தைப்பொங்கல் என்றாலே அது தமிழர் களின் விழா என்று கூறுவார்கள். தமிழர்களின் இலக்கியங்களின் “ஜாதி” என்ற ஒரு வார்த்தையே இல்லை என்று கூறுவார்கள். ஆனால் களத்தில் உண்மையான நிலவரம் அது இல்லை. தைப் பொங்கல் என்பது இந்து மதம் சார்ந்தே இயங்குகிறது. இந்து மதத்தின் சாஸ்திரம் சார்ந்தே இருக்கிறது. குலத்தொழில் அடிப்படையிலும் இருக்கிறது.
முதலில் மதம் சார்ந்து இருக்கும் அடையாளங்களைப் பார்ப்போம். இந்த விழாவை இந்து மதத்தவரைத் தவிர இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் யாரும் தங்களது வீடுகளில், தங்களது பண்பாட்டு அடையாளம் என்ற அடிப்படையில் கொண்டாடுவது இல்லை. இவர்கள் பொதுவெளியில் ஆதரிப்பார்களே ஒழிய வீடுகளில் கொண்டாடுவது இல்லை.
பொங்கல் பண்டிகையில் இந்து மத சாஸ்திரங்கள் கடைபிடிக்கப்படுகிறது. காலையில் சூரியன் உதயமாகும் பொழுது பொங்கல் வைப்பது சிறந்தது என்று நல்லநேரம் குறிப்பார்கள் பார்ப்பனர்கள். அவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் தான் பொங்கல் வைக்கப்படுகிறது. அதுமட்டு மல்லாது பொங்கல் வைக்கும் பானையில் பொங்கல் பொங்கி வரும் திசை கிழக்காக இருந்தால் அது குடும்பத்திற்கு நல்லது என்ற ஆழமான மூடநம்பிக்கையும் இதில் பின்பற்றப்படுகிறது.
இந்து மதத்தைப் பாதுகாக்கும் பொங்கல் பண்டிகை
தைப்பொங்கல் என்றாலே அதில் அனைத்து ஜாதியினரும் அவரவர் உரிய ஜாதிய தொழிலில் ஈடுபட வேண்டிய கட்டாயமாகிறது. எப்படி என்றால் பொங்கல் வைப்பதற்கு மண்பானையே சிறந்தது என்று கூறப்படுகிறது. எனவே மண்பானை தயார் செய்ய குயவர் சமூகம் தேவைப்படுகிறது.
தைப்பொங்கல் என்றாலே அது வேட்டி சேலையுடன் தான் கொண்டாட வேண்டும் என்ற மனநிலை உள்ளதால் வேட்டி, சேலை நெய்ய அதற்குரிய ஜாதி தொழில் தேவைப்படுகிறது. நமது தொலைக்காட்சி விளம்பரங்களில் கூடப் பாரம்பரிய முறையில் வேஷ்டி சட்டைகள் செய்யப்படுகின்றது அதற்கென்றே பாரம்பரியமாக தொழில் செய்து வருபவர்களால் நெய்யப்பட்டது என்று விளம்பரம் செய்யகிறார்கள் என்பதை நாம் காண்கிறோம். இதில் பாரம்பரியத் தொழில் என்பது ஒரு குறிப்பிட்ட சாதி சார்ந்த தொழில் என்பது தெளிவாகிறது.
மேலும் பண்ணை வேலைகளைச் செய்வதற் கென்று தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் பயன்படுத்தப் படுகின்றனர். மாடு மேய்ப்பதிலும், விளைநிலங்களில் பணிபுரிவதிலும் தாழ்த்தப்பட்டவர்களின் பங்கு அதிகமாக உள்ளது.
பொங்கல் பண்டிகை என்றாலே அதில் பெண்களின் பங்கு அதிகமாக இருக்கும். தங்களது வீடுகளைச் சுத்தம் செய்து சாணமிட்டு வழிப்பது, அதில் கோலமிடுவது ,கோலமிட்ட இடத்தில் அடுப்பு, பானை வைத்து பொங்கல் வைப்பது, பலகாரம் செய்வது, சமையல் செய்வது போன்ற அனைத்து வீட்டு வேலைகளையும் பெண்களே விரும்பியோ அல்லது விரும்பாமலோ செய்யவேண்டியுள்ளது.
