்தில் முகர்ஜியும் அந்தந்த தேசிய இனங்களின் மொழியைப் பேசி அந்தந்த இனங்களின் ஆதிக்க சக்தியாக கேள்வி கேட்பாரில்லாமல் சுகமாய் வாழ்வான். உலகில் எந்த மனிதனும் பேச்சுவழக்கில் பயன்படுத்தாத சமஸ்கிருதம் செம்மொழியாக அறிவிக்கப்பட்டு கோடிக்கணக்கான பணம் அம்மொழியின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்ட நிலை தொடரும். சமஸ்கிருதப் பண்பாடும் தொடரும். இங்கு பல நூற்றாண்டுகளாக இருக்கும் ஒடுக்குமுறை சிறிதும் மாற்றமின்றித் தொடரவே செய்யும்.

எந்தத் தமிழை அடிப்படையாக வைத்துள்ளீர்கள்? ஈழத்தமிழா? சென்னைத் தமிழா? மதுரைத் தமிழா? கொங்குத்தமிழா? நெல்லைத்தமிழா? இவை எல்லாவற்றிற்கும் எதிராக வழங்கும் பார்ப்பனத்தமிழா? ஐரோப்பிய நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் அடுத்த தலைமுறையான ஆயிரக்கணக்கானோருக்கு தமிழ்மொழி சுத்தமாகத் தெரியாது. பேசவோ, எழுதவோ, படிக்கவோ தெரியாது. பண்பாட்டு விழாக்களுக்காக தமிழ்நாட்டிலிருந்து ஐரோப்பா செல்லும் தமிழ்த் தலைவர்கள்கூட கூட்டங்களில் ஆங்கிலத்தில் பேசித்தான் ஈழ விடுதலைக் கருத்துக்களுக்கு அழுத்தம்தர வேண்டியுள்ளது. தமிழே தெரியாத ஐரோப்பா வாழ்தமிழர்களை எந்த இனத்தில் இணைப்பீர்கள்?

தமிழ்நாட்டில் வாழும் தமிழனும் “தமிழ்பேசு; தங்கக்காசு” என்னும் நிகழ்ச்சிகள் நடத்தினால் தான் தமிழ் பேசுவது என்ற நிலையில் தமிழ் பேசுகிறான். இப்படி அரைகுறையாகத் தமிழைப் பேசுபவர்களையும் தமிழனாக ஏற்றுக் கொள்வீர்களா? தேவிகுளம், பீர்மேடு, இடுக்கி பகுதிகளிலுள்ள மக்கள் எல்லாம் வீட்டில் தமிழும், வெளியில் மலையாளமும் பேசித்தான் வாழ்கின்றனர். அடுத்தடுத்த தலைமுறைகள் மலையாளம் மட்டுமே பேசுகின்றனர். இந்த கேரளத் தமிழர்களை எந்த இனத்தில் இணைப்பீர்கள்? தமிழை அடிப்படையாக வைத்து தமிழர்களை முழுமையாகவும், தமிழர்களுக்கு எதிரிகளான பார்ப்பனர்களை பிரித்தும் தேசிய இன வரையறையை உறுதிப்படுத்த முடியுமா? அப்படிச் செய்தாலும் தேசிய இனம் என்ற சட்டகம் (Frame) இங்கே மாயையாக, பொருந்தாமல்தானே போகும்.

