காட்சி, திரை, அச்சு ஊடகங்களின் பார்ப்பனப் போக்கை சரியான ஆதாரங் களுடன் விளக்கியுள்ள நூல் ‘காட்சி அரசியல்’. மீடியா கண்ட்ரோல் என்ற நிலை உருவாகியுள்ள இன்றைய சூழலில், ஊடகங்களை நாம் எப்படிப் பார்க்க வேண்டும். அதற்கேற்ப நாம் எந்த வகையில் நம்மைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்பவற்றை விரிவாக விளக்கி யுள்ளது இந்நூல். நூலாசிரியர் அ.ஸ்டீபன் ஊடக எதிர்கால வியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். ஊடகக் கல்வித்துறையில் 25 ஆண்டு கால அனுபவம் பெற்றவர். அவரது படைப்பை திண்டுக்கல் வெற்றிமொழி வெளியீட்டகம் சிறப்பாக வெளிட்டுள்ளது.
புலம்பெயந்தவர்களைப் பற்றிய பார்ப்பனர்களின் அணுகுமுறை
காஷ்மீரில் இஸ்லாமியர்கள் தங்கள் மாநில உரிமையைக் காக்கவும் தங்களுக்கான அரசியல் சுதந்திரத்திற்காகவும் அங்கு சிறுபான்மையாக உள்ள பார்ப்பனர்களை வெளியேற்றி வருகிறார்கள். பார்ப்பனர்கள் தங்களாகவே வெளியேறியும் வருகிறார்கள். அவர்களை இந்தப் பார்ப்பனக் காப்பாளர்கள் அவர்களை அனுதாபத்தின் உச்சிக்கே அழைத்து சென்று விடுவார்கள். இதேபோல நேபாளத்திலும், திபெத்திலிருந்தும் வரும் பார்ப்பனர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து அழைத்து வரும் மனப் பான்மையும் நடந்துதான் வருகிறது. இது போல நிகழ்வுகள் மியான்மரிலிருந்து வரும் இஸ்லாமியர் களையும் (ரோஹிங்கியா) இலங்கையிலிருந்து வரும் ஈழத் தமிழர்களையும் தங்களது உடைமைகளை இழந்து வருபவர்களையும் மனிதாபிமானப் பார்வையில் பார்ப்பதில்லை.
மாறாக, அவர்களை நுழைவாயில் எதிரிகளாகப் பார்க்கிறார்கள். ஆம் நூலாசிரியர் குறிப்பிடுவது போல பெரும்பாலான செய்தி ஊடகங்கள் நாட்டின் எல்லை வழியாக நுழையும் புலம் பெயர்ந்த மக்களைச் சட்டத்திற்குப் புறம்பாக வந்தவர்கள் முறையான அனுமதியின்றி நுழைந்தவர்கள் என்ற சொற்றொடர்களால் அதிகம் குறிப்பிடப்படுகின்றன. சட்டப்படியும் முறையான அனுமதியுடனும் நுழைவதற்கான அரசியல் சூழல் தத்தம் சொந்த நாட்டில் இல்லாத காரணத் தினாலேயே இவ்வாறு அவர்கள் புலம் பெயர நேரிடுகிறது என்பதும் அவர்கள் சுற்றுலா வர வில்லை என்பதும் ஊடகத் துறையினருக்கு தெரியாமல் போனது துயரம் என்பதை நூல் ஆசிரியர் மிக சிறப்பாக சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் தனது சொந்த நாட்டிலேயே அந்த நாட்டின் மக்களையே ஜாதியப் பாகுபாடு காரணமாக பிரித்து ஆள்பவர்கள் உரிமைகளை மறுப்பவர்கள் மத்தியில் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
ஈழத்தமிழரைக் கொச்சைப்படுத்தும் படங்கள்
இறையாண்மையைக் குலைப்பவர்கள் என்ற கட்டுரையில் திரைப்படத் துறையில் முழுநீளக் கதாப்பாத்திரமாகக் காட்டுவதில் நடிகர் அஜீத் குமார் கதாநாயகனாக நடித்த பில்லா 2 (2012) கதாப் பாத்திரத்தை ஒரு ஸ்மக்ளராவும் கொலை காரராகவும் காட்சிப்படுத்தியிருப்பதைப் பார்க்கும் பொழுது புலம் பெயர்ந்த மக்களை அவர்கள் வாழ்வதற்காக, எதையும் அஞ்சாமல் செய்வார்கள், குற்றச் செயல்களில் ஈடுபடுவார்கள்என்ற கருத்தை உருவாக்கும் என்பதை ஆசிரியர் விளக்குகிறார்.
