இது ஒரு இன்ஸ்டன்ட் உலகம். யாரும் எதற்காகவும் காத்திருக்கவோ, கவலைப்படவோ முடியாத வேகத்தில் இயங்கும் உலகம். பற்றாக்குறைக்கு நம்மை வாழைப் பழச் சோம்பேறிகளாக்கி வணிகத்தில் வெற்றிபெறும் போட்டி நிறைந்த வியாபாரம் உலகம். ஒருவன் வாழைப்பழம் விற்றால் மற்றொருவன் ‘உரித்துத் தருகிறேன்’ என்கிறான். பிறிதொருவன் ‘உரித்த பழத்தின் சத்தை மட்டும் உங்களை அறியாமல் நீங்கள் வாயைத் திறக்கும்போது போட்டுவிடுகிறேன்; என்னிடம் வாருங்கள்’ எனக்கூறும் உலகம். எனவே ‘பொறுத்தவன் பூமி ஆள்வான்’ என்ற நிலை மாறி, ‘பொறுத்திருந்தால் ஒதுக்கப்படுவாய்’ என்ற சூழல் உருவாகிவிட்டது. இந்த அவசரயுகம் எந்த அளவிற்கு சுகபோக வாழ்வைத் தருகிறதோ, அதே அளவிற்கு நோயையும் படைப்பதுதான் உண்மை.

நம் உடம்பிற்குள்ளேயே எந்த நோயையும் எதிர்க்கவல்ல அதனுடன் போராடி ஜெயிக்க கூடிய நோய் எதிர்ப்புத்திறன் உள்ளது. அதற்கு உதவும் வெள்ளணுக்கள் முதலான பல்வேறு உடலணுக்கள் இருக்கின்றன. உடலில் சிறுகாயம் பட்டாலோ, அல்லது வெளியிலிருந்து வைரஸோ, பாக்டீரியாவோ உடலுள் நுழையும் போதோ, அல்லது உடலுறுப்புகள் சீர்கேடு அடையும்போதோ இந்த நோய் எதிர்ப்புத்திறன் தன் செயல்பாட்டைத் துவங்கி, உடலை அழிவிலிருந்து காக்க வேண்டும். ஆனால் தற்காலத்தில், இந்த அவசரயுகத்தில் ஒன்று நாம் இந்த இயற்கை நோய் எதிர்ப்புத் திறனுக்கு நாம் வேலை வைப்பதில்லை அல்லது உடல் முன்பு போல் தன் நோய் எதிர்ப்புத் திறனைக் காட்டுவதில்லை. ஏன்? அவசர யுகத்தின் உணவும் மருந்தும்தான் காரணம்.

குழந்தையின் முதல் தும்மலுக்கு ‘Antihistamine’. அப்பாவின் இருமலுக்கு ‘Cough Syrub’ என்று துன்பம் துவங்கும்போதே நோய் எதிர்ப்புத்திறனுக்கு வேலை வைக்காமல் தன் வேலை கெடாதிருக்க நோயுடன் வேதியுத்தம் தொடங்குவது கூடாது. இன்றைக்கு நவீன மருத்துவத்தில் கூட வழக்கமான மருந்துகள் பலிக்காத பட்சத்தில், அவற்றுடன் Immuno Modulator, Anti Oxidant, Beta Carotenes என மூலிகைச் சத்து கொண்ட மருந்துகளை எழுதத் துவங்கிவிட்டனர். இது கூட ‘போராளியை எதிர்க்க நான் மேலிருந்து அணுகுண்டு போடுகிறேன். நீ தரை வழியாக கத்திச் சண்டை போட்டு முன்னேறு’ என்பது போலத் தான்.