“ஒரு பொதுப்பண்பாட்டில் வெளிப்படும் உளவியல் உருவாக்கம்” இதுவும் மாயையானதுதான். இங்கு தமிழர்களுக்கென்று என்ன பொதுப்பண்பாடு இருக்கிறது? ஜாதிக்கொரு பண்பாடுதானே இருக்கிறது? ஒவ்வொரு ஜாதியினராலும் தனித்தனி பழக்க வழக்கங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. அந்த ஜாதியின் பண்பாடுகள் யாராலும் மீறப்படாமல் மனுதர்மச் சட்டங்கள் பாதுகாக்கின்றன. உணவு உண்பது, கழிவை வெளியேற்றுவது என்ற உலக மனித இனங்களுக்குப் பொதுவானவைகளைத் தவிர மற்ற பழக்கவழக்கங்களை ஜாதியும் மதமும்தான் நிர்ணயிக்கின்றன. ஒவ்வொரு ஜாதியும் இங்கு ஒவ்வொரு தேசிய இனங்களாகத்தான் இயங்குகின்றன. உணவுமுறை, உணவு உண்ணும் முறை, உடை, உடை உடுத்தும் முறை, இருப்பிடம், இருப்பிடங்கள் இருக்க வேண்டிய முறை, ஊர், ஊர்கள் அமைய வேண்டிய முறை, ஊர்மக்கள் - சேரி மக்கள், இருவகை மக்களிலும் ஆண்கள், பெண்களுக்கென்று தனித்தனியான பழக்க வழக்கங்கள் என ஒவ்வொரு அணுவையும் நிர்ணயிப்பது இந்துமதமும், ஜாதியும் தான். இவை உருவாக்கும் உளவியல் உருவாக்கம் தேசிய இன இலக்கணங்களுக்கு பொருந்துமா?

ஒருவனது வாழ்வில் மிக முக்கியமான நிகழ்வான திருமணம் தமிழர் முறையிலா நடக்கிறது? செம்புலப் பெயல்நீர் போல ஜாதியும், மதமும், பணமும் கலந்த ஆரியமுறைத் திருமணங்கள் தானே நடக்கின்றன. ஜாதி பார்த்து, மதம் பார்த்து, ஜாதிக்குள்ளேயே குலம், கோத்திரம், மாமன் மச்சான் முறைகள் பார்த்து, பார்ப்பான் குறித்துக் கொடுக்கும் சுபமுகூர்த்த நன்நாளில் திதி, நட்சத்திரம் பார்த்து பார்ப்பானை வைத்து சமஸ்கிருத மந்திரங்கள் ஓதப்பட்டு, தாலி கட்டப்பட்டு, கன்னிகாதானம் நடக்கிறது. நாள் குறிப்பதிலிருந்து தாலிகட்டுவது வரை, சாந்தி முகூர்த்தம் என்பது வரை எது தமிழ்ப் பண்பாடு?

கடுமையாக உழைத்து சிறுகச்சிறுகச் சேமித்தோ, வங்கிகளில் கடன்பட்டோ சிறிய அளவில் ஒரு வீட்டைக் கட்டும் சராசரித் தமிழனோ அல்லது இந்தியா முழுமைக்கும் வட்டிக்குவிட்டு மற்ற தேசிய இனங்களைச் சுரண்டி தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான செலவில் அரண்மனைகளைக் கட்டும் தமிழனோ யாராக இருந்தாலும் வாஸ்து முறையில் அளவு பார்த்து, வாஸ்து முறையிலோ கதவு, ஜன்னல்கள்கள் வைத்து, வாஸ்து சாஸ்த்திரத்தின்படி வண்ணமும் பூசி வழக்கம்போல பார்ப்பான் சொல்லும் சுபமுகூர்த்த நன்நாளில் பசுமாட்டை உள்ளேவிட்டு க்ரானைட் திரையில் சிறுநீர் (சிறு நீரா, பெரு நீரா) கழிக்கச்செய்து, நெருப்பை வளர்த்து, நெருப்பின் முன் வீட்டைக் கட்டியவரை உட்கார வைத்து அந்த மாட்டு மூத்திரத்தை முகத்தில் அடித்து, பொன்னையும் பொருளையும் பெருமளவில் பிடிங்கிச் செல்கிறான் பார்ப்பான். இதில் எது தமிழ்ப் பண்பாடு?