நடிகர் கமலஹாசன் (தெனாலி), இயக்குநர் பாலா (நந்தா), எஸ்.செல்வா (ராமேஸ்வரம்) ராஜிவ் மேனன் (கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்) இப்படங்களின் காட்சிகளில் கதைக்களத்தில் உண்மைச் சம்பவங்களை விட்டுவிட்டு, கருத்தைத் திசைதிருப்பும் வகையில் களத்தில் வேறு கதையை வைத்துத் தங்களது வியாபார யுக்தியைப் பயன் படுத்திப் பணம் சம்பாதிக்கிறார்கள்.
உண்ணும்,உணவுக்குத் தொட்டுக்கொள்ள ஊறுகாய் போல பயன்படுத்தப் பார்க்கிறார்கள். இந்த வரிசையில் ஜாம்பவான் எனப்படும் இயக்குனர் மணிரத்தினத்தின் திரைப்படங்கள் ரோஜா (1992), பம்பாய் (1995), கன்னத்தில் முத்தமிட்டால் (2002) போன்ற இவரின் படங்கள் அனைத்தும் இந்திய தேசியத்தைக் கட்டமைக்கும். ஒவ்வொரு திரைப் படங்களிலும் ஆணாதிக்கத்தை நிலைநிறுத்தும் வகையிலும் அமையும். இவற்றைக் காட்டாறு இதழில் விமர்சனம் செய்வது குறிப்பிடத்தக்கது.
மனுதர்மச் சிந்தனையாளர் பாலா
‘புன்னகைத்த மனுதர்மம்’ என்ற கட்டுரையில், ஜாதி மறுப்பு, காதல் திருமணங்களை இன்றைய இளைஞர்களிடம் ஒரு அச்சுறுத்துதல் மனப் பான்மையை உருவாக்கும் விதமாகப் படத்தை முடிக்கும் பாலாவை இந்துத்துவ மனுதர்ம சிந்தனை யாளர் என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கிறார். இதே காலக்கட்டத்தில் இயக்குநர் சங்கரின் தயாரிப்பில் வெளிவந்த படம் ‘காதல்’. நடிகர்கள் பரத்,சந்தியா நடித்த படத்தை பார்த்தோமேயானால் காதல் திருமணமே செய்ய வேண்டாம் என்ற நிலைக்கு இளைய சமுதாயத்தினரை நினைக்கும் வண்ணம் காட்சிகள் (கொடூரமாக) அமைந் திருக்கும். ஆனால் படத்தின் இறுதியில் கதாநாயகனை மனநோயாளியாக காட்டியிருக்கும் காட்சிகளைப் பார்ப்பவர்கள் மனதில் இந்தக் காதலே வேண்டாம் என்ற அளவிற்கு அமைந்திருக்கும். காதல் திருமணங்களால் நன்மை எதுவும் எற்படாது. என்பது போல காட்சிகள் ஏற்படுத்துகிறது.
ஆனால் சமூகத்தில் நிகழும் திருமணங்கள், சொந்தத்தில் சொந்த ஜாதியில் நடக்கும் திருமணங் களால் ஏற்படும் பிரச்சனைகள் ஒன்றா, இரண்டா தங்களுடைய அடுத்த தலைமுறையினரை ஊனங்களாகவும் குணப்படுத்த முடியாத நோயாளி களாக்கவும்தானே இந்தத் திருமணங்கள் பயன் படுகிறது. சினிமாத் துறை பார்ப்பன மனுதர்மப் பண்பாட்டைப் பரப்புகிற வகையில் இயங்கிக் கொண்டி ருக்கிறது. பண்பாட்டு மாற்றத்தை விரும்பாத பார்ப்பனத் திரைத்துறையாக இருக்கிறது.
திரைப்படத்துறைக்கு தேசிய விருது கொடுப்பது குறித்து சரியான பார்வை காட்டுகிறது இந்நூல். அன்று முதல் இன்று(ஜோக்கர்) வரை தேசியவிருது என்பது மனநோயாளிகளாக நடிக்கும் நடிகர்களுக்கும், மனநோயாளி டைரக்டர்களுக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்து மதக் கலாச்சாரத்தைத் திரைத்துறையில் பரப்பி வரு பவர்கள் கமல், பாலா, சங்கர் இன்னும் பலர் இந்த வரிசையில் இருக்கிறார்கள்.
