காரல்மார்க்ஸ் 200ஆவது பிறந்த நாள் ஆண்டு இது. மார்க்சியம் குறித்த விவாதங்கள், மறு வாசிப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்துக்கும் பொதுவுடைமை இயக்கத்துக்குமிடையே வரலாற்று ரீதியான உறவுகள் உண்டு. பெரியார் சோவியத் நாட்டுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு முன்பே சமதர்ம கருத்துகளில் ஈடுபாடு கொண்டிருந்ததை அவரது பேச்சு, எழுத்துக்கள் வெளிப்படுத்துகின்றன. பெரியார் அய்ரோப்பிய சுற்றுப் பயணம் முடித்துத் திரும்பியவுடன், பொதுவுடைமை - சுயமரியாதைக் கொள்கை களில் உறுதியுடன் இருந்த தோழர் சிங்காரவேலர் தயாரித்து, பிறகு விவாதங்கள், திருத்தங்கள் செய்யப்பட்ட சுயமரியாதை சமதர்மத் திட்டத்தை 1933இல் பெரியார் வெளியிட்டதோடு சுயமரியாதை இயக்கத்தில் ‘சமதர்மப்’ பிரிவு ஒன்றைத் தொடங்கி நாடு முழுதும் சுயமரியாதை சமதர்ம சங்கங்களை தோற்றுவித்தார்.

periyar 600‘சமதர்மத் திட்டத்தை’ பெரியார் கையில் எடுத்த நிலையில் அன்றைய பிரிட்டிஷ் ஆட்சி சுயமரியாதை இயக்கத்தின் மீது கடும் ஒடுக்குமுறைகளைத் தொடங்கிவிட்டது. சமதர்மத் திட்டத்தை ஒத்தி வைத்து சுயமரியாதை இயக்கத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க பெரியார் முடிவெடுத்தபோது சிங்காரவேலர், ஜீவானந்தம் போன்றவர்கள் பெரியாரைக் கடுமையாக விமர்சித்து, பெரியார் இயக்கத்தை விட்டு வெளியேறினார்கள். அந்தக் காலகட்டத்தில் பெரியார் ‘குடிஅரசு’ இதழில் எழுதிய கட்டுரைகளை இந்த இதழில் வெளியிட்டிருக்கிறோம். எப்போதுமே ஒளிவு மறைவில்லாது வெளிப்படைத் தன்மைகளோடு சுய விமர்சனங்களையும் தவிர்க்காமல் தனது கருத்துக்களை வெளிப்படுத்தும் நேர்மையாளர் பெரியார். இந்தக் கட்டுரைகளைப் படித்தாலே இந்த உண்மையை உணர முடியும்.

ஒரு இயக்கத்தைப் பற்றிய மதிப்பீட்டை அந்த இயக்கம் செயல்பட்ட வரலாற்றுச் சூழலோடு தொடர்புபடுத்தியும் அந்தச் சூழலுக்குள் பொருத்தியும் பார்க்கும்போதே அந்த இயக்கம் குறித்த மதிப்பீடு முழுமை பெறும்.

‘பிரிட்டிஷ் எதிர்ப்பு - தேச பக்தி’ என்ற வட்டத்துக்குள் அரசியல் முடங்கிப் போயிருந்த சூழலில் அதிலிருந்து வெளியே வந்து ஜாதிய சமூகத்தின் அடிப்படையான முரண்பாடுகளைக் கண்டறிந்து ஒடுக்கப்பட்டோர் உரிமை இயக்கத்தை முன்னெடுத்தவர் பெரியார். இதற்காக தன்னை ‘தேச விரோதி’யாக சித்தரித்த ‘தேச பக்தர்களின்’ விமர்சனங்களை அவர் புறந்தள்ளினார்.

சுயமரியாதை சமதர்ம அமைப்புகளைத் தொடங்கியபோதும் பார்ப்பனிய ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, தாழ்த்தப்பட்டோர் விடுதலைக்கான கொள்கைகளை முன்னெடுக்கும் அவசியத்தை உணர்ந்து கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு பரந்துபட்ட ‘வரலாற்று அணி’யை உருவாக்கவும் செய்தார்.

சமதர்மப் பிரச்சாரத்தை தள்ளி வைப்பதாக அறிவித்த அதே ஆண்டில் தான் மே தினக் கொண்டாட்டங்களை நடத்துமாறு வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகேளும் ‘மே’ தின உரையும் இந்த இதழில் வெளியிடப்பட்டிருக்கிறது.

‘உலகமயமாக்கல்’ என்ற கொள்கையை முதலாளித்துவம் கையில் எடுத்த பிறகு பன்னாட்டு நிறுவனங்களுடன் பார்ப்பன அதிகாரவர்க்கம் தன்னை இணைத்துக் கொண்டு சமூகத்திலும் பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களை சுரண்டவும் பார்ப்பனிய மேலாண்மையை உறுதிப்படுத்தவும் முனைந்து செயலாற்றுகிறது.

இந்த வரலாற்றுச் சூழல் ‘பெரியாரியம் - அம்பேத்கரியம் - மார்க்சிய’ இயக்கங்களிடையே சமூகப் புரிதலையும் ஒன்றுபட்ட போராட்டங்களையும் நடத்த வேண்டிய நிலையை உருவாக்கியிருக்கிறது.

இளைய தலைமுறைக்கு இந்த வரலாற்றுச் செய்திகளைக் கொண்டு செல்லும் நோக்கத்தோடு ‘நிமிர்வோம்’ இதழ் அது தொடர்பான பெரியார் கட்டுரைகளைப் பதிவு செய்திருக்கிறது.

Pin It