செத்துப்போனாலும் ஒவ்வொரு ஜாதிக்கென்று தனித்தனியாக சடங்குகள், சம்பிரதாயங்கள், சுடுகாடு போனாலும் ஜாதிக்கொரு சுடுகாடு, மின்சார சுடுகாட்டுக்குப் போனாலும் அங்கேயும் ஜாதி, மதச் சடங்குகள், புதைக்கப்பட்ட பிறகோ, எரிக்கப்பட்ட பிறகோகூட விட்டுத் தொலையாமல் கருமாதி, 30 ஆம் நாள், திதி, திவசம் என்று தொடர்கொள்ளையடிக்கிறான் பார்ப்பான். இதில் எது தமிழ்ப்பண்பாடு? ஒரு தமிழனின் பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து முக்கிய நிகழ்வுகளிலும் அவன் கடைபிடிப்பது பார்ப்பனப் பண்பாட்டைத்தான். ஆரியப் பண்பாட்டைத்தான். தமிழன் மட்டுமல்ல, இந்தியத் துணைக்கண்டம் முழுவதிலுமுள்ள ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் அனைத்துமே தமது வாழ்வின் பல்வேறு நிலைகளில் ஆரியப் பண்பாட்டைத்தான் கடைபிடிக்கிறார்கள்.

அகில உலக மனித உரிமைப் பிரகடனங்கள் தேசிய இனத்தையே மாற்றிக்கொள்ளலாம் என நெகிழ்வுப் போக்கில் சென்றாலும், தமிழ்நாட்டில் இந்துமதத்தில் ஜாதி மாறமுடியுமா? நேற்றுவரை நான் பறையன்; நாளையிலிருந்து படையாச்சியாகவோ, தேவராகவோ, சைவப்பிள்ளையாகவோ மாறிக்கொள்கிறேன் பிள்ளைமார்களின் பண்பாட்டைப் பின்பற்றிக்கொள்கிறேன்; படையாச்சியின் பண்பாட்டைப் பின்பற்றிக் கொள்கிறேன் என்றால் மேற்கண்ட பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் அதை ஏற்றுக்கொண்டு பறையர்களைப் பிற்படுத்தப்பட்டவர்களாக ஏற்றுக்கொள்வார்களா? அல்லது ஜாதி கடந்து தமிழனாக மாறிவிடுகிறேன். தமிழ்ப் பண்பாட்டைக் கடைபிடிக்கிறேன் என்று அறிவுப்பூர்வமாகச் சொல்வதாக வைத்துக்கொள்வோம். அந்த கன்வெர்ட்டட் தமிழன் கடைபிடிக்க தமிழ்ப்பண்பாடு என்று என்ன இருக்கிறது? நமக்கு கிடைத்த விழாக்கள், நமது இலக்கியங்கள், நமது மொழி, பண்பாடு, நமது அரசியல் அனைத்தும் பார்ப்பனமயமாகவும் இந்திய மயமாகவும்தானே இருக்கின்றன. “பொதுப்பண்பாட்டில் வெளிப்படும் உளவியல் உருவாக்கம்” என்பது தமிழனைப் பொறுத்தவரையில் ஜாதியும், மதமும்தான். தமிழ்த் தேசியஇனம் என்கிற சட்டகம் இங்கும் இடிக்கிறது.

periyar_404அடுத்து “பொதுவான பொருளியல் வாழ்வு.” ஒட்டுமொத்த சமுதாயமே ஆரியமயமாகிவிட்ட பிறகு பொருளியல் மட்டும் தனியாக எங்கே பொதுப்பண்பைக் காட்டப்போகின்றது? தமிழனின் பொருளியலையும் அரசியலையும் நிர்ணயிப்பது இந்துமதமும், ஜாதியும், இந்திய தேசிய - பார்ப்பன நலன்களும் தான். தற்போது புதிய மாற்றமாக பன்னாட்டு நிறுவனங்களும், பன்னாட்டு நிதியங்களும் நிர்ணயிக்கும் இடத்தில் இருக்கின்றன. இவையும்கூட பார்ப்பனநலன்களுக்கு எதிராக எதையும் இந்தியாவில் செய்துவிட இயலாது. உயிரைப் பணையம்வைத்து ஆழ்கடல் சென்று மீன்பிடித்து வாழும் நெய்தல் நில பரதவருக்கும், ஆயிரக்கணக்கான வேலி நிலங்களை கையகப்படுத்தி வாழும் மருதநில மூப்பனார்களுக்கும் பொதுவான பொருளியல் வாழ்வு எப்படி இருக்கமுடியும்? அப்படிப் பொதுவாக இருக்கிறது என்று எதையாவது காட்ட முனைந்தால் அது அவசியம் பார்ப்பன – இந்திய தேசிய பொருளியலாகத் தான் இருக்கும். தமிழ்த் தேசிய இனம் என்பதற்கான பொதுவான பொருளியல் என்று எதுமில்லை.

