உலகக் கால்பந்துப் போட்டி நடைபெறுகிறது. தற்போது தமிழகத்தில் இந்தப் போட்டியைக் காண்போர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. முக்கியமாக தென் மாவட்டங்களில். அர்ஜெண்டினா வெளியேற்றம், ரஷ்யா வெல்லுமா? என்று நிகழ்வுகளையும் யூகங்களையும் பார்த்து ரசிக்கின்ற நம் கால்பந்து ரசிகர்களிடையே ஒரு ஏக்கம் அது. இந்தக் கால்பந்து விளையாட்டு அப்படி என்ன மோசமா? இதை விளையாட நமக்குத் தகுதியே இல்லையா? ஏன் இன்னும் இந்தப் போட்டிக்குள் முதல் இடம் கூட அல்ல, அதற்குப் பின்னால் உள்ள இடத்தில் கூட இந்தியா இல்லையே? என்பதுதான். நமக்கு முன் உள்ள கேள்வியும் அதுதான். ஏன் பெரும்பான்மையான விளையாட்டுக்கள் அரசு, ஊடகங்கள் இவற்றின் கண்ணுக்குக் கூட படுவதில்லையே?

football 600முதலில் விளையாட்டு என்பதற்கான முக்கியத்துவம் மக்களது மனதிலிருந்து மறைந்து வருகிறது என்பது ஒரு முக்கிய சமூகக்கூறு. படிக்க வேண்டும், வேலைக்குச் செல்ல வேண்டும், சமூகப் பிரச்சனைகளில் தலையிடாமல் தம் குழந்தைகள் மட்டும் தனித்து இருக்க வேண்டும் என்னும் மனநிலை மிகப் பெரும்பான்மையான பெற்றோரிடம் வளர்ந்து நிற்கிறது. இதனடிப்படையில் ஒன்று விளையாடி நம் பிள்ளை என்ன சாதிக்கப் போகிறான்? விளையாட்டு அவனுக்குச் சோறு போடுமா? என்ற எதிர்கால பயத்தால் அவர்களது மனம் விளையாட்டை மறுத்து கல்வி மட்டுமே பிரதானம் என்ற முடிவுக்கு வருகின்றனர். தற்போதைய எதார்த்த நிலையும் அதுவே.

எழுபதுகள், எண்பதுகள் மற்றும் தொன்னூறுகளின் ஆரம்பங்களில் விளையாட்டுக்கான ஆசிரியர்களுக்கும், விளையாட்டுகளுக்கும் மதிப்பு இருந்தது. மாவட்டங்களில் சில பள்ளிகள் ஒவ்வொரு விளையாட்டுக்கான சிறப்பானபள்ளி என்ற பெயருடன் இருந்தன. அவ்விளையாட்டிற் காகவே பெற்றோர்கள் அப்பள்ளியில் தம் குழந்தைகளைச் சேர்த்த காலம் அது. படிக்கும் மாணவனுக்குச் சமமான அந்தஸ்த்தோடு விளையாட்டு மாணவர்களும் வலம் வந்த காலமது. விளையாட்டில் வந்த அவர்கள் அத்தகுதியோடு வேலைகளுக்கும் சென்றனர்.

தற்போதும் விளையாட்டுத் தகுதியில் மாணவர்கள் உயர்கல்விக்குச் செல்கின்றனர். ஆனால் அவற்றில் பெரும்பாலானவர்கள் தனிப் பயிற்சியாளர் வைத்துத் தகுதியானவர்களே. ஆனால் முந்தைய காலகட்டத்தில் பள்ளிகளிலிருந்து, பள்ளி உடற்பயிற்சி ஆசிரியரால் தகுதிப்படுத்தப்பட்டு போட்டிகளில் வென்று தகுதியானவர்கள். அப்படியானால் விளையாட்டுகளும் ஒரு தகுதியுடைய படிப்புதான் என்னும் நிலை உள்ளதா? அடிப்படைக் கல்வியோடு விளையாட்டையும் விரும்பும் மாணாக்கர்களுக்குக் கொடுக்காமல் சமூகத்தில் விளையாட்டுக்கான மதிப்பு உயர வாய்ப்பு எப்படி ஏற்படும்?.  சரி இதில் எங்கே அக்கிரகாரம் வருகிறது?

சமூக அமைப்பைப் போலவே விளையாட்டுகளிலும் பார்ப்பன - சூத்திர நிலையில் உள்ள விளையாட்டுகள் உள்ளன. கராத்தே, கபடி, கால்பந்து, வில்வித்தை, ஹாக்கி, கூடைப்பந்து போன்ற இன்னும் சில விளையாட்டுகள் சூத்திர மற்றும் பஞ்சமத் தகுதியோடேயே உள்ளன. இது போன்ற விளையாட்டுகளுக்கு உள்ள பயிற்சியாளர்கள் எல்லா மாவட்டங்களிலும் கிடையாது. மேலும் பயிற்சியாளர்கள் வேறு பணியில் இல்லாமல் பயிற்சியாளராக மட்டுமே இருப்பாராயின் அவர்களது வாழ்வு நிலை மிகவும் சிரமத்தில்தான் இருக்கும்.

