மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,

வணக்கம்.

பாராட்டுக்கள், முதல்வர் அவர்களே!

Karunanidhiமீண்டும் ஒருமுறை தலைக்குமேல் தேர்தல் வேலை இருந்தாலும், இலங்கையில் போர் நிறுத்தம் செய்யாததற்காக, இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததற்குத்தான்!

என்னிடமிருந்து பாராட்டுக் கிடைத்ததே என்று மிகவும் புல்லரித்துப் புளகாங்கிதப்பட்டு விடாதீர்கள்! ஒரு செய்தியாளர் கேட்டு நினைவூட்டப்போய் வேறு வழியில்லாமற் சொல்லி இருக்கிறீர்கள். தொடர்ந்து உங்கள் நகைப்புக்கிடமான பதில்கள் சகிக்கவில்லை முதல்வர் அவர்களே!

"நாங்கள் இலங்கையில் நடைபெறுகிற இந்தப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை. போர் நிறுத்தம் வேண்டும் என்று கடந்த 6 மாத காலமாகத் தொடர்ந்து சொல்லி வருகிறோம்"....என்று சொல்லியிருக்கிறீர்கள். நல்லது; கடந்த ஆறுமாதகாலமாகவும் சொன்னீர்கள். அங்கு கடைசித் தமிழன் சாகும்வரையும் இதையே சொல்லுவீர்கள் என்றும் தெரியும். அடுத்த வரிகள் உலகத் தமிழர்களையே உற்றுப் பார்க்கும் வகையில் சொன்ன உங்கள் சாதுர்யம் இருக்கிறதே....அடடா...!

"எங்களுடைய குரலை மதித்து வெளிநாட்டு அரசுகள், ஐ.நா. சபை மூலமாகப் போரை நிறுத்துமாறு இலங்கைக்கு சொல்லி வருகிறார்கள்....." என்று என்னமாய் எம் இளிச்சவாய் தமிழர்கள் செவிமடல்கள் கிழியச் சொல்லியிருக்கிறீர்கள்!? இது கொஞ்ச‌ம் அதிக‌மாப் ப‌ட‌லையா உங்க‌ளுக்கு? முதுகுவ‌லிக்கு கொடுத்த‌‌ ம‌ய‌க்க‌ம‌ருந்தின் ம‌ய‌க்க‌ம் தெளியாம‌லே பேசினீர்க‌ளா?

உல‌க‌த் த‌மிழ‌ர்க‌ள் உல‌க‌ நாடுக‌ளில் கொட்டும்ப‌னியிலும், சுட்டெரிக்கும் வெயிலிலும் ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கில் பேர‌ணி, ஆர்ப்பாட்ட‌ங்க‌ள், க‌வ‌ன‌யீர்ப்புக்க‌ளை ந‌ட‌த்திய நல்ல உள்ள‌ங்க‌ள் கூட‌ இதை ம‌ன்னித்துவிடுவார்க‌ள். கோய‌ப‌ல்சின் பொய்யையும் மீறிய‌ ஜ‌முக்காள‌த்தில் வ‌டிக‌ட்டிய‌ பொய்யைச் சொல்லிய‌ உங்க‌ளை குறுந‌கை சிந்த‌ பார்த்துக் கொண்டிருக்கும் த‌மிழ‌க‌த் த‌மிழ‌ர்க‌ள் நிச்ச‌ய‌ம் ம‌ன்னிக்க‌ மாட்டார்க‌ள்,முத‌ல்வ‌ர் அவ‌ர்க‌ளே!

தமிழகத்திலிருந்து நீங்கள் விண்ணதிர எழுப்பிய குரலை மதித்து, இந்தியப் பேரரசு உங்கள் குரலை மதிக்காமல் புறக்கணித்தாலும் வெளிநாட்டு அரசுகள் பிரிட்டன், அமெரிக்கா, நோர்வே, பிரான்சு என்று இலங்கைக்கு கோரிக்கை விட்டதாக நீங்கள் அந்தந்த வெளிநாடுகள் பெயரைக்கூடச் சொல்லியிருக்கலாம்!

அப்படியே பான் கீ மூன் அவர்களை இரகசியமாக தயாநிதி மாறனோ, கனிமொழியோ சந்தித்துக் கேட்டுக்கொண்டதின்பேரில் ஐ.நா.சபை இலங்கை அரசு போரை நிறுத்தச் சொன்னதாகச் சொல்லியிருக்கலாம். தேர்தல் நேரத்துல இப்படியெல்லாம் கூட நீங்கள் "ரீல்" விட்டாலும் பாழுஞ்சனம் கலைஞரு இதவிட வேற என்ன செய்ய முடியும்ன்னு "நச் நச் நச்"சுன்னு உங்க கூட்டணிக்கே ஓட்டுப்போட ஒதவி இருக்குமே!?

