மத்திய அமைச்சருக்கு அறிவியல்பூர்வ மறுப்பு

“டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு விஞ்ஞான ரீதியாக தவறானது. அதனை பள்ளி, கல்லூரிப் பாடப் புத்தகங்களிலிருந்து நீக்க வேண்டும். மனிதன் இந்த பூமியில் எந்தக் காலத்திலும் மனிதனாகவே இருந்துள்ளான். குரங்கு மனிதனாக மாறியதாக நம் முன்னோர்கள் எங்கும் கூறவில்லை” என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் சத்யபால் சிங் அதிரடியாகப் பேசியுள்ளார். ஜனவரி 19 அன்று ஒளரங்காபாத்தில் அனைத்திந்திய வைதிக சம்மேளன நிகழ்ச்சியில் பேசும்போது இவ்வாறு உரையாற்றியுள்ளார்.அத்துடன் நில்லாமல் “நான் அடிப்படை ஏதும் இல்லாமல் இதைக் கூறவில்லை. டார்வினுடைய கொள்கைக்கு உலகம்முழுவதும் எதிர்ப்பு இருக்கிறது. நான் கலைப்பிரிவு பின்னணியிலிருந்து வந்தவன் அல்ல. தில்லி பல்கலைக் கழகத்தில் வேதியியல் பிஎச்.டி. பட்டம் வாங்கியவன். நானும் அறிவியல் மனிதன்தான்” என்று கூறி தனது கருத்துக்கு வலுவூட்ட முயன்றிருக்கிறார் சத்யபால் சிங். நமக்கோ `நானும் ரவுடிதான்’ என்று வடிவேலு ஒரு படத்தில் அலப்பறை செய்ததுதான் நினைவுக்கு வருகிறது!

கிராஃபிக்சில் காண்பிப்பது மாதிரி நமது முன்னோர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே குரங்கு மனிதனாக மாறியதுஎன்று விஞ்ஞானிகள் சொல்வதாக அவர் புரிந்து வைத்திருக்கிறாரா என்று தெரியவில்லை. பரிணாம மாற்றம் நிகழ லட்சக் கணக்கான ஆண்டுகள் ஆகும் என்பதை அவருக்கு யாராவது எடுத்துச் சொன்னால் நல்லது. இப்படிப்பட்டவர் மனித வள மேம்பாட்டுத் துறை யில் அமைச்சராக இருக் கிறார் என்பது தற்போதைய ஆட்சி என்ற ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று விவரமறிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள்.சத்யபால் சிங்கின் கூற்றினை விஞ்ஞானிகள் ஏற்க வில்லை. “உயிரினங்களின் பரிணாமம் என்பது அனைத்து உயிரின செயல்முறைகளுக்கும் ஆதாரமானது. அடிப்படையானது. அது எடுத்துக் கொள்ளும் கால அளவு என்பது மனித மனத்தினால் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு இருக்கிறது” என்கிறார் பெங்களூரு ஐஐடியின் மூலக்கூறு மறுஉற்பத்தி, வளர்ச்சி மற்றும் மரபியல் துறையின் தலைவர் சந்தியா எஸ். விஸ்வேஸ்வரையா. 1800 விஞ்ஞானிகள் கையெழுத்திட்டு கீழ்க்கண்டகடிதத்தை சிங்கிற்கு அனுப்பியுள்ளனர். சமூகவலைத் தளங்களிலும் அதை வெளியிட்டுள்ளனர்.

