ஹோட்டல் நிம்மதிகுழுமத்தின் உரிமையாளர்கள் இஸ்மாயில் - முனிரா இணையர்களிடம் நேர்காணல்

உங்களுடைய பெயர் என்ன?உங்களது தொழில் என்ன?

என்னுடைய பெயர் நிம்மதி இஸ்மாயில். எனது துணைவியார் முனிரா. எங்களுக்கு ஒரு மகன். நாங்கள் கோவை இராமநாதபுரத்தில் வசித்து வருகிறோம். நான் கோவை மாவட்ட மாட்டு இறைச்சிக் கடைகளின் சங்கத்தலைவராக இருக்கிறேன். மற்றும் நாங்கள் ரெஸ்டாரண்ட்டும், மாட்டுக்கறிக் கடையும் நடத்தி வருகிறோம். எங்களுடைய ரெஸ்டாரண்டில் பீஃப், மட்டன், சிக்கன் போன்ற உணவு வகைகளைத் தயாரித்து விற்பனை செய்கிறோம்.

மாட்டு இறைச்சிக்கடை எத்தனை வருடங்களாக நடத்திக்கொண்டு இருக்கிறீர்கள்?

என்னுடைய தாத்தா காலத்தில் இருந்து, எங்கள் எங்கள் குடும்பத்திற்கு மாட்டு இறைச்சிக்கடை பல ஆண்டுகளாகவே தொழிலாகச் செய்து வருகிறோம்.

நிம்மதி ஹோட்டல் எத்தனை வருடங்களாக நடத்தி வருகிறீர்கள்??

16 வருடங்களாக நடத்திக்கொண்டு வருகிறேன். 2000-வது வருடத்தில் புளியகுளம் விநாயகர் கோவில் அருகில் பங்கஜமில் ரோட்டில் ஒரு கடையை வாடகைக்கு எடுத்துத்தான் ஆரம்பித்தேன். நம்ம கடையின் சுவையும், தரமும் நன்றாக இருந்ததால், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. 7 வருடங்களாக அந்த இடத்தில் கடை நடத்தினேன். சில கருத்து வேறுபாடு காரணமாக அந்தக் கடையைக் காலி செய்துவிட்டேன். தற்போது இராமநாதபுரம் ஒலம்பஸ் பஸ் ஸ்டாப் அருகில் கடை நடத்தி வருகிறேன்.

ஹோட்டல் நிம்மதியில் மட்டன், சிக்கன், பீஃப் இதில் எந்த மாதிரியான உணவுவகைகள் அதிகமாக விற்பனயானது?

முதலில் பீஃப் தான் அதிகம். சிக்கன் அடுத்தபடியாக விற்பனயாகிறது. கோயம்புத்தூரிலேயே நம்ம கடை நல்ல லாபத்தை ஈட்டித்தந்தது. காலையில் 11 மணிக்கே பிரியாணி தயாராகிவிடும். இது நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய தொழிலாக உள்ளது.

மாட்டு இறைச்சியில்(பீஃப்) வேறு என்ன வகையான உணவுகளைத் தயார் செய்து விற்பனை செஞ்சீங்க?

பீஃப் பிரியாணி, பீப் ஃபிரை எங்களுடைய கடை பெயருல நிம்மதிஃபிரைன்னு ஒரு வகை கொடுத்தோம் .முதலில் கடை ஆரம்பித்தபோது பீஃப்  ஃபிரை 10 ரூபாய்க்கும், நிம்மதி ஃபிரை 12 ரூபாய்க்கும் விற்பனை செய்தோம். அதுக்குப் பிறகு கேளரா பீஃப்பிரியாணி, ஆந்திரா பீஃப் ஃபிரைன்னு செய்தோம். எந்தக் கடைக்குப் போனாலும் பிரியாணி, குஸ்கா மட்டும்தான் இருக்கும். அப்போதுதான் நான் நினைச்சேன் சிக்கன்ல என்ன, என்ன உணவு வகைகள் இருக்கிறதோ, அதை எல்லாவற்றையும் பீஃப்பில் செய்து கொடுத்தேன். பெரிய, பெரிய ஸ்டார் ஓட்டல்களில் எந்த மாதிரியான உணவுகள் விற்பனை செய்யப்படுகிறதோ, அதே மாதிரியான எல்லா ஃபிரை வகைகள், பிரியாணி வகைகள் இது போன்ற எல்லாவற்றையும் செய்து விற்பனை செய்தோம். இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது.

நம்ம இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களில் மாட்டு இறைச்சி சாப்பிடுவதற்குத் தடை இருக்கிறது?

குஜராத், மகாராஷ்டிரா, இராஜஸ்தான், அரியானா போன்ற மாநிலங்களில் மாட்டு இறைச்சி சாப்பிடுவதற்குத் தடை இருக்கிறது. அதுவே கேரளாவில் பா.ஜ.க. தலைவர்கள் மாட்டு இறைச்சி சாப்பிடுகிறார்கள். அந்தத் தலைவர்கள் வேற மாநிலத்திற்கு போகும்போது மாட்டுக்கறி சாப்பிடக்கூடாதுன்னு சொல்லி வருகிறார்கள். மாட்டுக்கறியை வைத்து ஒரு அரசியலே நடத்துகிறார்கள்.

பெரிய ஹோட்டல்களில் மாட்டுக்கறி விற்பனை செய்யப்படுகிறதா?

பெரிய ஸ்டார் ஹோட்டல்களில் மாட்டுக்கறி விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் விலை மிகவும் அதிகமாக இருக்கும். நடுத்தர மக்கள் எல்லாம் அந்த மாதிரியான ஹோட்டல்களில் போய்ச் சாப்பிடுவது கிடையாது.அ தனால் நான் நடத்தி வந்த நிம்மதி ஹோட்டலில், ஸ்டார் ஹோட்டலில் பீஃப்- ல் எத்தனை வகை உணவு தயாரித்து விற்பனை செய்யப்படுகிறதோ? அதே மாதிரி எல்லா உணவுகளையும் தயாரித்து விற்பனை செய்தேன். விலை குறைவாகவும், சத்தான உணவும் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக நான் செய்தேன்.அதை எல்லா மக்களும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.

மாட்டுக்கறி  கீழ்சாதிக்காரங்களும், சிறுபான்மையின மக்களும், அதிகமாக உடல் உழைப்புள்ள மக்கள் மட்டும் சாப்பிடுகிற உணவாக இருக்கிறதா? மற்றவர்கள் சாப்பிடுவதில்லையா?

மட்டன் விலை அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதை எல்லாம் மக்களும் வாங்க முடிவதில்லை. கோழிகளைப் பார்த்தால், சத்து குறைவாகத்தான் இருக்கும். ஆனால் மாட்டுக்கறி உணவுதான் நல்ல சத்தான உணவாக இருக்கிறது.

உலக நாடுகளில் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது ஒரு புரதச்சத்து நிறைந்த உணவு கறிக்காக மாடுகளை வெட்டுவதற்கு முன்பு உணவு, தண்ணீர் கொடுத்து அடுத்த நாள்தான் வெட்டப்படுகிறது. அப்போது இரத்தம் சுத்தமாக வடிந்த பிறகுதான் கறியை வெட்டுவோம். இதனால் கறி சுத்தமானதாக இருக்கும். இந்தக் கறியைச் சமைத்தால் 2 நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும்.

இதனால் மாட்டுக்கறி உணவு நல்ல சத்தானதும், சுகாதாரமான உணவாகவும் கருதப்படுகிறது. சைனாவில் பார்த்தால் ஓமோசோ-ன்னு ஆங்கிலத்தில் சொல்வார்கள் (இரைப்பை) சொல்லப்படுகிற இந்த உணவை அங்கே உள்ள மக்கள் தினமும் ஒரு வேலை உணவிலாவது சேர்த்திக் கொள்கிறார்கள்.

ஒலிம்பிக்கில் 9 தங்க பதக்கங்கள் வாங்கிய உசேன் போல்ட்டுகூட இந்த மாட்டுக்கறி உணவைத்தான் ஒரு நேர உணவாகச் சாப்பிடுகிறார். நமது நாட்டு வீராங்கனை சாக்ஸி மாலிக்கூட மாட்டுக்கறி உணவு சிறந்த உணவாக இருக்கிறது என்கிறார்.

இது ஒரு சத்தான உணவுதான். இந்த உணவைச் சாப்பிடுபவர்கள் எல்லாம் கீழ்சாதின்னு சொல்லுவார்கள். அந்த மாதிரி எல்லாம் எதுவும் கிடையாது. இப்பொழுது 100க்கு 80 சதம் மக்கள் மாட்டுக்கறியைச் சாப்பிடுகிறார்கள். ஆனால் வெளிப்படையாகச் சொல்வதற்குக் கூச்சப் படுகிறார்கள். இந்த உணவிற்கும், சாதிக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.

