மாணவப்பருவம் என்பது எதையும் எளிதாக ஏற்றுக்கொள்ளும் பருவம். இப்பருவத்தில் பாலின வேறுபாட்டைத்தான் இச்சமூகம் மாணவர்கள் மனதில் பதிய வைக்கிறது. பாலினச் சமத்துவத்தைக் கற்பிக்க வேண்டிய பள்ளிகள் பாலின வேறுபாட்டை கற்பிக்கின்றன. பெரும் பாலான பள்ளி கல்லூரிகளில் மாணவ னுக்கும் மாணவிக்கும் தனித்தனி வகுப்பறைகள். ஒரே வகுப்பறையாக இருந்தாலும் தனித்தனி இருக்கைகள்.

பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் மாணவர்களும் மாணவிகளும் பேசிக்கொள்ளக் கூடாது. இதனைப் பின்பற்றாத மாணவ மாணவிகள் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப் படுகிறார்கள். ஒழுக்கமற்றவர்களாகச் சித்தரித்துக் கல்வியைத் தொடர முடியாமல் நிர்வாகத்தால் வெளியேற்றப் படுகிறார்கள். பள்ளி கல்லூரிகளில் ஆண்-பெண் சமத்துவத்தைப் போதிக்கும் முதல்படியாக கே.ஜி முதல் பல்கலைக்கழக வகுப்புகள் வரை மாணவர்கள் அகர வரிசைப்படி (Alphabetical Order) அமர வைக்கப்படவேண்டும். வலுவான ஆரோக்கியமான ஆண்-பெண் நட்பு இதன் மூலம் தொடங்கும்.

இரு பாலர் பயிலும் பள்ளியில், படித்து வரும் குழந்தைகளைவிட, ஒரு பால் பள்ளியில் படித்து விட்டு வரும் குழந்தைகளுக்கு எதிர்பாலினத்தை அணுகுவதில் சிக்கல்கள் உள்ளன. குழந்தைகள் எதிர்பாலினத்தோடு பழகுவதை ஊக்குவிக்கும் போது, இச்சிக்கலைத் தவிர்க்கலாம்.

குHந்தைகளிடம் செக்ஸ் பற்றி பேசலாமா என்பது மக்களின் கேள்வியாக இருக்கிறது. ஒவ்வொரு முறையும் பாலியல் குற்றங்கள் நிகழும் போதெல்லாம் பாலியல் கல்வி அவசியம் என்ற குரல் ஓங்கி ஒலிப்பதைக் கேட்டிருக்கிறோம். பாலியல் கல்வி என்பது வெறும் பாலுறவு சார்ந்த கல்வி மட்டும் அல்ல. பாலினம் குறித்தான புரிதலை உருவாக்கும் கல்வி. அந்தந்த வயதுக்குத் தகுந்தாற் போல பால் உணர்வு சார்ந்த புரிதலை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது. பாலியல் கல்வி மூலம் பாலினச் சமத்துவம் மற்றும் புரிந்துணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். பாலியல் கல்வி என்ற சொல்லாடலே தவறான ஒன்றாகும். .பாலினக்கல்வி என்பதே சரி. பாலினம் சார்ந்த புரிதலை ஏற்படுத்த வேண்டும் என்றால் அதனை நாம் பாலினக் கல்வி என்று அழைப்பதே சரியாகப்படுகிறது..

பெற்றோர்கள், கல்வியாளர்கள் ஆசிரியர்கள் என ஒரு குழு அமைத்து பாலினக்கல்விக்கான ஒரு பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும். வயதிற் கேற்றவாறு பாலினக்கல்விப் பாடத்தைப் பாடத் திட்டத்தில் இணைக்க வேண்டும்.. முதலில் ஆசிரியர்களையும் மாணவர்களையும் தயார்படுத்த வேண்டும். .பாலினக் கல்வி மூலம் எதிர்காலத்தில் பாலியல் வன்முறையைத் தவிர்க்கலாம். பாலினக் கல்வி வழங்கப்படுகிற பல நாடுகளில் பாலியல் குற்றங்கள் குறைந்தபாடில்லை என்பதும் பலரின் கருத்தாக அறிய முடிகிறது.