இறுதியாக “தொடர்ச்சியான நிலப்பரப்பு”. தற்போது விஞ்ஞானப்பூர்வ தமிழ்த்தேசியர்களால் அடையாளப்படுத்தப்படும் தமிழ்நாடு 1953க்குப் பின்னால் காங்கிரஸ் - பார்ப்பன – இந்திய தேசிய முதலைகளால் குறித்துக் கொடுக்கப்பட்ட நிலப்பகுதியாகும். பார்ப்பான் அவனுக்கு இடைஞ்சல் இல்லாமல் பிரித்துக் கொடுத்த பகுதிகளை அடிப்படையாக வைத்துத்தான் தேசிய இன அரசு முழக்கத்தை வைக்கிறார்கள். இந்திய தேசியவாதிகளால் கேரளப்பகுதிக்குப் பிரித்துத் தரப்பட்ட தேவிகுளம், பீர்மேடு, இடுக்கி போன்ற பகுதிகளை மீட்க வேண்டும் என்று சில குழுக்களும், திருப்பதியை மீட்கவேண்டும் என்று சில குழுக்களும், பெங்களூரையும், மைசூரையும், கோலாரையும் மீட்க வேண்டும் என்று சில குழுக்களும் இவை எல்லாவற்றையும் சேர்த்து மீட்க வேண்டும் என்று சில குழுக்களும் எழுதியும் பேசியும் வருகின்றன.

பெரியார் எல்லைப் போராட்டத்திலும், மேற்கண்ட பகுதிகள் கேரளாவோடு போனபோதும் போராடவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள் சில தமிழ்த்தேசியர்கள். மொழிவாரி மாகாணப் பிரிவினையில் முழுமையான வெற்றிபெறுவதற்கு ம.பொ.சி போன்ற மதவாதிகள்தான் தடையாக இருந்திருக்கிறார்கள் என்பதை ம.பொ.சி உயிரோடு இருக்கும்போதே பெரியார் விளக்கிவிட்டார். அதோடு நான் விடுதலைக்குத் தான் போராடுகிறேன். விஸ்தீரணத்துக்குப் (பரப்பளவுக்கு) போராடவில்லை என வெளிப்படையாகவே அறிவித்தார். எல்லைகளைப் பொறுத்தவரையும் தேசிய இனப்பரப்புகள் குறித்தும் பெரியாரின் பார்வை இது:

"நான் மலையாளிகள் போவதற்கு முன்பே "மலையாளி வேண்டாம்" என்கிறவன். ஆகவே எனக்கு உரிமை உள்ள எல்லை வரையில் இருக்கும் தமிழ்நாடு (மதராசை) சொன்னேன். அதாவது மதராஸ் மாகாணம் என்றுதான் அப்போது சொன்னேன். பிறகு அந்தந்த நாட்டுக்காரன் பிரிந்ததும் எல்லை குறைந்துவிட்டது. இப்போது எந்த எல்லையுள்ளதோ அந்த எல்லை வரையில் உள்ள மதராசைத்தான் கேட்கிறேன். முன்பு நாகர்கோயில் மலையாள இராஜ்ஜியத்தோடு (திருவாங்கூரோடு) சேர்ந்திருந்தது. நாகர்கோயிலுக்குப் போய் மலையாள ஆதிக்கத்தை எதிர்த்தே கண்டித்து வந்தேன். பிறகு இப்போது நாகர்கோயில் தமிழ்நாட்டோடு சேர்ந்து விட்டதும் போன மாதம் போய் பத்து நாள்களுக்குமேல் அங்கே சுற்றுப்பிரச்சாரமே பண்ணினோம். நீங்களும், நாங்களும் ஒன்று. இப்போது ஒரு நாட்டார் ஆகிவிட்டோம். ஆதலால் தமிழ்நாடு அல்லது மதராஸ் சுதந்திரம் பெற வேண்டும் என்று கூறினேன். இதில் என்ன தப்பு? இதிலே என்ன பல்டியடிக்கிறது இருக்கிறது?

