‘இவ்வாண்டு பொங்கல் திருநாளை வழக்கம் போல் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் மக்கள் கொண்டாடுகிறார்கள்’ - என்று பத்திரிகைகளிலே எழுதுவதுண்டு. உண்மையும் அதுதான்.

மூக்கணாங்கயிறு கழற்றிவிடப்பட்ட ஜல்லிக்கட்டு காளையைப் போல மிக ஆவேச மூர்க்கத்துடன் மக்கள் மீது விலைவாசி பாய்கிற இன்றைய சூழலிலும் அதையும் மக்கள் எதிர் கொண்டு தாங்கி தைப் பொங்கல் நாளினை உற்சாகத் துடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடுவர்.

உணவுத்தானியங்கள், காய்கறிகள் முதலான உணவுப் பொருள்களை மேனி வருந்தி உழைத்து உற்பத்தி செய்த விவசாயியே தனது படைப்புப் பொருளை எளிதில் அணுக முடியாத விலைவாசி.

“நீயொரு வெங்காயம்” என்று சொன்னால் அது இன்று வசவு வார்த்தையல்ல - மதிப்பு உயர்ந்த வார்த்தை! “ஒரு வெங்காயத்தைக் கடிச்சிக்கிட்டாவது இந்தக் கஞ்சியக் குடிச்சிடுவோம்” என்று ஒரு விவசாயத் தொழிலாளிப் பெண்களால்கூட இன்று சொல்ல முடியாது. பெரியார் இன்றிருந்தால் “வெங்காயம்” என்ற வார்த்தையைப் பிரயோகிக்கக் கொஞ்சம் யோசித்திருப்பார்.

இன்று வெங்காய மகத்துவம் அப்படி, வெங்காயம் மட்டுமென்ன, வேறு பொருள்களும் விலை வேகத்தில் வெற்றிக் கொடிதான்.! மூர்க்கமான விலை உயர்வினால் அகம் மகிழ்வதும், ஆதாயம் அடைவதும் பெருங்கொண்ட ஏகபோக வர்த்தகச்சூதாடிகளே தவிர விவசாயிகள் அல்ல. பண்ணிய பகாசுர ஊழலை எப்படி மறைப்பது, பாவக்கறையை எப்படிப் போக்குவது என்பதிலேயே நமது மத்திய - மாநில மாண்புகளின் கவனமெல்லாம் இருக்கும்போது வெங்காயமாவது, வெலைவாசியாவது, விவசாயியாவது, மக்களாவது...

மழை வெள்ளமென்றாலும் வறட்சியென்றாலும் நேரடியாகப் பாதிக்கப்படுவது விவசாயிகளின் உழைப்புப் பலன்கள்தான். அண்மையில் பெய்த மழையின் வெள்ளத்தில் பல லட்சம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாயின. அந்த விவசாயிகளுக்கு மத்திய - மாநில அரசுகளிடமிருந்து இன்னும் போதிய நிவாரணம் கிடைத்தபாடியில்லை. தாமதமாய் வந்துசேரும் நிவாரணம்கூட இழப்பை ஈடு செய்வதாக இருப்பதில்லை. ‘விவசாயி சேற்றில் கால் வைக்கா விட்டால் (மற்றவர்கள்) சோற்றில் கை வைக்க முடியாது.’ - இது வெறும் பழமொழி யல்ல. வாழ்வியல் உண்மை.

அந்த மெய்ப்பொருளுக்குச் சொந்தக்காரனாகிய விவசாயியின் வாழ்க்கையோ, வறுமையின் பிடியில். வறுமையாலும் விவசாய நஷ்டத்தாலும் கடன் தொல்லைகளாலும் காங்கிரஸ், பிஜேபி ஆளுகின்ற 5 மாநிலங்களில் மட்டும் 2009- ஆம் ஆண்டு 10765 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். கொடும் வறுமையின் காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது தமிழகத் திலும் நிகழ்ந்துள்ளது.

நாட்டுக்குச் சோறு போடுகிற அன்னமிட்ட கைகளின் நிலை இப்படி ஆவது தேசமே வெட்கப்பட வேண்டிய அவலம். மத்திய ஆட்சியாளர்கள் சொல்லும் 9 சதவிகித பொருளாதார வளர்ச்சி யாருக்குப் போய்ச் சேர்ந்தது? உண்மையான இந்தியா கிராமப்புறத்தில் உள்ளது என்றார் தேசத்தந்தை காந்திஜி. அந்த இந்தியாவை இன்றைய ஆட்சியாளர்கள் எப்படி வைத்திருக்கிறார்கள் என்பதற்கு விவசாயிகளின் வாழ்க்கை நிலையே சான்று. 

“இத்தனை பட்டும் ஊசி

குத்த நிலமுமின்றிக்

கொத்தடிமையும் பட்டிரே நீரே தோழரே...

 ஒத்து விவசாயிகள்

உரிமை நிலை நாட்டப்

புத்துணர்வு பெறுவிரே நீரே தோழரே”:

- என்று பாடினார் பாவேந்தர் பாரதிதாசன்.

இவ்வாறு புத்துணர்வு பெற்று உழைக்கும் விவசாயிகள் எழுச்சிக் கொள்ளும் போது புது வாழ்வுக்கான விடியல் பிறக்கும். அந்தச் சிந்தனையையும் மனதிற் கொண்டு கொண்டாடுவோம் உழவர் திருநாளினை- தமிழ் மக்களின் கலாச்சாரத் திருவிழாவை!

Pin It