MAA குறும்படம். இந்தச் சமூகத்தில் இன்றைய சூழ்நிலைக்கு எது தேவை என்பதை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது. காதல் என்பது ஆண், பெண் இருவருக்கும் பொதுவான உணர்வு. ஆண்களால் கட்டமைக்கப்படும் சமூகத்தில் காதல் என்பது வெறுமனே உடலுறவு கொள்வதற்காக என்பது போல கற்பிக்கப்படுகிறது. காதலாலும், காமத் தாலும் உண்டாகும் நன்மைகள் ஆண்களின் வெற்றி யாகவும் அதனால் உண்டாகும் தீமைகள் பெண் களின் குற்றமாகவும் பார்க்கப்படுகிறது.

இக்குறும்படத்தில் படித்த பெற்றோர்கள் அப்பா, கல்லூரிப் பேராசிரியர். அம்மா நூலகப் பொறுப்பாளர். பத்தாம் வகுப்புப் படிக்கும் பெண், கர்ப்பமாக இருப்பதை உணர்ந்து தன் அம்மாவிடம் கூறும்போது, அம்மா நீ தவறு செய்யும் போது அம்மா, அப்பாவைப் பற்றி நினைத்துப் பார்த்தாயா? என கேட்பது சாதாரண ஒரு அம்மாவின் நிலைதான்.

தவறு செய்யும் பெண்கள் தற்கொலை தான் செய்ய வேண்டும் என்ற எண்ணம் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிலை ஆகும். இதை உடைத்து ‘மா’ குறும்படத்தை இயக்கிய சர்ஜூன் அவர்கள் அம்முவின் அம்மாவைப்போன்ற அம்மாக்கள் தான் சமூகத்தின் தேவை என்பதை உணர்த்தியுள்ளார்.

முதலில் சாதாரண அம்மாவாக உள்ள அம்முவின் அம்மா, கர்ப்பம் உறுதியான பின்பு முற்போக்காக முடிவு எடுப்பது சிறப்பு. பத்தாம் வகுப்பு படிக்கும் பெண்ணிற்குப் பாலியல் கல்வியைக் கற்றுத் தராததுதான் கர்ப்பத்திற்குக் காரணம் என்பதை உணரவில்லை. பாலியல் கல்வியைக் குழந்தைப் பருவத்திலிருந்து கற்றுக் கொடுத்து வளர்த்தியிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது. பாலியல் கல்வி தேவை என்பதை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது ‘மா’.

ஆண், பெண் வகுப்பறையில் ஒன்றாக அமர அனுமதிக்காத அப்பா, இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தொடாமல் போவீர்களா? என்று கேட்பதும் பாலியல் கல்வியின் தேவையை உணரவில்லை என்பதைக் காட்டுகிறது. அம்மாவைப் பொறுத்தவரையில் பெண்ணை விளையாட்டில் ஆணுக்கு இணையாக அனுமதிப் பதும், ஆடைக் கட்டுப்பாடு இல்லாமல் வளர்ப்பதும் தான் முற்போக்கு என்பதாகக் கருதுகிறார். இந்த முற்போக்குகூட ஆண்களின் எதிர்ப்புகளைத் தாண்டி பெறப்பட வேண்டியிருக்கிறது.

காதல் என்பது இறுதியில் உடலுறவில் தான் முடியும் என்ற சமூகப்பார்வையில் இக்குறும் படத்தில் காதலின் உச்சம் உடலுறவு என்பதை அறியாமையாகக் காட்டியுள்ளார் இயக்குனர்.

ஒரு பெண் திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக் கொண்டால் அதற்கு ஒரு ஆணின் துணை அவசியம் தேவை. அதனால் ஏற்படும் பாதிப்புகள் பெண்களுக்கு மட்டுமே. பத்தாம் வகுப்பு படிக்கும் ஹரி தான் செய்த தவறுக்கு வருந்தினாலும், பின்னாளில் அம்முவின் அப்பாக்களாகவே உருவாகிறார்கள். குற்ற உணர்வு ஹரி மனதில் இருந்தாலும் தான் ஆண் என்ற வகையில் அன்றாட வாழ்வு ஓடிக்கொண்டு இருக்கும்.