நாளைக்கு இந்த திருநெல்வேலி, மதுரை, கன்னியாகுமரி தமிழ்நாட்டை விட்டு நீங்கிவிட்டால் இவை நீங்கிய மற்றதைத்தானே கேட்பேன்! ஏன் மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரியை விட்டு பல்டி அடிக்கிறாய் என்றால் அவனுக்கு அறிவு இருக்கிறது என்று சொல்லலாமா?"      -(பெரியார் - “விடுதலை” 27-1-1959)

இந்தப் பிரச்சனைகளில் நேர்மையாகப் போராடுகிறவர்கள் என்ன நிலை எடுக்கவேண்டும்? தமிழ்த் தேசிய இனத்துக்கு உரிய எல்லைகள் எது என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும். அந்த எல்லைகளை மீட்கப் போராட வேண்டும். இரண்டையுமே செய்யாமல் அந்த எல்லைப் பிரச்சனை எங்களுக்கு வேண்டியதில்லை என்று ஒதுங்கிக் கொள்பவர்களிடம் சண்டையிட்டுக்கொண்டே காலத்தைக் கழித்துக் கொண்டிருப்பதில் என்ன நேர்மை இருக்கிறது? முதலில் உங்கள் கடமையைத் தொடங்குங்கள்.

தமிழ்தேசிய இனத்தின் எல்லை 1953இல் இந்திய தேசியம் அறிவித்த அளவுதானா? நாம் படித்த வரலாறுகளில் சேரநாடு, பாண்டியப் பேரரசு, சோழப்பேரரசு, பல்லவப்பேரரசு என்றுதான் படித்திருக்கிறோம். தமிழ்ப்பேரரசு என்றோ, தமிழ்நாடு என்றோ உலகில் எந்த நாட்டையும் நாம் இதுவரை படித்திருக்கமாட்டோம். இந்தியாவில் இருந்ததாகச் சொல்லப்படும் 56 தேசத்திலும், 562 குறுநில அரசுகளிலும் எதிலுமே என்றுமே எங்குமே தமிழ்நாடு என்ற பெயரில் ஒருநாடுகூட, ஒரு சமஸ்தானம்கூட இருந்ததில்லை. அந்த சேர, சோழ, பாண்டியப் பேரரசுகளின் எல்லைகளும், நிலப்பரப்புகளும் அவ்வப்போது மாறிமாறி வந்தள்ளன. ஒரு 25 வருடம்கூட தொடர்ச்சியாக மூவேந்தர்களின் எந்தப் பேரரசும் எல்லையை மாற்றாமல் இருந்திருக்க வாய்ப்பே இல்லை.

தொல்காப்பியத்துக்குப் பாயிரம் எழுதிய பனம்பரனார் “வடவேங்கடம் தென்குமரி, யாயிடைத், தமிழ்கூறுநல்லகத்து” என்று குறிப்பிடுகிறார். அதாவது வடக்கேயுள்ள வேங்கடமலையிலிருந்து தெற்கே குமரி வரை தமிழர் அரசுகளின் எல்லை இருந்திருக்கிறது. பத்துப்பாட்டின் பாயிரத்தில் “இமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்க” என்ற வரிகள் இருக்கிறது. அதாவது முப்புறமும் கடலையே எல்லையாகக் கொண்டவன் என சேர மன்னனைப் பாடுகிறது. எனவே எல்லைப் போராளிகளும் விஞ்ஞானப்பூர்வ தேசிய இனவாதிகளும் தமிழ்த்தேசிய எல்லையாக வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல் ஆகிய மூன்றுக்கும் நடுவே உள்ள நிலப்பகுதி என்றுதான் தொடங்கியிருக்கவேண்டும். அரபிக்கடலில் இருக்கும் மாலத்தீவு, இலட்சத் தீவுகளும் சங்ககாலத்தில் தமிழர் வாழ்ந்த பகுதிகளாகத்தான் இருந்தன என்று இலக்கியங்கள் கூறுகின்றன. “முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரம்” என்றுதான் அவை அழைக்கப்பட்டன. “கன்னித்தென்கரைக் கடற்பழந்தீபம்” என்று அகத்தியசூத்திரம் சொல்வதும் இந்த மாலத்தீவு, இலட்சத்தீவுகளைத்தான். எனவே அவற்றையும் சேர்த்துத் தான் தமிழ்த் தேசிய எல்லையைத் திட்டமிடவேண்டும்.