கிராமங்களில் பொங்கல்
மார்கழி கடைசித் தேதியில் சங்கராந்தி பண்டிகை என்று வடமாநிலங்களில் கொண்டாடப் படுகிறது. நமது தமிழ்நாட்டில் போகிப் பண்டிகை என்று கொண்டாடப்படுகிறது பழையதை எரித்துவிட்டு புதிய பொருட்களை வாங்கி தை முதல் நாளைக் கொண்டாடத் தொடங்குவார்கள்.
தை முதல் நாள் சூரியப் பொங்கல் என்பது மண்பானையில், புது நெல், புது பானை வைத்து சாணத்தால் ஆன பிடித்து வைத்த பிள்ளையார் ஒன்றும், இஷ்ட தெய்வங்கள் என்ற அடிப்படையில் நடுகற்களை வைத்து வணங்கத் தொடங்குவார்கள்.
தை இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் என்று அழைக்கப்படுகிறது. நமக்காக உழைக்கும் ஜீவராசிகளுக்குப் பொங்கல் வைத்து வணங்குவதாகக் கூறிவரும் பண்டிகை. மாடுகளைச் சுத்தம் செய்ய, பண்ணையைச் சுத்தம் செய்ய தாழ்த்தப்பட்டவர்கள் பண்ணைக்கு தை முதல் நாளில் இருந்தே வேலை செய்யத் தொடங்கி விடுவார்கள்.
மாடுகளுக்கு பூஜை என்பது சிவபெருமானுக்கு நேரடியாக பூஜை செய்வதாகக் கருதுகின்றனர். சிவபெருமான் வாகனமாகக் கொண்டுள்ள நந்தியைத் தெய்வமாகக் கொண்டாடுகின்றனர். மாட்டினைக் கழுவி, கொம்புக்கு வண்ணம் பூசி, பொட்டுகள் வைத்து, பூஜைக்குத் தயார் படுத்துகின்றனர்.
பொங்கலைத் தங்களது வீட்டின் பெண்கள் வைப்பார்கள். பூஜை முடிந்த பிறகு மாட்டிற்குச் சிறப்பான உணவுகள் கொடுக்கப்படுகின்றது. மாட்டிற்குக் கொடுக்கப்பட்ட பின் நிறைவு நிகழ்வாக மாட்டைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் அந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பண்ணை முதலாளிகள் உணவு, உடைகள் கொடுப்பார்கள்.
அன்றாட வழக்கம்போல் ஜாதிய பழக்கவழக்க வேலைகள், பெண்களின் அடிமைப்பணிகள் என இந்து வர்ணாசிரம முறையானது பொங்கல் நாளிலும் மாறாமல் அப்படியே இயங்கும். சாட்சி கேட்பவர்கள், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பல கிராமங்களில் நேரடியாகவே இதைக் காணலாம்.
தை மூன்றாம் நாள் காணும் பொங்கல். கிராமப் பகுதிகளில் பூப்பறிக்கும் பண்டிகை என்பது அவரவர் வீட்டில் செய்த பலகாரங்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு ஆற்றங்கரை, குளத்தங்கரைப் பகுதிகளுக்குச் சென்று உண்டு மகிழும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இதில் தாழ்த்தப்பட்ட மக்கள் பறையடித்துக் கொண்டு முன்னே செல்வார்கள் மற்ற சாதியினர் பின் தொடர்ந்து செல்வார்கள். இந்த நிகழ்விலும் ஒவ்வொரு சாதியும் கலந்துவிடாமல் பாதுகாப்பாக நடக்கும்.
தென் மாவட்டங்களில் மட்டும் நடந்து கொண்டிருந்த ஜல்லிக்கட்டு விழாக்கள் இன்று தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் எங்காவது ஒரு இடத்தில் ஜல்லிக்கட்டு நடந்து கொண்டிருக்கின்றது. ஜல்லிக்கட்டில் இயங்கும் ஜாதியத்தைப் பற்றி, காட்டாறு இதழ் தனிச் சிறப்பிதழே வெளியிட்டது. அந்த இதழ் 2017 இல் தனி நூலாகவும் வெளியிடப்பட்டுள்ளது. அதை விரிவாகக் கூற வேண்டியதில்லை.