ஒரு பெண் எந்த வயதில் தனக்கான துணையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எந்த வயதில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எந்த அறிவும், உரிமையையும் பெண்களுக்கு கொடுக்கப் படுவது இல்லை. கிடைப்பதுமில்லை. தோழர் பெரியார் காதலைப் பற்றி ஏராளமாகப் பேசி யுள்ளார். குறிப்பாக,

“காதல் என்பது மிக மிகச் சாதாரண அற்ப விஷயம். காதலுக்கு அடிமை ஆவது இன்றைய சமுதாய வாழ்க்கை முறைக்குச் சிறிதும் பொருந்தாது.” - தோழர் பெரியார், 17.11.1940 ‘குடிஅரசு’

என்ற கருத்தையும் இப்படம் விளக்குகிறது. 10 வயதிற்கு மேல் பெண்குழந்தைகள் குழந்தை பெற்றுக் கொள்வதும், அதனால் பெண்கள் மட்டுமே கஷ்டப்படுவதும் இன்றைய சூழலில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை மிகச் சரியாக பதிவு செய்துள்ளார் இயக்குனர்.

படிக்காத பெண்களின் பெண் குழந்தைகள் திருமணம் மூலம் கர்ப்பமடைவதும், படித்து வேலைக்குச் செல்லும் பெண்களின் பெண் குழந்தைகள் பாலியல் கல்வி விழிப்புணர்வு இன்றித் தன் வயதொத்த மாணவர்கள் மூலம் கர்ப்ப மடைவதையும் இக்குறும்படம் தெளிவு படுத்து கிறது. சம காலத்தில் பாலியல் கல்வி விழிப்புணர்வு இல்லாததால், பாதிக்கப்படுவது பெண் குழந்தை களாகவே (பள்ளிக்குழந்தைகள்) உள்ளார்கள்.

  1. பீகார் மாநிலம் கோபால்காஞ்ச் மாவட்டம் அரசுப்பள்ளியில் 13 வயது (7-ஆம் வகுப்பு மாணவி) 6 மாத கர்ப்பமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
  2.  சென்னை அசோக்நகர் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவி 6 வாரம் கர்ப்பமாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
  3. வடமதுரை எரியோடு கிராமத்தில் 10-ஆம் மாணவி 3 மாத கர்ப்பமாக இருந்துள்ளார்.
  4. கர்நாடக மாநிலத்தில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்த மலைவாழ் ஆதிவாசி பிரிவைச் சார்ந்த மாணவி குழந்தைப் பெற்றெடுத் துள்ளார்.
  5. திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவிகள் 10 பேர் கர்ப்பமாக இருந்தது மருத்துவ ஆய்வின் மூலம் தெரியவந்து அதிர்ச்சிக்கு ஆளானார்கள். இப்பள்ளி 100சதவீதம் தேர்ச்சி பெறும் மிகப் பிரபலமான பள்ளி ஆகும்.

பாலியல் கல்வி இல்லாத 100 சதவீதம் தேர்ச்சி பெறும் பள்ளிகள் கொடுக்கும் கல்வியும், முற்றுப் பெறாத கல்வியாகவே அமையும் என்பதற்கு மேற்கண்டவை களைப் போல பல எடுத்துக்காட்டு களை தினசரிச் செய்தித்தாள்கள் நமக்குக் கொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றன.

சிறுவயதில் அம்முவிற்கு ஏற்பட்ட கர்ப்பம், அம்முவின் அம்மாவால் கலைக்கப்பட்டு, அம்மு வின் விளையாட்டு பருவம் காக்கப்பட்டது. அறியாமையால் ஏற்பட்ட காயத்திற்கு முற்போக்காக மருந்திட்ட அம்முவின் அம்மா வைப்போல சமூகத்தில் நிறைய பெண்களுக்குக் கிடைத்திருந்தால் பல பெண் குழந்தைகளின் தற்கொலைகள் தடுக்கப்பட்டிருக்கலாம்.

Pin It