இவ்வளவு பெரிய பரப்பு தமிழர்களின் பரப்பு என்பதை திட்டமிட்டு மறைக்கும்விதமாக ஏதோ ஓரிரு மாவட்டங்களான தேவிகுளம், பீர்மேடை மட்டும் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே அதுவும் கேட்டுக் கொண்டு மட்டுமே இருப்பது ஏன்? இந்தியாவால் பிடுங்கப்பட்ட அந்த ஊர்கள் இன்னும் இருக்கின்றதல்லவா? பூகம்பத்தில் மூழ்கிவிடவில்லையே? பிறகென்ன இந்திய அரசாங்கத்தோடு போராடிப் பெறவேண்டியதுதானே? இந்திய அரசை எப்படி எதிர்ப்பது? மேலும் அதற்கெல்லாம் அங்கிருக்கும் மக்களின் ஆதரவும் வேண்டுமல்லவா? கொஞ்சம் சிக்கல்தான். முக்கடலையும் எல்லையாக அறிவிக்க முடியாததற்கு அப்பகுதிகளிலெல்லாம் தற்போது தமிழர்கள் வாழவில்லை என்றுகூட ஒரு பதிலைச் சொல்லலாம். ஆனால் ஈழத்தில்? தமிழ் ஈழத்தை தமிழ்த்தேசிய எல்லைக்குள் கொண்டு வந்திருக்கவேண்டும். ஆனால் ஈழத்தமிழர்கள் தமிழீழ தேசியம் என்று தனியாகப் பிரித்துக்கொண்டார்கள். எனவே அதுவும் முடியாது.

மலையூர் என்றும் அவுணர்நாடு என்றும் காழகம், கடாரம் என்றும் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் மலேசிய நாடும், சிங்கபுரம் என்ற சிங்கப்பூர் நாடும் 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்திருக்கிறது. இன்றும் அந்த நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாக இருக்கிறது. தமிழர்கள் தமிழ்நாட்டைவிடச் சிறப்பாக வாழ்கிறார்கள். அவற்றையும் தமிழ்த் தேசிய எல்லையில் இணைக்க வேண்டும்.

வியட்நாமில்கூட கி.மு 1 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 2 ஆம் நூற்றாண்டு வரை ஸ்ரீமாறன் பாண்டியன் என்ற தமிழ்மன்னன் ஆண்டிருக்கிறான். கி.பி. 10 ஆம் நூற்றாண்டு வரை தமிழர்கள் அதிகாரத்தில் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. மாறன்மாதேயம் என்றழைக்கப்பட்ட பர்மாவில் 1 ஆம் நூற்றாண்டிலிருந்தே பாண்டியர் ஆண்டதற்கான சான்றுகள் உள்ளன. சயாம் என்றழைக்கப்பட்ட தாய்லாந்தில் மன்னர்களின் முடிசூட்டுவிழாவில்கூட தேவாரமும், திருவாசகமும் பார்ப்பனர்களால் பாடப்பட்டுத்தான் விழாச் சடங்குகள் நடத்தப்பட்டன. புறநானூற்றுப் பாடலில் பாடப்பெற்ற கவுண்ணியன் விண்ணத்தாயன் என்ற பார்ப்பான் கி.பி. 1 ஆம் நூற்றாண்டிலேயே அங்கு சென்று தமிழர்(!) ஆட்சியை நிறுவினான் என்று வரலாறுகள் கூறுகின்றன. மிக முக்கியமாக நான்கு இனக் கூட்டணியில் கருவான பிற்காலச் சோழர்கள் மேற்கண்ட அனைத்து நாடுகளையும் ஆண்டிருக்கிறார்கள். அவை சோழப் பேரரசாக இருந்திருக்கின்றன. சில சமயம் பாண்டியப் பேரரசாகவும், சேரநாடுகளாகவும் இருந்திருக்கின்றன.