பாலாவின் ‘நான் கடவுள்’ படம் மனிதக் கறியின் மகத்துவம் ஒப்பீடு மிகவும் சிறப்பு, படத்தின் துணைத்தலைப்பு பெயர் அஹம்ப்ரம்மாஸ்மி என்று சமஸ்கிருதத்தில் வைத்துள்ளார் கதை, வசனம் எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தான் சொல்லவா வேண்டும். இதில் பஞ்ச் டயலாக் (வாழக்கூடாதவர்களுக்கு நான் தரும் தண்டணை மரணம், வாழ இயலாதவர்களுக்கு நான் தரும் தண்டணை மரணம்) என்று வரும் வசனம்.
இதில் நமது கேள்விஎன்னவென்றால், அண்டம் முதல் பிண்டம் வரை அனைத்துக்கும் அவரே காரணம் என்றால், வாழக்கூடாத கெட்டவர் களை ஏன் படைக்க வேண்டும்? வாழ இயலாத முடவர்களை ஏன் படைக்க வேண்டும்? இதுபோன்ற கருத்துக்களைத் தொடந்து பரப்பும் விதமாகப் படம் எடுப்பதால் தான் இவர்களுக்கு மனுதர்ம விருது கிடைக்கிறது. இவர்களுக்கு மருத்துவ அறிவியல், அடிப்படை அறிவு கூடவா இல்லை. படத்தில் நடித்த ஊனமற்ற குழந்தைகளின் ஊனம் என்பது, நெருங்கிய ரத்த உறவு முறைத் திருமணங்களால் உண்டாகும் மரபணுநோய்களாள் உருவானவை தான்.. இவற்றைக் குணப்படுத்த முடியாது. என்பதை ஒரு விவாதக் கருத்தாக எந்தத் திரைப்படத்திலும் வைப்பதில்லை. ஏனென்றால், சென்சார் போர்டு மனு தர்மத்தின் கையில் உள்ளது.
இந்திய கிரிக்கெட்டும், அமெரிக்கச் செருப்பும்
இந்திய, பாகிஸ்தான் இரு தேசங்களிலும் போலி தேசிய ஒற்றுமையை பரப்பி அப்பாவி இளைஞர்களின் மனதில் வெறியை கிளப்பி விடுவதில்தான் எத்தனை லாபம் பாருங்கள்.
1.தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களின் வளர்ச்சிக்கான படிப்பை கெடுப்பதற்கு அரை யாண்டு, முழு ஆண்டு தேர்வின் போது தவறாமல் அய்.பி.எல். மற்றும் இண்டர்நேஷனல் கிரிக்கெட்டு களைத் தொடங்கி விடுவார்கள். இவற்றால் மாணவர்களின் தேர்ச்சி குறையும்.
2.இந்த விளையாட்டின் மூலமாக ரசிகர்களை உசுப்பேற்றி விட்டு அரசியல் நகர்வுகளில் செய்யும் தவறுகளை மறைக்க, மனதை மடை மாற்ற இவை உதவுகின்றன.
3.இந்த விளையாட்டு தொலைக்காட்சி ஊடகங்களுக்கும் அன்னிய - உள்நாட்டுப் பெரு முதலாளிகளுக்கும் வருவாய் ஈட்டித் தரும் பொக்கிஷமாகும். இதை என்றும் அணையா நெருப்பாக பாதுகாக்க வேண்டும் என்பது நோக்கம்
இந்த விளையாட்டை வைத்து இனவாத அரசியலை மிகச் சாதூர்யமாக நடத்தலாம். இத்துறையில் தலைமை முதல் விளையாட்டு வீரர்கள் வரை பார்ப்பனர்களின் ஆதிக்கம் தான்..
இந்த விளையாட்டுத் துறையில் வீரர்களாக சாதாரண இளைஞர்கள் நுழைந்து விட முடியாது என்பதைத் திரைப்படமாகக் காட்டினார் இயக்குனர் சுசீந்திரன். 2014-ல் வெளிவந்த ஜீவா தமிழ்த் திரைப்படத்தில் காட்சிகளில், அகில இந்தியக் கிரிக்கெட் வீரர் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்று நுழைவுத்தேர்வுக்கு வரும் இளைஞர்களை உள்ளே நுழையும் முன்பு, முதுகைத் தடவிப்பார்த்து, பார்ப்பனப் பூணூல்களை அடையாளம் பார்த்து, அவர்களை மட்டும் அனுமதிக்கும் காட்சி முக்கிய மானது. இதுபோன்ற பார்ப்பன மோசடிகளைப் புரிந்துகொள்ள இந்திய கிரிக்கெட்டும், அமெரிக்கச் செருப்பும் என்ற கட்டுரையை படிக்க வேண்டியது அவசியம்.