நகரப்பொங்கல்
சிறுநகரங்களில் நடக்கும் பொங்கலை இரண்டு நாள் விழாவாகக் கொண்டாடுகிறார்கள். இந்த விழாவில் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவார்கள். எண்ணற்ற விளையாட்டுகள், போட்டிகள் நடக்கும். என்னதான் நகரங்களாக இருந்தாலும் ஜாதித் தெருக்களாக தான் இருக்கின்றது.
அந்தந்த ஜாதி தெருக்களில் பொங்கல் விழாக்கள் பாதுகாப்பாக தனித்தனியாக நடந்து கொண்டிருக்கின்றன. பொங்கல் விழாக்களில் ஆண்களுக்கு வீர விளையாட்டுகளும், பெண்களுக்கு கோலப் போட்டிகளும் நடக்கின்றன. முற்போக்கு இயக்கங்கள் நடத்தும் சமத்துவப் பொங்கல் என்று அழைக்கப்படும் பொங்கல்களிலும் மேலே கூறிய வகையில்தான் நடந்து கொண்டிருக்கின்றது.
இந்த முற்போக்கு இயக்கங்கள் நடத்தும் விழாக்களில் கூட ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக விளையாட்டுகள் வரையறுக்கப் பட்டுள்ளன. நாம் வசிக்கும் நகரங்களாகட்டும், கிராமங்களாகட்டும் இரண்டிலும் அனைத்து ஜாதியினரும் ஒன்றிணைந்து ஓரிடத்தில் பொங்கல் வைத்து விழாவைக் கொண்டாடுவதில்லை. அப்படிப்பட்ட விழாக்களைக் காண்பதும் அரிதாகவுள்ளது.
தமிழ்தேசிய இயக்கங்களைச் சார்ந்தவர்களும் நமது பாரம்பரிய விழாக்களைக் காக்க வேண்டும் அடிப்படையில் சென்ற 2018 ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி அன்று பல்லடம் கொங்கு மஹாலில் “தமிழர் விழா பொங்கல் விழா”வை நடத்தினர். இந்த விழாவைத் தலைமை ஏற்று நடத்தியது “தாய் அறக்கட்டளை”. இந்த நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த முன்னோடியான தோழர் ஆர். நல்லகண்ணு அழைக்கப்பட்டிருந்தார்.
இந்த விழாவிற்கு காட்டாறு தோழர்களும் புத்தக விற்பனைக்காகச் சென்றிருந்தோம். அதில் நிறைய சான்றுகளுடன் நமக்கு புகைப்படங்கள் கிடைத்தன. இந்து மதத்தின் கடவுளின் புகைப்படங்கள் அதிகம் வைக்கப்பட்டிருந்தது. குறிஞ்சி நிலக் கடவுள் முருகன், முல்லை நிலக் கடவுள் திருமால், நெய்தல் நிலக் கடவுள் மச்சாவதார பெருமாள், மருத நிலக் கடவுள் சிவபெருமான் என்ற அடிப்படையில் புகைப் படங்கள் இருந்தன.
அந்தந்த ஜாதி தர்மப்படி செய்யப்பட்ட வேலைபாட்டுப் பொருட்கள் இந்த விழாவில் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தது. பாரம்பரிய முறைப்படி செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய் வகைகள், பாரம்பரிய முறைப்படி செய்யப்பட்ட மாட்டு வண்டிகள், பழங்கால முறையில் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைக்கும் பொருட்கள், பழங்கால தானிய வகை உணவுகள், ஆண்களின் வீரத்தைக்காட்ட பயன்படுத்தும் இளவட்டக்கல், இந்து மத பழக்கவழக்கங்களை ஒட்டி பொங்கல் வைத்துக் கொண்டாடும் முறை போன்றவை காட்சியாக வைக்கப்பட்டிருந்தன. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பறையை அடிக்கும் ஜாதியினரால் பறை அடிக்கப் பட்டது.
மேலும் நமக்கு சான்று வேண்டும் என்று கருதினால் பொங்கல் விழா யாருடைய விழா என்று பாமரனை நோக்கி கேட்டுப்பாருங்கள் கண்டிப்பாக பதில் இந்து மத விழா என்பதாகத்தான் இருக்கும். நம் வீட்டில் இருக்கும் நாட்காட்டியைக் கொஞ்சம் திருப்பிப் பாருங்கள் அதில் விடுமுறை நாட்கள் என்பதில் பொங்கல் பண்டிகைக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இடமானது இந்துக்களின் பண்டிகை என்பதுதான்.