எனவே தமிழ்த் தேசிய இன எல்லைப்பரப்பு மேற்கண்ட நாடுகளை எல்லாம் இணைத்தே அறிவிக்கப்பட வேண்டும். அகண்ட தமிழ்க் குடியரசாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். சேர, சோழ, பாண்டியப் பேரரசுகளின் எல்லைகளை இராஜராஜசோழனின் பேரன்களே சுருக்கலாமா? தமிழ்த்தேசிய அமைப்புகள் வெளியிட்டிருக்கும் எந்த தமிழ்நாட்டு வரைபடத்திலும் மேற்கண்ட நாடுகளின் வரைபடங்கள் இணைக்கப்படவில்லையே ஏன்? காலத்துக்கேற்றபடி, எதார்த்த நிலைக்கு ஏற்றபடி ஒரு தேசிய இனத்தின் நிலப்பரப்பு எல்லையை மாற்றிக் கொள்ளலாமா? மாற்றிக் கொள்ளலாம் என்றால் விஞ்ஞானப்பூர்வ தேசிய இன வரையறை என்ன ஆனது?

மேலும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஒன்றுக்கொன்று வேறுபட்ட ஐவகை நிலங்களில் தமிழன் வாழ்ந்திருக்கிறான். மலைகள், காடுகள், வயல்வெளிகள், கடல், பாலை என ஒன்றுக்கொன்று தொடர்பற்ற வேறுபாடான நிலவகைகள் தமிழ்நாட்டில் இன்றும் உள்ளன. இப்படி தொடர்பற்ற நிலப்பரப்புகளை தேசிய இன வரையறை ஏற்றுக்கொள்கிறதா?

இப்படி மொழி அடிப்படையிலோ, பொதுவான பண்பாட்டில் வெளிப்படும் உளவியல் உருவாக்கம், பொதுவான பொருளியல் வாழ்வு, தொடர்ச்சியான நிலப்பரப்பு என எதிலுமே தமிழ்த்தேசியர்கள் மூச்சுக்கு மூச்சு முழங்கிக்கொண்டிருக்கும் “சமூகம் நிர்ணயித்த வரையறைகளையும், இனம், தேசிய இனம், தேசம் என்பவற்றுக்கான ஐரோப்பியர்களின் வரையறைகளையும்” தத்தம் வசதிகளுக்கு ஏற்ப, சூழலுக்கு ஏற்ப மாற்றியுள்ளனர். ஐரோப்பியர்களின் சட்டகங்களை அப்பட்டமாக மீறியுள்ளனர். இதை நாம் வரவேற்கிறோம். இந்த நெகிழ்வுத்தன்மையை பெரியார் தமிழர்களின் இன எதிரியை வெளியேற்றுவதற்குப் பயன்படுத்திக் கொண்டார். திராவிடர் என்ற கருத்தியலை நிறுவினார். திராவிடர் என்பதற்கு பெரியார் தரும் வரையறை:

"முஸ்லீம்களும் கிறிஸ்துவர்களும். தாழ்த்தப்பட்ட மக்களும், தங்களை ஆரியர் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர் அல்லாத மற்ற இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளுகிறவர்களும் ஆகிய எல்லோரும் திராவிடர்கள் என்ற தலைப்பின் கீழ் வருவார்கள்”.      (பெரியார் - குடிஅரசு - 26-11-1939)