பால் பாக்கெட்டுகள் தந்த சுயமரியாதை
‘தலையில் துண்டைப் போட்ட பால்காரர்’ என்ற கட்டுரையில் மட்டும் எங்களுக்கு கருத்து வேறுபாடு உண்டு. இந்தப் பாக்கெட் பால் வந்த பிறகு தான் தாழ்த்தப்பட்ட மக்களின் சுயமரியாதை மிஞ்சியது. இன்னமும் சில, கிராமப்புறங்களில் பால்காரர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் பகுதிகளில் நுழைவது இல்லை. கிராமப் பால் கூட்டுறவு அங்காடிகளில் உள்ளே நுழைந்து பால் வாங்க அனுமதிப்பதில்லை. இப்படியிருக்கும் நிலையில் பால்காரர் தலையில் துண்டு விழுந்தாலும் பரவாயில்லை. அவரும் நாமும் ஒன்றாகச் சென்று கடையில் போய் பால் வாங்குவோம். அதே வேளையில், பன்னாட்டு முதலாளிகளின் பெப்சி, கோகோகோலா போன்ற நிறுவனங்கள் நமது நீர்வளத்தைச் சுரண்டுவதைக் கண்டிப்போம்.
ஊடகப்பெயர்ச்சியும் சமூகநீதியும்
‘காற்றடைந்த பலூன்’ என்ற கட்டுரையில் நூலாசிரியர் அன்னா ஹசாரே- வைப் பற்றித் தெளிவாக எடுத்துரைக்கிறார். அன்னா ஹசாரே உண்ணாவிரதம் பி.ஜே.பி-க்கு 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு மிகவும் பயன்பட்டது. இவரின் பிரச்சாரத்திற்கு ஊடகங்கள் அதிக நேரத்தையும் அதிக பக்கங் களையும் செலவிட்டன. மொத்தத்தில் எப்படியும் அடுத்த அமாவாசைக்குள் ஊழல் ஒழிக்கப்பட்டு விடும் என்ற அளவில் பரப்பினார்கள். இப்போது அந்த ஊழல் ஒழிப்பாளர் என்ன ஆனார் எனத் தெரியவில்லை. அதற்குள் ஊடகங்களுக்கு வேறு வேலைகள் வந்துவிட்டன.
ஊடகத்துறையில் பார்ப்பன ஆதிக்கம்
இந்தியாவின் ஊடகத்துறையில் முன்னணியில் உள்ள 315 மூத்தபத்திரிக்கையாளர் களிடம் 2006ல் ஒரு சர்வே நடத்தப்பட்டது. நமக்கு எந்தச் செய்தி வர வேண்டும், இன்று தொலைக் காட்சிகளில் எந்தச் செய்தி விவாதிக்கப்பட வேண்டும் என்பதை நிர்ணயிப்பவர்கள் இந்த மூத்த பத்திரிக்கையாளர்கள். ஆங்கில, இந்தி மொழி களில் வெளியாகும் அச்சு, காட்சி, இணையதளம் என அனைத்து துறைசார்ந்தும் இந்த ஆய்வு மேற்க் கொள்ளப்பட்டது.
Centre for the Study of Developing Societies (CSDS) என்ற புதுடில்லியில் உள்ள நிறுவனம் பேராசிரியர் யோகேந்திர யாதவ் தலைமையில் இந்த ஆய்வை நடத்தியது. பேராசிரியர் யோகேந்திரா அவர்கள் University Grants Commission and National Advisory Council (NAC) on Right to Education Act (RTE) போன்றவற்றில் பணியாற்றியவர்.
அந்த ஆய்வில், பார்ப்பனஉயர்ஜாதியினர் 80 %, பிற்படுத்தப்பட்டோர் 4ரூ, இஸ்லாமியர் 3%, கிறிஸ்தவர்கள் 2.3%, இடம்பிடித்திருந்தனர். தாழ்த்தப்பட்டோர் ஒருவர்கூட இல்லை. (ஆதாரம் The Hindu 05.06.2006)
எனவே, இப்படிப்பட்ட ஊடகத்துறையில், சமூக அக்கறையுள்ள தோழர்கள் தீவிரமாகப் பங்கேற்க வேண்டும் என்ற கட்டாயச் சூழலை இந்நூல் நமக்குப் புரிய வைக்கிறது.
புத்தகத்தின் விலை: ரூ.60. நூல் கிடைக்குமிடம்: வெற்றிமொழி வெளியீட்டகம், எண் 21/2 ஸ்பென்சர் காம்பவுண்ட், திண்டுக்கல் - 624 003, செல்: 78100 21216, மின்அஞ்சல்: