மீண்டும் மீண்டும் கொடைக்கானல், தாண்டிக்குடி, மூணாறு, திருமூர்த்தி மலை, ஊட்டி, ஏற்காடு, கன்னியாகுமரி என்றே சென்று கொண்டிருக்க வேண்டாம். இந்த ஆண்டு கொஞ்சம் மாற்றலாம் என்று ‘கோவா’ பயணத்தைத் திட்டமிட்டோம்.

கோவா பயணத்தை முழுக்க முழுக்க திருச்சி எட்வினா, புரட்சி, தாராபுரம் பூங்கொடி ஆகிய மூவரும் திட்டமிட்டனர். வழக்கமாகத் திட்ட மிடலில் ஈடுபடும் எந்த ஆணும் இந்தப் பயணத்தின் திட்டமிடலில் அனுமதிக்கப்படவில்லை. இரயில் பயணம், தங்குமிடம், உணவு, பார்க்க வேண்டிய இடங்கள், உள்ளூர் பயணத்திற்கான வாகனம் என அனைத்தையும் பெண்கள் முடிவெடுத்துச் செயல் படுத்தினர்.

viduthalai veli

விடுதலைவெளி என்பதன் பொருளுக்கு ஏற்ற படி, கோவா நாட்களில் அவரவருக்கு விருப்பமான உணவு, விருப்பமான உடை, சின்னச் சின்ன ஆசைகள், பெரிய கனவுகள் எனப் பலவிதங்களிலும் கட்டுக்கள் தளர்த்தி இயல்பாய்ப் பயணித்தனர். 5 வயதுப் பெண்குழந்தை முதல் 60 வயதுப் பெண் வரை பங்கேற்ற இப்பயணத்தில் குழந்தைகளை ஆண்கள்தான் கவனித்துக் கொண்டனர். சுமந்தும் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுற்றுலா வழிகாட்டிகளும், தங்குமிடத்தில் இருந்த மற்றவர்களும் பயணக்குழுவை வியப்புடன் பார்த்தனர். ‘நீங்கள் அனைவரும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களா?’ என்றனர். ‘இல்லை’ என்றோம். ஒரே மதத்தினரா? ஒரே ஜாதியா? என்றெல்லாம் கேட்டனர். வழக்கமாக அவர்கள் சந்திக்கும் எல்லாச் சுற்றுலாப் பயணக்குழுக்களில் இருந்தும் விடுதலைவெளி வேறுபட்டிருந்ததைக் கவனித்து தான் இக்கேள்விகளைக் கேட்டனர். “ஒரே குடும்பம்” என்றோம். “உருவ அமைப்புகள் அப்படிக் காட்டவில்லையே” என்றனர். “ஒரே கொள்கைக் குடும்பம்” என்றோம். இயல்பாக, ஒரு சுற்றுலாவாக, ஒரு சிறுகுழுவாக நாம் சென்றாலும், இந்த சமுதாயத்தில் இது ஒரு வியப்பாகத்தான் பார்க்கப் படுகிறது.

இந்துச் சமுதாயக் குடும்பங்களுக்கும், இரத்தச் சொந்தங்களுக்கும் மாற்றாக, ஜாதி, மதம் கடந்த குடும்பங்களின் உறவுகள் பெருக வேண்டும். கொள்கைச் சொந்தங்கள் வளரவேண்டும் என்ற எமது நோக்கம் கவனிக்கப்படுகிறது என்ற அளவில் மகிழ்ந்தோம்.

ஆண்கள் திட்டமிடும் கோவா பயணத்தில் பீச், பார் இந்த இரண்டைத் தவிர வேறு இடங்களுக்கு நேரம் இருக்காது. பெண்களின் விடுதலைவெளியானது, கடற்கரைகள், கோவா மக்கள் மட்டுமே சென்றிருக்கக்கூடிய மலைப் பகுதிகளில் மலையேற்றம், அருவிக் குளியல், கோவா செல்லும் சுற்றுலாவாசிகள் பெரும்பாலும் சென்றிராத சலீம்அலி பறவைகள் சரணாலயம், கப்பல் பயணம் என பல்வேறு புதிய இடங்களுக்கும் சென்று வந்தது.

பொதுவாக கோவா பயணம் என்றால் அக்டோபர் தொடங்கி பிப்ரவரி இறுதி வரை என்பதுதான் சீசன். ஜூன், ஜூலை மாதங்களில் கடும் மழை இருக்கும். கோவாவின் மண்ணின் மைந்தர்களைத் தவிர மற்ற வணிகர்கள் சொந்த ஊருக்குச் சென்றுவிடுவார்கள். விடுதலைவெளி இந்தக் கடும் மழை மாதங்களைத் தேர்வு செய்தது மிகச் சிறந்த வாய்ப்பாக இருந்தது. “சட்டென்று மாறும் வானிலை” என்ற வரிகளுக்குச் சான்றாக - நொடிக்கு நொடி மழையும், வெயிலும், குளிரும், வியர்வையும், கருமேகமும், வெண்மேகமும் மாறி மாறி வந்துபோயின. உண்மையில் கோவா பயணத்திற்கு உரிய காலம் ஜூன் – ஆகஸ்ட் வரை தான் என்பது உறுதி.

விடுதலைவெளி கடந்த 2011 ஆம் ஆண்டி லிருந்து தொடர்ச்சியாகப் பெண்களுக்கான சுற்றுலாவை நடத்திவருகிறது. பெண்கள் மட்டு மல்ல, அவர்களின் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ள ஆண்களும் பங்கேற்கும் குடும்பச் சுற்றுலாக்களாக அவை நடைபெற்றன. விடுதலை வெளி பயணங்களை நடத்தும் காட்டாறுகுழு தோழர்கள் பொருளாதாரரீதியில் எளியவர்கள் தான். ஆனால், ஆண்டு வருமானத்தில் பாதியளவுக்கு மேல் சுற்றுலாக்களுக்குச் செலவிடுகிறோம். ஆண்டுக்கு இரண்டு முறை இந்தப் பயணங்கள் நடக்கின்றன. குழுவாக மட்டுமல்லாமல், குடும்பங்கள் தனித்தனியாக அவ்வப்போது மாதம் ஒருமுறை சுற்றுலா செல்லும் தோழர்களும் இருக்கின்றனர்.

குடும்பச் சுற்றுலாக்களைப் போல, குழந்தைகள் வழிகாட்டு முகாம்களையும் 2015 லிருந்து நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு குழந்தைகள் முகாம் கொடைக்கானலில் நடை பெற்றது. இவை, இயற்கையை இரசிப்பதற்கு மட்டு மல்ல, வாழ்க்கையை இரசிப்பதற்கும், ஒரு மாற்றுப் பண்பாட்டு வடிவமாகவும், உலகைப் பற்றிய கல்விக்காகவும், கல்வியைப் பற்றிய புரிதலுக்காகவும் நடக்கின்றன.

கோவா, ஐந்து நாள் பயணம். செலவு அதிகம், விடுமுறை இல்லாமை போன்றவற்றால் அதிகத் தோழர்கள் வரஇயலவில்லை. இருந்தாலும் பெரும்பானோர் பங்கேற்கும் வகையில் வரும் டிசம்பரில் தேக்கடி சுற்றுலா திட்டமிடப்படுகிறது. அநேகமாக டிசம்பர் 22 முதல் 25 வரை இருக்கும். இப்போதே சேமிக்கத் தொடங்குங்கள். காட்டாறு குழு ஏற்கனவே திட்டமிட்ட “உடைப்போம் சமையலறைகளை” டிசம்பர் 24 இல் நடக்கும். அதைப் பொறுத்து சுற்றுலாவின் நாட்கள் மாறும். உறுதியான செய்திகள் விரைவில் வரும்.

Pin It