சென்னை போன்ற பெரு நகரங்களில் மட்டுமே அது நல்ல தொழிலாக உள்ளது. உதாரணமாக கராத்தே தற்போது விளையாட்டாகவும் அங்கீகரிக்கப்பட்டு ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே நான் சொன்ன காலகட்டங்களில் கராத்தே என்பது விரும்பிக் கற்கும் கலையாக இருந்ததால் அதன் ஆசிரியர்கள் மதிப்பு மிக்கவர்களாக இருந்தனர். (சாதாரண மக்கள் அடிதடிக் கலையாகப் பார்த்தாலும் கற்ற மாணவர்கள் மற்றும் அவர்தம் பெற்றோர் மதிப்புடனே வைத்திருந்தனர்).

ஆனால் தற்போது தரமான மாணவர்கள் கிடைத்தாலும் அவர்களை உருவாக்க கல்விக்கான நேரங்கள் அனுமதிப்பதில்லை. பெற்றோரும் கல்விக்குச் சமமாக இவ்விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. ஒன்பதாம் வகுப்பு வந்தவுடனேயே அம்மாணவன் கல்விக்குத்தான் முதலிடம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர். மேலும் இவ்விளையாட்டுகள் ஊடகங்களால் முதன்மைப்படுத்தப்படுவதில்லை. எனவே அவ்விளையாட்டு வீரர் 10, +1, +2 முடித்து வரும்போது அவ்விளையாட்டிற்கும் அவருக்கும் இருந்த தொடர்பு காத தூரம் சென்றிருக்கும். ஒப்பீட்டளவில் கராத்தேவுக்குக்கூட பயிற்சியாளர்கள் சிறு பெரு நகரங்களில் உள்ளனர். ஆனால் கால்பந்துக்கோ, கபடிக்கோ, கூடைப்பந்துக்கோ பயிற்சியாளர்கள் மற்றும் குழு அமைப்பாளர்கள் போன்றவர்கள் பெரு நகரங்கள் தவிர வேறு இடங்களில் இல்லவே இல்லை எனலாம்.

மேற்சொன்ன விளையாட்டுகளில் பார்ப்பனர் வீரர்களாகப் பங்கு பெறுவது என்பதே 99.99 விழுக்காடு இல்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. காரணம் நாம் அறிந்ததே உடல் உழைப்பு என்பது மட்டுமல்ல, இவ்விளையாட்டுகளில் பணம் கொட்டுவதில்லை. மேலும் விளையாட்டுகள் இவ்வாறு ஏற்றத்தாழ்வுடன் இருப்பதன் காரணமே பார்ப்பன ஏற்பாடுதான். ஊடகங்கள் பார்ப்பனர் கையில், இந்திய அரசை ஆட்டிப்படைக்கும் அனைத்துத் துறைகளிலும் விகிதாச்சாரத்தை அளவு கடந்து மீறிய பார்ப்பன ஆதிக்கம். எனவே விளையாட்டு என்றால் எல்லாம் சமம் என்பதே இல்லாமல் ஊடகங்களின் வாயிலாகவும் பார்ப்பனர்களின் நடத்தை வாயிலாகவும் மிகப் பெரிய ஏற்றத்தாழ்வை உண்டாக்குகின்றனர்.

இதை தேசிய கால்பந்து தலைமைப் பயிற்சியாளரும் முன்னாள் தேசிய கால்பந்து அணி வீரருமான சய்யத் நயிமுதீனின் கூற்று மெய்யாக்குகிறது. “நான் தேசிய கால்பந்து அணிக்குப் பயிற்சியாளராக இருந்தபோது பயிற்சியின்போது விளையாட்டு வீரர்களுக்குப் பாதுகாப்பான பாட்டில் குடிநீர், பழ ரசம் போன்றாவற்றுக்குக்கூட அதிகாரிகளிடம் போராடித்தான் வாங்க வேண்டியிருந்தது. வெறும் வயிற்றுடன் கால் பந்து விளையாட முடியுமா?” அதிகாரிகளில் மிகப் பெரும்பான்மையினர் பார்ப்பனரே என்பதுதான் இந்நிலைக்கான அடிப்படை.