“விஞ்ஞானிகளும், அறிவியல் பரப்புரை செய்வோரும், பொதுமக்களில் அறிவியல் சார்ந்து சிந்திப்போருமான நாங்கள் உங்கள் கூற்றைக் கண்டு ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளோம். பரிணாமக் கொள்கை அறிவியல் சமூகத்தினால் நிராகரிக்கப்பட் டுள்ளதாகக் கூறுவது தவறானது. மாறாக, ஒவ்வொரு புதிய அறிவியல் கண்டுபிடிப்பும் சார்லஸ் டார்வினுடைய கூர்ந்த மதிக்கு வலுவூட்டவே செய்கிறது” என்று செல்கிறது கடிதம்.“இது கல்வித் துறைக்கு தர்மசங்கடம் மட்டுமல்ல அத்துறையின் உயர்ந்த பதவிக்கே அவமானம்” என்கிறார் பயோகான் நிறு வனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கிரன் மஜும்தார்.இந்திய தேசிய அறிவியல் அகாடமி (INSA), அறிவியல்பிரிவுகளின் தேசிய அகாடமி (INSA), அறிவியலின் இந்தியஅகாடமி (INSA) ஆகிய மூன்று அறிவியல் நிறுவனங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சத்யபால் சிங்கின் கூற்றைக்கண்டித்து அறிக்கை வெளியிட் டுள்ளனர். ஆட்சியாளர்களிடமிருந்து எழும் அறிவியலுக்கு புறம்பானதொரு கருத்தினைக் கண்டிக்க அவர்கள் முதன்முறையாக முன் வந்துள்ளனர். “அமைச்சருடைய கருத்துகளுக்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை. டார்வின் மிக முக்கிய பங்களிப்பைச் செய்த பரிணாமக் கோட்பாடு நன்கு நிரூபிக்கப்பட்ட கோட்பாடு. பரிணாம வளர்ச்சியின் அடிப்படை உண்மைகளில் எந்த அறிவியல் சர்ச்சையும் கிடையாது. பரிணாமக் கோட்பாடு எடுத்து வைத்த பல கருதுகோள்கள் பரிசோதனை களாலும் கூர்ந்து நோக்கிச் சேகரித்த தகவல் களாலும் மீண்டும் மீண்டும் நிரூபிக்கப் பட்டவை. இந்த பூமிக் கிரகத்தில் மனிதர்கள், பிற மனிதக் குரங்குகள் உட்பட உள்ள அனைத்து உயிரினங்களும் ஒன்றுஅல்லது ஒரு சில ஆதி மூதாதையரிடமிருந்து பரிணாமவளர்ச்சி அடைந்தவை என்பது பரிணாமக் கொள்கை யிலிருந்து நமக்குக் கிடைத்த முக்கியமான நுண்ணறிவு. பள்ளி, கல்லூரிப் பாடப் புத்தகங்களிலிருந்து பரிணாமக் கொள்கையை நீக்குவதோ, அறிவியலுக்குப் புறம்பான கட்டுக்கதைகளைக் கூறி அதை நீர்த்துப் போகச் செய்வதோ பிற்போக்கானதொரு நடவடிக்கை யாகவே இருக்கும். டார்வின் முன்மொழிந்த பரிணாமக் கொள்கையின்படி நடைபெற்ற இயற்கையின் தேர்வு பின்னர் விஞ்ஞானிகளால் நன்கு செழுமைப்படுத்தப்பட்டு, நவீன உயிரியல், மருத்துவம் மட்டுமல்ல அனைத்து நவீன அறிவியல் துறைகளிலும் மிகப் பெரிய செல்வாக்கைச் செலுத்தி வருகிறது. உலகம் முழுவதிலும் அது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கோட்பாடு” என்கிறது அந்த அறிக்கை.

நாட்டில் பரவலாக உள்ள அறிவியல் நிறுவனங்களின் விஞ்ஞானிகளும் மாணவர் களும் அமைச்சர் தனது அறிவிப்பை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கோரி அவருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அமைச் சருடைய கருத்து அறிவியல் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, அதில் ஆள்வோரின் அரசியலும் இருக்கிறது. என்னது. அறிவியலில் அரசியலா என்று கேட்காதீர்கள். அரசியல் இல்லாத இடம் ஏதாவது இருக்கிறதா? கலீலியோவை சிறையில் வைத்தது அன்றைய மதவாத அரசியல்.இன்று உண்மையான அறிவியலை போலி அறிவியல் கொண்டு தாக்குவது இன்றைய இந்திய ஆட்சியாளர்களின் மதவாத அரசியல்.