பாலினம் பற்றிய எந்தப் புரிதலையும் ஏற்படுத்தாமல் ஆண்-பெண் மாணவர்கள் பேசிக் கொள்வதையும் பழகுவதையும் கண்டித்து மாணவர் களைத் தண்டிப்பதும், நீக்கம் செய்வதும் காட்டுமிராண்டித்தனமானது. கண்டிக்கத்தக்கது. இத்தகைய பள்ளி- கல்லூரிகளை இழுத்து மூடுவ தோடு அங்கீகாரத்தையும் ரத்து செய்ய வேண்டும்.

JNU, AIMS உயர்கல்வி நிறுவனங்களில் உள்ளது போல, பள்ளி, கல்லூரி விடுதிகளில் ஆண்-பெண் இருபாலாருக்கும் தனித்தனி விடுதிகளை புறக்கணித்துவிட்டு, பொதுவிடுதி முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை உடனடியாக ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. முறையான பாலினக்கல்வியை மாணவர்களுக்கு வழங்கிய பின்னரே இது போன்ற பொது விடுதி முறையைக் கொண்டுவரலாம்.

சாதியக் கட்டமைப்புகள் வலிமையாக உள்ள தமிழ் சமூகத்தில் காது குத்து விழாக்கள் சாதி, சமய முறைகளுக்கு ஏற்றவாறு வேறுபடுகிறது. பெரும் பாலும் தங்களுக்குச் சொந்தமான குலதெய்வக் கோயில்களில் வைத்து ஆண், பெண் இருவருக்குமே காதுகுத்து விழாக்கள் நடத்தப்படுகிறது. குழந்தை களை இறைவனுக்குக் காணிக்கையாக அளிப்பதே காதணி விழாவாகப் பார்க்கப்படுகிறது. பெண் களுக்குக் காதணி விழாக்கள் நடைபெறும் சமயத்தில் பெண்கள் ஒரு அலங்கார பொம்மையாகப் பார்க்கப்படுகிறாள். எனவே காது குத்தும் நிகழ்ச்சிக்கு அறிவியல் பூர்வமாக சில காரணங்கள் கூறப்பட்டாலும் அது நிருபிக்கப் படவில்லை. எனவே காது குத்து விழாக்கள் தடை செய்யப்பட வேண்டும்.

மேலும் இயற்கையின் விதிப்படி பெண் குறிப்பிட்ட வயதில் உடல் ரீதியானமாற்றங்களை அடைகிறாள். இதனைப் பெண் பூப்பெய்தி விட்டதாக அறிவித்து பூப்புனித நீராட்டு விழாக்கள் நடத்தப்படுகிறது. பூப்புனித நீராட்டு விழா என்பது வயதிற்கு வந்த பெண்ணை புனிதமாக்கும் நீராட்டு விழா என பொருள்படுகிறது. பூப்பெய்ததாகக் கருதப்படும் அந்த நேரத்தை வைத்து ஜாதகம், மாங்கல்ய பாக்கியம், சந்தான விருத்தி, தோஷவிருத்தி போன்றவை கணிக்கப்படுவது இந்துக்களின் ஐதீகம். இது பெண்களை அடிமைப்படுத்தும் இழிவுபடுத்தும் இந்துத் துவத்தை ஊக்குவிப்பதாக உள்ளது. எனவே பூப்புனித நீராட்டு விழாக்களைத் தடை செய்ய வேண்டும்.

ஒரு மனிதனின் இயற்கையான நிறத்தை மாற்றும் கிரீம்கள் உலகில் இல்லை. ஆனால் மக்கள் குறிப்பாகப் பெண்கள் வெளிநாட்டு நிறுவனங்க ளின் சிகப்பழகு விளம்பரத் தந்திரத்திற்கு அடிமையாகி விட்டனர். தங்கள் விளம்பரப் பொருள்களைத் திரும்பத் திரும்ப மக்கள் மனதில் திணித்து உளவியல் ரீதியாக அவர்களை அழகுக்கு அடிமையாக மாற்றி விட்டனர். சிகப்பாக இருப்பது தான் அழகு என்னும் தவறான கருத்தை விதைத்து விட்டனர். தன் நிறம் குறித்த தாழ்வு மனப் பான்மையை ஏற்படுத்துகின்றனர். சிவப்புத் தோலே முக்கியம், அழகு என்ற எண்ணத்தை உருவாக்கும் சிகப்பழகு வணிக கிரீம்களைத் தடை செய்வது மிக அவசர தேவை. இதுவும் பெண்ணை அலங்கார பொம்மைகளாகக் காட்ட முயற்சிக்கும். வணிகப் பொருளாக காட்ட முயற்சிக்கும். பெண் அடிமைத் தனத்தின் ஒரு வெளிப்பாடு.

