வயிற்றுப்போக்கால் அவதிப்படும் முப்பது குழந்தைகளில் இருபதுபேர் புட்டிப்பால் குடிப்பவர்கள். "தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கு நல்லது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் எப்படி அது நல்லதாக மாறுகிறது என்பதுதான் இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது" என்கிறார், பிரிகாம் யங் பல்கலைக்கழக நுண்ணியிரித்துறை வல்லுநர் எரிக் வில்ஸன்.

தாயின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மூலக்கூறு, எவ்வாறு குழந்தைக்கு கடத்தப்பட்டு செயலாக்கம் பெறுகிறது என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நோய் எதிர்ப்பாற்றல் தாயிடமிருந்துதான் தாய்ப்பால் வழியாக குழந்தைக்கு கடத்தப்படுகிறதாம். ஹார்வர்டு-ஸ்டான்ஃபோர்டு ஆராய்ச்சிக்குழு ஒன்று இந்த வேலையைச் செய்யும் மூலக்கூறை அடையாளம் கண்டறிந்துள்ளது. குழந்தையின் குடல் நோய்களை எதிர்க்கும் இந்த மூலக்கூறு தாய்ப்பாலில் இருந்து குழந்தைக்கு கடத்தப்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். CCR10 என்று இந்த மூலக்கூறுக்கு பெயரிட்டுள்ளார்கள்.

CCR10 மூலக்கூறுகள் நீக்கப்பட்ட எலிகளையும், இயல்பான எலிகளையும் ஆய்விற்கு உட்படுத்தினார்கள். இயல்பான எலிகளின் சுரப்பிசெல்களில் இலட்சக்கணக்கான எதிர்ப்பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. CCR10 மூலக்கூறுகள் நீக்கப்பட்ட எலிகளின் உடலில் எதிர்ப்பொருளின் குறைபாடு 70 மடங்காக இருந்ததாகவும் கண்டறியப்பட்டது. இந்த கண்டுபிடிப்பு, நோய் எதிர்ப்பாற்றல் நம்முடைய உடலில் எவ்வாறு ஒருங்கிணைக்கப்படுகிறது என்பதை தெரிந்துகொள்ள மிகவும் உதவியாக இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கத்தொடங்கியபிறகுதான் தாய்க்கே இத்தகைய ஆற்றல் பிறப்பெடுப்பதாக ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. கருத்தரிப்பதற்கு முன்பாக தாயின் இரத்தஓட்டத்தில் தோன்றும் இந்த மூலக்கூறுகள் காலரா, ரோட்டா வைரஸ் போன்ற நோய்க்கிருமிகளை எதிர்க்கும் ஆற்றல் உடையவை. தாயின் சிறுகுடலில் பதுங்கிக்கொள்ளும் இந்த மூலக்கூறுகள், முலைப்பால் ஊட்டும் சமயத்தில் தாயினுடைய சுரப்பி செல்களை சென்றடைந்துவிடுகிறது. தாய்ப்பால் மூலமாக குழந்தையின் சிறுகுடலுக்கு கடத்தப்படும் இந்த மூலக்கூறுகள், குழந்தையின் நோய் எதிர்ப்பாற்றலை வளர்க்கிறது.

CCR10ன் அளவை அதிகரிக்கக்கூடிய தடுப்பூசிகளை தாயின் உடலில் செலுத்துவதால் குழந்தையின் உடலில் தேவையான அளவிற்கு எதிர்ப்பொருள்களை உற்பத்தி செய்யமுடியும்.

தகவல்: மு.குருமூர்த்தி

Pin It