“சிந்துச் சமவெளி நாகரிகத்தைக் கட்டமைத்தவர்கள் சூத்திரர்கள்தான், ஆரியர்கள் அல்ல” என்கிற எனது கட்டுரையில் அக்கினியையும் வாயுவையும் வணங்கும் ரிக் வேதகால ஆரியர்கள்தான் 1500 ஆண்டுகால ஹரப்பா மற்றும் அதன் பின்னர் தொடர்ந்த நாகரிகங்களை அழித்தொழித்தனர் என்று வாதிட்டிருப்பேன். எனது விரிவான பகுப்பாய்வில் தென் இந்தியப் பெயர்களும் ஞானமார்க்கக் கலாச்சாரமும் ஹரப்பா நாகரிக உற்பத்தி மற்றும் ஞானமார்க்கக் கலாச்சாரமும் ஒத்துப்போவதை விவரித்து இருக்கிறேன். இது ராக்கிகர்ஹி மண்டையோட்டின் DNA பகுப்பாய்விலும் நிரூபணமாகி உள்ளது. (The Explosive Truth, by Kai Friese, India Today, September 10, 2018) .

இப்போது இந்தோ - ஆஃப்ரிக்க DNA மற்றும் இந்தோ-ஆரிய DNA இரண்டும் அதிக வேற்றுமைகள் உள்ளவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் சிந்துச் சமவெளி நாகரிகத்தைக் கட்டமைத்தவர்கள் இந்தோ - ஆஃப்ரிக்க இனத்தவர்கள் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ரிக்வேதகால ஆரியர்கள் கடவுள் வழிபாட்டையும், கடவுள்தான் இந்த உலகத்தைப் படைத்தார் என்பதையும், ஏற்றுக்கொண்டதில்லை. அவர்கள் அக்கினி மற்றும் வாயுவை வணங்கியதைக் கொண்டு பார்க்கும்போது, பொருட்களால் ஆன யதார்த்தத்தைப் புரிந்தவர்களாகவும், கடவுளைத் தேடும் ஞான சாராம்சத்தை விலக்கியவர்களாகவும் இருந்தார்கள்.

ரிக்வேதத்தில் கட்டமைத்த வர்ணக் கோட்பாடு (நிறம், சாதி) “புருஷ சூக்தம்” (தெய்வ சூக்தம் இல்லை) மீது நிறுவப்பட்டிருந்தது. ஏனெனில் அவர்கள் மனிதனால் படைக்கப்பட்ட கடவுளை நம்பவில்லை. ரிக்வேதத்தில் வர்ணங்களைப் படைத்த பிரம்மன் புருஷவடிவில் குறிப்பிடப் பட்டிருந்தாலும், மிகவும் குறைந்த இடங்களில் மட்டுமே குறிப்பிடப்படுகிறான். இந்திரன்தான் (கதாநாயகன்) ரிக் வேதத்தில் பல இடங்களில் குறிப்பிடப்படுகிறான்.

அக்கினி மற்றும் வாயு தவிர இந்திரன்தான் ரிக் வேதத்தில் பல இடங்களில் பெரும் அழிவினை ஏற்படுத்தும் கதாநாயகனாகக் குறிப்பிடப்படுகிறான். ஆனால் தார்மிகம் மற்றும் வீரியம் உள்ளவனாகக் காட்டிடப்படவில்லை. ஆரியக்கடவுளர்களான பிரம்மா, சிவன், விஷ்ணு போல இந்திரன் கடவுளாகப் பாவிக்கப்படவில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ரிக் வேதகாலப் பூசாரிகள் அக்கினி, வாயு மற்றும் இந்திரன் ஆகியோரை வழிபட்டனர். சோமனுக்கு அதிகமான புகழாரம். காரணம் அவன் போதைக்கு அதிபதி. அக்கினியை வழிபாடு நடத்திய, ரிக் வேதகாலத்தின் பிந்தைய காலத்தில் தங்களை ‘பிராமணர்கள்’ என்று அழைத்துக்கொண்ட ஆரியர்கள் இந்தியாவின் உற்பத்தி மற்றும் அறிவியல் கலாச்சார மதிப்பீடுகளையும் அவற்றின் வேர்களையும் அக்கினிக்குண்டங்களுடன் பெரும் ஹோமங்களை நடத்திப் பலமிழக்கச் செய்தனர் .

அத்தகைய அக்கினிக்குண்டங்களில் பெரும் அளவிலான உணவுப் பொருட்களைக் கொட்டி புதிய ஆன்மிகக் கலாச்சாரத்தை உருவாக்கி, பெரும்பான்மையான மக்களின் உணவையும் இறுதியாக வாழ்வையும் மறுதலித்தார்கள். இவ்வாறாக அவர்கள் வறுமையை நிறுவனப்படுத்தினார்கள். இன்றும் இத்தகைய ஹோமங்களும் மாயமந்திரங்களும் வழக்கத்தில் உள்ளன. இன்றும் பார்ப்பனர்கள் இத்தகைய ஹோமங்களும் மாயமந்திரங்களும் செய்யும்போது அரைநிர்வாணமாகக் காணப்படுவார்கள். அது அவர்களின் பழமையான மனதையும், நளினமற்ற உடல் நாகரிகத்தையும் வெளிப்படுத்துகிறது.

சூத்திரர்களும் இத்தகைய போக்கைப் பின்பற்றுவதால் அவர்களது நாகரிகமும் கேள்விக்குறியாக உள்ளது. தமக்கு சமய, சமூக, பொருளாதாரச் சமநிலை மறுக்கப்பட்ட போதிலும், சூத்திரர்கள் பார்ப்பனர்களின் சடங்கு, உடை, பழக்க வழக்கங்களைப் பின்பற்றுகின்றனர். அவர்கள் சுயசிந்தனை மற்றும் உணர்வுகள் அற்ற பெரும் சமூகமாக இருக்கின்றனர். அவர்கள் பிராமணீயத்தை ரிக் வேத காலத்திலிருந்து தற்போதைய மக்களாட்சி காலம்வரை தொடர்ந்து பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். இங்கு ஒரு மாற்றங்களை ஏற்காத ஆன்மிகப் பாசிசம் நிறுவனப்படுத்தப்பட்டிருக்கிறது.

இதில் சூத்திரர்கள் இரண்டாந்தர ஆன்மிகக் குழுக்களாக வாழ்ந்துகொண்டிருக் கிறார்கள். பார்ப்பனர்கள் எப்போதுமே சூத்திரர்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர் களின் படிக்கும் உரிமையை, குறிப்பாக முற்காலத்தில் சமஸ்கிருதத்தையும் தற்காலத்தில் ஆங்கிலத்தையும் படிக்கும் உரிமையை மறுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

நேரு காலத்தில் பார்ப்பனர்கள், தனியார் ஆங்கிலப்பள்ளிகளில் பிராமண- பனியா சாதிகளைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு மட்டும் கல்வி பயில ஆதரவு வழங்கி வந்தனர். டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் (தற்கால மீட்பர்) கொண்டுவந்த சூத்திரர் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டைக் கடுமையாக எதிர்த்தனர். துரதிருஷ்ட வசமாக பல சூத்திரர்கள் தங்களை நம்பாமல் பிராமண ஆன்மிகக் குருக்களையும் அரசியல்வாதிகளையும் நம்புகிறார்கள்.

ரிக்வேத காலத்திலிருந்து தற்போதைய காலம்வரை எல்லா முக்கிய நிறுவனங்கள் பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. சூத்திரர்கள் அவற்றை எந்த நிலையிலும் எதிர்க்க முடியவில்லை. பார்ப்பனர்களின் மேட்டிமைத்தனத்தை கடவுள் தந்ததாக இவர்கள் ஏற்றுக்கொண்டிருப்பதால் அவர்களை ஆன்மிகம் மற்றும் தத்துவார்த்த நிலைகளில் எதிர்கொள்ள முடியவில்லை.

2014 - இல் பி.ஜே.பி அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு, மத்திய நிறுவனங்களின் மீதான பனியா - பார்ப்பனர்களின் கட்டுப்பாடு மிக அதிகமாகி விட்டது. அதனால் சூத்திரர்களில் உயர் மட்டத்திலிருக்கும் மராத்தியர்கள், ஜாட்டுகள், படேல்கள், குஜ்ஜார்கள் உட்பட அனைவருமே மத்திய அரசு வேலை களுக்கு இடஒதுக்கீடு வேண்டிப் போராட வேண்டியிருக்கிறது. டில்லியில் அவர்களுக்கான இடம் பறிபோய்க் கொண்டிருப்பதை உணரத் தொடங்கியிருக் கிறார்கள்.

சூத்திரர்கள் மற்றும் இதர பிற்படுத்தப் பட்டவர்கள் சமஸ்கிருதத்தில் புலமை பெற்றிருந்தாலும், தற்போது பார்ப்பன - பனியா பண்டிதர்களின் ஆங்கிலப் புலமையுடன் போட்டி போட முடியவில்லை. ஆயிரக்கணக்கான குழந்தைகள் உண்ண உணவின்றித் தவித்து வருகையில், பார்ப்பனர்களைப் போலத் தங்களைப் பாவித்துக் கொள்ளும் சூத்திரர்கள், அவர்களைப் போலவே மதிப்புயர்ந்த உணவுப் பொருள்களை அக்கினிகுண்டங்களில் எறிந்து சடங்குகளை நிறைவேற்றி வருகின்றனர்.

அக்காலத்து கிரேக்க ரோமாபுரிகளில் சொந்தமாக அடிமைகளை வைத்திருந்தது போல், ரிக் வேதகால ஆரியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நான்கு வருண முறையைப் புகுத்தினார்கள். வருண வரிசையில் கடைசியாக வைக்கப்பட்டுள்ள சூத்திரர்கள், ஹரப்பா நாகரிகத்தின் வழித் தோன்றலாக இருக்கவேண்டும். ஆரியர்கள் படிப் படியாக அனைத்து மக்களையும் வருண அமைப்பு அடிமைகளாக மாற்றிவிட்டனர்.