டார்வினின் பரிணாமக் கோட்பாடு தவறானது என்பது சத்யபால் சிங்கின் கருத்து மட்டுமல்ல. அவரது கருத்தை உடனே ஆதரித்து அறிக்கை வெளியிட்ட பாஜகவின் பொதுச் செயலாளர் ராம் மாதவ் தங்களது கருத்துக்கு ஆதரவாக, படைப்புக் கொள்கைதான் சரி என்று வாதிடும் வலதுசாரி கிறித்தவர்களைத் துணைக்கு அழைத்துக் கொண்டுள்ளார். பரிணாமக் கொள்கைக்குப் பதிலாக அவர்கள் அறிவார்ந்த வடிவமைப்பு (Intelligent design) என்ற பெயரில் ஒரு மாற்றுக் கோட்பாட்டை முன்வைக்கின்றனர். பாஜக தலைவர்களும் தத்துவவியலாளர்களும் வரலாற்றை அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்வதற்குப் பதில் புராணக் கதைகளையும் இதர கட்டுக் கதை களையும் நமது வரலாறாக முன்வைக்கின்றனர். இந்திய வரலாற்று ஆய்வுக் குழுத் தலைவர் எஸ்.ஆர். ராவ் புராணக் கதைகளை “வாய்மொழி வரலாறு” என்று குறிப்பிட்டு நியாயப்படுத் தினார். வழக்கமாக மேடைகளில் சண்டமாருதம் செய்யும் நமது பிரதமர் மோடி இதையெல்லாம் பற்றிப் பேசாமல் மௌனமாக இருக்கிறாரே என்று கேட்பதில் பொருள் இல்லை. மௌனம் அவரது சம்மதத்திற்கு அறிகுறி என்பதை நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும். அறிவியலுக்குப் புறம்பான கட்டுக்கதைகளின் அடிப்படையில் “நவீன இந்தியா”வை நிர்மாணிப்பதே பாஜகவின் நோக்கமாக இருக்கிறது. பரிணாமக் கொள்கைக்கு எதிரான அமைச்சரின் கருத்தை வெளிப்படையாக மறுத்து அறிவியல் நிறுவனங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அறிக்கை வெளியிட்டிருப்பது நல்லதொரு திருப்புமுனை. கடந்த காலத்தில் அவர்கள் இப்படி கிளர்ந்தெழாததைக் கண்டித்த மறைந்த விஞ்ஞானி புஷ்பா பார்கவா அறிவியல் நிறுவனங்களுடன் இருந்த தொடர்பை துண்டித்துக் கொண்டார். அவர் இன்று இருந்திருந்தால் அறிவியல் மீதான தாக்குதலுக்கு எதிராக விஞ்ஞானிகள் குரல் எழுப்பியது கண்டு அகமகிழ்ந்திருப்பார்.

“சத்யபால் சிங் மற்றும் பாஜக/ஆர்.எஸ்.எஸ்.சின் திட்டம் அறிவியல் சார்ந்ததல்ல. அது அவர்களின் அரசியல். அறிவியலையும் விஞ்ஞானிகளையும் அவர்கள் அரசியல்ரீதியாக இரு முகாம்களாகப் பிரிக்க முயல்கின்றனர். நாட்டை எதிர்நோக்கியுள்ள இந்த உண்மையான ஆபத்திற்கு எதிராக நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்கிறார் இந்திய தேசிய அறிவியல் அகாடமியின் முன்னாள் தலைவரும் சர்வதேச அங்கீகாரம் உள்ள உயிரியல் விஞ்ஞானியுமான ராகவேந்திர கடக்கர்.