சரி.. சோனியாஜியும் மன்மோகன்ஜியும், முகர்ஜி போன்ற "ஜி"க்களையும் உங்க கைக்குள்ள வளைச்சுப் போடுற மாதிரி, "....நாங்கள் வலியுறுத்தியதன் காரணமாகவும், பொதுவாக இலங்கைத் தமிழர்கள் மீது மத்திய அரசுக்கு உள்ள அனுதாபம் காரணமாகவும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி ஆகியோர், பிரச்னைக்கு போர் தீர்வல்ல; பேச்சுவார்த்தை தான் பிரச்னையைத் தீர்த்து வைக்கும். எனவே, போரை நிறுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்...." என்று சொல்லி கூட்டணி தர்மத்தையும் காப்பாற்றி ஒட்டுமொத்தமாய் உங்க கூட்டணிக்கு தேர்தல் சேதாரமில்லாமல் வாக்கு சாதுர்யமாய் பேசீட்டீங்க பாருங்க.. படா ஆளுங்க நீங்க!

அப்புறம் என்ன? ஏன் இலங்கையில இன்னும் போரை நிறுத்தமாட்டேன்னுறானுக என்று யாரும் கேட்கும் முன் அடிச்சீங்களே ஒரு அந்தர் பல்டி அய்சாலக்குடின்னானாம்!

"...... இருந்தாலும் ராஜபக்ச போரை நிறுத்தவில்லை. இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்." இரசபக்சேவுக்கும் ஒரு ஆப்பு வச்சமாதிரி கனகச்சிதமா பேசி வாக்காள‌ர்க‌ளை வாகாக‌ க‌வ‌ர்ந்துவிட்ட‌தாக‌ இந்நேர‌ம் ஒரு ப‌க‌ல் நேர‌க் க‌ன‌வுகூட‌ க‌ண்டிருப்பீர்கள். ஆனாப் பாருங்க‌ நீங்க‌ இவ்வ‌ள‌வு "ரீல்" ஓட்டியும் அடுத்த கேள்வியையும் "விடாக்க‌ண்ட‌ன் கொடாக்க‌ண்ட‌ன்" போல‌ வீசுகிறார்.

"இனியாவது அவர்கள் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கூறுகிறீர்களா?" என்று கேட்க‌ நீங்க‌ளும் தெளிவா, "போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்றுதான் தொடக்கம் முதல் கேட்டு வருகிறோம். இப்போதும் அதைத்தான் வலியுறுத்துகிறோம்." என்று எரிச்சலை வெளிக்காட்டாமல், எப்போதும் இதையே அடிபிறழாது சொல்லுவோம் என்று நீங்க‌ள் ம‌ன‌துக்குள் நினைத்தாலும் வெளியே வ‌ந்து விழுகின்ற‌ வார்த்தைக‌ள் ஓட்டுக்காக‌ என்ற‌ இர‌க‌சிய‌மும் புரியாம‌லில்லை.

ஆனால், கொஞ்ச‌மாவ‌து இன்றைய‌ நிலைக்கு ஏற்றாற்போல‌ச் சொல்ல‌வேண்டாவா? இந்தியா அனுப்பிய‌ போர்க்க‌ப்ப‌ல்க‌ள் க‌ட‌லோர‌த்தை வேலியாக்கி காவ‌ல் காக்க‌, இந்திய‌ இராணுவ‌ வீர‌ர்க‌ள் சிங்க‌ள‌ வீர‌ர்க‌ளை வ‌ழிந‌ட‌த்த, அடிபட்டு வீழும் சிங்கள இராணுவத்தாருக்கு சிகிச்சை அளிக்க இந்திய இராணுவ மருத்துவ முகாம் கைகொடுக்க, புலிக‌ளை அழிச்சாச்சா? பிர‌பாகர‌னை பிடிச்சாச்சா? என்று கேட்டுவ‌ருவ‌த‌ற்காக‌வே சென்றுவ‌ரும் வெளியுறவுச் செய‌லக‌ப் ப‌ட்டாள‌ம் என்று சோனியாஜியின் அர‌சு சொக்க‌ட்டான் விளையாட்டெல்லாம் உங்க‌ள் க‌ண்க‌ளில் ப‌டுவ‌தே இல்லையா?

ப‌ட்ட‌தையெல்லாம்தான் சொல்ல‌முடியுமாங்கிறீங்களா?

இன்றைக்கு போர்க்க‌ளக் காட்சி என்ன‌ என்று தெரியுமா முதல்வர் அவர்களே? தெரிந்தும் தெரியாமல், அறிந்தும் அறியாமல், புரிந்தும் புரியாம‌லும் புதிராகச் சொல்லிக்கொண்டே இருக்கிறீர்க‌ளே, இது நியாய‌மா? ப‌ல‌ரை சில‌கால‌ம் ஏமாற்ற‌லாம்; சில‌ரை ப‌ல‌கால‌ம் ஏமாற்ற‌லாம். ஆனால் எல்லாக் கால‌ங்க‌ளிலும் எல்லாரையும் ஏமாற்றிக்கொண்டே இருக்க‌ முடியாது என்ப‌து ம‌ட்டும் நிச்சயம்‌ முத‌ல்வ‌ர் அவ‌ர்க‌ளே.