பெண்கள் நகைகள் போட்டுக்கொள்வதை தான் நாகரீகம் என கருதிவருகிறார்கள். நகைகள் மீதான ஆசையும், அலங்காரத்தின் மீதான அக்கறையும் பெண்களைப் போகப் பொருளாக்கு கின்றன என்று வேதனையடைந்தார் தந்தை பெரியார். பெண்கள் தங்களை ஆண்களுக்குச் சரிநிகர் சமானமாக நினைத்து வாழ்வது தான் நாகரீகம் என்பதை உணரும் மனமாற்றம் ஏற்படவேண்டும். சுயமரியாதையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவையல்லாமல், அலங்காரப் பண்பாட்டைத் தூண்டும் நகை வணிகம், பட்டுவணிகம், மலர் வணிகங்களைத் தடை செய்வதால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திட இயலாது.

திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கை வாழ விரும்பாமல் தனியாக வாழத்துணிந்த பெண்கள் நன்றாகக் கல்வி பயின்று உயர் பதவிகளை அடைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அல்லது தமது சுய தேவைகளுக்கு யாரையும் எதிர்பார்க்காமல், ஏதாவது ஒரு தொழில் செய்து அதன் மூலம் வாழ்க்கைக்குத் தேவையான வருமானத்தைப் பெருக்கிக்கொள்ள வேண்டும். தங்களது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும். அரசும் தனித்து வாழும் பெண்களுக்கு மாவட்டந்தோறும் தங்கும் விடுதிகளை உருவாக்கித்தர வேண்டும்.

திருமணத்திற்கு முன்பே கருத்தடை செய்து கொண்டவர்களுக்கும், பிள்ளை பெற்றுக் கொள்ளாதவர்களும் கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை தர வேண்டும்.

ஒரு நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பிற்குள் வராமல் பெண்ணின் உழைப்பு குடும்பத்துக்குள் புதைந்து போய் கிடக்கிறது. இதனால்தான் பலபொதுவுடமை இயக்கத் தலைவர்கள் குடும்பத்திற்குள் உழைப்புப்பகிர்வு தான் தீர்வு என்பதை வலியுறுத்தியிருக்கிறார்கள். வீட்டு வேலை பெண்வேலை என்ற சிந்தனை மாறாமல் இதற்குத் தீர்வு காண முடியாது. இதனால் தான் தந்தை பெரியார், வீட்டுக்கொரு அடுப்படி என்ற முறையை ஒழிக்கவேண்டும் என்றார். இல்லங்களில் சம உழைப்பை அளிக்காத ஆண்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

இந்தியாவில் திருமணம் என்பது சட்டப்படியான செக்ஸ்க்காக போடப்பட்ட ஒரு ஒப்பந்தமாகவே உள்ளது. (Contract for Legalaised Sex). இங்கு திருமணமான ஒருபெண் அவளின் விருப்பம் இல்லாமல் கணவனால் துன்புறுத்தப்படுவதை ஒரு குற்றமாகப் பார்க்கப்படுவதில்லை. அதற்கான தகுந்த சட்டப்பிரிவுகள் இல்லை .

இந்தியாவில் காணப்படும் படிப்பறிவின்மை, வறுமை, அளவுக்கதிகமான இந்துத்துவ அடிப்படை யிலான மூட நம்பிக்கைகள் தான் இந்தியாவில் Marital Rape க்கு எதிரான சட்டங்களை இயற்ற இயலாத சூழலை ஏற்படுத்தியுள்ளன. பெண் ஆணின் சுக துக்கங்களுக்காவே படைக்கப் பட்டவள் என்ற முட்டாள்தனமான சிந்தனையே இதற்கு அடிப் படை.