நம் இயற்கை, நமக்கு இதே Beta Caroteneகளை, Immuno Modulatorகளை உணவுப் பொருட்களில், காய்கனிகளில், மூலிகைகளில் நிறையத் தந்துள்ளது. நம் முன்னோர்கள், சித்தர்கள் அதன் பலனை உணர்ந்து தொகுத்து நமக்கு அடையாளம் காட்டியுள்ளனர். அவற்றை இடைக்காலத்தில் மறந்து போனதுதான் இன்றைய இன்னல்களுக்குக் காரணம். அவசரம் கருதி இன்றைக்கு நாம் அதை ஒதுக்கினால், நாளைய நலவாழ்வு கேள்விக் குறிதான். நம்மைச் சுற்றியுள்ள எளிய தோட்டத்து தாவரங்களில் எவை எப்படி நோய் எதிர்ப்புத் திறனை வளர்க்கும் எனப் பார்ப்போம்.

நெல்லிக்கனி - அதியமான் ஒளவைக்கு நீடூழி வாழ வாழ்த்தி அளித்தது இலக்கியக் கதை. அதே கனியின் சத்து, செல்களில் உருவாகும் Free Radicals-ஐ அழித்து வயோதிகம் வராமல் தடுக்கிறது என்பதை இன்றைய ஆய்வு முடிவு. சாதாரணமாக அடிக்கடி சளி, இருமல் வரும் குழந்தைகளுக்கு இக்கனியின் சத்து நுரையீரலை வலுப்படுத்துவதுடன் நுரையீரலுக்குள் புகும் நோய்க் கிருமிகளை விரட்டி வெளியேற்றி Respiratory Immunity-ஐ அதிகரிக்கிறது.

மூக்டைப்பு தும்மல் எனும் சைனசைட்டிஸ் நோயாளிகளுக்கு, துளசிச்சாறு நோய் எதிர்ப்புத் திறனளிக்கும் மருந்து. சாதாரணமாக Respiratory Tractல் வரும் வைரஸ் கிருமியால் தான் இத்தொல்லை துவங்குகிறது. அல்லது அலர்ஜி எனும் ஒத்துக்கொள்ளாத பொருளின் மணத்தை முகரும்போது வருகிறது. இரு நிலைகளிலும் துளசிச்சாறு நோய் எதிர்ப்புத் திறனை அதிகரித்து அல்லது சீர்படுத்தி துன்பத்தை தீர்க்கிறது. கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லிக்கீரை குடலில், இரைப்பையில் நோய் எதிர்ப்புத் திறனை உருவாக்குவது சமீபத்திய கண்டுபிடிப்பு. இவையிரண்டுமே வாயு அகற்றியாகவும் செரிமா னத்தை தூண்டுவதாகவும் இருப்பது வயிற்று நோய்களிலிருந்து விடுபட உதவும்.

Hepatitis B வைரஸால் உண்டாகும் கொடிய ஈரல் நோய்க்கு கீழாநெல்லி பயன்படுகிறது. தற்போது சென்னை பல்கலைக் கழகத்திற்கு உலக உரிமம் பெற்றுத் தந்திருப்பது கூட அதன் நோய் எதிர்ப்புத் திறனை ஊக்குவிக்கும் குணத்தால் தான். இதேபோல ஆஸ்துமா நோயாளிகட்டு நச்சறுப்பான் மற்றும் வெற்றிலையும், நீரிழிவு நோயாளிகட்கு வெந்தயமும், சோரியாஸிஸ் எனும் தோல் நோயில் வெட்பாலையும் கூட நோய் எதிர்ப்புத் திறனை சீர்படுத்துவது மூலம் நோயை விலக்க உதவுகின்றன.

கரிசாலைக் கீரை, இஞ்சி, காய்ந்த அத்திப்பழம், பேரீச்சை, கடுக்காய் என இவையெல்லாமே நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் எளிய மூலிகை மருந்துகள், விலை குறைவான எவ்விதப் பக்க விளைவும் தராத இந்த மூலிகை மருந்துகளை உணவாகவோ அல்லது மருத்துவரின் ஆலோச னைப்படி தினசரி கல்பமாகவோ சாப்பிட நோய் அணுகாது நம்மை.

- நன்றி : “நோய் நீக்க... வாங்க வாழலாம்”

(நன்றி : மா/ற்று ம்ருத்துவம் ஏப்ரல் 2009)

Pin It