“பல நேரங்களில் இந்த யுகம் அறிவியல் யுகம் என்று மக்கள் கூறுகிறார்கள். எனவே, அறிவியல் யுகத்திற்கு ஏற்றபடி மதக் கருத்துகளில் சில மாற்றங்களைக் கொணர வேண்டும் என்கிறார்கள். நான் கூறுவது இதற்கு எதிரானது. அறிவியலின் ஒவ்வொரு ஆராய்ச்சி முடிவின் அடிப்படையில் நாம் மதக் கருத்துகளை மாற்றிக் கொண்டே போக முடியாது” என்றார் ஆர்.எஸ்.எஸ்ஸின் குரு கோல்வால்கர். இந்த விஷயத்தில் கோல்வால்கர் பயன்படுத்தும் மொழி இஸ்லாமியப் பழமைவாதிகள் பயன்படுத்தும் மொழியைப் போன்றதே. அவர்கள் நவீன யுகத்தை இஸ்மிலாமியப்படுத்த விரும்புகின்றனர். ஆர்எஸ்எஸ் நவீன யுகத்தை காவிமயப்படுத்த முயல்கிறது.

பேரண்டத்தையும் மனிதர்கள் உட்பட உள்ள அனைத்து உயிரினங்களையும் படைக்க கடவுள் ஆறு நாட்களை எடுத்துக் கொண்டார் என்கிறது கிறித்தவ மதம். பைபிளில் உள்ள படைப்புக் கொள்கையை அடிப்படையாக வைத்தே அமெரிக்காவில் சிலர் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பரிணாமக் கொள்கையோடு படைப்புக் கொள்கையையும் சொல்லித் தர வேண்டும் என்கின்றனர்.இந்துத்துவாவாதிகள் சிறுபான்மையினர் மீது தாக்குதல் தொடுக்கின்றனர். ஒரு புறம் மதச்சார்பின்மை, நாடாளுமன்ற ஜனநாயகம் போன்ற மேற்குலக சிந்தனைகளை ஏற்போரை அவர்கள் கண்டிக்கின்றனர். மறுபுறம் அவர்களே மத அடிப்படைவாதம் என்று வரும்போது அங்குள்ள பழமைவாதிகளைப் பின்பற்றவே முனைகின்றனர். ஏன் இந்த இரட்டை நிலை?

கோல்வால்கர் பழைய இந்தியாவை அல்ல, நவீன இந்தியா இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வரையறை செய்கிறார். அவரைப் பொறுத்தவரை நமது பண்பாடு இந்து பண்பாடு.. நமது மொழி சமஸ்கிருதம்.. நமது இனம் ஆரிய இனம். நவீன இந்தியாவின் அடையாளங்களாக இம்மூன்றுமே இருக்க வேண்டும் என்கிறார். மத அடிப்படைவாதத்தை மட்டுமல்ல, பாசிசத்தை யும் இந்துத்வாவாதிகள் மேற்குலகிலிருந்தே பெறுகிறார்கள். அறிவியலுக்கும் மேலானதாக அவர்கள் மதத்தை வைக்கக் காரணம், கேள்வி கேட்கும் பகுத்தறிவு சிந்தனைகளைக் கண்டு அவர்கள் அஞ்சுகின்றனர். வெறுப்பு, பயம் அடிப்படையில் அமைந்த இந்தியாவையே அவர்கள் கட்டமைக்க விரும்புகின்றனர்.

குரங்கிலிருந்து மனிதன் வந்ததை யாரும் பார்க்கவில்லை. அதனால் குரங்கிலிருந்து மனிதன் வந்தானென்பது அறிவியல்பூர்வவமாக தவறானது என்று மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் சத்யநாத் சிங் கூறியிருக்கிறார். மற்றெந்த விஞ்ஞானிகளைவிடவும் கருத்து ரீதியாக பலரால் தாக்குதலுக்குள்ளானவர்.

