இலக்கியத் தொலைக்காட்சியின்
கலக்கல் செய்திகள்!
வாசிப்பவர் பழனி. சோ. முத்துமாணிக்கம். 

மண்டையில் இரத்தக் கோலத்துடன்
விக்டோரியா அரசி விருது கொடுத்தார்!
துப்பாக்கி சுடும் போட்டியின்போது
குறுக்கே சென்ற
கவுரிசங்கர், பன்சாரே, கல்புர்கி
தாமாகக் குண்டு விழுங்கித்
தடுக்கி விழுந்து மரித்துப் போனார்கள்!
டில்லிக் குளிர் தடுக்க
வீட்டில் மூட்டிய தீயில்
தப்பிப் பிழைத்தார் காமராசர்!
ஜெனரல் டயரின் படை
துப்பாக்கியைச் சுத்தம் செய்து
விளையாடிய திடலில்
இடையூறாக வந்த இந்தியர்கள்
குண்டுகள் ஏந்தினர்!
புளியம்பழம் பறிக்கப்போன கட்டபொம்மன்
கழுத்தில் கட்டியிருந்த கயிறு மாட்டியதால்
கயத்தாற்றில் மூச்சுவிட மறந்தார்! 

செய்திகள் தொடர்கின்றன....
இந்த வெங்காயங்களை
உரிக்க முடியாது... இல்லை இல்லை ...
மன்னிக்கவும்
திருத்த முடியாது எனத்
திரும்பிப் போனார்!
வேள்விகளில் பலிகளைத் தடுத்து
ஆடுமாடுகளோடு
கசாப்புக் கடைக்குப் போனார்
கவுதம புத்தர்!
ஆட்சி மாற்றத்தால்
அழுதுபுலம்பிய கம்பராமன்
தன் பெயரைத் தொலைத்துவிட்டு
சரயு ஆற்றில் கரைந்து போனான்.
கங்கைக் கரையில்
அனுமதி மறுக்கப்பட்ட 
அய்யன் வள்ளுவன்
குறள்படும் பாட்டைக் கண்டு
குமிறிக் குமிறிக் கண்ணீர் உகுத்தான்;
காவிக்கறை அச்சத்தில்
தன் வெள்ளையாடையைக் காப்பாற்றத்
தனியறைக்குள் தாளிட்டுக்கொண்டு
வள்ளலாரும் தீயைத் தழுவினார்!. 

இடைவேளைக்குப் பிறகு......
பொருளியல் செய்திகள் தொடர்கின்றன.. 

கணக்கில் வராத
கறுப்புப் பணக்கட்டுக்குச் சிலர்
கட்டுப்போட்டுக் கட்டுப் போட்டு
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தினர்! 

வாழ்வியல் செய்திகள்
தொடர்கின்றன. 

பசுக் குண்டர்களுக்குப்
பத்மபூசன் விருதும்
கும்பல் கொலைகாரர்க்கு
வீரசக்ராவும் 
பாலியல் வன்முறை வீரர்களுக்கு
அர்ச்சுனா விருதுகளும் அள்ளித் தரப்பட்டன! 

வணிகச் செய்திகள்
தொடர்கின்றன.... 

மகாராட்டிரத்தில் குதிரை வணிகம்
எடுபடாமல் இறங்குமுகத்தில்!
மலிவுவிலைக்கு மனிதரைத் தேடி
குதிரைகள் தெருவில் அலையும் அவலம்!
இந்திய நாட்டை ஏலம் எடுக்க
உலக வணிகர்கள் போட்டா போட்டி! 

சந்திரன் பரப்பில்
மனைகள் விற்பனை!
செவ்வாய்க்குச் சுற்றுலா
சூரியனில் தொழிற்சாலைகள்
கோள்களை இணைத்துச்
சாலைகள் போட
ஒப்பந்தங்கள் உயிர்பெற்றன!
காலமாற்றங்களைக் கணிக்கமுடியாமல்
ஏழை இந்தியன் வானத்தை நோக்கி
வாய்பிளந்து நிற்கிறான்! 

இத்துடன் செய்திகள்
முடிவடையவில்லை ... 

தொடர்ந்துகொண்டே...

Pin It