முற்போக்குப் பொங்கல்
முற்போக்கு இயக்கங்கள் கொண்டாடும் பொங்கல் விழாக்கள், விளையாட்டு விழாக்களாகவும், பறையிசை நிகழ்ச்சிகளாகவும் இருக்கின்றன. அந்த இயக்கத்தைச் சார்ந்த தோழர்கள் சமத்துவமாக பொங்கல் வைத்து சமைத்து சாப்பிட்டுவிட்டு ஒரு பகுதி நிகழ்வாக மேடை நிகழ்ச்சியில் இது தமிழர்களின் விழா என்று கருத்துரை வழங்குகின்றனர். இது இந்து மதத்திற்கு சம்பந்தப்பட்ட விழா அல்ல என்று பிரச்சாரம் செய்கின்றனர்.
ஆனால் நடைமுறையில் வேறாக உள்ளது மார்கழி 31 சங்கராந்தி பண்டிகை தொடங்கி காணும் பொங்கல் பண்டிகை வரை இந்து மதத்தின் சாஸ்திரங்களும், பழக்கவழக்கங்களும், ஜாதி தர்மங்களும் கறாராகக் கடைபிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்றும் ஊர் பொங்கல், சேரிப் பொங்கல் என்றுதான் கொண்டாடப்பட்டு வருகிறது.
தொழில்நுட்பம் வளர்ந்த காலத்தில் கூட பழைமை, பழக்கவழக்கம், பாரம்பரியம் என்ற பெயரில் கல் அடுப்பு, மண் அடுப்பு, பொங்கல்பானை, வேட்டி, சேலை என்று அறிவுக்குப் பொருந்தாததைச் செய்கின்றனர். அரசியலமைப்புச் சட்டம் உருவாகிறது என்று தெரிந்தவுடன் தோழர் பெரியார் பழக்கவழக்கம் என்ற ஒன்றை சட்டத்தில் செய்து பார்ப்பனர்கள் சாதியைப் பாதுகாத்துக்கொள்வார்கள் என்று எச்சரித்தார். 1957 இல் அதை எரித்தார். இன்றும் அதே பழக்கவழக்கம், பாரம்பரியம் என்ற பெயரில் சாதியை பாதுகாக்கும் பணி தொடர்கிறது. அதற்கு நாமும் பலியாகிக் கொண்டிருக்கிறோம்.
தோழர் பெரியார், உழைக்கும் மக்களுக்கு விழாக்களும் கொண்டாட்டங்களும் தேவை தான் அவை அனைத்தும் எதிர்வரும் காலத்தில் முன்னேற்றத்திற்கும், அறிவிற்கும் உகந்த விழாக்களாக அமைய வேண்டும் என்று விரும்பினார். உழைக்கும் மக்களுக்கான பொங்கல் விழாவையும், மே தின விழாவையும் குடும்பம் குடும்பமாக, பொது விழாவாக நடத்தச் சொல்லி அறிக்கையும் விட்டார்.
ஆனால் இன்று பொங்கல் விழாக்கள் முற்றிலும் இந்து மயமாகிவிட்டது. மே தின விழாவை 90 களுக்குப் பிறகு மக்கள் விழாவாகக் காணவே முடியவில்லை. அனைவருக்கும் விழாக்களும், கொண்டாட்டங்களும் தங்களுடைய வாழ்க்கைக்கு அவசியமான ஒன்றாகத்தான் உள்ளது. அது பிற்போக்குத்தனமாக இல்லாமல் அறிவியல் முற்போக்கை உடையதாக இருந்தால் மிகவும் சிறப்பாகவே இருக்கும்.
பொங்கல் விழா மட்டும் இல்லை நாளை நாம் எந்த விழா கொண்டாடினாலும் அறிவுக்கும், அறிவியல் வளர்ச்சிக்கும் பொருந்தாத விழாக்களாக அவை இருந்தால் அவையும் இந்து மதத்தால் கண்டிப்பாக ஜீரணிக்கப்படும். மாறாக அறிவுக்கும், அறிவியலுக்கும் பொருந்தக் கூடிய விழாக்களை, சுற்றுலாக்களை ஊக்கப்படுத்த வேண்டும் அவற்றைக் கொண்டாட வேண்டும்.