வழக்கம்போல செய்தித்தாள்களில் தேர்தல் கூட்டணி பற்றிய யூகங்கள், தலைவர்களின் சூடான அறிக்கைகள் வரத் துவங்கிவிட்டன. இதுவரை கொள்கைகளை உயர்த்திப் பிடித்த கட்சிகள் அதிக இடம் பெறுவதே தலையாய கடமையென முடிவெடுத்து பகாசுரக்கட்சிகளிடம் காவடியெடுக்கத் துவங்கி விட்டனர். ஆளுங்கட்சியின் அடாவடித்தனங்கள், ஊழல்கள் மற்றும் இடைத்தேரதல் சமயத்தில் செய்த தேர்தல் தில்லுமுல்லுகளை எல்லாம் மறந்து அதிக இடம் மற்றும் அமைச்சர் பதவிக்கான உறுதிமொழிகளைப் பெற்று கூட்டணி அமைக்கத் தயாராகி விட்டனர் கொள்கைக் குன்றென தங்களை தமிழக மக்கள் முன்னே வெளிச்சம் போட்டு காட்டிய தலைவர்கள். இவர்களின் பதவி வெறியே பெரும் கட்சிகளின் மூலதனம்.

தம்மைவிட்டால் வேறு வழியில்லையென்ற திமிர்த்தனமே ஆள வருவோர்க்கும், தொடர்ந்து ஆளுவோர்க்கும் எதைச்செய்தாலும் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்ற தைரியத்தைக் கொடுக்கிறது. திமுக தலைவர் திரு.கருணாநிதி ஆள்பிடிக்கும் கலையில் தேர்ந்தவர். பா.ம.க. எங்கள் அணியில்தான் தொடர்கிறது என்கிறார். திரு.இராமதாசோ, "இன்னும் முடிவுசெய்யவில்லை" என்கிறார்.

மத்திய அமைச்சராகும் வாய்ப்பு பறிபோனதில் இருந்து சர்வ ஜாக்கிரதையாக அடியெடுத்து வைத்து இழந்ததை எப்படியும் அடைந்தே தீர்வது என்பதில் விடாப்பிடியாக இருக்கும் திரு.இராமதாசு தேர்தல் நேரத்தில் கொள்கையைத் தூக்கிப் பிடித்து, திரு.குருவை விட்டு தீப்பொறி அறிக்கைகளை விடச்செய்து அதிர்ச்சி அலைகளை பரவவிட மாட்டார் என்பதையும் மக்கள் தெரிந்து வைத்துள்ளனர். திரு.திருமாவளவன், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஆளுங்கட்சியின் அலட்சியப்போக்கை அழகாக படம் பிடித்துக் காட்டியவர். கூட்டணி யாரோடு என்பதில் அவர் கட்சி எடுக்கும் முடிவு, அவர்களின் கொள்கைப் பற்றுறுதியைக் காட்டிவிடும்.

வானுக்கும், பூமிக்கும் குதித்து ஆகப்பெரிய இரண்டு கட்சிகளுமே மோசம், நான்தான் பரிசுத்தம் என தமிழகமெங்கும் சுற்றிவந்து நம்பிக்கையை ஊட்டிய திரு.விஜய்காந்த், அதிமுகவிடம் துணைமுதல்வர் பதவியைத் தன் மனைவிக்குக் கேட்டதாக வரும் செய்தியை அவர் கட்சியின் உண்மைத் தொண்டர்கள் எந்த அளவுக்கு நம்புகிறார்கள் என்பது தெரியாது. ஆனால் இது உண்மையாக இருக்கக்கூடாது என்னும் கவலையில் தோய்வார்கள் என்பது மட்டும் உறுதி. அனுபவம் வாய்ந்த தலைவர்கள் ஆலோசனை தந்து அவரை தவிர்க்கயியலா தலைவராக ஆக்குவதில் பங்காற்றியதை தேர்தல் வரும்போது அவர் மறத்தல் தகுமா? இக்கேள்வி, தொண்டர்கள் மனக்கண் முன்பே விரிவதைத் தவிர்க்க இயலாது.

இடதுசாரிக்கட்சிகளுக்கு எப்போதுமே தர்மசங்கடம்தான். தற்போதைய தேர்தல் கலைகள் கைவரப்பெறாதவர்கள் என்பது பாமரரும் அறிந்து வைத்திருக்கும் எளிய உண்மை. இம்முறை அம்மா, அடுத்தமுறை அய்யா என மாற்றி மாற்றி சேரவேண்டிய அவலநிலை. இதில் மார்க்சியக்கோட்பாடுகளோ, மற்ற வேறுபட்ட தத்துவார்த்த நிலைகளோ இரு கட்சிகளுக்கு இடையே எப்போதும் குறுக்கே வந்ததில்லை. அதிக இடத்தைப் பெற்று மற்றவரைவிட பெரிய கட்சியாகக் காட்டிக்கொள்வதில் அதிக கவனம் செலுத்துவதே இவர்களின் இலட்சியம். அதற்கான யுக்தியை வகுக்க மாவட்ட, மாநிலக் குழுக்கூட்டங்கள், பொலிட்பீரோ என்ற ஜனநாயக முறை நாடகங்கள். நேர்மையும், அரசியல் ஞானமும், தியாகமும் ஒருங்கே அமையப்பெற்ற உத்தம தலைவர்களைக் கொண்ட இவ்வியக்கங்கள் "ஊழலில் உரம்பெற்ற" கட்சிகளிடம் மாறி மாறி போய் நிற்பது இன்னும் எவ்வளவு காலத்திற்கு?

இவர்கள் தவிர மீதமுள்ள கட்சிகள் ஏதோ கிடைத்தால் போதும் என்னும் கொள்கையை மட்டும் சிரமேற் கொண்டவை. இருபக்கமும் மாறி நின்று, ஒன்றோ அல்லது இரண்டோ பெற்று "பேர் சொல்ல ஒரு பிள்ளை" போதும் என திருப்தி அடைந்து, காகிதத்தில் மட்டுமே கட்சி நடத்துபவர்கள்.

தமிழ்நாட்டு வாக்களப் "பெருங்குடி" மக்களோ தங்களுக்குக் கிடைக்க இருக்கும் "இலவசங்கள்" பற்றிய இன்பக்கனாவிலே சுகம் காணத்துவங்கி விட்டனர். வாக்கை போட்டு முடிப்பதற்குள் எப்படி காரியங்களை சாதித்துக் கொள்ள வேண்டும் என்பதை நன்கு புரிந்தவர்கள். 

யார் குனிவது, யார் குதிரை ஏறுவது என்னும் போட்டியே தேர்தலாக உருமாறிப்போய் விட்டது என்பதை எண்ணும்போது, "என் நாடு என்று உய்யப்போகிறது?" என்ற ஏக்கப் பெருமூச்சு என்னுள்ளே எழுகிறது. உங்களுக்கு?

Pin It