"இலங்கையில் இனிமேலாவது அதிகாரப் பகிர்வு அமுல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறீர்களா?..." என்று செய்தியாள‌ர் இல‌ங்கைக் கேள்வி வ‌ரிசையில் இறுதியாக‌ ஒரு கேள்வியை உங்க‌ள் முன் வீசுகிறார்.

அதற்கு நீங்களும், "அங்கே அதிகாரப் பகிர்வு செய்யப்பட இந்திய அரசு இன்னும் முனைப்பாக உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று சொல்லி உங்க‌ள் மேதாவித்த‌ன‌த்தைக் காட்டியிருக்கிறீர்க‌ள். கேட்ட‌வ‌ர் ஒரு செய்தியாள‌ர். எதோ இந்திய‌ப் பிர‌த‌ம‌ர் கேட்ட‌மாதிரி இடக்குமடக்கான கோரிக்கை வைக்கிறீர்க‌ளே? தெரியாம‌ல் கேட்கிறேன். யாருக்கு யார் அதிகார‌ப்ப‌கிர்வு செய்து த‌ருவ‌து?

த‌ந்தை செல்வா கால‌த்திலிருந்தே நிலுவையாக‌ உள்ள‌ ஒரு வித‌ய‌த்தை எதோ நீங்க‌ள் சொன்ன‌வுடன் காங்கிர‌சு அர‌சு உட‌னே செய்துவிடுவ‌துபோல! த‌மிழ‌னையே முற்றாக அழித்து விட்டு யாருக்கு அதிகார‌ப்ப‌கிர்வு? விடுத‌லைப்புலிக‌ளை துடைத்தழித்துவிட்டு கடைசியில் விஷவாயுக் குண்டைப் போட்டு கூணும் குருடும், நுடமும் முடமுமாகக் கிடக்கும் தமிழின் மிச்சசொச்ச அடையாளத்துக்கா இந்த அதிகாரப்பகிர்வு?

உலகிலேயே தடை செய்யப்பட்ட கொடூரமான விஷவாயுக் குண்டுகளை இதோ வீசிக் காவலரணாக இருந்த புலிகளை புதுக்குடியிருப்பில் கரிக்கட்டைகளாக்கி விட்டது. தனது இராணுவத்துக்கு பெருத்த சேதத்தை விளைவிக்கும் போராளிகளை எதிர்கொள்ளத் திராணியற்ற இராசபக்சே நயவஞ்சகமாக எரி நச்சு வாயு குண்டுகளை வீசிக் கொன்று எக்காளமிட்டுள்ளது.

இரத்தவெறியடங்கா இராசபக்சே, த‌மிழ‌ன் ம‌ட்டும‌ல்ல‌, அவ‌ன் வ‌ள‌ர்த்த‌ புல்பூண்டுகூட‌ அங்கிருக்கக் கூடாது என்று தமிழ் மண்ணை விஷவாயு வீசி பிணக்காடாக்கி, சுடுகாடாக்கி வரும் கொடூர‌த்தை நிக‌ழ்த்தும் இட்லராக அங்கு! தமிழினத்தை அழித்துவிட்டு மிச்ச சொச்சமிருக்கும் தமிழர்களை விடுதலைப்புலிகளே அழித்துவிட்டனர் என்று உலகநாடுகளின் காதுகளில் பூச்சுத்திவிடக்கூடும்!

இந்த ஈனச் செயலுக்கு உடந்தையாக இருக்கும்..... காங்கிர‌சுக்கு துணைபோன‌வ‌கையில் த‌மிழ் இன‌த் துரோகியான‌ உங்க‌ளை த‌மிழ‌ன் என்ற‌ இன‌ம் இருக்கும்வ‌ரை தூற்றிக்கொண்டே இருக்கும்.

கிட‌க்கிற‌து கிட‌க்க‌ட்டும்;கிழ‌வியைத் தூக்கி ம‌னையில் வை என்ப‌து போல‌ த‌ங்க‌ள் அருந்த‌வ‌ப்புத‌ல்வ‌ன் அழ‌கிரியை எம்.பியாக்கி அவ‌ரை ம‌த்திய‌ அமைச்ச‌ராக்கி வ‌லம் வ‌ர‌வைக்க நீங்க‌ள் ஆசைப்ப‌ட்டிருக்கிறீர்க‌ள். அந்த‌ ஆசையில் ஈழ‌ ம‌ண் தான் விழும்!

"நமக்கே நாற்பதும்" என்று நீங்கள் கனவு கண்டுகொண்டிருக்கும் நாற்பதிலும் தமிழக மக்கள் திருத்தி எழுதப்போகும் தீர்ப்பைப் பார்க்கத்தானே போகிறீர்கள்!

அடுத்த மடலில் உங்களைச் சந்திக்கும்வரை!

அசாதாரணத் தமிழன், 

- ஆல்பர்ட் பெர்னாண்டோ, விஸ்கான்சின், அமெரிக்கா. (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)