"‘தமிழ்' என்பதும் ‘தமிழர் கழகம்' என்பதும் மொழிப் போராட்டத்திற்குத் தான் பயன்படுமேயொழிய இனப்போராட்டத்திற்கோ, கலாச்சாரப் போராட்டத்திற்கோ சிறிதும் பயன்படாது. சரி, ஆரியர்கள் முதலில் தம் கலாச்சாரத்தைப் புகுத்தித்தான் நம்மை வெற்றி கொண்டார்கள். நம் கலாச்சாரத்தைத் தடுத்துத்தான் நம் மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தார்கள். நாமும் நம் கலாச்சாரத்தை மறந்து ஆரிய கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டதால்தான் அவர்களுக்குக் கீழான மக்களாக - அவர்களுடைய வைப்பாட்டி மக்களாக சூத்திரர்களாக, பஞ்சமர்களாக ஆக்கப்பட்டோம்.

எனவே, அக் கலாச்சாரத்திலிருந்து விடுபட வேண்டுமென்றால், மொழிப் போராட்டம் ஒன்றினால் மட்டும் வெற்றி பெற்று விடமுடியாது. கலாச்சாரத்தின் பேரால் - இனத்தின் பேரால் போராட்டம் நடத்த வேண்டும். அதில் வெற்றி பெறவேண்டும். அப்போது தான் நாம் விடுதலை பெற்றவராவோம்.

மொழிப் போராட்டம், கலாச்சாரப் போராட்டத்தின் ஒரு பகுதி தானேயொழிய முழுப் போராட்டமாகவே ஆகிவிடாது. சட்டம், சாஸ்திரம், சமுதாயம், சம்பிரதாயப் பழக்க வழக்கங்கள், புராணங்கள், இதிகாசங்கள் இவை எல்லாவற்றிலுமே நம் இழிவு நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. எனவே, இவை எல்லாவற்றிலிருந்துமே நம் இழிவு நீக்கமடைந்தாக வேண்டும். மொழியால் மேம்பாடும் வெற்றியும் பெற்று விடுவதாலேயே நமது இழிவும், இழிவுக்கு ஆதாரமான கலாச்சாரமும் ஒழிந்து விடமாட்டா”  - (பெரியார் - குடிஅரசு - 27-1950)

இவ்வாறு விலக்க வேண்டியவர்களை விலக்கி, இணைக்க வேண்டியவர்களை திராவிடராக இணைத்தார் பெரியார். ஆனால் தமிழ்த் தேசியர்கள் தமிழர்களின் இன எதிரியை தமிழர்களோடு இணைத்துக் கொள்ளவும் - ஆரியச்சுரண்டலும் இந்திய தேசியச் சுரண்டலும் தங்கு தடையின்றித் தொடரவும் இந்த நெகிழ்வுப்போக்குகளைப் பயன்படுத்துகின்றனர். பெரியார் தொடங்கி வைத்த ஆரிய எதிர்ப்புப் பண்பாட்டுப்புரட்சி - திராவிடர் பண்பாட்டுப் புரட்சிதான் தற்போதைய அவசியத் தேவை. ஒரு தனி தேசிய இனமாக தமிழன் மாறவேண்டுமானால், பெரியாரின் திராவிடர் பண்பாட்டை வளர்த்தெடுப்பதில்தான் கவனம் செலுத்தியாக வேண்டும். தேசிய இனக்கருத்தாக்கம் என்பது தமிழ்த் தேசியத்துக்குப் பொருந்தாமல் மாயையாக இருப்பது தவறில்லை. நவீன மனுதர்மமாக மாறி வருவதைத்தான் தவறு என்கிறோம். தமிழ்த் தேசிய இனம் குறித்தும், அதன் நாயகர்களில் ஒருவனான நான்கு இனக் கூட்டணியாளன் ராஜராஜனைப் பற்றியும் சுருக்கமாகப் பார்த்தோம். அடுத்து தமிழ்தேசியர்களின் மனங் கவர்ந்த மற்றொரு பார்ப்பன நாயகனான தொல்காப்பியனைப் பற்றியும், தொல்காப்பியத்தைப் பற்றியும் இனி பார்ப்போம்.

(தொடரும்)

- அதிஅசுரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It