இதில் இன்னொரு தந்திரம் பார்ப்பனர்கள் செய்கின்றனர் ஐனேடிடிச ழுயஅநள எனப்படும் சற்றுக் குறைந்த உடல் உழைப்புள்ள விளையாட்டுகளில் வென்று விளையாட்டு ஒதுக்கீட்டில் மேற்படிப்பு களைப் படித்து அல்லது இதையே தகுதியாக அமெரிக்கா போன்ற நாடுகளில் காட்டி அங்கு செட்டிலும் ஆகின்றனர். இது பெரும்பான்மையான பார்ப்பனரல்லாதோரால் நினைத்துப் பார்க்கக் கூட முடியாத டெக்னிக். அது மட்டுமல்ல பார்ப்பனர்களின் வெளிநாட்டுத் தொடர்புகள் போல நமக்குக் கிடையாது என்பதும் இங்குள்ள சமூகச் சூழல்.

அதே நேரம் விளையாட்டுகளிலேயே உயர் அந்தஸ்தில் மற்றும் பணம் கொட்டுமிடத்தில் இருப்பது கிரிக்கெட்தான். டென்னிஸ் கூட பணம் கொட்டும் என்றாலும் அதில் உடல் உழைப்பு அதிகம் என்பதால் அதைப் பார்ப்பனர்கள் லட்சியம் செய்வதில்லை. மற்ற விளையாட்டுகளில் பார்ப்பனர்கள் எத்தனை பேர் என்று பாருங்கள். அதே சமயம் கிரிக்கெட்டில்!

ஊடகம் மற்றும் பார்ப்பன நடவடிக்கைகளால் சிறப்பான இடத்தில் உள்ள கிரிக்கெட்டையே மாணவர்களின் மனதில் புகுத்தி ஏறக்குறைய எல்லா மாணவர்களும் விடுமுறைக் காலங்களில் கிரிக்கெட் மட்டையுடனேயே திரிகின்றனர். எந்த விளையாட்டு முறையும்  அதீத வெயிலில் விளையாட அனுமதிக்காது. மாறாக கிரிக்கெட் மட்டும்தான் எந்த எதிர்காலத் திட்டமும் இல்லாமல் எந்த உடல் நலன் அடிப்படையும் இல்லாமல் மாணவர்களை விளையாட வைக்கிறது.

மாவட்டத் தகுதிக்குச் சென்று மாநில அளவில் வர வேண்டும். சரி அப்படி மாவட்டம் அதை அடுத்து மாநிலம் என்று சென்றாலும் அகில இந்திய அளவில் நம் பார்ப்பனரல்லாத மாணாவர்கள், வீரர்கள் வருகின்றனரா என்றால் இல்லை. தமிழ் நாட்டிலிருந்து போன கிரிக்கெட் வீரர்களின் பட்டியலைப் பார்ப்போமா.

தமிழ்நாட்டு கிரிக்கெட்டில் பார்ப்பன ஆதிக்கம்

வெங்கட்ராகவன், கிர்ஷ் ஸ்ரீகாந்த், இராமன், சிவராமகிருஷ்ணன், சடகோபன் ரமேஷ், ஹேமங் பதானி, இலஷ்மிபதி பாலாஜி, பத்ரிநாத், முரளி கார்த்திக், தினேஷ் கார்த்திக், அபினவ் முகுந்த், முரளி விஜய், இரவீந்ரா அஸ்வின், அனிருத் ஆகிய அனைவருமே பார்ப்பனர்கள் ஆவார்கள்.  

அகில இந்தியக் கிரிக்கெட்டில் பார்ப்பன ஆதிக்கம்

அஜீத் அகர்க்கர், அனில் கும்ளே, அசோக் வினோ மான்காட், சந்திரசேகர், திலீப் தோஷி, ஹிர்திக் பாண்டே, ஜெய்கல் ஸ்ரீநாத், கிருஷ்ணகுமார் தினேஷ் கார்த்தி, கருநால் பாண்டே, லாலா அமர்நாத், லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன், மதன்பால் உத்தாராம் ஷர்மா, மனிஷ் பாண்டே, மொகீந்தர் அமர்நாத், மோகித் ஷர்மா, மொட்கான்ஹாலி, லக்ஷ்மி நர்ஸ் ஜெயசிம்ஹா, முல்வந்திரி ஹிமாட்வல் மான்காட், பத்மநாப் கோவிந்த், போச்சையா கிருஷ்ண மூர்த்தி, இராகுல் டிராவிட், இராம்கண்ட் பிகாஜி, .ரமேஷ் விதல் தாஸ், இரவிசந்திரன் அஸ்வின், ரோகித் குர்நாத், சச்சின் ரமேஷ் டெண்டுல்கர், சஞ்சை விஜய் மஞ்ச் ரேகர், சவ்ரவ் சண்டிதாஸ் கங்குலி, சுப்ரடோ தாரா பேனர்ஜி, சுனில் பண்டாச்சார்யா, சுனில் மனோகர், சுரேஷ் ரெய்னா, விஜய் லக்ஷ்மண் மஞ்ச்ரேகர்.  எப்படி உள்ளது பார்ப்பன ஆதிக்கம்!