முதலில் குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று எங்காவது குறிப்பிட் டிருக்கிறாரா டார்வின்- இல்லவேயில்லை. டார்வின் மனிதக் குரங்குகளும், மனிதர்களும் ஏற்கனவே வாழ்ந்து மறைந்த மனிதக் குரங்குகளி லிருந்து பரிணமித்திருக்கலாம். மிகவும் சரியாகச் சொன்னால் அவர் வார்த்தைகளிலேயே ““We“Wemay infer that some ancient memberof the anthromorphous subgroup gave birth to man”” இந்த வாக்கியத்தில் எங்கேயாவது குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதா? பரிணாம விதியை பழிப்பவர்கள் கூறும் வார்த்தையது. அறிவியல் மகத்தான வளர்ச்சியைக் கண்டு விட்டது.

உடற்செயலியல் ரீதியாக, கரு வளர்ச்சியின் போது, உருவ அமைப்பில், ஏன் மரபணுக்களின் செயல்பாட்டில் விலங்கு களுக்கான ஒற்றுமை அமைப்பை வெகுவாக விளக்கிவிட்டார்கள். குரங்கிலிருந்து மனிதன் வந்துவிட்டான். அந்தக் குரங்கு ஏன் இன்னொன்றாக பரிணமிக்கவில்லை என்பதும் சிறுபிள்ளைத்தனமான கேள்வியே! இயற்கைத் தேர்வு நடந்துகொண்டேதான் இருக்கிறது. ஒரு வாதத்திற்கே வைத்துக் கொண்டாலும்கூட டார்வின் குறிப்பிடும் ancient anthromorphousancient anthromorphoussub group வாழ்ந்த காலம் சமார் 60 இலட்சம் வருடங்களுக்காவது முந்தையது. ஆதித்தாய் என்று கருதப்படும், மனிதனுமல்லாத, மனிதக் குரங்குமல்லாத நிமிர்ந்த நடை பழகிய அர்திபித்திகஸ் ரேமிடஸ் வாழ்ந்த காலம் குறைந்தது 43 இலட்சம் வருடங்கள். அமைச்சர் சத்யநாத் அத்தனை வருடங்கள் வாழ்ந்து விடுவாரா என்ன அதையெல்லாம் பார்ப்பதற்கு? மனித ஆயுளை வைத்து பரிணாமத்தை யெல்லாம் கணித்துவிட முடியாது. சிம்பன்சியின் மரபணுக்களுக்கும், மனிதர்களின் மரபணுக் களுக்குமான ஒற்றுமை 90 சதவிதத்துக்கும் கூடுதல்! எந்த மதக் கண்ணோட்டங்களின் மூலமாகவும் நீங்கள் பரிணாம விதிகளை புரிந்து கொள்ள முடியாது என்பதை குறைந்த பட்சமாவது நினைவில் நிறுத்துங்கள்!

பரிணாமம் நிகழ்வதை, நிகழ்ந்து கொண் டிருப்பதை குறைந்த ஆயுள் கொண்ட பாக்டீரி யாக்களை வைத்து, சிறு பூச்சிகளை வைத்து நிறுவ முடியும். ஈக்கள், டி.டி. பூச்சிகள், பாக்டிரி யாக்கள், நோய் எதிர்ப்பு மருந்துகளை எதிர் கொண்டு வாழும் அளவுக்கு மரபணு மாற்றங்களைப் பெற்று வருவதே - பரிணாம வளர்ச்சி நடந்து வருவதற்கு சான்று. மாற்றங்கள் மரபணுக்களில் நிகழ வேண்டும். அந்த மாற்றங்களை இயற்கை தெரிவு செய்ய வேண்டும். இயற்கைத் தெரிவு என்பது எந்த இலக்கையும் முன் வைத்து செயல்படாது. இந்த பண்பு இந்த விலங்கிற்கு நல்லது என்று திட்டமிட்டெல்லாம் செயல்படாது. அது சீரற்ற முறையில் தான் செயல்படும். அப்படிப் பெறப்பட்ட பண்புகள் தனது தாய், தந்தையரின் பண்புகளைவிட அதன் உயிர்த்திருத்தலுக்கு பேருதவியாக இருக்கும். அப்பண்புகளைக் கொண்ட சந்ததி வெற்றிகரமாக பரவ இயற்கைத் தெரிவு அனுமதிக்க வேண்டும். அவை தனித்தியங்கும். அதிலிருந்துதான் ஒரு புதிய சந்ததி உருவாகும். இதுதான் பரிணாமத்தின் பொது விதி. பொதுவாக விதிகளை சோதனைகள் கொண்டு அத்தனை துல்லியமாகச் சொல்லிவிட முடியாது. ஓரளவிற்கு கணிக்கத்தான் முடியும். இந்த நவீன உலகில் அதற்கான வாய்ப்புகள் கூடிக் கொண்டே தான் வருகின்றன.