திருமணம் முடிந்தவுடன் பெண் தன் பெற்றோரை, குடும்பத்தை, இடத்தை விட்டுக் கணவன் வீட்டுக்குச் சென்று வாழ வேண்டும் என்ற எழுதப்படாத சட்டம் இந்தியாவில் உள்ளது. தனிக்குடித்தனம் செல்வதால் இன்று குழந்தைகள் பராமரிப்பில் பிரச்சனைகள் எழுவதாகவும், கலாச்சாரச் சீரழிவுகள் நடைபெறக் காரணமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. வயதான தாய் தந்தையரைக் கவனிக்காமல் விட்டு வருவது தான் பெரிய குற்றமாகக் கருதப்படுகிறது. வயதான பெற்றோரைப் பாதுகாக்காமல், பராமரிக்காமல் தனியாக விட்டு வருவதும், முதியோர் இல்லங்களில் பெற்றோரைச் சேர்ப்பதும் மனவேதனை தரக் கூடியவை தான். அதில் மாற்றுக்கருத்து இல்லை.

பெற்றோரைப் பாதுகாப்பது பிள்ளைகளின் கடமையே ஆகும். அதே நேரத்தில் இங்கு பெண் திருமணத்திற்குப் பின்னர் தமது பெற்றோரைப் பிரிந்து வரக்கூடிய நிலை தான் இங்கு பிரச்சனை. அதுவும் பெண்ணடிமைத்தனத்தின் ஒரு வெளிப் பாடு. எனவே தான் திருமண வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் சமம் என்பதை வலியுறுத்துவதற்காக திருமணத்திற்கு முன்பே தனிக்குடித்தனம் உறுதி செய்யப்பட வேண்டும். அதே நேரத்தில் பெற்றோருக்கு ஆற்ற வேண்டிய கடமைகளும் உறுதி செய்யப்பட வேண்டும்.

திருமணத்தின் போது சீர் அல்லது செய்முறை என்ற வகையில் பெண் வீட்டாரிடம் இருந்து பணம், நகை கட்டாயப்படுத்தி வரதட்சணையாகவோ அல்லது மனவிருப்பத்தின் அடிப்படை யிலோ பெற்றுக் கொள்கின்றனர். பல நேரங்களில் பெண்களே பெண்களை வரதட்சணைக் கொடுமைக்கு ஆளாக்குகிறார்கள். சில நேரங்களில் மாப்பிள்ளை வீட்டாரே வரதட்சணையைத் தவிர்த்தாலும் மணமகள் பெற்றோரை வற்புறுத்தி நகை பணம் சொத்து என பலவற்றை பிடுங்கிக்கொள்கிறாள். இதனால் பெற்றோர்கள் வயதான காலத்தில் பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்படுகிறார்கள். எனவே திருமணகாலத்தில் பிள்ளைகள் பெற்றோரிடம் நகை, பணம் கேட்பதைக் குற்றமாகக் கருத வேண்டும்.

தொழில் நுட்பம் வளர்ந்து விட்ட இந்தக் காலத்தில்கூட பெண்களுக்குச் சொத்தில் எவ்வளவு உரிமை இருக்கிறது? என்னென்ன வழிகளில் இருக்கிறது? என்ற புரிதல், விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை. சொத்தில் பெண்களுக்கும் சம பங்குண்டு என, 1956 இல் இயற்றப்பட்ட சட்டம் பற்றி இன்னும் பெண்கள் தெளிவாக அறிந்திருக்கவில்லை. அப்படியே சட்டம் தெரிந்திருந்தாலும் சொத்தைப் பெறுவதற்கான சட்டப் போராட்டங்களை முன்னெடுப்பதற்கான துணிச்சல் இல்லை. இன்னும் பல பெண்கள் தாமாகவே முன் வந்து சொத்தில் தமக்குள்ள உரிமையைப் பெண் என்ற அடிப்படையில் விட்டுத்தருகின்றனர். ஆதலால் போதிய வருமானம் இன்றி அடிமை வாழ்வுக்கு தள்ளப்படுகின்றனர். எனவே, பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு பெண்களுக்குச் சொத்துரிமை பற்றிய சட்ட விழிப்புணர்வு அரசு, அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் ஏற்படுத்த வேண்டும்.

பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கப் பட்டுள்ளதா என்பதைக் கண்காணிக்க ஆணையம் அமைக்கப்படலாம். சொத்தில் பங்கு வழங்காத ஆண்களின் சொத்தை பறிமுதல் செய்யலாம். ஆணையம் அமைப்பது என்பதை விட பெண்களை விழிப்புணர்வு பெற்றவர்களாக மாற்றுவதே பயனளிக்கும்.

இந்தியாவில் அனைத்துக் கல்வித் தளங்களிலும் பெண் குழந்தைகள், சில சமயங்களில் ஆண் குழந்தைகளும் ஆண், பெண் மாணவர்கள், ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப் படுகிறார்கள். மழலையர் கல்வி முதல் உயர் கல்வி வகுப்புகள் வரை இத்தகைய பாலியல் கொடுமைகள் காணப்படுகின்றன. இதனைத் தடுப்பதற்காக அரசு அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் ஒரு விசாரணைக்கமிட்டி - Anti - Sexual Harassement Cell அமைக்க ஆணை பிறப்பித்தது. அக்கமிட்டியில் நிறுவனங்களின் மேலதிகாரிகளும், கட்டாயமாக ஒரு பெண் மற்றும் தன்னார்வ அமைப்பைச் சார்ந்த ஒருவரும் இடம் பெற வேண்டும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டது.

ஆனால், நாமறிந்த வகையில் பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் இந்த விசாரணைக் கமிட்டி என்ற ஒன்றே உருவாக்கப்படவில்லை. எனவே விசாரணைக் கமிட்டி அமைப்பதுடன் கமிட்டியில் நிர்வாகம் தவிர மனநல ஆலோசகர், காவல் துறையைச் சார்ந்த ஒருவர், மகளிர் அமைப்புகளின் பிரதிநிதி ஒருவரையும் இணைத்து இந்த விசாரணைக் கமிட்டி ஒழுங்காகப் பணியாற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இதனைச் செய்யத்தவறும் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.

நம் நாட்டில் பெண்ணுக்குத் திருமண வயது வந்தவுடன் பெற்றோர்கள், பெண்ணை யாராவது ஒருவர் கையில் பிடித்து கொடுத்துத் தமது கடமையை நிறைவேற்ற விரும்புகிறார்கள். எனவே பெரும்பாலும் பெண்ணின் சம்மதமின்றி பெண்ணைக் கட்டாயப்படுத்தித் திருமணம் செய்து வைக்க முற்படுகின்றனர். பெண்களும் பெற்றோரை எதிர்த்துப் பேச முடியாமல் விருப்பமில்லாமல் சம்மதிக்கின்றனர். விளைவு? திருமண வாழ்க்கையில் சிக்கல்கள். மணமுறிவு போன்றவற்றைச் சந்திக்க வேண்டியதாகிறது.

இதுவும் பெண் அடிமைத்தனத்தின் வெளிப்பாடேயாகும். தமக்கு விருப்பமானவர் களுடன் வாழ்வது, மணமுடிப்பது பெண்ணின் அடிப்படை உரிமை. இதனைக் கண்காணிக்கத் தனிஆணையம் என்பதெல்லாம் எதிர் பார்த்த அளவில் வெற்றிதராது. பெண்கள் முன் வந்து தனக்கான உரிமையை நிலைநாட்டுவதற் கான வழியைத் துணிச்சலாக எதிர்கொள்ள வேண்டும். மகளிர் ஆணையம் போன்ற எத்தனையோ ஆணையங்கள் பெயரளவில் அமைக்கப் பட்டுள்ளதே தவிர ஆணையங்களால் ஆணைகளை நிறைவேற்ற இயலவில்லை.

- தோழர் குடந்தை தமிழினி, மாநிலச் செயலாளர், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

Pin It