இது எப்படி நடக்கிறது என்றால் கிரிக்கெட் தேர்வுக்குழு முழுக்கப் பார்ப்பனர்களே! கிரிக்கெட்டுக்கு மட்டும் ஸ்பான்ஸர்கள் அதிகம். அது மட்டுமல்ல எந்த ஒரு விளையாட்டிலும் இல்லாத தேசபக்தியை இவ்விளையாட்டில் நுழைத்துள்ளனர். இது மிகப் பெரிய வியாபாரத் தந்திரம்! கிரிக்கெட்டைப் பார்க்கும் கூட்டத்தை அதிகப்படுத்தியதில் இது முக்கியப் பங்கு.

தேச பக்தி, தேசியம் என்பதே பார்ப்பனரல்லாதோர் மீண்டும் மீண்டும் பார்ப்பன ஆதிக்கத்திற்குக் கட்டுப்பட்டு சிந்திக்காமல் இருக்க வேண்டும் என்ற பார்ப்பனக் கண்டுபிடிப்பே. இதையே தோழர் பெரியார்

“தேசியத்தின் பெயரால் இன்னும் புதுப்புதுப் பண்டிகைகளையும் உற்பத்தி செய்து வருகின்றனர். இக்காரியங்கள் மூலம் மக்களைக் குருட்டு நம்பிக்கை உடையவர்களாகவும் பகுத்தறிவு அற்றவர்களாகவும் ஆக்கி வருகின்றனர். மக்களுடைய முயற்சியையும், நேரத்தையும், பாடுபட்டு சேர்த்த செல்வங்களையும் பயனற்ற வீணாண வழியில் செலவு செய்யும்படி தூண்டிவிடுகின்றனர்” - குடி அரசு, 27.12.1931

தோழர் பெரியாரின் இக்கூற்றை அப்படியே கிரிக்கெட்டோடு ஒப்பிட்டுப் பாருங்கள்! ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளின்போது தேசபக்தி பிரச்சாரம்தானே நம்முடைய ரசிப்பைக்கூட நம் விருப்பத்திற்கு மாறாகக் கட்டாயமாக்கி வைத்துள்ளனர்.

இப்படி பார்ப்பன ஆதிக்கத்திற்கும், சுரண்டலுக்கும், கொள்ளைக்கும் சாதகமாக உள்ள கிரிக்கெட்டுக்கே அதீத அளவில் முக்கியத்துவம் கொடுத்து மற்ற விளையாட்டுகளை மதிப்பிழக்க வைத்து சூத்திர, பஞ்சம நிலையில் வைத்திருப்பதாலேயும், இதற்குச் சாதகமாக நாமும் விளையாட்டிலிருந்து விலகி இருப்பதும்தான் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகளில் கலந்து கொள்வது கனவாகவே உள்ளது.

விளையாடும் வீரர்களின் எண்ணமும் ஏதோ மேல்படிப்புக்கான தகுதியாக இருந்தால் போதும் என்றே உள்ளது. அதன் அடிப்படையும் என்னவென்றால் உற்சாகத்தோடும், திறமையோடும் விளையாட வரும் சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் நல்ல இடமும் கருவிகளும் கிடைப்பதில்லை. இந்தியாவோடு ஒப்பிடும்போது கால்பந்தாட்டத்தில் அய்ஸ்லாந்து, துனீஷியா, பனாமா, செனகல் ஆகிய சின்னஞ்சிறு நாடுகள் மிகப் பெரிய ஆசைகளுடன் விளையாடுகின்றன.

இது போன்ற நிலை இருப்பதால்தான் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியைக் காண இந்தியாவிலிருந்து தற்போது 14,000 பேர் சென்றிருந்தாலும், இவ்வளவு ஆர்வம் மக்களிடையே இருந்தும் மய்யப் பார்ப்பன அரசு இளம் வீரர்களுக்கு எந்த வசதிகளையும் செய்து தராமல் இருக்கும் இந்த நிலையில் உலகக் கோப்பையை கால்பந்தில் மட்டுமல்ல எந்த விளையாட்டிலும் நாம் எதிர்பார்ப்பது வீணே! எல்லாத் துறைகளிலும் சமூகநீதி அடிப்படையில் பதவிகள் பகிரப்படாமல் அக்கிரகாரத்தின் அழிச்சாட்டியங்களை நிறுத்தாமல் விளையாட்டிலும் நாம் முன்னேறுவது இயலாத காரியம்.

Pin It