ஏறக்குறைய கி.மு. 1500 ஆண்டுகளில் ரிக் வேதம் எழுதப்பட்டு இருக்கலாம். அதே காலத்தில் நான்கு வருண முறையும் நிறுவப்பட்டுவிட்டது. ரிக்வேதம் நான்கு வர்ணங்களைப் பற்றி சொல்வது:

“பிரம்மனின் முகத்திலிருந்து வந்தவர்கள் பிராமணர்கள்; தோள்களிலிருந்து வந்தவர்கள் சத்திரியர்கள்; தொடையிலிருந்து வந்தவர்கள் வைசியர்கள், காலடிலிருந்து வந்தவர்கள் சூத்திரர்கள்”.

மேலே குறிப்பிட்ட இரண்டு வரிகள் இந்திய மக்களின் தலையெழுத்தை காலங் காலமாக நிர்ணயித்துவருகின்றன. இன்றும் அதன் தாக்கத்தை மக்கள் அனுபவித்து வருகிறார்கள். அம்பேத்கரின் காலத்துக்குப் பிறகும்கூட இந்துமதம் ரிக்வேத சித்தாந்தத்தையே பின்பற்றுகிறது. அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவியபோதும் பெரும்பான்மையான சூத்திரர்கள் இந்து மதத்தையே பற்றிக்கொண்டு இரண்டாந்தரக் குடிமக்களாக வாழ்ந்து வருகிறார்கள் .

RSS மற்றும் அதனுடைய அரசியல் பிரிவான பி.ஜே.பி நூற்றுக்கணக்கான பார்ப்பனர்களைத் திரட்டி உணவைப் பாழடிக்கும் சடங்குளைத் தொடர்ந்து நிறைவேற்றி வருகின்றனர். அதற்கு பனியாக்கள் ஆயிரக்கணக்கில் பணத்தை அள்ளி வீசிவருகின்றனர். தற்போது இத்தகைய வழக்கம் நாடுகடந்து அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, கனடா உட்பட உலகம் முழுவதும் பரவிவருகிறது. வெளிநாடுகளில் வசிக்கும் சூத்திரர்களால் இதை எதிர்க்கமுடியவில்லை.

மிக உயர்ந்த நிலையிலிருந்த ஹரப்பாவின் பொருளாதாரம் ரிக் வேத கலாச்சாரத்தால் பின்னுக்குத் தள்ளப்பட்டு, கால்நடைகளை மேய்க்கும் நாடோடிக்குச் சமமானதாக மாறியது. இப்போதிருக்கிற நகர வாழ்வுக்கு எதிரான, பிற்போக்குத் தனமான மனநிலையைப் போக்க, இந்திய விவசாய, பொருளாதார மறுசீரமைப்பு உண்டாக ஒரு மாற்று சிந்தனை உருப்பெறவேண்டும். அது ஒன்றிணைந்த ஹரப்பா நகர நாகரிகமாக, பெளத்த நகர நாகரிகமாக இருக்கவேண்டும் .

கெளதம புத்தர் பிறக்காமலிருந்தால், இந்தியா ஒருவேளை பல நூற்றாண்டுகள் கால்நடை வளர்ப்பு, மேய்ச்சல் சார்ந்து பின்தங்கிய நிலையிலேயே இருந்திருக்கக் கூடும். பாடலிபுத்திரம், அஸ்தினாபுரம் போன்ற நகரங்களைப் பார்த்திருக்க முடியாது. வயலில் எப்போதும் வேலையே செய்யாத பார்ப்பனர்கள் தீயில் மட்டும் உணவுப் பொருள்களை எறிந்து கொண்டிருக்கிறார்கள். சூத்திரர்கள் பார்ப்பனர்களின் ஆணைகளைத் தொடர்ந்து பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

நிலவுடமை பெற்றிருக்கிற மராத்தியர்கள், ஜாட்டுகள், படேல்கள், குஜ்ஜர்கள் போன்ற சூத்திரர்கள் (இவர்கள் ஹரப்பா நாகரிகம் வழிவந்தவர்கள்) இடஒதுக்கீடு கேட்டுப் போராடி வருகிறார்கள். ஆனால் இவர்கள் வெல்ல வாய்ப்பு குறைவுதான். காரணம், நீதித்துறை மற்றும் நிர்வாகத்துறைகளில் உயர்ந்த நிலைகளில் அவர்களது பிரதிநிதிகள் இல்லை. ஆங்கிலம் பேசும் படித்த, அரசியல் அறிந்த அறிவுசார் பெரியோர் இல்லை. இவைபோன்றவற்றால் இந்தியா இன்னும் பழங்காலத்திலேயே தடைப்பட்டுக் கிடக்கிறது.

தமிழாக்கம்: சேகர் கோவிந்தசாமி