எந்த மாதிரியான மாடுகளை கறிக்காக பயன்படுத்துகிறீர்கள்?

கறிக்குப் பயன்படுத்துவது காளைக் கன்று. வயதான மாடுகள், பால் கரக்காத மாடுகள், கன்று போடாத மாடுகள், உழவுக்குப் பயன்படாத மாடுகள் போன்ற மாடுகளைத்தான் அடிமாடுகளாக வாங்குவோம். அரசியல்வாதிகள்கூடச் சொல்றாங்க. பசுமாட்டை கறிக்காக வெட்டுகிறார்கள் என்று. ஆனால் பால் கொடுக்கும் ஒரு பசுமாடு 50,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதை வாங்கி வெட்டினால் ஆட்டுக்கறி விலையை விட அதிகமான விலைக்கு விற்க வேண்டி இருக்கும். அதனால் எங்களுடைய தொழில் பாதிப்பு ஆகும். பால் கொடுக்கும் பசுமாடுகளை நாங்கள் கறிக்காக பயன்படுத்துவதே கிடையாது.

பசுவதை தடைச்சட்டம் கொண்டு வந்தால் அது யாருக்கு இலாபம். அதை ஏன் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறார்கள்?

பசுவதைத் தடைச்சட்டம் கொண்டு வந்தால் பெரிய, பெரிய முதலாளிகளுக்குத்தான் இலாபம். ஏனென்றால் இந்தியாவில் மாட்டுக்கறி சாப்பிடாமல் இருந்தால் மாடுகளை மொத்தமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். பார்ப்பனர்களே இதை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக அல்கபீர் என்ற பெயரில் நடத்துகிறார்கள். இந்தியாவில் 6 நபர்கள் மாட்டுக்கறியை (எக்ஸ்போர்ட்) ஏற்றுமதி செய்கிறார்கள்.2 பார்ப்பனர்கள்.

கொல்லாமை என்ற கொள்கையுள்ள ஜெயின் சமூகத்தைச் சார்ந்தவர்கள் இரண்டுபேர், முஸ்லீம்கள் இரண்டுபேர். இவர்கள் அனைவரும் என்ன நினைக்கிறார்கள் என்றால் வெளிமாநிலம், மாவட்டங்களுக்குச் சில்லரையாக மாடுகளை யாருக்கும் விற்காமல் தடுத்தால், மிகவும் குறைந்த விலைக்கு வாங்கிச் செல்லலாம் என்ற நோக்கம். நம் நாட்டு மக்களிடம் மாட்டுக்கறி சத்தான உணவு என்பதை மறைத்து மததின் பெயராலும், கடவுளின் பெயராலும் மாடு ‘புனிதம்ங் என்று சொல்லி மக்களிடையே மதச்சாயம் பூசிவருகிறார்கள்.

மாடு, மாட்டு இறைச்சி இவற்றின் வேறு வகையான பயன்கள் என்ன?

மாட்டுக்கறி உணவிற்காக மட்டுமில்லாமல், தோல் பொருள்கள் உலக அளவில் பெரிய தொழிலாக இருக்கிறது. இந்தியாவின் பொருளாதாரம் மாட்டுக்கறியை நம்பித்தான் இருக்கிறது.அன்னியச் செலாவணியை ஈட்டித்தருவது மாட்டுக்கறியும், அதன் பொருட்களும் தான். மாட்டுத் தோல் தொழிலில் ஆசிய அளவில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. மாட்டு இறைச்சி ஏற்றுமதியில் இந்தியா உலக அளவில் முதலிடம் வகிக்கிறது.

நாங்கள் ஒவ்வொரு வாரமும் மாடு அறுக்கும் பொழுது மருத்துவ ஆராய்ச்சிக்காக எங்களுடைய கடைகளில் இருந்து மாட்டின் முதுகுத் தண்டுவடப் பகுதியை எடுத்துச் சென்று கொடுக்கிறோம். இதனால் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு டாக்டர்கள் பாடம் நடத்துகிறார்கள். இதனால் ஒரு வாரத்திற்கு 30 மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது. - தொடரும்.

Pin It