தவிரவும் டார்வின் இறைமறுப்பாளரும் அல்ல. எங்காவது அப்படிக் குறிப்பிட் டிருக்கிறாரா? பொதுவான ஒரு உயிரியிலிருந்து காலங்காலமாக அதன் மரபணுக்களில் ஏற்பட்ட மாற்றங்கள் பல உயிரிகளாக பரிணமித்திருக்க வேண்டும் என்பதே அவரது கணிப்பு. அந்த கணிப்பு பெரும் அளவில் வெற்றியும் கண்டிருக்கிறது. இக்கால அறிவியல் சூழல் போலவே ‘தகுதியுள்ளவை தங்கி நிற்கும்’ ((Survival(Survivalof the fittest)) என்பதும் டார்வினால் வரையறுக்கப்பட்டதல்ல.

டார்வின் சமகாலத்தவரான ஆப்ஃபிரட் ரஸ்ஸல் வாலங் மலாய் தீவுக் கூட்டங்களில் ஆய்வு நடத்தி இந்தக் கோட்பாட்டினை உருவாக்கினார். ‘இயற்கைத் தேர்வு’ தம் சூழலுடன் மிகச் சிறப்பாக, ஒத்திசைந்துபோகும் உயிர்களே பிழைத்திருக்கும். அவை அடுத்து வரும் தலைமுறைகளுக்கு மரபணு சார்ந்த பண்பியல்புகளை அதிக அளவில் வழங்கும். சரிவர ஒத்திசைந்து போகாதவை வெளி யேற்றப்படும் என்பதே இந்த ஆய்வு. இந்த ஆய்வைவ டார்வின் ஏற்றுக் கொண்டார். அதேபோல இயற்கைத் தேர்விற்கு பாரபட்சம் கிடையாது.

அதுமட்டுமல்ல, அனுகூலமான பண்புகளைக் கொண்ட விலங்குகள் வெற்றிகரமாக வாழ்ந்துவிடும் என்பதும் தவறு. ஓர் எளிய உதாரணம் பெண் விலங்குகளைக் கவர அல்லது தங்களது இணைகளைக் கவர ஆண் விலங்குகள் அலங்காரமான புற அமைப்பு களைக் கொண்டிருக்கும். மயிலுக்குத் தோகை, மான்களுக்குக் கொம்பு, சிங்கத்தின் பிடரி மயிர் என உதாரணங்களை அடுக்கலாம். அழகு என்றறியப்பட்ட மான்களின் கொம்புகளே அவற்றைக் கொன்றும் விடலாம். இணைக்கான போட்டியில் இரு ஆண் மான்கள் சண்டை யிடலாம். சண்டையில் கொம்புகள் சிக்கி பிரிய முடியாததால் உணவெடுக்க முடியாமல் மரணித் தும் விடலாம் அல்லவா? சங்பரிவாரங்கள் பேசுவதைப்போல், குறுகிய அறிவை வைத்து பரிணாமத்தை விளக்கிவிட முடியாது. கடவுள்தான் எல்லாம் என்ற கடிவாளத்தை மாட்டிக் கொண்டால் எங்கு சுற்றியும் கடவுள் படைத்தார் என்ற மையப்புள்ளிக்கு வந்துவிடுவார்கள். அறிவியலை அப்படி கணித்து விடக் கூடாது என்பதை இந்த அமைச்சர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

- அறிவியல் கதிர் மற்றும் விஞ்ஞானச் சிறகு

Pin It